சாவாமூவாப் பேராடு

பழங்காலத்தில் மன்னர்களும் / அவர்களுடைய உறவினர்களும் / அரசு அதிகாரிகளும் கோவில்களுக்குத் திருப்பணிகள் பல செய்தனர். அவைகளை கல்வெட்டுகளிலும் பொறித்துவைத்தனர். இப்போது நமக்கு கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுச் செய்திகள் இத்தகைய கல்வெட்டுகளால் அறியப்படுவனவையே. அப்படி அவர்கள் கோவில்களுக்கு அளித்த கொடைகளில் முக்கியமானது நுந்தா விளக்குத் திருப்பணி.
இறைவனது கருவறைகளில் இருக்கும் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது மரபு.  அப்படி கருவறைகளில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் விளக்கு தான் நுந்தா விளக்கு. இதை தூண்டாமணி (தூண்ட வேண்டியிராத) விளக்கு என்றும் அழைப்பர். கீழே படத்தில் இருக்கும் இந்த விளக்கின் மேற்பாகம் குடுவை போல இருப்பதைக் கவனியுங்கள். அதில் நெய் நிரப்பப்பட்டு விளக்கில் சொட்டி விளக்கை எரிய வைக்கும்.

இந்த விளக்குக்குத் தேவையான நெய்யை நன்கொடையாக வழங்கத்தான் அக்காலத்தில் சாவாமூவாப் பேராடு என்ற கட்டளையை ஏற்படுத்தினர். கோவிலுக்கு சாசனமாக வழங்கப்பட்ட இத்தகைய ஒரு நன்கொடையை கீழே  உள்ள கல்வெட்டு வாசகங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்
ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு இருபத்தெட்டாவது திருமுனைப்பாடி, திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரம் திருக்கற்றளி செய்வித்த இராஜாதித்ததேவர் தாயார் நம்பிராட்டியார் கோக்கிழானடிகள் பரிவாரத்தாள் சித்திரகோமளம் வைத்த சாவாமூவாப் பேராடு தொண்ணூறு. ஈழ விளக்கு ஒன்று.
பேராடு என்றவுடன், ஆட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழும். சொல்லப்போனால் பலர் இதை ஆடு என்றே எழுதுகிறார்கள். ஆட்டிலிருந்து எங்கே நெய் எடுப்பது?  இங்கு பேராடு என்று வழங்குவது ஆடு இல்லை. பசு மாட்டைத்தான் பேராடு (பெரிய ஆடு) என்று பொருளில் குறித்துள்ளார்கள். பசுவை நன்கொடையாக வழங்கி அதன் மூலம் வரும் நெய்யை வைத்து இந்த நுந்தா விளக்கு திருப்பணியை ஏற்படுத்தினர் நம் முன்னோர். அதென்ன சாவா மூவாப் பேராடு ? அப்படி நன்கொடையாக வழங்கப்பட்ட மாடு மூப்படைந்தாலொ இறந்தாலோ அதற்கு ஈடாக இன்னொரு மாடு நன்கொடையாக வழங்கப்படும். ஆக கொடுக்கப்பட்ட எண்ணிக்கை எப்போதும் குறையாது (மேலே கண்ட கல்வெட்டில் 90 பேராடுகள்). இது தான் சாவ மூவாப் பேராடு நிவந்தம் (கட்டளை)

Comments

Popular posts from this blog

களப்பிரர் யார் - 1

The Thai Coronation and Thiruvempavai

சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன