Friday 2 September 2022

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள். 


பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வந்தது. நாடு பிடிக்கும் ஆசையினாலா? இல்லை. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது சோழ நாட்டு வர்த்தகம். எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் வெளிநாட்டு வர்த்தகம் வளர்ச்சியடைந்து, வணிகக் குழுக்கள் தோன்றின. அவற்றில் மிகப் பெரியதும் பிரபலமானதுமாக இருந்தது, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் குழு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களை கப்பல்கள் மூலம் தூரக்கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு சென்று வர்த்தகம் செய்ய ஆரம்பித்தனர் இவர்கள். ஒரு புறம் வர்த்தகம் பல்கிப் பெருகினாலும் மற்றொரு புறம் அரபு நாடுகளைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் இவர்களுக்கு ஆபத்துகள் பல நேர்ந்தன. இது வர்த்தகத்தைப் பாதிக்க ஆரம்பிக்கவே, அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சோழர் கடற்படையிடம் வந்து சேர்ந்தது. முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகளை ராஜராஜ சோழர் வெற்றி கொண்டது, இந்தக் கடற்கொள்ளையர் ஆதிக்கத்தைத் தகர்க்கவே. அதில் ஓரளவு அவர் வெற்றியடைந்ததால், சோழர் வர்த்தகம் முன்பு போலவே வளர்ச்சிப்பாதையில் செல்லத்துவங்கியது. 


ஆனால், ராஜேந்திரர் கங்கைப் படையெடுப்பை நிகழ்த்திய பிறகு, சிக்கல் அவர்களுடைய நெருங்கிய நண்பர்களான ஶ்ரீவிஜயப் பேரரசர்களிடமிருந்து வந்தது. சோழப்பேரரசும் ஶ்ரீவிஜயமும் சீனாவிடம் போட்டி போட்டு வர்த்தகம் செய்துகொண்டிருந்தன. ஆனால், வளர்ந்துவந்த சோழர் வணிகத்தைக் கண்டு அசூயை அடைந்த ஶ்ரீவிஜய அரசர்கள், சோழர்கள் தங்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் என்றும் அதனால் வர்த்தகத்தில் தங்களுக்கே முன்னுரிமை வேண்டும் என்றும் சீனப்பேரரசரிடம் ‘போட்டுக்கொடுத்துவிட்டனர்’. இதனால் வெகுண்ட ராஜேந்திரர் ஶ்ரீவிஜயத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். இத்தனைக்கும் ஶ்ரீவிஜயப்பேரரசு ஒன்றும் அல்பசொல்பமானதல்ல. பல ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டு பரந்து விரிந்த சாம்ராஜ்யம் அது. இதைப் பற்றி அரபுப் பயணியான மஸ்’உடி இப்படி எழுதியிருக்கிறார். 


In the sea of Champa is the empire of Maharaja, the king of the islands, who rules over an empire without limit and has innumerable troops. Even the most rapid vessels could not complete in two years a tour round the isles which are under his possession. The territories of this king produce all sorts of spices and aromatics, and no other sovereign of the world gets as much wealth from the soil." (Mas'udi)


இப்படிப்பட்ட அரசைத் தோற்கடிக்க திறமையான பரதவர்களையும், மாலுமிகளையும், கப்பலில் இருந்து நிலத்திலிறங்கிப் போரிடும் வீரர்களையும் கொண்ட படை ஒன்று உருவானது. சோழர்களின் கப்பல் படை நாகப்பட்டினத்திலிருந்து நேரடியாக ஶ்ரீவிஜயம் நோக்கிச் சென்றது என்பது பலரின் கருத்தாக இருந்தாலும், கலிங்க நாட்டிலிருந்த பாலூர்த் துறைமுகத்திற்குச் சென்று அங்கிருந்துதான் சோழர்கள் ஶ்ரீவிஜயம் சென்றனர் என்பது சில ஆசிரியர்களின் கருத்து. காற்று தென்கிழக்குத் திசையை நோக்கி, அனுகூலமாக அந்தத் துறைமுகத்திலிருந்துதான் வீசும் என்பதாலும், இதனால் அதிக சிரமமில்லாமல் அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை எட்டிவிடலாம் என்பதாலும், சோழர்கள் அந்தத் துறைமுகத்தைத் தொட்டுவிட்டு அங்கிருந்து தென்கிழக்கு நோக்கிச் சென்றனர். (பிரபல சரித்திரநாவலாசிரியர் சாண்டில்யன், ‘கடல்புறா’ வில் பாலூர்த் துறைமுகத்திலிருந்தே கதாநாயகன் இளையபல்லவன் கடாரம் செல்வதாகக் காட்டியிருப்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்). இந்தப் பாலூர், தற்போது ஒடிசாவின் கோபால்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமாக ஆகிவிட்டது. 


பொயு 1025ம் ஆண்டு, சோழ நாட்டிலிருந்து புறப்பட்ட கடற்படை எந்தெந்த இடங்களை வெற்றிகொண்டது என்பதைப் பற்றி ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி விவரிக்கிறது. அந்தப் பகுதியைப் பார்ப்போம். 


அலைகடல் நடுவுட் பலகலம் செலுத்திச் 

சங்கிராம விசையோத் துங்க வர்ம 

னாகிய கடாரத் தரசனை வாகையும் 

பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்

துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்

ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் 

விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்

புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும் 

நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் 

வண்மலையூ ரெயிற் றொன்மலையூரும்

ஆழ்கட லகழ்சூழ் மாயிருடிங்கமும் 

கலங்கா வல்வினை இலங்காசோகமும் 

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் 

காவலம் புரிசை மேவிலம் பங்கமும்

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்

கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்

தீதமர் பல்வினை மாதமாலிங்கமும் 

கலாமுதிர் கடுந்திறல் லிலாமுரி தேசமும் 

தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் 

தொடுகடற் காவற் கடுமுரண் கடாரமும் 

மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான 

உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு


முதலிலேயே எதற்காக இந்தப் படையெடுப்பு என்பதைத் தெளிவாகச்சொல்லிவிடுகிறது மெய்க்கீர்த்தி. சங்கிராம விசயோத்துங்க வர்மனாகிய கடாரத்தரசனை வெற்றி வாகை கொள்ளும் பொருட்டு இந்தப் படையெடுப்பு நடந்தது என்பது தெரிகிறது. அதன்பின் பதின்மூன்று இடங்களை சோழர் படை தாக்கியதாக மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது. முதலில் வருவது ஶ்ரீவிஜயம், பேரரசின் தலைநகரான இந்த இடம் தற்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள பாலெம்பங் என்ற இடமாகும். அடுத்து துறைநீர்ப் பண்ணை. இதுவும் சுமத்ராத் தீவின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது.  தற்போது பன்னெய் என்று அழைக்கப்படுகிறது. சுமத்ராத் தீவில் இருக்கும் இன்னொரு நகரமான மலையூர் ஜம்பி நதியின் முகத்துவாரத்தில் உள்ளது. மாயிருடிங்கம் என்பது மலேசியத் தீபகற்பத்தின் நடுவில் உள்ளது. சீனர்கள் அதை ஜிலோடிங் என்று அழைத்துள்ளனர். இலங்காசோகம் மலேசியாவின் கிழக்கில் அமைந்துள்ள ஒரு நகரம். பப்பாளம், தற்போதைய கிரா பூசந்தியின் பழைய பெயர் (Isthumus of Kra). தக்கோலம் என்பது தற்போதைய தாய்லாந்தில் கிரா பூசந்திக்கு தெற்கில் உள்ள தகோபா எனும் ஊர். தமாலிங்கம், தற்போதைய மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள Temiling என்ற நகரம். இலாமுரி தேசம், சுமத்ராவின் முனையில், அக்ஷய முனை என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய ‘Aceh’ என்ற பெயரையுடைய நாடாகும். நக்காவரம் என்பது நிகோபார் தீவுகளின் பழைய பெயர். கடாரம், மலேசியாவின் மேற்கிலுள்ள கேடா நகரம். இலம்பங்கம், வளைப்பந்தூர் ஆகிய ஊர்கள் எங்கிருக்கின்றன என்பது இன்னும் அறியப்படவில்லை. இதை ஓரளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வர முனைந்திருக்கின்றேன். 





இக்காலத்தில், ராணுவ வியூகங்களில் ‘Operation Garland’ என்றெல்லாம் சொல்கிறார்களே, அதை அப்போதே ராஜேந்திரர் எப்படி செயல்படுத்தியிருக்கின்றார் என்பது இப்படத்திலிருந்து புலப்படும். ஶ்ரீவிஜயப் பேரரசைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் அவர் சூறையாடியிருக்கின்றார். மலேயா தீபகற்பத்தின் கிழக்குக்கடற்கரையிலும் நெடுந்தூரம் சென்றிருக்கின்றன சோழர் படைகள். இதன் காரணமாக ஶ்ரீவிஜயத்தின் கடற்படை வலு தகர்க்கப்பட்டது. அவர்களுடைய யானைப்படைகள் அழிக்கப்பட்டன (கும்பக் கரியோடு மகப்படுத்தி) . இது ஶ்ரீவிஜயப்பேரரசிற்கு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் ஒரு செய்தியை உணர்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் படையெடுப்பைத் தொடர்ந்து சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்தது. பின்னால், ராஜேந்திரரின் மருமகனான குலோத்துங்கன் சீனாவிற்குத் தூது சென்று வரும் அளவிற்கு இந்த உறவு வலுப்பட்டது. 


அரசியல் ரீதியாக இந்தப் போருக்குப் பின்னான விளைவுகள் என்ன? தற்போது பலர் ‘மேப்’ வரைந்து காட்டுவதுபோல், சோழப்பேரரசு இந்த இடங்களில் எல்லாம் ஆட்சி செலுத்தவில்லை. அந்த நாடுகளை தங்களுக்குக் கீழ் கொண்டுவர சோழர்கள் எந்த முயற்சியும் எடுக்கவுமில்லை. இது ஒரு ‘Shock and Awe’ போர் மட்டும்தான். வர்த்தகத்தைத் தவிர சோழர்களுக்கு இந்தப் படையெடுப்பின் மூலம் இன்னொரு லாபமும் கிடைத்தது. மெய்க்கீர்த்தியின் முதல் வரிகள் அதைத்தான் குறிப்பிடுகின்றன. ‘உரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்’,  கடாரத்தரசன் நியாயமான முறையில் சேமித்து வைத்திருந்த செல்வங்களையெல்லாம் சோழப்படைகள் எடுத்துக்கொண்டன. ‘புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும்’ - நகைகளைக் கொண்ட சிறிய வாயில்களையும் பெரிய மணிகளைக் கொண்ட கதவுகளையும் படைகள் தகர்த்து எடுத்துக்கொண்டன. இந்தோனேசியா அக்காலத்தில் செல்வம் கொழிக்கும் பூமியாக, சுவர்ண பூமி என்ற பெயரில் வழங்கியது. அங்கிருந்து அளவிலாச்செல்வத்தை எடுத்துக்கொண்டு நாடு திரும்பினர் சோழர்கள்.  வர்த்தகத்தை மீண்டும் செழிப்புறச் செய்தது மட்டுமல்லாமல், நாட்டின் நிதிவசதியையும் பெருக்கி பல நன்மைகளைச் சோழர்களுக்குச் செய்தது இந்தப் படையெடுப்பு. 




Wednesday 17 August 2022

திருமுறை கண்ட சோழன் யார்






சமீபகாலமாக ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி கவனப்படுத்தும் வழக்கம் அதிகமாக வருகிறது. அப்படி ஒன்று நேற்று கண்ணில் பட்டது. திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுபவன் ராஜராஜ சோழன் இல்லையாம். ஏனென்றால் அவனுடைய காலத்திற்கு முன்பே கல்வெட்டுகளில் பதிகம் படித்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். அவற்றை வரிசையாக அடுக்கி இந்தக் கேள்வியை ஒருவர் எழுப்பியிருந்தார். இந்த விஷயத்தில் நான் பெரிதும் மதிக்கும் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் சிறிது இடறியிருப்பதால் கொஞ்சம் விரிவாக இதைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததற்காகக் கிடைக்கும் ஒரே சான்று திருமுறை கண்ட புராணம் என்ற நூல்தான். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது. அதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையை மூடி வைத்துவிடலாம். ஏனென்றால் ஒட்டுமொத்த விவாதமும் இந்த நூலை ஒட்டியே இருக்கிறது. அந்த நூலில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

சோழவம்சத்தில் வந்த அரசன் ஒருவன் தேவாரப் பதிகம் ஒன்றைக் கேட்கிறான். அதனால் மனம் உருகி மற்ற பாடல்களையும் கேட்க நினைக்கிறான். ஆனால் யாரிடமும் மொத்தத் தொகுதியும் இல்லை (ஏதோ ஒரு புத்தகத்தின் ஓரிரு பக்கங்களைப் படித்து விட்டு முழுப்புத்தகத்தையும் தேடுவது போன்றது இது). ஒருவழியாக அவனிடம் நம்பியாண்டார் நம்பி எனும் அடியாரைப் பற்றி யாரோ சொல்கிறார்கள். திருநாரையூரைச் சேர்ந்த நம்பி, அவ்வூரின் பொள்ளப்பிள்ளையாரின் (பொல்லாப்பிள்ளையார் இல்லை. சிற்பத்தில் பொள்ளாத - செதுக்காத சுயம்புவான பிள்ளையார்) அருள் பெற்றவர். அவரிடம் சென்ற அரசன் பிள்ளையாருக்கான நைவேத்தியங்களைக் கொடுத்துவிட்டு நம்பியிடம் திருமுறைப் பாடல்கள் எங்கேயிருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்க வேண்டுகிறான். நம்பியும் பிள்ளையாரிடம் கேட்டு அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் சிதம்பரத்தில் இருப்பதாகக் கூறுகிறார். மன்னன் அதன்பின் சிதம்பரம் சென்றது, மூவர் சிலைகளை வரவழைத்து கோவிலில் இருந்த அறையைத் திறந்தது, செல்லரித்த சுவடிகளைத் தவிர மீதிச் சுவடிகளை எடுத்து நம்பியிடம் கொடுத்துத் தொகுக்கச் சொன்னது எல்லாம் ஓரளவுக்குத் தெரிந்த வரலாறு.

இதில் முக்கிய பாத்திரங்கள் இருவர். ஒருவர் நம்பியாண்டார் நம்பி. இன்னொருவன் சோழ அரசன். அவன் யார் என்பதுதான் கேள்வி. இதற்குப் பதில் தேடுவதற்கு முதலில் நம்பியாண்டார் நம்பியின் காலத்தை வரையறுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாம் குலோத்துங்கனின் சமகாலத்தவரும் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவருமான சேக்கிழார், சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைக் கொண்டே அந்த நூலை இயற்றியதாகக் குறிப்பிடுகிறார்.

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்

ஆகவே நம்பியாண்டார் நம்பியின் காலம் சேக்கிழாரின் காலத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு. அவர் காலத்தைப் பற்றி திருமுறைகண்ட புராணம் என்ன சொல்கிறது என்று பார்த்தால்

ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்

முதலில் பத்து திருமுறைகளையும் அதன்பின் மன்னன் கேட்டுக்கொண்டதால் பதினோறாவது திருமுறையையும் நம்பி தொகுத்தார் என்கிறது. இந்தத் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையில் சோழ மன்னரான கண்டராதித்தர் பாடிய திருவிசைப்பா உள்ளது. ஆகவே நம்பியின் காலம் கண்டராதித்த சோழனின் காலத்திற்குப் பிறகே என்பதும் தெளிவு. அப்படியானால் திருமுறை கண்ட சோழன் அரிஞ்சய சோழன் காலத்திலிருந்து இரண்டாம் குலோத்துங்கனின் காலம் வரை ஆட்சி செய்த ஏதோ ஒரு சோழமன்னனாகத்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆதித்த சோழனே இந்த மன்னன் என்று பண்டாரத்தார் போன்ற ஆய்வாளர்களின் முடிவு தவறே என்பதும் தெளிவாகிறது. திருமுறைகண்ட புராணத்தை மேலும் பார்த்தால்

ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்

என்று ஒரு இடத்திலும் 

மல்லல்மிகு சேனையுடன் இராசராச
மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான்

என்று இன்னொரு இடத்திலும் ராஜராஜன் என்ற பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் சிவாச்சாரியார். ராஜராஜன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சோழ மன்னர்களில் இரண்டாம் ராஜராஜன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன். சேக்கிழாரின் காலத்திற்கே பிந்தைய காலத்தைசா சேர்ந்த அவன் நம்பியாண்டார் நம்பியின் சம காலத்தவனாக இருக்க முடியாது. இதனால், தஞ்சைப் பெரிய கோவில் அமைத்த சிவபாத சேகரனான முதலாம் ராஜராஜனே திருமுறை கண்ட சோழன் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிற்காலச் சோழர்களில் தியாகேசர் மீது பெரும் பக்தி கொண்டு பல திருப்பணிகளைச் செய்தவனும் முதலாம் ராஜராஜனே.  தவிர, நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் 

புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடுபடுத்த
குலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன்னிய புகழ்ச் சோழனது என்பர் நகுசுடர்வாள்
வலமன்னிய வெறிபத்தனுக்கு ஈந்ததொர் வண்புகழே

சிங்கள நாட்டை வென்ற சோழனின் குலமுதல்வன் எறிபத்த நாயனார் என்கிறார். இலங்கையை முதலில் வென்ற பெருமை பராந்தக சோழனுக்கு உண்டு என்றாலும், இலங்கையை முழுவதும் வென்று சோழர் ஆட்சியை நிறுவிய பெருமை முதலாம் ராஜராஜனையே சேரும். இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்காத ஆதித்த சோழன் எப்படி நம்பியின் சமகாலத்தவர் என்று சொல்ல முடியும் ?

ராஜராஜனுக்கு முன்பே பதிகங்கள் கோவிலில் ஓதப்பட்டன என்பது உண்மை. அதுபோன்று ஒரு பதிகத்தைக் கேட்டுத்தான் ராஜராஜன், மொத்தத் திருமுறைகளையும் தேட ஆவல் கொண்டான் என்பதுதான் இங்கே சொல்லப்படுவது. அவனுக்கு முன்னால் பதிகங்களே பாடப்படவில்லை என்று யாரும் சொல்லாதபோது அதை ஒரு சான்றாக எடுத்துக்கொண்டு வாதம் சொல்ல முடியாது. இதே போன்று வைணவ குரு பரம்பரையில், நம்மாழ்வாரின் பாசுரங்கள் சிலவற்றைக் கேட்ட நாதமுனிகள் திருக்குருகூர் சென்ற ஆழ்வாரின் அருளைப் பெற்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்பதும் வரலாறு. ஆழ்வார், நாயன்மார்களின் காலத்திற்குப் பிறகு கால ஓட்டத்தில் மறைந்து போய் சிற்சில பாடல்களாக மட்டுமே கிடைத்த பதிகங்களையும், பாசுரங்களையும் சோழர் காலத்தில் ஒட்டுமொத்தமாக மீட்டெடுத்துத் தொகுத்த பெருமை நம்பியாண்டார் நம்பியையும் நாதமுனிகளையும் சேரும்.

சைவ மரபில் அந்தப் பெரும்பணியைச் செய்தவன் முதலாம் ராஜராஜ சோழனே என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்ற விஷயம்.

Saturday 9 April 2022

தமிழ் அணங்கு என்னும் அபத்தம்






தமிழ்த்தாயை அணங்காகச் சித்தரிக்கும் படம் ஒன்றை எல்லாரும் பார்த்திருப்பீர்கள். தமிழைப் பற்றிய புரிதல் கொஞ்சம் கூட இல்லாத சித்தரித்தல் அது. இதில் பாரதி பாரதமாதாவை சினம் கொண்டவளாகப் பாடியதால், ஏன் தமிழ்த்தாயும் அப்படி இருக்கக்கூடாது என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்நம்முடைய மரபில் ஒவ்வொரு உருவகத்திற்கும் அதற்கான காரணம் உண்டு. பாரதமாதா சினம் கொண்டது, தான் அடிமைத்தளையில் சிக்கித்தவிக்கும் போது தம்முடைய புதல்வர்கள் அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோழைகளாக இருக்கின்றார்களே என்பதன் காரணமாக (பாரதியின் பார்வையில்). சாந்தமே உருவான அன்னை காளி உருக்கொண்டது தீயவற்றை அழிப்பதற்கு. சாதாரணமாக நாமே கோபத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் காரணமில்லாமல் கோபப்பட்டால் வீட்டில் உள்ளவர்களேஒரு மாதிரிபார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். தமிழன்னைக்குக் கோபம் கொள்ள இப்போது எந்தக் காரணமும் இல்லை. அப்படியே கோபம் அடைந்தாலும் தலைவிரி கோலமாக வெள்ளை ஆடை உடுத்தெல்லாம் கோபமடையமாட்டாள். அது தமிழ் மரபில் அமங்கலத்தையே குறிக்கிறது. 


சரி அணங்கிற்கு வருவோம். தமிழ்த்தாய் எப்படி அணங்காக ஆக முடியும் ? அணங்கு என்றால் என்ன?. நம்முடைய சங்க இலக்கியங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். 


மலையில் உறையும் தெய்வத்திற்கு அணங்கு என்று பெயர். அந்தத் தெய்வம் மலையைக் காக்கும் பணியைப் புரிகின்றனவாம். 


அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்

பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை

அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண் (அகநானூறு)


இப்படி மலையைக் காக்கும் கடவுள் பெரும் வலிமை படைத்தவையாக இருந்ததாம். தமிழ் மரபில் காக்கும் தெய்வங்களும் உண்டு வருத்தும் தெய்வங்களும் உண்டு. இந்த அணங்கு என்பது வருத்தும் (துன்புறுத்தும்) தெய்வம். 


அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர் (மதுரைக் காஞ்சி)


கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக்காரிகை காண்மின் (பரிபாடல்)


அதாவது பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் குணமுடையது இந்த அணங்கு என்ற தெய்வம். அதிலும் இளம்பெண்களைப் பிடித்துத் துன்புறுத்தக்கூடியது. 


மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை (அகநானூறு) 


மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் 

அணங்கு என அஞ்சுவர் சிறு குடியோரே (கலித்தொகை)


இரவில் வந்தால் மலையில் உறையும் அணங்கு என்று அஞ்சுவராம் குடிமக்கள். இப்படி அச்சமளிக்கும் அணங்கு வீரர்களின் ஆயுதங்களில் அமர்ந்து போரில் எதிரிகளைக் கொன்று குவித்து வெற்றி தேடியும் தருமாம் 


அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த

உரவு வில்மேல் அசைத்த கையை (கலித்தொகை)


இப்படி மற்றவர்களைத் தாக்கித் துன்புறுத்தி, இளம்பெண்களைப் பீடித்து, போர்த்தொழிலில் எதிரிகளைக் கொல்லும் குணமுடையஅணங்காக’, மென்மொழியாளான தமிழ்த்தாயைச் சித்தரிப்பது எவ்வளவு கொடுமை. கல்வியை அளிக்கும் கலைமகளாகத் தமிழ்த்தாயைச் சித்தரிப்பதே நம் மரபு. கம்பனின் புகழை உலகெலாம் பரப்பிய கம்பன் அடிப்பொடி சா கணேசன், தமிழ்த்தாய்க்காக ஒரு கோவில் அமைத்தார். அதில் உள்ள தமிழ்த்தாயின் உருவமே மேலே காண்பது. அப்படிப்பட்ட தமிழ்த்தாயே நாம் வணங்கக் கூடியவள்.


(பி.கு. இதற்கிடையில் அந்தப் படம் தூமவதி என்ற தெய்வத்தின் உருவம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தூமாவதி என்ற தெய்வத்தைப் பற்றி கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்)