(இணையத்தில் நான் எழுதிய ஆரம்ப காலக் கட்டுரைகளின் ஒன்று இது. இந்த ப்ளாகை ஆரம்பித்ததும் மீண்டும் 2016ல் இதை எழுதினேன். ஆனால் இன்னும் இதைப் பற்றிய குழப்பங்கள் நிலவுவதால் மீளுருவாக்கம் செய்திருக்கிறேன், சில கூடுதல் தகவல்களோடு)
தமிழ்நாட்டில் விநாயகப் பெருமானின் வழிபாடு மிகத் தொன்மையானது. ஆனால் பல்லவ நரசிம்மனின் வாதாபிப் படையெடுப்புக்குப் பின், அவருடைய தளபதியான சிறுத்தொண்ட நாயனாரால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டதுதான் பிள்ளையார் வழிபாடு என்று பரவலான ஒரு நம்பிக்கை இருந்தது. ‘வாதாபி கணபதிம்’ என்று தொடங்கும் தீட்சிதரின் பாடலும் இதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. அதேபோன்று தமிழ்நாட்டின் குடைவரைக் கோவில்களை, அதாவது பாறைகளை, மலைகளைக் குடைந்து கோவில்களை அமைக்கும் முறை, முதலில் அமைத்தது பல்லவர்கள் தான் என்று பெரும்பாலானோர் எழுதிக்கொண்டிருந்தார்கள். வரலாற்று ஆய்வுகளில் இது போன்ற மூட நம்பிக்கைகளை பல இடங்களில் காணலாம்.
இதை ஆய்வு செய்து இக்கல்வெட்டு பொயு. ஐந்தாம் நுற்றாண்டின் பிற்பகுதியையோ அல்லது ஆறாம் நுற்றாண்டின் முற்பகுதியையோ சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். பாண்டிய நாட்டில் அமைந்துள்ள இக்கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பல்லவர்களுடைய குடைவரைக் கோவில்களுக்கு முன்பே பாண்டியர்கள் இம்மாதிரிக் கோவில்களை நிறுவியிருக்கின்றனர் என்பது மிகத்தெளிவாக இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. (ஐராவதம் மகாதேவன் இதுதான் தமிழ்நாட்டின் முதல் குடைவரைக் கோவில் என்று கூறுகிறார்) அதே போல் பிள்ளையார் வழிபாடு என்பது வாதாபிப் படையெடுப்புக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்பதையும் இது தெளிவாக்கியது.
இந்தக் கல்வெட்டின் இன்னொரு முக்கியமான அம்சம், தமிழ் எழுத்துகளில் முதன்முறையாக (புள்ளிகளைக் கொண்ட) மெய்யெழுத்துக்களைக் கொண்டு இது வெட்டப்பட்டிருப்பதுதான். அது கண்டறியப்பட்ட விவரம் சுவாரஸ்யமானது. காஞ்சி மஹாஸ்வாமிகள் காரைக்குடியில் சதஸ் ஒன்றை 1960களில் கூட்டினார். அதில் கலந்துகொண்ட கம்பனடிப்பொடி சா கணேசன் பிள்ளையார்பட்டிக் கோவிலில் உள்ள கல்வெட்டைப் பற்றிக் கூற, ஸ்வாமிகள் தொல்லியல் அறிஞர் நாகசுவாமி அவர்களை அந்தக் கல்வெட்டை ஆராயும்படி சொன்னார். நாகசுவாமியும் அதைப் படியெடுத்து ஐராவதம் மகாதேவனிடம் அளித்து,படிக்கும்படி சொன்னார். அதன்பின் மகாதேவன் நேரே பிள்ளையார்பட்டி சென்று, அந்தக் கல்வெட்டு முதன்முதலில் ‘புள்ளி’யைக் கொண்டு இருப்பதை அறிந்து ‘புள்ளி தந்த பிள்ளையார்’ என்ற கட்டுரையை எழுதினார். அதன்பின் மெய்யழுத்துக்களைக் கொண்ட அக்காலத்திய கல்வெட்டுகள் பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவ்வகையில் தமிழ் எழுத்தியலுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தக் கல்வெட்டு விளங்குகிறது.
இடைக்காலப் பாண்டியர்கள் கட்டிய குடைவரைகளில் பெரும்பாலனவற்றில் இதைப் போன்ற விநாயகர் சிற்பங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் வலம்புரி விநாயகர்களாகவே இருப்பது சிறப்பு. அரிட்டாபட்டி, திருக்குன்றக்குடி, திருமலாபுரம், மகிபாலன்பட்டி போன்ற பாண்டியர் குடைவரைக் கோவில்களில் விநாயகரைக் காணலாம்.
பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும் - என்று அப்பர் பெருமானும்
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதி - என்று திருஞானசம்பந்தரும் விநாயகரைப் போற்றியிருக்கின்றனர்.
ஆகவே விநாயகர் வழிபாடு தமிழகத்தில் மிகத் தொன்மை வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
super anna
ReplyDeleteGreat sir
ReplyDelete