“முருகா” என்றபடி வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் மாரி செட்டியார்.
மத்திய வயதை நெருங்கிவிட்டதால் முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்திருந்தன. காதோரமும் ஓரிரு நரை முடிகள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன. இருந்தாலும் நீறு பூசிய முகம் அவருக்கு நல்ல களையைக் கொடுத்திருந்தது.
முகத்தின் விழுந்த வியர்வையைத் துடைத்தபடியே “சாலாட்சி, கொஞ்சம் மோர் கொண்டு வா” என்று குரல் கொடுத்தார்.
வந்த மோரைக் குடித்துவிட்டு மனைவியின் முகத்தை ஏறிட்டார் “நாளைக்கு கார்த்திகைல்ல”
“ஆமாம், அதுக்கென்ன மாசா மாசம் வந்துகிட்டுத்தானே இருக்கு”
“என்ன இப்படிச் சொல்ற, கோவிலுக்குப் போவேணாமா, அர்ச்சனைச் சாமான்லாம் வாங்கிட்டேல்ல”
“அதெல்லாம் வாங்கியாந்தாச்சு, ஆனா இந்த மட்டுக்கு நான் வரல்ல, சொல்லிப்புட்டேன்”
அவருக்கு முணுக்கென்று கோபம் வந்துவிட்டது “என்ன பேச்சுப்பேசுற, நம்மளை இந்த நிலைமைல வச்சுருக்கிற முருகனை மாசம் ஒருநாள் கூடப் பாக்க முடியாதா”
“நல்லா வச்சுருக்கிறான், உங்க பங்காளிஹ நிலைமை என்ன, உங்க நிலைமை என்னன்னு யோசிச்சுப்பாத்துப் பேசுங்க”
“அவன் அவனோட கர்மத்துக்கு ஏத்தமாதிரி பலன் கிடைக்குது, எல்லாம் முருகன் செயல்னு நினைச்சுப் போய்க்கிட்டே இருக்கணும், பாத்துக்க”
“இப்படி ஏதாச்சும் சொல்லி என் வாயை அடைச்சுப்பிடுங்க, இந்த தடவை என் மனசு சரியில்லை, நான் வரலை…ஆமா”
இதற்குமேல் பேச்சுத்தொடர்ந்தால் அது பெரும் வாக்குவாதமாக மாறிவிடும் என்று செட்டியாருக்குத் தெரிந்திருந்தது. அதனால் மௌனமாக இருந்தார். அதே நேரம் வீட்டை நோக்கி ஒருவர் வருவதைக் கண்ட சாலாட்சியும் உள்ளே சென்றாள்.
“என்ன மாரி, ஒரே மப்பும் மந்தாரமுமா இருக்கே” என்றபடி எதிரில் வந்தமர்ந்தார் கந்தப்ப பண்டாரம். நண்பரும் இள வயதிலேயே துறவறம் பூண்டவருமான கந்தப்பரிடம் செட்டியாருக்கு அதிகப் பிரியம். ஆகவே அவர் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதை மாரிச்செட்டியார் கண்டுகொள்ளவில்லை. தவிர, தன்னுடைய ஆற்றாமையைக் கொட்டவும் ஒரு ஆள் வேண்டுமல்லவா.
“வழக்கம்போலத்தான் கந்தப்பா, என்ன செய்ய, நம்மளை இன்னும் அவ புரிஞ்சுக்கிடலை அவ்வளவுதான்” என்றார்.
‘கெட்டும் பட்டணம் போ’ என்பார்கள். ஆனால் எந்தக் கேடும் இல்லாமல் ஆயிரத்தவர் என்ற குடும்பப்பிரிவைச் சேர்ந்த மாரிச்செட்டியாருடைய முன்னோர்கள் பல ஆண்டுகள் முன்பே சென்னப்பட்டணத்தில் வந்து தஞ்சமடைந்து தங்கள் குலத்தொழிலைச் செய்து வந்தார்கள். அவருடைய பங்காளிகள் பலர் வட்டிக்கு மேல் வட்டி வாங்கியும் இன்னும் சிலர் பர்மா, மலேயா என்ற நாடுகளுக்குச் சென்றும் செல்வத்தில் கொழித்தனர். ஆனால் போதும் என்ற மனமுடையவராக மாரிச்செட்டியார் இருந்தார். அப்படியே அதிகமாக வருவாய் வந்தால் அதைத் தரும காரியங்களுக்குச் செலவு செய்தார். கோவில்களுக்குக் கொடுத்தார். அதிலும் ஊருக்கு வெளியே குடிகொண்டிருக்கும் திருப்போரூர் முருகன் (அது பொயு 1673ம் ஆண்டு) மீது அவருக்கு அதிக பக்தி. ஒவ்வொரு கார்த்திகைக்கும் பார்க் டவுனிலிருந்து தம்பதி சமேதராக திருப்போரூர் சென்று அர்ச்சனை செய்து வருவார்.
உறவினர்கள் எல்லாரும் செல்வத்தில் மேன்மேலும் உயர, கணவர் இப்படிப் ‘பிழைக்கத் தெரியாதவராக’ இருக்கிறாரே என்று சாலாட்சிக்கு ஆற்றாமை. நாள், கிழமை என்றால் அலங்கரித்துக்கொண்டு போக நகை நட்டுக்கூட இல்லையென்றால் அவளும் என்ன செய்வாள். அவர்கள் கூட்டத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் அங்கு போகும்போதெல்லாம் அவர்களைத் துளைக்கும் இளக்காரப் பார்வைகளை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கும் வழக்கமாக நடக்கும் இந்தச் சண்டையில் இன்று சாலாட்சியின் கோபம் முருகன் மீதே பாய்ந்து விட்டது.
“விடு மாரி, போகப்போகச் சரியாகிடும்” என்றார் கந்தப்பர்.
“கோவிலுக்குக் கூட வரமாட்டேன்னு சொல்றா….என்னச்செய்ய”
“இந்த ஒரு கார்த்திகைக்கு நா வாரேன், அவ்வளவுதானே …எல்லாம் முருகன் பாத்துப்பான்” என்று ஆதவரளித்தார் கந்தப்பர்.
இருந்தாலும் அவருக்கு இரவு முழுவதும் தூக்கமில்லை. புரண்டு கொண்டே இருந்தார். அதிகாலையில் நண்பர்கள் இருவரும் திருப்போரூர் புறப்பட்டனர். போகும்போது கூட முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே விடை கொடுத்தாள் சாலாட்சி. மனசு சரியில்லாமல் கோவில் வந்த செட்டியாருக்கு முருகனைப் பார்த்தவுடன் கண்ணீர் தாரை தாரையாக வந்தது. அருமையான தரிசனம்.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே
என்று கந்தப்பர் மனமுருகப்பாடியதைக் கேட்டால் ஈரமில்லாத இதயமும் கசியும். செட்டியாருக்குக் கேட்கவேண்டுமா. முருகனை மனமுருக வேண்டிவிட்டு, மதிய வேளையில் இருவரும் வீடு திரும்பத் தொடங்கினர். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் “கந்தப்பா, என்னமோ தெரியலை கிறுகிறுன்னு வருது” என்றார் செட்டியார். அவருக்கு மனதில்தான் நோய் என்பதைப் புரிந்து கொண்ட கந்தப்பரும் “ஒண்ணும் இல்லை, காலைல இருந்து சாப்பிடலைல்ல, அதான்…அங்கே செங்கண்மால் ஈஸ்வரர் கோவில் தெரியுது பாரு. அங்கே போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வெயில் தாழப் போவோம்’ என்றார்.
கோவில் குளக்கரையில் நிழலான இடமாகப் பார்த்து அங்குள்ள திட்டில் இருவரும் படுத்தனர். செட்டியாருக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. திடீரென்று அவரை யாரோ எழுப்பினார்கள். விழித்துப் பார்த்த செட்டியார் அசந்து போனார். ஜோதிஸ்வரூபமாக முருகப் பெருமான் அவர் முன் தோன்றியிருந்தார். பேச வார்த்தைகள் வராமல் விழித்தார் செட்டியார். சாமியிடம் என்னன்னவோ கேட்கவேண்டும் என்று பக்தர்கள் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் நேரில் பார்த்தால் இப்படித்தான்.
அதைக் கண்டு புன்னகை செய்த முருகன். “மாரி, எதற்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ஊரில் இருந்து எண்ணைத் தரிசிக்க வரவேண்டும். அதோ அந்தப் புற்றில் நான் இருக்கிறேன். என்னை எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டின் அருகே ஒரு கோவில் கட்டிக் கும்பிட்டு வாருங்கள்” என்று மொழிந்தான்.
சட்டென்று விழிப்பு வந்தது செட்டியாருக்கு. அட, இதெல்லாம் கனவா என்று கந்தப்பரைப் பார்க்க அவரும் அதே போலத் திடுக்கிட்டு விழித்ததைப் பார்த்தார்.
“என்ன கந்தப்பா”
“இல்லை நான் ஒரு கனாக்கண்டேன்…நிஜம் போல இருந்தது”
“என்ன முருகன் வந்தானா”
“அட, எப்படி உனக்குத் தெரியும் !!!”
நண்பர்கள் இருவரும் தங்கள் கண்ட கனவைப் பரிமாறிக்கொண்டார்கள். அதன் படி புற்றைத் தோண்டவும் தீர்மானித்தார்கள். ஆச்சரியகரமாக, கனவில் வந்து முருகன் சொன்னது போல, அங்கே ஒரு முருகனின் சிலை இருந்தது. இருவருக்கும் பெரு மகிழ்ச்சி. ஆடிப்பாடி அதை தன் வீட்டிற்குச் செட்டியார் எடுத்துச் சென்றார். அவருக்குச் சொந்தமான சிறிய இடத்தில் செங்கல் கோவில் ஒன்றை அமைத்து அங்கே அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வர ஆரம்பித்தார். இதற்குள் இந்தச் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. முருகனருள் பெற்ற மாரிச் செட்டியாரை அனைவரும் மரியாதையுடன் நடத்தினர். அது மட்டுமல்ல, அவர் உற்றார் உறவினர்கள் அனைவரும் தங்களாலான காணிக்கையை அளிக்க, உண்ணாழி, அந்தராளம், மகாமண்டபம் ஆகியவைகளை அமைத்து அதைப் பெரும் கோவிலாகக் கட்டினர்.
இதோ, சென்னை கந்தசாமியின் கோவில் கும்பாபிஷேகம் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. முதல் மரியாதையை பரிவட்டத்தோடு மாரிச் செட்டியார் பெற்றுக்கொண்டார். அவர் சுற்றமெல்லாம் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டனர். சாலாட்சிக்குப் பெருமை தாங்கவில்லை. கருவறையைப் பார்த்து மனமுருகி மன்னிப்பு வேண்டினாள். முருகன் புன்முறுவலோடு அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பி.கு. இந்தச் செய்தி கோவில் கல்வெட்டில் பின்வருமாறு உள்ளது
மூவுலகம் பூஜிக்கும், முருகன் அருள் முன் நிற்கும்.
ReplyDelete