புத்தாண்டு என்பது ஒரு மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை.
மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற்கள் மதத் தொடர்பானவைகளாக இருக்கலாம். அதனால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியது என்று ஒதுக்குவது முறையாகாது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மக்கள் தனித்தனி நாட்குறிப்பு முறைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை.
இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் பயன்படுத்தும் நாட்காட்டி முறைகளைப் பற்றி சிறிது ஆராயலாம்.
இந்திய நாட்குறிப்பு முறைஇந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. அடிப்படையில் இந்திய நாட்குறிப்பு முறைகளை இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை (ஸுர்யமானம்), சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை (சந்திரமானம் )
இப்போது நாட்குறிப்பு முறையின் சில அடிப்படை வானியல் குறிப்புகள். (இங்கே எங்களுக்கு வானியல் முறைகளும் நட்சத்திரங்கள், ராசிகள், அவைகளைப் பின்புலமாகக் கொண்டு கோள்களின் நகர்வைக் கணிக்கும் முறையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்போர் இரண்டு பத்திகள் தாவி விடவும்.) ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்களை / ஆண்டுகளை கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். . ஆனால் தினமும் நகர்ந்து கொண்டிருக்கும் இவை இரண்டையும் வைத்து எப்படி நாட்களைக் கணிப்பது ?
அதற்கு வானில், பின்புலத்தில் ஓரளவு அசையாமல் கிட்டத்தட்ட இருந்த இடத்திலேயே (கண்பார்வைக்கு) நிலைத்திருந்த விண்மீன்கள் கை கொடுத்தன. சூர்ய, சந்திரர்களின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள் (இவற்றின் பெயர்களை ஜோதிடமும் உபயோகப்படுத்துவதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இங்கு நாம் பார்ப்பது வானியல் மட்டுமே). சூரியனும் சந்திரனும் பூமியிலிருந்து பார்க்கும்போது நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருவது போல் தெரியும். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர். கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. மேஷம் .. என்ற பெயரில், சிம்மம் என்ற பெயரில். அந்த நீள்வட்டப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஆக, ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும்
இங்கு கவனிக்க வேண்டியது, இந்த முறை கணக்கிடுவதற்காக மட்டுமே. மற்றபடி சூரியனையே மற்ற கோள்கள் சுற்றி வந்தன என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.
“வானிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த விளங்குகதிர் ஞாயிறு"
என்கிறது சிறுபாணாற்றுப்படை.
ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் போது மேட வீதி, இடப வீதி, மிதுன வீதி ஆகிய மூன்று வீதிகளில் சூரியன் செல்வது போல் தோன்றும். இந்த மூன்று வீதிகளையும்
“எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்”
என்று குறிப்பிடுகிறது பரிபாடல்.
இப்போது மீண்டும் நாட்குறிப்பு முறைகளுக்கு வருவோம். சூரிய நாட்குறிப்பு முறையை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மலையாளிகள், ஒரிசா மாநிலத்தவர்கள், வங்காளிகள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிட்டனர். பன்னிரண்டு ராசிகளுக்கும் முதலாவதாக மேஷ ராசியை அமைத்தனர். ஏன் மேஷ ராசி முதலாவதாக ஆனது. பாதை நீள்வட்டமாகத்தானே இருக்கிறது? இதில் முதலாவது எது முடிவானது எது?
சூரியன் பூமியைச் சுற்றி நகரும் நீள்வட்டப் பாதையில் விண்மீன்கள் அமைந்திருப்பதாகப் பார்த்தோம் அல்லவா. சூரியன் பயணம் செய்யும் அந்தப் பாதையை ஒரு கோடாக உருவகித்தால் எல்லா விண்மீன்களும் அந்தப் கோட்டில் இருக்கவில்லை, மாறாக அதன் இருபுறத்திலும் அமைந்திருந்தன. அந்தப் பாதையிலேயே இருந்த சில விண்மீன்களில் முக்கியமானது அஸ்வினி என்ற பெயருடைய விண்மீன். சூரியன் பயணம் செய்கின்ற நீள்வட்டப்பாதையின் மத்தியில் அமைந்துள்ளது இது. இந்திய நாட்குறிப்புக் கணக்கீடும் முறை உருவான சமயத்தில் (கிட்டத்தட்ட பொ.யு. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில்) வேனில் சமநாள், அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள் சூரியன் அஸ்வினி மீனில் இருந்த போது வந்தது. காலப்போக்கில் பூமியின் அச்சு நகர்ந்து வந்ததில் காரணமாக அது மேற்கு நோக்கி இடம் மாறி தற்காலத்தில் மார்ச் 22ம் தேதியாக கணிக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து தான் இளவேனில் காலம் துவங்கியது. இந்தக் காரணங்களால் அந்த விண்மீன், நீள்வட்டப் பாதையின் ஆரம்பப் புள்ளியாகவும், அது இடம்பெற்றிருந்த ராசியான மேஷம் ராசிக்கட்டத்தின் முதல் ராசியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகின் மற்ற ராசி வரிசைகளிலும் மேஷத்திற்குத் தான் முதலிடம். ஆங்கில Zodiac வரிசை கூட Aries லிருந்துதான் தொடங்குகிறது.
தமிழர்களுக்கும் அப்படித்தான்
"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து" என்கிறது நெடுநல்வாடை.
“வருடையைப் பணி மகன் வைப்ப” என்கிறது பரிபாடல். இங்கே வருடை என்பது ஆடு. அதிலிருந்துதான் வருடம் என்ற பெயர் வந்தது. ஆகவே மேஷத்தை முதலாவதாகக் கொண்டே நம்முடைய நாட்கணக்கும் தொடங்குகிறது.
மேஷம் முதல் ராசியாதலால் அந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள் ஆண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்பட்டது. எனவே சூரிய நாட்குறிப்பு முறையைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் நாளே புத்தாண்டு. சரி, அப்படியானால் புத்தாண்டு துவங்கும் நேரம் அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்றால், இல்லை. சூரிய நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து நான்கு வேறுபட்ட புத்தாண்டுத் துவக்கங்கள் உள்ளன.
ஒரியா முறை - இந்திய முறையில் ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள 24 மணி நேரம் ஆகும். இந்த ஒரு நாளில் சூரியன் எந்த நேரத்திலும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்ந்தால் அதுவே அந்த மாதத்தின் துவக்கமாக (மேஷ ராசியாக அது இருந்தால் அது ஆண்டின் துவக்கமாக) கொள்ளப்படும்
தமிழர் முறை - சூரியன் அந்த நாளின் சூரிய அஸ்தமானதிற்குள் இடம் பெயர்ந்தால் அன்றே அந்த மாதம் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இல்லையேல் அடுத்தநாள் தான் மாதத்தின் முதல் தேதி.
மலையாள முறை - சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமானதிற்குள் உண்டான நேரத்தில் ஐந்திலிருந்து மூன்று பங்கு நேரத்திற்குள் சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும் இல்லையேல் அடுத்தநாள் தான்.
வங்காள முறை - சூரிய உதயத்திலிருந்து அன்று நள்ளிரவு வரை சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும்.
இவ்வாறு சூரிய நாட்குறிப்பு முறைகளிலேயே நான்கு வேறுபட்ட மாத / ஆண்டுத் துவக்கங்களின் கணக்கிடு முறைகள் உள்ளன. குறிப்பாக இவை ஒரே மதத்தை / மொழியை சார்ந்து இல்லாமல் அந்த அந்தப் பகுதிகளுக்கு உரித்தனவைகளாக உள்ளன என்பதைக் கவனிக்கவேண்டும்.
இப்போது ஆண்டுகளுக்கு வருவோம், தமிழர் நாட்குறிப்பு முறையில் 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப் படுகிறது. இது என்ன காரணத்தால் ? வானில் தெரியும் கோள்களில் மெதுவாக நகரும் கோள்கள் இரண்டு. வியாழனும் சனியும் தான் அவை. வியாழன் சூரியனைச் சுற்றி வர சுமார் பன்னிரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்று கணித்தனர் அன்றைய வானவியலாளர். ஆனாலும் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் தான் ஆரம்பித்த இடத்திற்கு (ஆரம்பப் புள்ளிக்கு) வியாழன் வருவதில்லை. அவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளிக்கு அது மீண்டும் வர 60 ஆண்டுகள் ஆகும் என்றும் கணித்தனர் (அதாவது 5 தடவை சூரியனைச் சுற்றிவந்தால் அது தன் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வருகிறது). இதை வைத்து 60 ஆண்டுச் சுழற்சியை ஏற்படுத்தினர். (துல்லியமாகச் சொல்லவேண்டுமானால் வியாழன் அதே இடத்திற்கு திரும்ப வரும் காலம் 83.02 ஆண்டுகள், தற்கால வானவியல் உப காரணங்களின் கணிப்புப்படி) அதே போல் சனி கிரகம் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 60 ஆண்டுகளில் அது இருமுறை சூரியனைச் சுற்றி வந்துவிடும். இதனால் 60 ஆண்டு காலக்கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பொ. வ. ஆறாம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் எல்லா இடத்திலும் இந்த 60 ஆண்டுச் சுழற்சி முறை பின்பற்றப்படுவது இல்லை. தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் மட்டுமே இம்முறை பின்பற்றப்படுகிறது. சீனாவிலும் இது போன்ற 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
சரி, இந்த 60 ஆண்டு முறையை மட்டுமா தமிழர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் இல்லை. கலி வருடம் என்ற நீள் நாட்குறிப்பு முறையையும் பின்பற்றுவோர் உண்டு. இது கலியுகம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கலியுகம் பொ.வ.மு 3102ம் ஆண்டு துவங்கியதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் இப்போது நடக்கும் கலி ஆண்டு 5117. தமிழர்களைத் தவிர கலி ஆண்டை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்களும், வங்காளிகளும் மட்டுமே.
கல்வெட்டுகள்
கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டால், தமிழர்களுடைய ஆரம்ப காலக் கல்வெட்டுகளில் சக வருடத்தையும் கலி வருடத்தையும் குறிப்பிடும் கல்வெட்டுகளைக் காணலாம். ஆனால், மாதங்களைக் குறிக்கும் போது அந்த மாதத்திற்கு உரிய ராசிப் பெயர்களையே (மேட ஞாயிறு, இடப ஞாயிறு) குறிப்பிட்டிருக்கின்றனர். இதிலிருந்து ராசிகளை வைத்தே ஆண்டுக்கணக்கு இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பிற்காலச்சோழர்களின் காலத்திலிருந்து, வியாழன் சுழற்சியைக் கணக்கில் கொண்டு தற்போது வழங்கும் சமஸ்கிருதத்தில் அமைந்த ஆண்டுப்பெயர்கள் குறிப்பிடப்பட்டன. கர்நாடகாவில் உள்ள பலமுரி அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒன்று "சகவருஷ 934 நேய பரிதாவி ஸம்வத்ஸரகே" என்று பரிதாபி வருடப் பெயரைக் குறிப்பிடுகிறது. போலவே வீர ராஜேந்திர சோழனின் சாரலா செப்பேடு "சௌம்ய ஸம்வத்ஸரத்து" என்று சௌம்ய ஆண்டுப் பெயரைக் குறிப்பிடுகிறது.
அதற்குப் பின்னால் வந்த கல்வெட்டுகளில் பெரும்பாலும் இந்தப் பெயர்களே குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றன.
இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் பின்பற்றி வந்தது சூரியன் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மேஷத்தை அதாவது சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டுகளே.