களப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள் சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த