Sunday 9 October 2016

சகலகலாவல்லி மாலை


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1



நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2



அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3



தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5



பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7



சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8



சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9



மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

சரஸ்வதி துதி - பாரதியார்





வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்,
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள்,
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்  1

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழழையில் உள்ளாள்,
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவுச் சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்  2

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்,
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.   3

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்,
உய்வ மென்ற கருத்திடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்,
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம் 4

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,
வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழியஃதிங் கௌiதன்று கண்டீர்,
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தினத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம் இவள் பூசளை யன்றாம்.   5

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுத மென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.   6

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறுநாடு,
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க.  7

Saturday 8 October 2016

சரஸ்வதி அந்தாதி - கம்பர்




காப்புச் செய்யுள் 

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய 
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே 
இருப்பள் இங்கு வாராது இடர். 

படிக நிறமும் பவளச் செவ்வாயும் 
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும் 
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் 
கல்லும் சொல்லாதோ கவி.  

நூல்- கலித்துறை 

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல் 
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல் 
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் 
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1 

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல் 
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே 
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால் 
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2 

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித் 
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை 
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே 
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3 

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு 
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும் 
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு 
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4 

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும் 
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான் 
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும் 
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5 

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே 
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூரிருட் கோர் 
வெயிலே நிலவெழுமேனி மின்னே யினி வேறுதவம் 
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே. .. 6 

பாதாம்புயத்தில் பணிவார் தமக்குப் பல கலையும் 
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ் 
சீதாம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே 
ஏதாம் புவியில் பெறலரிதாவது எனக்கினியே. .. 7 

இனி நான் உணர்வது எண்ணெண் கலையாளை இலகு தொண்டைக் 
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமல அயன் 
தனிநாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப் 
பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8 

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா 
மேவும் கலைகள் விதிப்பாளிடம் விதியின் முதிய 
நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப் 
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9 

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ 
அந்தியில் தோன்றிய தீபமென்கோ நல அருமறையோர் 
சந்தியில் தோன்றும் தபமென்கோ மணித்தாமமென்கோ 
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10 

ஒருத்தியை ஒன்றும் இலாளன் மனத்தின் உவந்து தன்னை 
இருத்தியை வெண்கமலத்திருப்பாளை யெண்ணெண் கலைதோய் 
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம் 
திருத்தியை யான்மறவேன் திசைநான்முகன் தேவியையே. .. 11 

தேவரும் தெய்வப்பெருமானும் நான்மறை செப்புகின்ற 
மூவரும் தானவர் ஆகியுள்ளோரும் முனிவரரும் 
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த 
பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. .. 12 

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை 
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத் 
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற 
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே. .. 13 

வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம் 
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும் 
போதமும் போத உருவாகி ஏங்கும் பொதிந்த விந்து 
நாதமும் நாத வண்டார்க்கும் வெண்டாமரை நாயகியே. .. 14 

நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞான இன்பச் 
சேயகம் ஆன மலரகம் ஆவதும்  தீவினையா 
லே அகம் மாறிவிடும் அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும் 
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே. .. 15 

சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாளிணையும் 
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல் 
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும் 
ஒரோருகம் ஈரரை மாத்திரையான உரை மகட்கே. .. 16 

கருந்தாமரை மலர் கண்தாமரை மலர் காமருதாள் 
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர்  ஆலயமாத் 
தருந்தாமரை மலர் வெண்டாமரை மலர் தாவிலெழில் 
பெருந்தாமரை மணக்குங் கலை கூட்டப் பிணை தனக்கே. .. 17 

தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன் 
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்  இமையவர் தாம் 
மனக்கே தம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான் 
கணக்கேச பந்திக் கலை மங்கை பாத கமலங்களே. .. 18 

கமலந்தனிலிருப்பாள் விருப்போடங் கரங்குவித்துக் 
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக் 
கமலந் தனைக் கொண்டு கண்டொருகால் தம் கருத்துள் வைப்பார் 
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே. .. 19 

காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் 
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஓர் நான் மருப்பு 
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும் 
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே. .. 20 

அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும் 
முடிவே தவன முளரிமின்னே முடியா இரத்தின 
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் 
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21 

வேறிலை என்றுன் அடியாரிற் கூடி விளங்கு நின்பேர் 
கூறிலையானும் குறித்து நின்றேன் ஐம்புலக் குறும்பர் 
மாறிலை கள்வர் மயக்கால் நின் மலர்த்தாள் நெறியில் 
சேறிலை ஈந்தருள் வெண்டாமரை மலர்ச் சேயிழையே. .. 22 

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் 
சோதிக்கலாமுறப் போதிக்கலாம் சொன்னதே துணிந்து 
சாதிக்கலாமிகப் பேதிக்கலாம் முத்தி தானெய்தலாம் 
ஆதிக்கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவரே. .. 23 

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் 
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை உபநிடதப் 
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும் 
தொடையாளை அல்லது மற்றிலர் யாரைத் தொழுவதுவே. .. 24 

தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து 
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகித்து 
அழுவார் இனுங் கண்ணீர் மல்குவார் என் கண்ணின் ஆவதென்னை 
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே. .. 25 

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும் 
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின் 
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் 
உய்க்கும் பொருளும் கலைமாது உணர்த்தும் உரைப்பொருளே. .. 26 

பொருளால் இரண்டும் பெறலாகும்  என்ற பொருள் பொருளோ 
மருளாத சொற்கலைவான் பொருளோ பொருள் வந்து வந்தித்து 
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு 
இருளாய் விளங்கு நலங்கிளர்மேனி இலங்கிழையே. .. 27 

இலங்கும் திருமுகம் மெய்யிற்புளகம் எழும் விழிநீர் 
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே 
துலங்கும் முறுவல் செயக்களிகூரும் சுழல்புனல் போல் 
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல்மானைக் கருதினர்க்கே. .. 28 

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய 
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும் 
புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும் 
பிரியாவென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29 

பெருந்திருவும் சயமங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில் 
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்  
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளருளும் 
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ் சீர் தருமே. .. 30

Wednesday 24 August 2016

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில், மன்னர்கள் அடையும் வெற்றிகளைப் பொருத்து 'வளர்ந்து கொண்டே' வரும். இதை வைத்து எந்த ஆண்டுகளில் எந்த நாடுகள் வெற்றிகொள்ளப்பட்டன என்பதை அறியலாம்.
 
 இப்போது ராஜராஜனின் மெய்க்கீர்த்தி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஸ்வஸ்திஶ்ரீ 
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள்  கோஇராச கேசரி
வன்மரான ஶ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு.

மங்கல ஒலியான ஸ்வஸ்திஶ்ரீ என்ற அடைமொழியோடு தொடங்கும் இந்த மெய்க்கீர்த்தி,
'திருமகள் போல பெருநலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள்ள', அதாவது திருமகள் எப்படி ராஜராஜனுடன் இருக்கிறாளோ அதேபோல, பெருநலச் செல்வியான நில மாதையும் தனக்கு உரிமையாக்கிக்கொள்ள நினைத்து,

'காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி' - மெய்க்கீர்த்தியின் இந்த வரி பெரும் ஆராய்ச்சிகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. ராஜராஜன் அடைந்த முதல் வெற்றியாக காந்தளூர்ச்சாலை வெற்றியை இது குறிக்கிறது. ஆனால் காந்தளூர்ச்சாலை என்பது என்ன, கலமறுத்தருளி என்றால் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள், இது திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஒரு கடற்படைத் தளம் என்றும், சேரர்களின் கடற்படை பலத்தை அழிக்கும் ஒரு பகுதியே இந்த காந்தளூர்ச்சாலை கலம், அதாவது கப்பல்களை அழித்த நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இன்னும் சிலர், சாலை என்பது போர்ப்பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றைக்குறிக்கும் என்றும், பயிற்சிப்பள்ளிகளை அழித்து சேரர்களின் வலுவை ராஜராஜன் அழித்ததே இது என்று கூறுகின்றனர். இதற்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களில் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், இது சேரர்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிறுவனம் என்றும், அதை அழித்து தானே சேர நாட்டிற்கும் அரசன் என்று ராஜராஜன் பிரகடனப் படுத்திக்கொண்டான் என்றும் கூறுகின்றனர். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள், இது ஒரு உணவு அளிக்கும் இடம் என்று கூறியிருக்கிறார். எப்படியோ, ராஜராஜன் அடைந்த முதல் முக்கிய வெற்றி இந்த காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தது. ராஜராஜன் மட்டுமன்றி அவனுக்குப் பின்னால் வந்த சோழமன்னர்கள் சிலரும், ஏன் பாண்டிய மன்னர்களும் 'காந்தளூர்ச்சாலை கலம் அறுத்துள்ளார்கள்'

அடுத்து ராஜாராஜன் அடைந்த வெற்றிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, வேங்கை நாடு, அதாவது கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கிடையே உள்ள கீழைச்சாளுக்கியர்களின் வேங்கி நாட்டு வெற்றி, அதற்கடுத்து கர்நாடகாவில் மைசூருக்குத் தெற்கே கங்கர்களின் நாடான கங்கபாடி, அவர்களின் சிற்றரசான நுளம்பபாடி, மைசூருக்கு அருகில் உள்ள இன்னொரு அரசான தடிகைபாடி, குடகு மலை நாடு ஆகிய இடங்களில் அடைந்த வெற்றிகள். பிறகு சேரநாட்டிலுள்ள கொல்லம், இன்றைய ஒரிசாவின் தென்பகுதியான கலிங்க நாடு ஆகிய இடங்களை வெற்றிகொண்டது, முரட்டுத் தொழில் புரியும் சிங்களவர்களின் நாடான இலங்கை வெற்றி, இன்றைய மகாராஷ்ட்டிர மாநிலத்தின் தென்பகுதியான இரட்டை பாடி ஏழரை இலக்கம் என்ற நாடு ஆகிய நாடுகளை வெற்றி கொண்டதை இந்த மெய்க்கீர்த்தி குறிக்கிறது.
அதன்பின் கடற்படை கொண்டு, முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகளை ராஜராஜன் வெற்றி கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கடற்படை அடைந்த முதல் முக்கியமான வெற்றி இது. இந்தப் படையெடுப்பு, சோழ நாட்டு வணிகர்களைப் பாதுகாக்கும் முகமாகவே நடைபெற்றிருக்கவேண்டும். இந்த வெற்றிதான் பின்னால் ராஜேந்திரன் கடாரம் கொள்வதற்கு அடிகோலியது. இத்துடன் ராஜராஜனின் வெற்றிச் செய்திகள் நிறைவடைகின்றன.

அப்படிப்பட்ட 'திறன்மிக்க வெற்றிகளை அடையக்கூடிய படைகளைக் கொண்ட அவர் வாழ் நாளில் எல்லா ஆண்டும் (அவரை) வணங்கக் கூடிய ஆண்டே, செழியர்களான பாண்டியர்களை ஒளி குன்றச் செய்த ராஜகேசரி ராஜராஜ தேவருக்கு ....'   என்று மெய்க்கீர்த்தி ராஜராஜனைப் புகழ்ந்துரைக்கிறது.

இந்த மெய்க்கீர்த்தியின் இன்னொரு சிறப்பம்சம், ராஜராஜன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிட்டாலும், தோல்வியடைந்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், நாடுகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுவிடுவதுதான். இந்த மெய்க்கீர்த்தி பரம வைரிகளான பாண்டியர்கள் மீது அடைந்த வெற்றிகளைக் குறிப்பிடும்போதும், பரம்பரைப் பெயரான 'செழியரைத் தேசுகொள்' என்று குறிப்பிடுகிறதே தவிர, அமரபுயங்கன் பெயரைக் குறிப்பிடாதது இங்கு கவனிக்க வேண்டியது. இந்த வழக்கம் அவர் புதல்வரான ராஜேந்திரர் காலத்திலேயே மாறிவிட்டது. அவருடைய மெய்க்கீர்த்தியில் அவர் வெற்றிகொண்ட மன்னர்களின் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் மெய்க்கீர்த்திகளிலேயே ராஜராஜனுடையது தனித்தன்மை வாய்ந்தது ஆகும். 

Friday 12 August 2016

அம்மன் காசு




'அவன் கிடக்கான்டா, அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லாத பய' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்வது வழக்கம். அம்மன் சல்லி அல்லது அம்மன் காசு என்று அழைக்கப்படும் இந்தக் காசு யாரால், எப்போது  வெளியிடப்பட்டது ?

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது, அதில் ஒன்றான ராமநாதபுரம் வலுவடைந்து சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் வந்தது. சேதுபதி அரசர்களில் முக்கியமானவரான கிழவன் சேதுபதி (பொயு 1679)  தனது அரசை இரண்டாகப் பிரித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். தனது மைத்துனனான ரகுநாதத் தொண்டைமானை அதற்கு அரசராகவும் நியமித்தார். கிழவன் சேதுபதியின் காலத்திற்குப் பிறகு வந்த தொண்டைமான் அரசர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தனர். அதன் விளைவாக, தங்களுடைய அரசில் சொந்தமாக நாணயம் அச்சிட்டு வெளியிடும் உரிமையையும் பெற்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட நாணயம்தான் அம்மன் காசு.

புதுக்கோட்டை மன்னர்கள் அந்நகரில் உறையும் பிரகதாம்பாள் மேல் பக்தி பூண்டவர்கள். அதன் காரணமாகவே 'பிரகதாம்பாள்தாஸ' என்ற முன்னெட்டையும் தங்கள் அபிஷேகப் பெயரில் சேர்த்துக்கொண்டவர்கள். எனவே அவர்கள் வெளியிட்ட நாணயத்திலும் அந்த அம்மனின் உருவத்தைப் பொறித்தனர். ஒரு புறம் அம்மன் உருவம், மறுபுறம் 'விஜய' என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும்.  மற்றபடி இந்த நாணயங்களில் வெளியிட்ட ஆண்டோ அல்லது யாரால் வெளியிடப்பட்டது என்ற தகவலோ இருப்பதில்லை. ஆனால், 17-18ம் நூற்றாண்டுகளில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

செப்பால் ஆன இந்த நாணயங்கள் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு வந்தன. என்னதான், பிரிட்டிஷ் அரசு உரிமை கொடுத்திருந்தாலும் அதை 'ஓவராகப்' பயன்படுத்திக்கொள்ள விரும்பாத தொண்டைமான்கள் குறைந்த மதிப்பிலேயே இந்த நாணயங்களை வெளியிட்டனர். சல்லி என்று அழைக்கப்பட்ட இந்த நாணயத்தின் மதிப்பு ஒரு அணாவில் பதினாறில் ஒரு பங்கு.  இந்த நாணயமும் மிகச் சிறியதாக, ஒரு சென்டிமீட்டர் அகல அளவிலேயே இருக்கும்.

Thursday 16 June 2016

வாரசூலை

ஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன? எப்படி இதை அறிந்து கொள்வது ?

வார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம்.   பன்னிரண்டு ராசிகளில்,  இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு.  இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்'  மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க).  இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு.   இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.



இதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி குறைவென்றும் தெரிகிறதல்லவா. அந்தக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்களில், அதன் சக்தி குறைவான திசையை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே இந்த சாஸ்திரத்தின் தாத்பர்யம்.  மேலே உள்ள அட்டவணையில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் விதிவிலக்குகள் உண்டு. இதன் காரணம், இவை அந்த திசையின் மத்தியில் அல்லாது, அவற்றின் கோணத்தில் அதாவது தென்கிழக்கு மற்றும் வடமேற்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற காரணத்தால். எனவே அவற்றின் சக்தி குறைவான திசைகளும் மாறுபடுகின்றன. இதன்படி சந்திரனுக்கு கிழக்கு திசையிலும் சுக்கிரனுக்கு மேற்கு திசையிலும் ஆதிக்கம் குறைவு.

எனவே, ஞாயிறன்று, சூரியனின் சக்தி குறைவாக உள்ள மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல, திங்களன்று கிழக்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதைத்தான், ஞாயிறன்று மேற்கே சூலம்,  திங்களன்று கிழக்கே சூலம் என்று குறிப்பிட்டனர்.  இந்த வாரசூலை அட்டவணை கீழே



சரி, தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் திசைகள் நோக்கி அந்த நாட்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? ஜோதிட சாஸ்திரம் இதற்கான பரிகாரங்களையும் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இதற்கான பரிகாரத்தைச் செய்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.  சூரிய உதயத்திலிருந்து திங்கள், சனிக்கிழமைகளில் 8 நாழிகைக்கு மேலும், செவ்வாய், புதன் கிழமைகளில் 11 நாழிகைக்கு மேலும், வியாழன் 20 நாழிகைக்கு மேலும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 12 நாழிகைக்கு மேலும் இந்தப் பரிகாரத்தைச் செய்தால் பலன் அளிக்கும். அட, பரிகாரம் என்னவென்று சொல்லு என்கிறீர்களா. அதிகமில்லை, கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும். அம்புட்டுத்தான்.

நிற்க, இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயம். நம்பிக்கை இருந்தால் இந்த சாஸ்திரங்களைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் 'நாளென்செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த கோள் என்செயும்' என்று துண்டை உதறி தோளில்  போட்டுக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். 



Wednesday 4 May 2016

அக்னி நட்சத்திரம்

கொளுத்தும் கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது. கத்தரி வெய்யில் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் காலம் வருடத்தில் வெப்பம் மிக அதிகமாக உணரப்படும் நாட்களைக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் வெளிவட்டார நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு கோடைக்கே உரிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டால் வெயிலின் கொடுமையிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்

கோடையின் இந்தக் கடுமையான பகுதியை கணித்து மக்கள் தங்களை அதனிலிருந்து தற்காத்துக்கொள்ளவே நம் முன்னோர்கள் அக்னி நட்சத்திரத்தை ஒரு வானிலை முன்னறிவிப்பாகப் பயன்படுத்தினார்கள். பொது வழக்கில்,   'சித்திரை பின் ஏழு வைகாசி முன் ஏழு’  என்று சொன்னாலும் உண்மையில் கத்தரி வெயில் இந்தக் கணக்குக்கு பொருந்தி வருவதில்லை. இந்த வருடத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,  சித்திரை 21ம் தேதியே அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது.  சரி, இது எப்படிக் கணக்கிடப்படுகிறது. இதற்கு ஏன் அக்னி நட்சத்திரம் என்ற பெயர் வந்தது? 

அதைப் பார்ப்பதற்கு முன்னாள் சற்று வானியல், இதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பவர்கள், இரண்டு பாராக்கள் தாவி விடவும்.

சூரியனும், துணைக்கோளான சந்திரனும் மற்ற கோள்களும் வானின் நீள்வட்டப் பாதையில் இடம் மாறுவதை வைத்தே காலங்களை நம் முன்னோர் கணக்கிட்டனர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நீள்வட்டப் பாதை காலக்கணக்குக்கு வசதியாக 12 ராசிக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான இந்த ராசிக்கட்டங்களை பின்புலத்தில் வைத்தே கோள்கள் சுற்றிவருகின்றன. இந்தக் கணக்கை மேலும் துல்லியமாக்க, 12 ராசிகளை 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி அமைத்தனர் வானியலாளர். (28ஆவது நட்சத்திரமான அபிஜித் இந்தக் கணக்கில் முன்பு சேர்த்துக்கொள்ளப்பட்டது, பிற்காலத்தில் ஏன் அது விடுபட்டது என்பது ஒரு புதிர்).  இந்த  27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய 12 ராசிகளில்  ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் (27 / 12) என்பது கணக்கு . இதன்படி மேஷ ராசியானது, அஸ்வதி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் கால் பாகம் கொண்டது. ரிஷப ராசியில் அடங்கியது கார்த்திகையின் மீதியான முக்கால் பாகம், ரோகிணி மற்றும் மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அரைப்பாகம். இவ்வாறே பன்னிரண்டு ராசிக்களுக்கும் வரும்.

இவ்வாறு இந்த 27 நட்சத்திரங்களை / 12 ராசிகளை சூரியன் ஒருமுறை சுற்றி வருவதற்கு (வருவதுபோல் தோற்றமளிப்பதற்கு) ஒரு வருடம் பிடிக்கிறது. இதுவே சௌரமான வருடம் (சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடம்). இந்தியாவில் தமிழர், மலையாளிகள், வங்காளிகள், அஸ்ஸாமியர்கள் ஆகியோர் பின்பற்றுவது சௌரமான வருடக்கணக்குஆகவே தான் ராசிக்கட்டத்தின் முதலில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷம் முதல் நாள், புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இப்படி 365 நாட்கள் கொண்ட ஒரு வருடத்தில் சூரியன் ஒரு நட்சத்திரத்தில் தோராயமாக 13.5 நாட்கள் சஞ்சரிக்கும் (365 / 27). வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் மேஷ ராசியில் உலவும் சூரியன் அந்த ராசியில் உள்ள மூன்றாவது நட்சத்திரமான  கார்த்திகையில் சஞ்சரிக்கும்  நாட்கள் அக்னி நட்சத்திர நாட்கள் என்று அழைக்கப்படுகிறது

கார்த்திகை நட்சத்திரம் அக்னிக்கு உரிய நட்சத்திரமாக இந்திய நூல்களில் வகைப்படுத்தப்படுகிறது. அந்த நட்சத்திரத்துக்கு அதிபதியாக சூரியனும் அதிதேவதையாக அக்னியும் விளங்குகின்றனர் என்று ஜோதிட நூல்கள்  உரைக்கின்றன. Pleiads என்று மேல்நாட்டு வானவியலில் வழங்கப்படும் இந்த நட்சத்திரத்தக் கூட்டத்தில் 6 தனி விண்மீன்களை வெறும் கண்ணால் பார்க்கமுடியும். மேல்நாட்டார் இதை 7 Sisters என்று அழைக்கின்றனர். இந்திய வானவியல் நூல்களும், இந்நட்சத்திரம் 7 மீன்களைக்கொண்டதாக இருந்தது என்றும் அதில் ஒன்றான அருந்ததி பிரிந்து சப்தரிஷி மண்டலத்தில் சேர்ந்தது என்றும் கூறுகின்றன. இது ஆராய்ச்சிக்குரிய ஒன்று. சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய முருகப்பெருமான் ஆறு நெருப்புத்துளிகளாக உருவானார் என்றும் அவரை முதலில் இந்த ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகைக்கும் நெருப்புக் கடவுளான அக்னிக்கும் உள்ள தொடர்புக்கு இன்னொரு உதாரணத்தையும் நாம் பார்க்கலாம். சந்திரன் முழுநிலவாக கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் நாள் பௌர்ணமி தீபத்திருவிழாவாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தீபங்களை ஏற்றியும் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தியும் நாம் கொண்டாடும் இந்த விழாவின் முக்கிய அம்சம் அக்னித்தலமான திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பெருவிழா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆக கார்த்திகை நட்சத்திரத்திற்கும் அக்னிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதன் மூலமும் தெளிவடைகிறது.    

இதையொட்டி சூரியன் அக்னி நட்சத்திரமான கார்த்திகையில் சஞ்சரிக்கும் நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டமாக ஆகியது. இதனுடைய விளைவு சூரியன் இந்த நட்சத்திரத்துக்கு செல்லும் முன்பே தெரியத் தொடங்கும் என்ற காரணத்தினாலும்சூரியனின் சஞ்சாரம் வான் சுழற்சியைப்பொறுத்து வேறுபடுவதாலும்இதற்கு முந்தைய நட்சத்திரமான பரணியில் சூரியன் இருக்கும் சில நாட்களையும் (பெரும்பாலும் பரணியின் மூன்றாம், நான்காம் கால்பாகங்கள்), கார்த்திகைக்கு அடுத்த ரோகிணியில் சூரியன் இருக்கும் சில நாட்களையும் (பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டாம் கால் பாகம்) சில சமயம் சேர்த்து மொத்த அக்னி நட்சத்திர காலமாக கணித்தனர் பண்டைய வானியல் நிபுணர்கள். இதன்படி இந்த வருடத்தை எடுத்துக்கொண்டால் சித்திரை 21 (மே மாதம் 4ம் தேதி) சூரியன் பரணியின் மூன்றாம் கால் பாகத்திற்கு செல்கிறது. ஆகவே அன்று அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. கார்த்திகையில் சித்திரை 28ல் தனது சஞ்சாரத்தை துவங்கும் சூரியன், ரோகிணி நட்சத்திரத்தின் 2ஆவது கால் பகுதியை வைகாசி 15ம் நாள் (மே 28ம் தேதி) கடக்கிறது. ஆகவே அன்று அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது

எந்த வகையான கருவிகள் இல்லாத காலத்திலும் வெறுங்கண்களால் கணக்கிட்டே இது போன்ற வானிலை அறிவிப்பு முறைகளை வகுத்த நம் முன்னோர்களை போற்ற வேண்டியதில்லை. மூட நம்பிக்கைக்காரர்கள் என்று தூற்றாமல் இருப்போமாக