Saturday 30 June 2018

பாண்டிய வம்சமும் நாயக்கர்களும்

முதலில் ஒரு டிஸ்கி. தமிழகத்தில் ஆட்சி செய்த பாண்டிய வம்சம் எப்படி முடிவுக்கு வந்தது? அதற்குக் காரணம் விஜயநகர நாயக்கர்களா அல்லது வேறு யாராவதா? இந்தக் கேள்விகள் தொடர்பாக ஒரு விவாதம் நடந்தது. அது தொடர்பாக நான் சொல்லியிருந்த கருத்துகளுக்கான தரவுகளை அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதால் மட்டுமே இந்தப் பதிவு. மற்றபடி, இந்த விவாதத்தைத் தொடர எனக்கு நேரமும் விருப்பமும் இல்லை.



முடத்திருமாறனால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைப் பாண்டியர் வம்சம் எப்படி மதுரையிலிருந்து அகற்றப்பட்டது என்பதைப் பற்றி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. பொயு 13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய சகோதரர்களுக்குள் தாயாதிச்சண்டை மூண்டதும், அதன் விளைவாக மாலிக்கபூர் மதுரைமீது படையெடுத்ததும் தெரிந்த விஷயம். நிலைகுலைந்த மதுரையை மீட்டெடுத்து ஆட்சி செய்ய முனைந்த அவர்களின் உறவினனான பராக்கிரம பாண்டியன், உலூக் கான் என்ற முகமது பின் துக்ளக்கால் பிடிபட்டுக் கொலை செய்யப்பட்ட பின் மதுரைப் பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது. மதுரையும் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் சுல்தான்களால் ஆட்சி செய்யப்பட்டு இருளில் முழ்கியது. பின் குமார கம்பண்ணர்,  மீனாட்சியின் அருளால் மதுரையை வென்று சுல்தான்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அதன்பின் என்ன நடந்தது என்பது பற்றிக் குழப்பமான தகவல்களே கிடைக்கின்றன. கம்பண்ணர் விஜயநகரம் திரும்பும் போது, பாண்டிய வம்சாவளியினர் சிலருக்கு மதுரைப் பகுதியை ஆளும் உரிமையை அளித்து மீண்டதாகத் தெரிகிறது.  ஆனால், பாண்டியர்களின் சிற்றரசர்களாக இருந்த வாணாதிராயர்கள், அவர்களை வென்று மதுரையைக் கைப்பற்றிக்கொண்டனர். இந்த வாணாதிராயர்கள் புதுக்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் என்பது அங்கு கிடைக்கப்பெற்ற அவர்களின் கல்வெட்டுகளால் தெரிகிறது. தங்களைப் 'பாண்டிய குலாந்தகர்கள்' என்றும் 'மதுராபுரி நாயகன்' என்றும் கூறிக்கொள்வதன் மூலம், பாண்டியர்களை வென்று தென் திசைக்கு விரட்டியது அவர்களே என்பது தெளிவு. கல்வெட்டுகளில் காணும் பின்வரும் வெண்பாவும் இதைத் தெளிவுபடுத்துகிறது.

'இழைத்த படியிதுவோ வெங்கனா வென்றன்
றழைத்த வழுகுரலேயால் - தழைத்தகுடை 
மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த 
தென்னவர்கோன் போன திசை'
(Inscriptions of The Pudukottai State, No. 678)

ஆக, விசுவநாத நாயக்கர் மதுரையை தலைமையாகக் கொண்டு ஆட்சி செலுத்தும் முன்னரே, பாண்டியர் ஆட்சி அங்கிருந்து நீங்கி விட்டது.   தென் திசை நோக்கிச் சென்ற பாண்டியர்கள் தென்காசி, திருநெல்வேலி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய ஊர்களைத் தலைநகர்களாக கொண்டு ஆட்சி செய்யத்தொடங்கினர் என்பது அவர்களின் கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் தெரிய வருகிறது. பிற்பாடு, விசுவநாத நாயக்கர் மதுரையில் இருந்து ஆட்சி செய்த போது, விஜயநகரப்பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இவர்கள் தொடர்ந்தனர் என்பதும் அவர்களோடு மண உறவு கொண்டிருந்தனர் என்பதும் வரலாறு நமக்கு அளிக்கும் செய்திகள். விசுவநாதரோடோ, அரியநாதரோடோ பாண்டியர்கள் போர் புரிந்ததாக எந்தச் செய்தியும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

மேலும், தென்காசிப் பாண்டியர்கள் போர் புரிந்தது சேர அரசர்களோடுதானே அன்றி விஜயநகரப் பேரரசுடன் இல்லை. குறிப்பாக, சடையவர்மன் சீவல்லபப் பாண்டியன் (பொயு 1534-43) தென்காசியை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, திருவாங்கூரைச் சேர்ந்த உதயமார்த்தாண்டவர்மன் என்ற அரசன் சேரமாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களைக் கைப்பற்றிக் கொண்டான். சீவல்லப பாண்டிய விஜயநகர அரசனான அச்சுதராயனின் உதவியைக் கோரினான். தென்னாடு நோக்கிப் படையெடுத்த அச்சுத ராயன், சேரமன்னனை வென்று அப்பகுதிகளை மீட்டு, பாண்டியனிடம் திருப்பிக்கொடுத்தான். இதனால் மனம் மகிழ்ந்த சீவல்லபன் தனது மகளை அச்சுத ராயனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் என்று திருவாங்கூர்க் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பாண்டியர்கள் உள்நாட்டுப்பூசலால் தங்கள் வலிமையை இழந்து, வாணாதிராயர்களால் தோற்கடிக்கப்பட்டு சிற்றரசர்களாக மாற நேர்ந்ததே அன்றி, நாயக்கர்கள்தான் அவர்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வது வரலாற்றைத் திரித்துக்கூறும் முயற்சியாகும்.

ஆதாரம்:

1) பாண்டியர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார்.
2) The Pandyan Kingdom by K A Nilakanta Sastry
3) History of the Nayaks of Madura - S Sathyanatha Aiyar










Monday 28 May 2018

வாலைக்குமரி





பழங்காலத்தில் புலமைத்திறனைச் சோதிக்க ஈற்றடியைக் கொடுத்து அதற்கான பாடலை எழுதச்சொல்லும் வழக்கம் இருந்தது. பாரதியாரைக் கூட 'பாரதி சின்னப்பயல்' என்ற ஈற்றடியைக் கொடுத்து எழுதச்சொல்லி ஒருவர் வாங்கிக்கட்டிக்கொண்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம் அல்லவா.  அதன்படியே, இதுபோன்று ஈற்றடிகளைக் கொடுத்து புலமை விளையாட்டில் ஈடுபடுவதில் போஜராஜனுக்கு மிகவும் விருப்பமுண்டு. அவன் அரசவையில் காளிதாஸனில் இருந்து பல கவிராஜ சிம்மங்கள் இருந்ததால் அவர்களும் அரசனுக்கு ஈடுகொடுத்து பாடல்கள் இயற்றிவந்தனர்.

ஒருநாள் இரவு நகர்ச்சோதனை முடிந்து அதிகாலை நேரத்தில் போஜன் அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு குருகுலம், மாணவர்கள் சமஸ்கிருத ககர வரிசைப் பாடத்தை மனனம் செய்துகொண்டிருந்தனர். 'க(1), க(2), க(3), க(4)' என்று தாளக்கட்டோடு அவர்கள் உருப்போட்டது அரசனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அன்று அரசவையில் தன் மனதில் ஒலித்துக்கொண்டிருந்த 'க(1), க(2), க(3), க(4)'  வையே ஈற்றடியாகக் கொடுத்து அதற்கான பாடல் ஒன்றை இயற்றுமாறு புலவர்களைக் கேட்டுக்கொண்டான் போஜராஜன்.

புலவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. வார்த்தைகள் எதையாவது ஈற்றடியாகக் கொடுத்தால் அதற்குப் பாட்டெழுதலாம். ககரவரிசைக்கு எப்படி எழுதுவது?  காளிதாஸன் மனதிலும் குழப்பம். அரசனுக்கு காளிதாஸனையே மடக்கிவிட்ட களிப்பு. 'அவசரம் ஏதுமில்லை, ஒரு நாள் கூட எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தாராளமனதோடு அவர்களுக்கு நேரம் அளித்து அவையைக் கலைத்தான் அரசன்.

அரசன் அளித்த ஈற்றடிக்குப் பாட்டு எழுதும் தோன்றாமல், வருத்தத்தோடு வீடு நோக்கி நடந்த காளிதாஸன் அம்பிகையை மனதில் கண்மூடி தியானித்தான். கண்ணைத் திறந்து பார்த்தால், எதிரில் குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிழ் சிரிப்புமாய் ஒரு சிறுமி. துறுதுறுப்பான அந்தக் குழந்தையைப் பார்த்ததும் காளிதாஸன் தன் கவலையை மறந்து அவளோடு உரையாடத்துவங்கினான்.

கா த்வம் பாலே (குழந்தாய் உன் பெயரென்ன)
அந்தச் சிறுமி பதிலளித்தாள் : காஞ்சனமாலா

கஸ்ய புத்ரி (நீ யாருடைய பெண்) : கனகலதாயா (கனகலதாவின்)
ஹஸ்தே கிம் தே (கையில் என்ன? ) : தாலி பத்ரம் (பனையோலை)
கா வா ரேகா (அதில் என்ன எழுதியிருக்கிறது) : க(1), க(2), க(3), க(4)'

என்று சொல்லிவிட்டு குதித்தோடிவிட்டாள் அந்தப் பெண். காளிதாஸன் மனதில் அந்த உரையாடலே ஒரு பாடலாக உருவாகிவிட்டது.

கா த்வம் பாலே ! காஞ்சன மாலா
கஸ்ய புத்ரி ! கனகலதாயா ஹஸ்தே கிம் தே ! தாலி பத்ரம் கா வா ரேகா ! க(1) க(2) க(3) க(4)

அரசனிடம் (வழக்கம்போல) இப்பாடலைச் சொல்லிப் பரிசு பெற்றுக்கொண்டான் காளிதாஸன் என்று சொல்லவும் வேண்டுமா

Sunday 25 March 2018

ராமனின் வில் திறம் - மூலபல சேனை வதம்

ராமனுடைய வில்லின் திறம் பற்றி கம்பன்  பல இடங்களில் பாடியிருக்கிறான். அவற்றில் எல்லாம் உச்சமானது  மூலபல சேனை வதத்தைப் பற்றிய பகுதிதான் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அந்தச் சேனையின் எண்ணிக்கையும் வலுவும் அப்படிப்பட்டது. மூலபல அரக்கர் சேனையை தனியொருவனாக எதிர்த்து நின்று ராமன் முறியடித்த விதத்தைக் கம்பன் சொல்லியபடி விளக்குவதென்றால் ஒரு பதிவு அல்ல, ஒரு நூறு பதிவும் போதாது. இருப்பினும் அதைச் சுருங்கக் காண்போம். 




இந்திரஜித்தின் வதத்தை அடுத்து சொல்லொணாத் துயரம் அடைந்த ராவணன் சீதையை வெட்டிப்போட விரைகிறான். அப்போது அவனைத் தடுத்த அமைச்சனான மகோதரன், அச்செயலால் நம்மீது பழிதான் வரும் என்றும், எல்லா உலகிலும் உள்ள அரக்கர்களைத் திரட்டி ராமனை வெல்லும் வழி காணுவோம் என்றும் கூறுகிறான். இந்த அரக்கர்களின் சேனைதான் மூல பல சேனை என்று அழைக்கப்பட்டது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகிலும் கீழே உள்ள ஏழு உலகிலும் உள்ள அரக்கர்கள் அனைவரையும் கொண்டது இந்தச் சேனை. அவர்கள் அனைவரையும் சம்மன் அனுப்பி மகோதரன் வரவழைத்தான். அந்தச் சேனையில் சாகத்தீவினர், குசைத்தீவினர், இலவத் தீவினர், அன்றில் தீவினர், பவளக்குன்றினர், கந்தமாதானத்தோர், மலையத்து மறவோர், புட்கரத்தீவினர், இறலித்தீவினர், பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று பல பிரிவினர் இருந்தனராம். 

அவர்களைக் கண்ட ராவணன் அவர்களது எண்ணிக்கை யாவது என்று மகோதரனிடம் கேட்டான். அந்த அரக்கர் சேனையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடக்க இயலாது என்று மகோதரன் பதிலுரைத்தான். சரி, ஆட்களைத்தான் எண்ண முடியவில்லை, படைத்தலைவர்களையாவது கொண்டுவாருங்கள் என்று ராவணன் தன் தூதர்களை அனுப்பி அந்தச் சேனையின் தலைவர்கள் எல்லாரையும் தருவித்தான். 

அவர்களிடம் ராம,லட்சுமணர்களையும் வானரவீரர்களையும் வெல்ல வேண்டிய காரணத்தைக் கூறியதும், அவர்கள் வெடிச்சிரிப்புச் சிரித்தனர். 

உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரோடும் வாங்க அன்றுஅங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை

ஏம்பா, எங்களை நீ கூப்பிட்டது  உலகை ஆதிசேடனின் தலைமேல் இருந்து எடுக்கவோ, ஏழு மலைகளை வேரோடு பிடுங்கி எறியவோ, கடலை உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவோ என்று பார்த்தால் போயும் போயும் மலர்களோடு இலைகளை உண்டு தின்னும் குரங்குகளைக் கொல்லச்சொல்கிறாயே என்று அவர்கள் ஆத்திரப்பட்டனர். 

அதன்பிறகு ராவணன் ராம, லட்சுமணர்களின் வீரத்தைப் பற்றியும் அனுமன் முதலிய வானரர்களின் வலிமையைப் பற்றியும் விளக்கிக்கூற அவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அந்தச் சேனா வீரர்களிடம் நீங்கள் ராம, லட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று  கூறி ராவணனும் போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்திற்கு வந்த அந்தச் சேனையில்,  எத்தனை மேகங்கள் இருந்தனவோ அத்தனை யானைகள் இருந்ததாம், எத்தனை யானைகள் இருந்ததோ அவற்றிற்கு ஈடாக தேர்கள் இருந்தனவாம், உலகில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கைக்கு ஈடாக குதிரைகள் இருந்தனவாம். இப்படிப்  பெருங்கூட்டமாக வந்த இந்தச் சேனையைக் கண்டு வானரங்கள் போர்க்களத்தை விட்டு சிட்டாகப் பறந்து விட்டன. தொண்டர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்படி இருந்திருக்கிறார்கள். ராம, லட்சுமணர்களுடன் அனுமன், சுக்ரீவன், அங்கதன் ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அரக்கர் சேனையைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கூறி அவர்களை அழைத்துவர ராமன் அங்கதனை அனுப்பினான். ஒருவழியாக அங்கதன் அவர்களை அழைத்துவந்ததும் அவர்களைக் காக்க லட்சுமணனையும் அவனுக்குத் துணையாக அனுமனையும் அனுப்பிவிட்டு, தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மூலபல சேனையை எதிர்த்து நின்றான். துணை ஏதும் வேண்டாத தோள் வலியன் அல்லவா அவன். 


ராமனின் வில் எழுப்பிய ஒலியைக் கண்டு அச்சமுற்ற அரக்கர்கள், அவன் தனியே வந்து நின்ற கோலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 

புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள்,
விரைந்து புள்ளின்மீது விண்ணுளோர்களொடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான்

முப்புரங்களை எரித்த சிவனுக்கு தேர் இருந்தது, தேவர்களுக்கும் அவர்களுக்குரிய வாகனங்கள் இருந்தன, விஷ்ணுவுக்கு கருடன் வாகனமாக இருந்தான். ஆனால் இவன் மட்டும் தனியே வந்து எதிர்க்கிறானே என்று வியந்தனராம் அவர்கள். 

"வேங்கை மவன் ஒத்தையில நிக்கான்' என்றெல்லாம் வசனம் பேசாமல் தன்னைச் சூழ்ந்த அரக்கர் படைமீது ராமன் தனது பாணங்களைத் தொடுத்தான். 

ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும்,ஆடல் மா
மீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வெவ்
வாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின்மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான்.

அரக்கர் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் திரிந்து அதிவேகமாக தமது பாணங்களை ராமன் விட்டதால் அரக்கர் படை பெருமளவில் அழிந்தது. இருந்தாலும் பல்லாயிரம் கோடி வீரர்களைக் கொண்ட சேனை அணி அணியாக வந்து ராமனை எதிர்த்தது.  

அரக்கர் சேனை அயராமல் வந்து வந்து தாக்கினாலும், ராமன் தொடர்ந்து கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் தோன்றி தனது அம்புகளினால் அரக்கர்களைக் கொன்று குவித்தான். ஒருவனாக இருந்த ராமன் இப்படிப்  பார்க்கும் இடமெல்லாம் தோன்றுவதைக் கண்டு குழப்பமடைந்த அரக்கர்களும் தங்களையே ஒருவருக்கொருவர் வெட்டிக்கொன்று அழிந்தனர். இப்படியாக மூலபல சேனை முற்றிலுமாக அழிந்தது. 

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை  ஆடியது இனிது அன்றே

ஆயிரம் ஆனைகள், பதினாயிரம் தேர், குதிரைகள் ஒரு கோடி, படைவீரர் ஆயிரம் பேர் இறந்துபட்டால், போர்க்களத்தில் ஒரு கவந்தம் எழுந்து கூத்தாடுமாம். அப்படி ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் ராமனுடைய வில்லில் கட்டியிருக்கும் மணி ஒன்று கணீர் என்று ஒலிக்குமாம். இந்தச் சேனையை ராமன் அழித்த போது ஏழரை நாழிகை (சுமார் மூன்று மணி நேரம்) அந்த மணி இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்ததாம். அத்தனை பெரிய சேனை, அத்தனை அரக்கர்கள். 

என்னே ராமனின் வில் திறம் !!