Skip to main content

வேள்விக்குடிச் செப்பேடுகள்

பண்டைத் தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு உதவும் ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்று வேள்விக்குடிச் செப்பேடுகள். சங்க காலத்தைப் பற்றிய சித்திரத்தை நமக்கு அக்காலத்திய இலக்கியங்கள் அளிக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு வந்த களப்பிரர் காலத்தைப் பற்றியோ அதிலிருந்து தமிழகம் எப்படி மீண்டெழுந்தது என்பது பற்றியோ நீண்ட காலமாக ஏதும் தெரியாமல் இருந்தது. அந்தக் குறையை ஓரளவுக்கு இந்த வேள்விக்குடிச் செப்பேடுகள் போக்கின.

ஆச்சரியகரமாக, வேள்விக்குடிச் செப்பேடுகளைப் பற்றிய விவரங்கள் வெளியே வந்தபோது அது பிரிட்டிஷ் ம்யூசியத்தில் இருந்தது. அதை நேரடியாகப் படித்து விவரங்களை அறிந்து கொள்ள இயலவில்லை. ஆகவே அதன் பிரதிகளையும் மசிப்படியையும் வைத்தே இந்தியத் தொல்லியலாளர்கள் விவரங்களை ஆராயவும் தொகுக்கவும் நேரிட்டது. தமிழில் இதுவரை கிடைத்த செப்பேடுகளிலேயே மிகப் பழமையானவை வேள்விக்குடிச் செப்பேடுகள் ஆகும். அழகான செய்யுள் நடையில் பாண்டியர் வரலாற்றைச் சொல்லும் இந்தச் சாசனத்தில் உள்ள சில செய்திகளை இங்கே பார்க்கலாம்.

இந்தச் சாசனம் பத்துச் செப்பேடுகளைக் கொண்டது. தற்காலத்திய புத்தகங்களைப் போல முதல் ஏடும் கடைசி ஏடும் உட்பக்கத்தில் எழுதப்பட்டுள்ளன. மற்றவை இருபுறம் எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிடைத்த எல்லாச் செப்பேடுகளையும் போல இதிலும் சமஸ்கிருதப் பகுதி முதலிலும் அதன்பின் தமிழ்ப்பகுதியும் உண்டு. சமஸ்கிருதப் பகுதி கிரந்தத்திலும் தமிழ்ப்பகுதி வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. பாண்டியர்களின் பெரும்பாலான ஆவணங்கள் வட்டெழுத்திலேயே உள்ளன என்பது இங்கு கவனிக்கவேண்டிய விஷயம். தமிழ்ப்பகுதியிலும் சமஸ்கிருதச் சொற்கள் வரும் பகுதிகள் கிரந்தத்திலேயே எழுதப்பட்டுள்ளன. அதாவது 'பாண்டியாதிராஜன்', 'ஹிரண்யகர்ப்ப' போன்ற சொற்கள்.

சமஸ்கிருதப் பகுதி

தமிழ் மன்னர்களின் செப்பேடுகளில் சமஸ்கிருதப் பகுதி, அவர்களின் முன்னோர்களின் பெருமையைக் கூறுவதாகவே இருக்கும். இச்செப்பேடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபெருமானின் துதியோடு ஆரம்பிக்கும் இந்தப் பகுதி, சந்திரனுக்கு மகனாக புதன் பிறந்தான் என்றும், அவனுக்கு புரூரவஸ் என்ற மகன் பிறந்தான் என்றும் குறிப்பிடுகிறது (இது சந்திரகுலத்தின் வரலாறு, மகாபாரதத்திலும் காணப்படுவது). அந்த புரூரவஸ் மேரு மலையில் இரு மீன்களைப் பொறித்தானாம். அதிலிருந்து இந்த இரட்டை மீன்கள் பாண்டியர்களின் சின்னமாக விளங்கிவருகிறது. அதன்பின் வந்த பாண்டிய அரசனுக்கு அகத்தியர் முடி சூடினார். அவரே பாண்டிய அரசர்களின் புரோகிதராகவும் இருந்தார் என்றும் இது குறிப்பிடுகிறது.

அப்படிப்பட்ட வம்சத்தில் மாறவர்மன் என்ற மன்னனும் அடுத்து ரணதீரனும் அவன் மகனான ராஜசிம்மனும் ஆட்சி புரிந்தார்கள் என்ற செய்திகளைத் தந்துவிட்டு, அதன்பின் ராஜசிம்மனின் மகனான ஜடிலவர்மன் என்ற பராந்தகன் ஆட்சி செய்தான் என்ற குறிப்போடு சமஸ்கிருதப் பகுதி நிறைவுறுகிறது. இந்தப் பகுதியில் சுலோகங்களின் முடிவில் ஒவ்வொரு இடத்திலும் பிள்ளையார் சுழி (உ) உள்ளது கவனிக்கத்தக்கது.

தமிழ்ப்பகுதி

செப்பேடுகளின் தமிழ்ப்பகுதி அருமையான செய்யுள் நடையைக் கொண்டது. அதில் கொளீஇய போன்ற அளபடைகளும் பயின்றுவருகின்றன. இதிலும் பாண்டியர் வம்சாவளி, குலப்பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற அரசனைப் போற்றி ஆரம்பிக்கிறது இந்தப் பகுதி.

"கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசன்"

என்று அவனை வாழ்த்துகிறது. இந்த முதுகுடுமிப் பெருவழுதி என்ற அரசன் இடைச்சங்க காலத்தைச் சார்ந்தவன். கபாடபுரத்தில் ஆட்சி செய்தவன். இவன் காலம் பொயுமு 3-4ம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த அரசன் காலத்தில் பாகனூர்க் கூற்றம் என்ற இடத்தில் ஒரு வேள்வி நடைபெற்றது. இந்த பாகனூர்க் கூற்றம் என்ற இடம் தற்போது சோழவந்தான் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அங்கே நடைபெற்ற வேள்வியை யார் நடத்தினார்கள் என்றால்

"சொற்கணாளர் சொலப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாத கொற்கைகிழானற் கொற்றன் கொண்ட வேள்வி"

சுருதி என்பது வேதம். அந்த வேத மார்க்கத்திலிருந்து வழுவாத கொற்கை கிழான் நற்கொற்றன் என்ற அந்தணன் அவ்வேள்வியை நடத்தினான். ஆக, இடைச்சங்க காலத்திலேயே வேதமும் வேதமுறைப்படி செய்யும் வேள்விகளும் தமிழகத்தில் இருந்தன என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். வேள்வி நடைபெற்றதால், அந்த இடம் வேள்விக்குடி என்ற பெயரைப் பெற்றது. அரசனான முதுகுடுமிப் பெருவழுதி  யாக தக்ஷிணையாக வேள்விக்குடியை கொற்கைக் கிழானுக்கும் அந்த யாகத்தை நடத்திய மற்ற அந்தணர்களுக்கும் தானமாக அளித்தான். அதற்கான செப்பேடு ஒன்றையும் ஆவணமாகச் செய்து கொடுத்தான். காலங்காலமாக இப்படி அவர்கள் வசித்து வந்த இந்த இடம், களப்பிரர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டது. அப்படிப் பல துன்பங்களை விளைவித்த களப்பிரர் ஆட்சியை, இருளை நீக்க வந்த சூரியன்போல் தோன்றிய பாண்டிய அரசனான கடுங்கோன் நீக்கினான் என்ற தகவல்கள் அடுத்து வருகின்றன.

அதன்பின் வந்த அரசர்களையும் அவர்கள் செய்த வீரச்செயல்களையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கிறது. கடுங்கோனுக்கு அடுத்து அவனிசூளாமணி, சேந்தன், அரிகேசரி மாறவர்மன் (நின்ற சீர் நெடுமாறன்), கோச்சடையன் ரணதீரன், தேர்மாறன் எனும் ராஜசிம்ம பாண்டியன் ஆகிய அரசர்கள் தோன்றினர். ராஜசிம்மனுக்கும் மழவ நாட்டு இளவரசிக்கும் மணம் நடந்தது. அவர்களுக்கு மகனாக நெடுஞ்சடையன் என்ற அரசன் பிறந்தான். இந்தப் பராந்தக நெடுஞ்சடையனின் மூன்றாவது ஆட்சியாண்டில்

"மாடமா மதிற்கூடற் பாடுநீத்தவ ராக்ரோதிக்கக் 
கொற்றவனே மற்றவரைத் தெற்றென நன்குகூவி
என்னேநுங் குறையென்று முன்னாகப் பணித்தருள"

அந்த அரசன் மாடத்தில் வீற்றிருந்தபோது, கீழே ஒருவன் வந்து கொற்றவனே என்று கூச்சலிட்டான். அதைக் கண்ட ஜடிலன் அவனை அழைத்து உன் குறை என்ன என்று வினவ, அவன் "முன்னொரு காலத்தில் வேள்விக்குடி என்ற ஊர் உன் முன்னோனான பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியால் என் முன்னோர்களுக்குத் தானம் செய்யப்பட்டது. அது களப்பிரனால் அபகரிக்கப்பட்டது. அதை மீண்டும் எங்களுக்கே தரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தான். அதற்கான ஆதாரத்தைக் காட்டி இந்த ஊரைப் பெற்றுக்கொள்க என்று அரசனும் இசைந்தான். அவனும் அந்த ஆதாரத்தைக் காட்டவே, ஜடில பராந்தகன் அந்த கொற்கைக் கிழான் காமக்காணி நற்சிங்கனுக்கு வேள்விக்குடியைச் சாசனம் செய்தான் என்று இந்தச் செப்பேடு விவரிக்கிறது.

ஜடில பராந்தகனின் மூன்றாம் ஆட்சிக்காலம் பொயு 770. ஆக, கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்கு மேல் முதுகுடுமிப் பெருவழுதி செய்துகொடுத்த ஆவணம் கொற்கைக் கிழான் குடும்பத்தால் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். அதைக் காட்டிய பின் அவனுக்கே மீண்டும் அந்த ஊரை அளித்த பராந்தகனின் செயல், அவன் முன்னோர்களை மதித்த விதத்தை நன்கு காட்டுகிறது.  சரி, அந்த ஊர் முழுவதையும் தானமாக வாங்கிய நற்சிங்கன் தானே அதை வைத்துக்கொண்டானா என்றால் இல்லை.

"சுவரஞ்சிங்கன் இதனுள் மூன்றிலொன்றும் தனக்கு வைத்திரண்டுகூறும் ஐம்பதின்மர் பிராமணர்க்கு நீரோடட்டிக் கொடுத்தான்"

அதை மூன்று பங்காகப் பிரித்து ஒரு பங்கு தனக்காக வைத்துக்கொண்டு, மற்றதை ஐம்பது அந்தணர்களுக்கு அவன் பிரித்துக் கொடுத்துவிட்டான். முன்பு யாகத்தில் பங்கேற்ற அந்தணர்களின் வம்சாவளியினராகவே அவர்கள் இருந்திருக்கவேண்டும்.

அந்த நிலங்களை முறையாக அளந்து அவ்விவரங்களைச் செப்பேடாகச் செய்தான் பாண்டியன் ஜடில பராந்தகன். அதுவே இந்த வேள்விக்குடிச் செப்பேடு. முதுகுடுமிப் பெருவழுதி அளித்த மூலச்செப்பேடு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால், அது பல அரிய செய்திகளைத் தரலாம்.

இப்படிச் சங்ககாலம் முதலே தமிழகத்தில் நிலவி வந்த வேதம் சார்ந்த பண்பாடு, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமது முன்னோர் வாக்கை நிறைவேற்றிய இடைக்காலப் பாண்டியர்களின் அரசநீதி, தனக்குக் கிடைத்த தானம் முழுவதையும் அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் பிரித்துக் கொடுத்த அந்த அந்தணனின் பெருந்தன்மை ஆகியவற்றை இந்தச் செப்பேடுகள் விவரிக்கின்றன.Comments

 1. நன்றி.

  /துளக்கமிலா கடற்றானையாய் களப்ரரால் இறக்கப்பட்டது/

  என்பதன் literal பொருள் என்ன்?

  Lowered (i.e. snatched) by the fearless sea-like army of Kalabhras?
  என்று பொருளா

  அப்படி என்றால் இது களப்பிரர்கள் படைவலிமையையும் பதிவுசெய்யும் வரியா?

  ReplyDelete
  Replies
  1. அது பாண்டியர் படையைப் பற்றிச் சொல்லப்பட்டது. அவர்களுடைய கடல் போன்ற சேனை களப்பிரர்களால் வெற்றிகொள்ளப்பட்டது என்பது பொருள்.

   Delete
  2. Oh ok. Makes better sense. Thank You.

   Delete

Post a Comment

Popular posts from this blog

எது தமிழ்ப் புத்தாண்டு 2.0

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை.  மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம