Saturday 9 September 2017

திருமங்கை ஆழ்வாரின் காலம்

ஆழ்வார்களிலேயே அவரது காலம் இன்னது என்று தெளிவாகத் தெரியக்கூடியது திருமங்கை ஆழ்வாரின் காலம்தான். ஆனாலும் ஒரு பரம்பரைக் கதை அவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்ததாகக் கூறுவதால் பலருக்கு இந்த விதத்தில் குழப்பம் நேரிடுகிறது.



முதலில் திருஞானசம்பந்தரின் காலத்தைப் பார்ப்போம். இவர் திருநாவுக்கரசரின் சமகாலத்தவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்பரின் முதிய காலத்தில் சிறுவயதினரான சம்பந்தரோடு பல இடங்களுக்குச் சென்று பதிகங்கள் இயற்றியதைப் பற்றி பெரிய புராணமும் மற்றும் பல நூல்களும் குறிப்பிடுகின்றன.  மகேந்திர பல்லவரை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்பதால் அவருடைய காலத்தில் பிற்பகுதியில் சம்பந்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. சிறுத்தொண்டரான ' மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகச்' செய்த பல்லவ தளபதி பரஞ்சோதியை ஞானசம்பந்தர் சந்தித்தது பற்றியும் குறிப்புகள் உண்டு. எனவே சம்பந்தர் நரசிம்மவர்மரின் சமகாலத்தவர் என்பது வெள்ளிடைமலை.

அதேபோல, சமணரான கூன்பாண்டியனை சைவத்திற்கு சம்பந்தர் மாற்றினார் என்பதற்கும் ஆதாரங்கள் பல உண்டு. கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் மதுரை சென்றதும் சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் புரிந்ததும், அரசன் 'நின்றசீர் நெடுமாறனாகியதும்' தெரிந்த வரலாறே. 'நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்' என்று சுந்தரரால் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் இம்மன்னனின் நெல்வேலிப்போரைப் பற்றி சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்று அழைக்கப்படும் இம்மன்னன் வாழ்ந்தது பொயு 640-670ம் ஆண்டைச் சேர்ந்தவன். எனவே சம்பந்தரின் காலமும் இதை ஒட்டியதே.




அடுத்து திருமங்கை மன்னருக்கு வருவோம். பரமேசுவர விண்ணகரத்தில் உறையும் பெருமானை ஆழ்வார் இப்படிப் பாடுகிறார்

இலகிய நீள்முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 

(பெரிய திருவாய்மொழி, திவ்யார்த்த தீபிகை)

பல்லவமன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் கருவூரில் நடந்த போரைப் பற்றி தளவாய்புரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. எனவே நந்திவர்மனின் சமகாலத்தவர் திருமங்கை மன்னர் என்பது தெளிவு. மேலும்,

'மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி ' 

என்று ஆழ்வார் பெரிய திருவாய்மொழி திருவட்டபுயகரம் பாசுரத்தில் பாடுகிறார். இந்த வயிரமேகன் என்பது நந்திவர்மனின் மறுபெயர்.

பல்லவன் இரண்டாம் நந்திவர்மனின் காலம் பொயு 731-796. எனவே திருமங்கையாழ்வாரும் அக்காலகட்டத்திலேதான் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது தெளிவு. ஆக, சம்பந்தரும் திருமங்கை ஆழ்வாரும் சந்தித்தார்கள் என்பது சாத்தியமேயில்லாத விஷயம்.


உசாத்துணைகள்

1) பாண்டியர் செப்பேடுகள்
2) பெரிய திருவாய்மொழி