தமிழ்நாட்டில் விநாயகப் பெருமானின் வழிபாடு மிகத் தொன்மையானது. ஆனால் பல்லவ நரசிம்மனின் வாதாபிப் படையெடுப்புக்குப் பின், அவரால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டதுதான் பிள்ளையார் வழிபாடு என்று பரவலான ஒரு நம்பிக்கை இருந்தது. ‘வாதாபி கணபதிம்’ என்று தொடங்கும் தீட்சிதரின் பாடலும் இதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. அதேபோன்று தமிழ்நாட்டின் குடைவரைக் கோவில்களை, அதாவது பாறைகளை, மலைகளைக் குடைந்து கோவில்களை அமைக்கும் முறை, முதலில் அமைத்தது பல்லவர்கள் தான் என்று பெரும்பாலானோர் எழுதிக்கொண்டிருந்தார்கள். வரலாற்று ஆய்வுகளில் இது போன்ற மூட நம்பிக்கைகளை பல இடங்களில் காணலாம்.
ஆனால், இந்த இரண்டு கருத்துகளையும் மாற்றி அமைக்கும் ஆதாரம் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் கிடைத்தது. அங்குள்ள தேசி விநாயகர் சன்னதியில் இந்தக் குடைவரைக் கோவிலை அமைத்து விநாயகரைச் செதுக்கிய சிற்பியின் பெயர் பழமையான வட்டெழுத்துகளில் பின்வருமாறு வெட்டப்பட்டிருக்கிறது.
இதை ஆய்வு செய்து இக்கல்வெட்டு பொ.வ. ஐந்தாம் நுற்றாண்டின் பிற்பகுதியையோ இல்லை ஆறாம் நுற்றாண்டின் முற்பகுதியையோ சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். பாண்டிய நாட்டில் அமைந்துள்ள இக்கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பல்லவர்களுடைய குடைவரைக் கோவில்களுக்கு முன்பே பாண்டியர்கள் இம்மாதிரிக் கோவில்களை நிறுவியிருக்கின்றனர் என்பது மிகத்தெளிவாக இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. (ஐராவதம் மகாதேவன் இதுதான் தமிழ்நாட்டின் முதல் குடைவரைக் கோவில் என்று கூறுகிறார்) அதே போல் பிள்ளையார் வழிபாடு என்பது வாதாபிப் படையெடுப்புக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்பதையும் இது தெளிவாக்கியது.
இந்தக் கல்வெட்டின் இன்னொரு முக்கியமான அம்சம், தமிழ் எழுத்துகளில் முதன்முறையாக (புள்ளிகளைக் கொண்ட) மெய்யெழுத்துக்களைக் கொண்டு இது வெட்டப்பட்டிருப்பதுதான் என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். (தினமணி 5 செப்டம்பர் 1997). அதன்பின் மெய்யழுத்துக்களைக் கொண்ட அக்காலத்திய கல்வெட்டுகள் பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவ்வகையில் தமிழ் எழுத்தியலுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தக் கல்வெட்டு விளங்குகிறது.
Comments
Post a comment