ராமனுடைய வில்லின் திறம் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். அவற்றில் எல்லாம் உச்சமானது மூலபல சேனை வதத்தைப் பற்றிய பகுதிதான் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அந்தச் சேனையின் எண்ணிக்கையும் வலுவும் அப்படிப்பட்டது. மூலபல அரக்கர் சேனையை தனியொருவனாக எதிர்த்து நின்று ராமன் முறியடித்த விதத்தைக் கம்பன் சொல்லியபடி விளக்குவதென்றால் ஒரு பதிவு அல்ல, ஒரு நூறு பதிவும் போதாது. இருப்பினும் அதைச் சுருங்கக் காண்போம். இந்திரஜித்தின் வதத்தை அடுத்து சொல்லொணாத் துயரம் அடைந்த ராவணன் சீதையை வெட்டிப்போட விரைகிறான். அப்போது அவனைத் தடுத்த அமைச்சனான மகோதரன், அச்செயலால் நம்மீது பழிதான் வரும் என்றும், எல்லா உலகிலும் உள்ள அரக்கர்களைத் திரட்டி ராமனை வெல்லும் வழி காணுவோம் என்றும் கூறுகிறான். இந்த அரக்கர்களின் சேனைதான் மூல பல சேனை என்று அழைக்கப்பட்டது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகிலும் கீழே உள்ள ஏழு உலகிலும் உள்ள அரக்கர்கள் அனைவரையும் கொண்டது இந்தச் சேனை. அவர்கள் அனைவரையும் சம்மன் அனுப்பி மகோதரன் வரவழைத்தான். அந்தச் சேனையில் சாகத்தீவினர், குசைத்தீவினர், இலவத் தீவினர், அன்றில் தீவினர், பவளக்குன்றி