Saturday 1 February 2020

க்ஷத்திரியப் பிராம்மணர்கள்

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran  அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்



பண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது. 

மகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்தருகிறார். இப்படிப் பல உதாரணங்கள் உண்டு. 

சரித்திர காலத்திற்கு வந்தால், மௌரியர்களுக்கு அடுத்து வடநாட்டில் ஆட்சி புரிந்த புஷ்யமித்திர சுங்கன் ஒரு க்ஷத்திரியப் பிராமணரே. பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அவர் தோற்றுவித்த சுங்க வம்சம் (பொயுமு 1ம் நூற்றாண்டு)  பாரதத்தை சிறிது காலம் ஆண்டது.  

அதே போலத் தென்னாட்டில் பல்லவர் ஆட்சியின் போது, காஞ்சியில் கல்வி கற்க மயூரசன்மன் என்ற அந்தணன் வந்தான். அங்கே ஒரு பல்லவப் போர்வீரன் அவனை அவமானப்படுத்தியதால் வெகுண்டெழுந்த மயூரசர்மன், ஒரு படையை ஶ்ரீசைலத்தில் திரட்டி பல்லவ அரசனான ஸ்கந்தவர்மன் மீது போர் தொடுத்தான். அவனை முறியடிக்க இயலாத பல்லவன், மயூரசர்மனை ஒரு அரசனாக அங்கீகரித்ததை அடுத்து, பனவாசியில் கதம்ப வம்சத்தை ஸ்தாபித்து அரசாண்டான் மயூரசர்மன். (பொயு 4ம் நூற்றாண்டு).  அதே பல்லவர் ஆட்சியில் சோழ நாட்டில் மாமாத்திரர் குலத்தில் பிறந்த பரஞ்சோதி, நரசிம்ம பல்லவரின் படைத்தளபதியாகி, வாதாபி சென்று புலகேசியைத் தோற்கடித்துத் திரும்பியது நமக்குத் தெரிந்தது. இந்த மாமாத்திரர் குலத்தைப் பற்றிக் காஞ்சிப் பெரியவர் இப்படிச் சொல்கிறார். 

பரஞ்ஜோதி ப்ராம்மண ஜாதியிலேயே வைதிகத்தை விட்டுவிட்டு லௌகிகப் பிரவிருத்திகளில் (தொழில்களில்) போனதால் தனியாகப் பிரிக்கப்பட்டமஹாமாத்ரர்என்ற வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாமாத்திரர்என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. ‘மாமாத்திரர்மாதிரியேஅமாத்தியர்என்று ஒரு ஜாதி. ஸம்ஸ்க்ருதத்தில்அமாத்யன்என்றால் மந்திரி. ‘அமாத்யன்தான் தமிழில்அமைச்சன்ஆயிற்றுஇப்போது மந்திரி என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை கூடாது என்று, ‘அமைச்சர்தமிழ் வார்த்தை என்று நினைத்து அப்படிப் போட்டுக் கொள்கிறார்கள்! மாணிக்க வாசக ஸ்வாமிகள் அமாத்ய ப்ராமணர். பாண்டிய ராஜாவுக்கு அமாத்யராக (மந்திரியாக) இருந்துதென்னவன் பிரமராயன்என்று பட்டம் வாங்கியவர். பிராம்மணர் என்பதால்பிரம’. ராஜாவின் பிரதம அதிகாரி என்பதால்ராயன்’, சோழ ராஜாக்களும் பிராமண மந்திரிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிரமராயப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைதிக தொழிலை விட்டுவிட்டு ராஜாங்கத்தில்ஸிவில் அட்மினிஸ்ட்ரேஷன்செய்யும்எக்ஸிக்யூடிவ் ஸைடுக்குப் போன பிராமணர்களை அமாத்தியர் என்று பிர்த்து வைத்தது. பிராமணர்களிலேயே இன்னும் ஒரு படி தள்ளி மிலிடரி ஸர்வீஸுக்குப் போனவர்களை மாமாத்திரர் என்று பிரிவினை பண்ணிற்று. அந்த ஜாதிக்காரர்கள் வைத்தியத் தொழிலிலும் நிறையப் போயிருக்கிறார்கள். ஸேனையில் சேர்ந்து உயிரை எடுப்பது, வைத்தியராக உயிரைக் கொடுப்பது ஆகிய இரண்டு பணிகளும் விநோதமாக அந்த ஜாதியாருக்கு இருக்கிறது.

பரஞ்சோதியைத் தவிர பெரியவர் சொன்ன மற்ற உதாரணங்களைப் பார்ப்போம். இடைக்காலப் பாண்டியர்களில் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் (பொயு 8ம் நூற்றாண்டு) ஆட்சியில் இந்த க்ஷத்திரியப் பிராமணர்கள் பெரும்பங்கு வகித்தனர். யானை மலைக் கோவிலைக் கட்டிய மாறன் காரி, மாறன் எயினன், திருப்பரங்குன்றம் கோவிலை அமைத்த சாத்தன் கணபதி ஆகியோர் இவனுடைய தளபதிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்தனர். இவர்கள் திருநெல்வேலியை அடுத்த உக்கிரன் கோட்டை என்னும் கரவந்த புரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதில் சாத்தன் கணபதி வைத்தியராகவும் இருந்திருக்கிறார். இக்காலத்தில்தான் அரசன் என்று பொருளுடைய அரையன், ராயன்,  என்னும் பின்னெட்டுகளை அரசு உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் பிராமணர்களாக இருந்தால், பிரம்மராயன், பிரும்மமாராயன், பிரும்மாதிராசன் போன்ற பெயர்கள் ஒட்டிக்கொள்ளும். 

சோழ வரலாற்றில் முக்கியமான நிகழ்வான ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் குறிப்பிடும் உடையார்குடிக் கல்வெட்டு 'ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன்' என்று குறிக்கிறது. பஞ்சவன் என்பது பாண்டியர்களைக் குறிக்கும் (தாயாதிகளான பாண்டியர்கள் ஐந்து இடங்களிலிருந்து ஆட்சி செய்யும் வழக்கமுள்ளவர்கள்). தென்னவன் பிரமாதி ராஜன், பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகியவை பாண்டிய நாட்டு அந்தண உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் பெயர்களாகும். கல்வெட்டில் உள்ள சோமன் என்பவனும் பஞ்சவன் பிரமாதிராஜனாகவே இருக்கவேண்டும் என்று வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். வீரபாண்டியன் தலையைத் துண்டித்த அடாத செயலுக்குப் பழிவாங்கவே இவர்கள் இந்தச் செயலைச் செய்திருக்கவேண்டும். 

சோழ அதிகாரிகளைப் பார்த்தால், சுந்தர சோழனின் அமைச்சராக இருந்த அநிருத்தப் பிரம்மராயர், ராஜராஜனின் தளபதியாக இருந்து தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுச் சுவர் எடுப்பித்த அமன்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயர். அவர் மகனும் ராஜேந்திர சோழனின் படைத்தளபதியாக இருந்தவனுமான மாறன் அருள்மொழியான உத்தமச்சோழ பிரம்மராயன் ஆகியோர் க்ஷத்திரியப் பிராமணர்களே. 

இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். முடியாட்சிக் காலத்தில் க்ஷத்திரியப் பிராமணர்கள் முக்கியமான இடத்தை வகித்தனர் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.