Wednesday 9 October 2024

திருமங்கை ஆழ்வாரும் நாகப்பட்டினத்தின் விஹாரமும்


சமணர் கழுவேற்றத்தைப் போலவே திருமங்கை ஆழ்வாரைப் பற்றிய அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அவர் நாகப்பட்டினம் புத்த விஹாரத்தைக் கொள்ளையடித்தார் என்றும் அங்குள்ள புத்தர் சிலையை உருக்கி ஶ்ரீரங்கத்தில் திருப்பணி செய்தார் என்றும் அதனால் அவர் ஏதோ தகாத செயலைச் செய்துவிட்டார் என்றும் தொடர்ந்து ஒரு கூட்டம் சொல்லிவருகிறது. எப்படி சமணர் கழுவேற்றம் பெரியபுராணத்தில் சொல்லப்படுகிறதோ அதேபோல இந்தப் புராணமும் ஶ்ரீவைஷ்ணவர்களுடைய குருபரம்பரைச் சரித்திரத்தில் வருகிறது. ஆனால் இந்த இரண்டையும் அவதூறாகச் சொல்பவர்கள் புராணங்களையெல்லாம் குப்பை என்று சொல்பவர்கள். அவர்களுடைய அஜெண்டாவுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளும் அவர்கள், புராணங்களில் சொல்லப்படுகின்ற எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வார்களா என்று கேட்டால் பதில் வராது. சரி, இந்தச் செய்தியின் உண்மையை வரலாற்று ரீதியாகவும் புராண ரீதியாகவும் ஆராய்வோம். 

நாகப்பட்டினத்தின் பௌத்த விஹாரம் ஒன்று பண்டைக்காலத்தில் இருந்ததற்கு வரலாற்று ஆதாரம் உண்டா என்று பார்த்தால், அதற்கான ஆதாரமே இல்லை. சீன யாத்திரிகரான யுவான் சுவாங் தமிழகத்திற்கு நரசிம்ம பல்லவனின் காலத்தில் வந்தபோது, நாகப்பட்டினத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் அங்கே புத்த விஹாரம் இருந்ததாகக் குறிப்பிடவே இல்லை. இத்தனைக்கும் அவர் இந்தியாவில் உள்ள பௌத்தத் தலங்களை விடாமல் குறிப்பிட்டிருக்கிறார். 

அடுத்து பல்லவ மன்னனான ராஜசிம்மன், சீன அரசர்களோடு நல்லுறவு கொண்டதன் விளைவாக தமிழகத்தில் ஒரு பௌத்த விஹாரம் ஒன்றைக் கட்டினான் என்று சீன நூல்கள் குறிப்பிடுகின்றன. கோ-ஹோ-சே என்று பொறித்த கல்வெட்டு ஒன்றை சீன அரசர் அனுப்பியதாகவும் அது அந்த விஹாரத்தின் முன்பு வைக்கப்பட்டதாகவும் அந்த நூல்கள் குறிக்கின்றன. இப்படி ஒரு பௌத்த கோவிலை ராஜசிம்மன் கட்டியதாக பல்லவ ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த புத்த விஹாரம் எந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் எங்கேயும் இல்லை. அது பல்லவர்களின் துறைமுகமான மாமல்லபுரத்தில் கூட கட்டப்பட்டிருக்கலாம். 

பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தவர் திருமங்கை ஆழ்வார். நீலன் என்ற இயற்பெயர் கொண்டவர். ஆலி நாட்டை ஆண்டவர். சோழர்களுக்கு உதவியாக பல போர்களைச் செய்தவர். அவருடைய பாடல்களின் அகச்சான்றுகளிலும் சரி, சோழ, பல்லவ கல்வெட்டுகளிலும் சரி நாகப்பட்டினத்தில் புத்த விஹாரம் ஒன்று இருந்ததாகவோ அல்லது அதைத் திருமங்கை மன்னர் கொள்ளையடித்ததாகவோ ஆதாரமே இல்லை. எந்த விதமான வரலாற்று ஆதாரமும் இல்லாத ஒன்றைத்தான் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர் மீண்டும் மீண்டும் அவதூறாகச் சொல்கிறார்கள். 

சரி, குருபரம்பரைச் சரித்திரத்தின் படி பார்ப்போம். திருமங்கை மன்னர், குமுதவல்லி என்ற பரம பக்தரை மணந்துகொள்கிறார். அதன்காரணமாக திருமாலின் பக்தராகி, பல கோவில்களுக்குத் திருப்பணி செய்ய முனைகிறார். தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற குமுதவல்லி அம்மையாரின் நிபந்தனையை ஏற்று, தன் பணத்தை எல்லாம் செலவழித்து அந்தத் திருப்பணியைச் செய்தார். தன்னிடம் இருந்த பணம் அனைத்தும் செலவழிந்து போகவே, கொள்ளைத் தொழிலில் இறங்கினார். அதிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு கோவில் திருப்பணிகளைச் செய்தார், அதில் ஒன்றுதான் இந்த 'நாகப்பட்டினக் கொள்ளை'. ஒரு கட்டத்தில் திருமால் அவரைத் திருத்த மனம் உவந்து தம்பதியரைப் போல வருகிறார். அவரிடமே கொள்ளையடிக்க முனைந்த திருமங்கை ஆழ்வாரை அழைத்து அவருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொள்கிறார். 

அதன்பின் திருமங்கை ஆழ்வார் பெருமாளின் புகழைப் பாட ஆரம்பிக்கிறார். தான் செய்த செயல்களை அவரே இப்படிக் கூறிக்கொள்கிறார். 

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

பல உயிர்களைக் காரணமில்லாமல் கொன்றேன். இனிய மொழிகளைப் பேசவில்லை. வேங்கடவனே என்னை ஆட்கொள் என்கிறார் திருமங்கை ஆழ்வார். அப்படிக் கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி பெருமாளிடம் சரணடைந்தவர் திருமங்கை மன்னர். ஆகவே அவர் நாகப்பட்டின விஹாரத்தைக் கொள்ளையடித்தார் என்று குருபரம்பரைச் சரித்திரத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும் கூட, அது அவர் கள்வராக இருந்தபோது நடந்த நிகழ்வே அன்றி, அவர் திருமாலின் பரம பாகவதராக ஆவதற்கு முன்பு என்பது தெளிவாகிறது. 

எனவே எப்படி எடுத்துக்கொண்டாலும், பக்தர்கள் ஏதோ கொள்ளையடிப்பார்கள் என்பது போலச் சித்தரிப்பது அபத்தமான செயல். 


சரி, அப்போது நாகப்பட்டினத்தில் இருந்த சூடாமணி விஹாரம்? அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டது. நாகப்பட்டினத்தில் பௌத்த விஹாரம் ஒன்று இருந்தது என்றால் அது சூடாமணி விஹாரம்தான். அது பின்னாளில் எப்படி இடிக்கப்பட்டது என்ற வரலாற்றை யாரும் பேசமாட்டார்கள். அதை பின்னால் எழுதுவோம்.