Friday, 16 October 2020

தமிழகத்தில் சக்தி வழிபாட்டின் தொன்மை

தமிழ்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் தற்போது கீழடி ஒன்றே பிரதானமாக முன்னிருத்தப் படுகிறது. மற்றவையெல்லாம் ஏதோ காரணமாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி அதிகமாகப் பிரபலமாகாத கல்வெட்டு ஒன்றினைப் பற்றினைப் பற்றி இந்த நவராத்திரி நன்னாளில் பார்ப்போம். 

தமிழகத்தில் சக்தி வழிபாட்டினைப் பற்றி அறிய ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியத்திலிருந்து தொடங்கி சிலப்பதிகாரம் வரை பல்வேறு வடிவங்களில் சக்தி போற்றப்படுகிறாள். ஆனால் இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏதேனும் உண்டா என்ற கேள்வி பலகாலமாக இருந்து வந்தது. அதற்கு விடையாகக் கிடைத்தது திருப்பரங்குன்றத்தில் கண்டறியப்பட்ட ஒரு கல்வெட்டு. அதைப் பார்ப்பதற்கு முன்னால் திருப்பரங்குன்றம் மலைக்கோவிலைப் பற்றிய ஒரு சிறிய புராணக்கதை. இதைப் படிக்க விரும்பாதவர்கள் இரண்டு பாரா தாவிவிடவும். 

திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் மிகப்பழமையான இடங்களில் ஒன்று. மதுரையின் புறநகர்ப்பகுதியாக கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஊர் இருந்திருக்கிறது. முருகப்பெருமானின் முதல்படை வீடாகக் குறிப்பிடப்படும் இந்த ஊரைப் பற்றி சங்க இலக்கியச் சான்றுகள் அதிகம். அதிகம் பிரபலமான அடிவாரக் குடைவரைக் கோவிலைத் தவிர, இந்தக் குன்றின் மேலே காசி விசுவநாதார் கோவில் ஒன்றும் உண்டு. அது தொடர்பான கதைதான் இது. மதுரைச் சங்கத்தின் தலைமைப் புலவரான நக்கீரர் சிவபக்தர். திருப்பரங்குன்றம் மலையை அடுத்த சரவணப்பெய்கையின் கரையில் தவம் செய்யும் வழக்கம் அவருக்கு உண்டு. அப்படி தினமும் தன் தவத்தைக் காலையில் முடித்துக்கொண்டு இலிங்க வடிவமான மலையைச் சுற்றிவிட்டு, அங்கே குடிகொண்டிருக்கும் முருகனைத் தரிசிக்காமல் சென்றுவிடுவார். இதைக் கண்ட முருகன் அவரிடம் விளையாட நினைத்தான். பொய்யாமொழிப் புலவர் போல தகப்பனை மட்டும் வழிபட்டு தன்னைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும் நக்கீரரை ஆட்கொள்ள நினைத்தான் முருகன். அதனால் தன்னுடைய கணங்களான அண்டராபரணரையும் உக்கிரமூர்த்தியையும் சரவணப்பெய்கைக்கு அனுப்பி வைத்தான். (இவர்கள் இருவரையும் திருப்பரங்குன்றம் கோவிலில் கம்பத்தடி மண்டபத்திலிருந்து ஏறும் படிகளின் இருபுறமும் காணலாம்) 

இரு கணங்களும் நக்கீரர் தவம் செய்யும் இடத்திற்குச் சென்றனர். அவரின் தவ வலிமையால் அவரை நெருங்க முடியாமல் இருவரும் தவித்தனர். அப்போது அண்டராபரணர், மரத்திலிருந்து ஒரு இலையைக் கிள்ளி அதன் ஒரு பகுதியை நீரிலும் மற்றொன்றை நிலத்திலும் போட்டார். நீரிலுள்ளது மீனாகவும் நிலத்திலுள்ளது கொக்காகவும் மாறி இரண்டும் சண்டையிட ஆரம்பித்தன. இதனால் நக்கீரரின் தவம் கலைந்தது. அந்த தருணத்தைப் பயன்படுத்தி இரண்டு கணங்களும் அவரைச் சிறைப்படுத்தி மலைமேல் கொண்டு சென்று அடைத்துவைத்துவிட்டனர். உண்மையை உணர்ந்த நக்கீரர் முருகனைப் புகழ்ந்து திருமுருகாற்றுப்படை பாடினார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு அருள் செய்து அவர் முன் காட்சியளித்தான். நக்கீரர் வேண்டியபடி காசி விஸ்வநாத லிங்கத்தையும் கங்கையையும் அங்கேயே வரவழைத்து அவருக்கு காசி சென்ற பலனையும் வழங்கினான். 



இந்தக் கோவில்தான் மலை மீது காசிவிஸ்வநாதர் கோவிலாக இப்போது உள்ளது. அருகில் கங்கை சுனையாக உள்ளது. முழுக்கப் பாறையான இந்த மலையில், அந்தச் சுனையில் பெரும்பாலும் நீர் நிரம்பி இருப்பது ஓர் ஆச்சரியம். அந்தச் சுனை கொஞ்சம் வற்றியபோது அங்கே சென்ற சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுதான் இந்தக் கல்வெட்டு. அதில் என்ன எழுதியிருந்தது என்றால், தமிழ் பிராமி எழுத்துகளில் 


"மூநாகரா மூசகதி"   என்று எழுதியிருந்தது. இந்த மலையில் பின்புறத்தில் சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. அதைவைத்து இது மூநாகாரா என்ற சமண முனிவர் மோட்சகதி அடைந்ததைக் குறிக்கிறது என்று சமண லாபியைச் சேர்ந்தவர்கள் திரிக்க ஆரம்பித்தனர்.  ஆனால் தமிழ் பிராமியைப் பொருத்தவரை 'மூ' வின் வடிவம் வேறு 'மோ' வேறு. தவிர சமணத்தில் மோட்ச கதி அடைந்ததையெல்லாம் குறிப்பிடுவதில்லை. ஆகவே அது தவறான கருத்து என்பதைப் பலர் உறுதி செய்தனர். அதன்பின் இந்தச் சொற்களை ஆராய்ந்ததில், பண்டைக்காலத்தில் தமிழ் பிராமியின் எழுத்தமைதியைப் பொருத்தவரை குறில் நெடிலுக்கான வேறுபாடு பல இடங்களில் பேணப்படுவதில்லை (இதனைப் பிற்காலக் கல்வெட்டுகளில் கூடக் காணலாம்) என்ற காரணத்தாலும், மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் பின்னாளில்தான் வந்தது என்ற காரணத்தாலும் (ஐராவதம் மகாதேவனின் புள்ளி தந்த பிள்ளையார் நினைவிருக்கலாம்), இந்தக் கல்வெட்டை 'மூநகர மூசக்தி' என்று வாசித்தனர். இதன் பொருள் என்ன



மூ என்ற மூத்த. மூ நகரா - மூத்த நகரத்தின் மூ சக்தி அதாவது மூத்த சக்தி. மூத்த நகரமான மதுரையில் குடிகொண்டிருக்கும் மூத்த சக்தி என்பதே இதன் உட்பொருளாகும். பொயுமு 200ம் ஆண்டிற்குப் பிறகே தமிழ் பிராமி எழுத்துகளில் புள்ளி வைக்கும் வழக்கம் வந்ததால், இந்தக் கல்வெட்டின் ஆண்டு பொயுமு 200க்கு முன்பு இருக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த எழுத்துகளில் அருகில் உள்ள சூலமும் இங்கே கவனிக்கத் தகுந்தது. பாண்டியர் நாணயங்களிலும் இதுபோன்ற சூலம் இருப்பதைக் காணலாம். அது பாண்டியர்களின் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனைக் குறிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. ஆகவே மதுரையில் குடிகொண்ட அன்னை மீனாட்சியையே இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இப்படி மதுரையின் தொன்மையையும் அதன் தெய்வமான மீனாட்சி அம்மனின் தொன்மையும் ஒருங்கே குறிப்பிடும் இந்தக் கல்வெட்டைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகாவிட்டாலும், சக்தி வழிபாட்டின் தொன்மையைப் போற்றும் தமிழகத்தின் ஆகப்பழைய கல்வெட்டுகளில் ஒன்றாக இது உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 

படம் : நன்றி - தி இந்து