Skip to main content

தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டின் தொன்மை 2.0

(இணையத்தில் நான் எழுதிய ஆரம்ப காலக் கட்டுரைகளின் ஒன்று இது. இந்த ப்ளாகை ஆரம்பித்ததும் மீண்டும் 2016ல் இதை எழுதினேன். ஆனால் இன்னும் இதைப் பற்றிய குழப்பங்கள் நிலவுவதால் மீளுருவாக்கம் செய்திருக்கிறேன், சில கூடுதல் தகவல்களோடு)

தமிழ்நாட்டில் விநாயகப் பெருமானின் வழிபாடு மிகத் தொன்மையானது. ஆனால்  பல்லவ நரசிம்மனின் வாதாபிப் படையெடுப்புக்குப் பின், அவருடைய தளபதியான சிறுத்தொண்ட நாயனாரால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டதுதான் பிள்ளையார் வழிபாடு என்று பரவலான ஒரு நம்பிக்கை இருந்தது. ‘வாதாபி கணபதிம்’ என்று தொடங்கும் தீட்சிதரின் பாடலும் இதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.   அதேபோன்று தமிழ்நாட்டின் குடைவரைக் கோவில்களை, அதாவது பாறைகளை, மலைகளைக் குடைந்து கோவில்களை அமைக்கும் முறை, முதலில் அமைத்தது பல்லவர்கள் தான் என்று பெரும்பாலானோர்  எழுதிக்கொண்டிருந்தார்கள்.  வரலாற்று ஆய்வுகளில் இது போன்ற மூட நம்பிக்கைகளை பல இடங்களில் காணலாம்.  


ஆனால், இந்த இரண்டு கருத்துகளையும் மாற்றி அமைக்கும் ஆதாரம் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் கிடைத்தது. அங்குள்ள தேசி விநாயகர் சன்னதியில் இந்தக் குடைவரைக் கோவிலை அமைத்து விநாயகரைச் செதுக்கிய சிற்பியின் பெயர் பழமையான வட்டெழுத்துகளில்  பின்வருமாறு வெட்டப்பட்டிருக்கிறது.  எக்காட்டூரு 
க் கோன் பெருந் தசன்

இதை ஆய்வு செய்து இக்கல்வெட்டு பொயு. ஐந்தாம் நுற்றாண்டின் பிற்பகுதியையோ அல்லது ஆறாம் நுற்றாண்டின் முற்பகுதியையோ சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். பாண்டிய நாட்டில் அமைந்துள்ள இக்கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பல்லவர்களுடைய குடைவரைக் கோவில்களுக்கு முன்பே பாண்டியர்கள் இம்மாதிரிக் கோவில்களை நிறுவியிருக்கின்றனர் என்பது மிகத்தெளிவாக இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. (ஐராவதம் மகாதேவன் இதுதான் தமிழ்நாட்டின் முதல் குடைவரைக் கோவில் என்று கூறுகிறார்)  அதே போல் பிள்ளையார் வழிபாடு என்பது வாதாபிப் படையெடுப்புக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்பதையும் இது  தெளிவாக்கியது. 

 

இந்தக் கல்வெட்டின் இன்னொரு முக்கியமான அம்சம்தமிழ் எழுத்துகளில் முதன்முறையாக (புள்ளிகளைக் கொண்ட) மெய்யெழுத்துக்களைக் கொண்டு இது வெட்டப்பட்டிருப்பதுதான். அது கண்டறியப்பட்ட விவரம் சுவாரஸ்யமானது. காஞ்சி மஹாஸ்வாமிகள் காரைக்குடியில் சதஸ் ஒன்றை 1960களில் கூட்டினார். அதில் கலந்துகொண்ட கம்பனடிப்பொடி சா கணேசன் பிள்ளையார்பட்டிக் கோவிலில் உள்ள கல்வெட்டைப் பற்றிக் கூறஸ்வாமிகள் தொல்லியல் அறிஞர் நாகசுவாமி அவர்களை அந்தக் கல்வெட்டை ஆராயும்படி சொன்னார். நாகசுவாமியும் அதைப் படியெடுத்து ஐராவதம் மகாதேவனிடம் அளித்து,படிக்கும்படி சொன்னார். அதன்பின் மகாதேவன் நேரே பிள்ளையார்பட்டி சென்றுஅந்தக் கல்வெட்டு முதன்முதலில் ‘புள்ளியைக் கொண்டு இருப்பதை அறிந்து ‘புள்ளி தந்த பிள்ளையார்’ என்ற கட்டுரையை எழுதினார். அதன்பின் மெய்யழுத்துக்களைக் கொண்ட அக்காலத்திய கல்வெட்டுகள் பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவ்வகையில் தமிழ் எழுத்தியலுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தக் கல்வெட்டு விளங்குகிறது.

 

இடைக்காலப் பாண்டியர்கள் கட்டிய குடைவரைகளில் பெரும்பாலனவற்றில் இதைப் போன்ற விநாயகர் சிற்பங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் வலம்புரி விநாயகர்களாகவே இருப்பது சிறப்பு. அரிட்டாபட்டிதிருக்குன்றக்குடிதிருமலாபுரம்மகிபாலன்பட்டி போன்ற பாண்டியர் குடைவரைக் கோவில்களில் விநாயகரைக் காணலாம். 
அதன்பின், சில ஆண்டுகளுக்கு முன் ஆலக்கிராமம் என்ற இடத்தில் உள்ள எமதண்டீசுவரர் கோவிலில் பீடத்தில் கல்வெட்டோடு கூடிய விநாயகர் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது 75 செமீ உயரமும் 40 செமீ அகலமும் கொண்ட கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. அதில் "பிரமிறை பன்னூற சேவிக மகன் கிழார் கோன் கொடுவித்து" என்று வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தச் சிற்பத்தை ஆராய்ந்த தொல்லியலாளர்கள் இது பொயு 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதுகிறார்கள். இதுதான் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள ஆகப்பழமையான விநாயகர் சிற்பம்.

 


இதைத்தவிர திருமுறைகளிலும் விநாயகர் வழிப்பாட்டிற்கான குறிப்புகள் உண்டு. 

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும் - என்று அப்பர் பெருமானும் 

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதி - என்று திருஞானசம்பந்தரும் விநாயகரைப் போற்றியிருக்கின்றனர்.

ஆகவே விநாயகர் வழிபாடு தமிழகத்தில் மிகத் தொன்மை வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன

தமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம். முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள்.  நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது. இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன? இதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்