Thursday, 14 January 2021

மன்னன் மகளும் ஒரு கீழைச்சாளுக்கியச் செப்பேடும்

சாண்டில்யனுடைய 'மன்னன் மகள்' படித்திருக்கிறீர்களா ? அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக நான் கருதும் புனைவு அது. ராஜேந்திர சோழர் காலத்திய சோழ -சாளுக்கியச் சண்டைகளையும் சோழர்களின் கங்கைப் படையெழுச்சியையும் தொட்டுச் செல்லும் அந்தக் கதையின் நெருடல் கதாநாயகனும் நாயகியுமே கற்பனைப் பாத்திரங்களாக இருப்பதுதான். தற்காலத்தைய  'வரலாற்றுப் புனைவாளர்கள்' பல நிகழ்வுகளையே 'ரூம் போட்டு' அடித்து விடுவதைப் பார்க்கும் போது அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைதான். நிற்க. இப்போது விஷயத்திற்கு வருவோம். 



இந்தக் கதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய அப்பாவுக்கு இதில் வரும் பிரம்மமாராயன் பாத்திரம் மிகவும் பிடித்த ஒன்று. இத்தனைக்கும் பிரம்மமாராயனை மிகவும் அவசரபுத்திக்காரனாகவும் முன்கோபியாகவும் படைத்திருப்பார் சாண்டில்யன். வேங்கி நாட்டில் சோழ நாட்டுத் தூதுவர் பதவியில் இருப்பவன் இந்த பிரம்மமாராயன். அங்கே  ராஜேந்திர சோழரின் மருமகனான ராஜராஜ நரேந்திரனை அரியணையில் அமர்த்தும் முயற்சியில் கதாநாயகனான கரிகாலனுக்கும் பிரம்மமாராயனுக்கும் பல சச்சரவுகள் ஏற்படும். பல சமயங்களில் இருவரும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். ஆனாலும் பிரம்மமாராயனும் சோழ நாட்டிற்கு விசுவாசமானவன் தான். அவனைப் பற்றி சாண்டில்யனே இந்தக் குறிப்பை அளித்திருப்பார். 'பிரம்மமாராயன் முன்கோபியாக இருந்தாலும் ராஜவிசுவாசத்தில் வந்தியத்தேவருக்கோ மற்ற யாருக்கோ சளைத்தவன் அல்ல. கரிகாலன் மேல் உண்டான வெறுப்பு அவனை கரிகாலனோடு மோதச்செய்தது' என்பது போல அவனைப் பற்றி எழுதியிருப்பார். பிற்பாடு அரையன் ராஜராஜன் தலைமையிலான கங்கைப் படையெடுப்பிலும் இந்தப் பிரம்மமாராயன் பங்குகொள்வான். 'அந்தணனா அரக்கனா' என்று பார்ப்போர் வியக்கும் படியாக எதிரிகளைக் கொன்று குவிப்பான். அவனை  'ராஜராஜப் பிரும்ம மகராஜ்' என்று சோழர்கள் புகழ்வதாகவும் சாண்டில்யன் குறிப்பிட்டிருப்பார். தவிர, பின்னாளில் வேங்கிப் போரில் சோழர்களுக்காகப் போரிட்டு பிரம்மமாராயன் உயிர் துறந்ததாகவும் அவர் குறித்திருப்பார். 

எந்தச் சரித்திரப் புனைவு படித்தாலும் அதிலுள்ள பாத்திரங்களில் கற்பனைப் பாத்திரங்கள் யார் யார். சரித்திரத்தில் இருந்தோர் யார் யார் என்று அறிவதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு. சரித்திரப் பாத்திரங்கள் யார் என்று தெரிந்தால் அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் நிகழ்வுகள் உண்மைதானா என்பதையும் தேடிப்படிப்பேன். எந்தப் புத்தகங்களில் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது என்று சாண்டில்யனே பல முறை அடிக்குறிப்பு கொடுத்திருப்பார். ஆனால் இந்தப் பிரம்மமாராயனைப் பற்றிய தகவல்கள் சுத்தமாக இல்லை. ராஜேந்திரருடைய அதிகாரிகளாக கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயர், அவருடைய மகனான அருண்மொழியான உத்தமச் சோழ பிரம்மராயன் ஆகியோரைப் பற்றி பண்டாரத்தார் குறித்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் பிரதான படைத்தலைவர்கள். அதிலும் கிருஷ்ணன் ராமன், ராஜராஜன் காலத்திலிருந்து சோழர் படைத்தலைவராக இருந்தவர். ஆகவே அவர்கள் வேங்கி நாட்டில் இருந்திருக்கச் சாத்தியம் இல்லை. அடுத்து உத்தமச் சோழ மிலாடுடையான் என்ற அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடும் பண்டாரத்தார் அவனும் இராசராச பிரம்மமாராயன், உத்தம சோட சோடகோன் ஆகியோரும் மேலைச்சாளுக்கியர்களுக்கு இடையேயான போரில் உயிர்துறந்ததாக ஒரு வரியில் குறிப்பிட்டுச் சென்றுவிடுகிறார். இந்த பிரம்மமாராயனைத்தான் சாண்டில்யன் தன் கற்பனையை கொஞ்சம் ஓடவிட்டு மன்னன் மகளில் அந்தப் பாத்திரமாகப் படைத்திருக்கிறார் என்று விட்டுவிட்டேன். 

அண்மையில் வேறு ஒரு விஷயத்தைத் தேடிக்கொண்டிருந்த போது, 'Epigraphia Indiaca Vol XXIX' இல் கீழைச்சாளுக்கியர்களின் கலிதண்டிச் செப்பேடுகளை பற்றிப் படித்தேன். தெலுங்கு லிபியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் உள்ள இந்தச் செப்பேட்டில் ராஜராஜ நரேந்திரனால் அளிக்கப்பட்ட ஒரு தானத்தைப் பற்றிய விவரம் உள்ளது. இந்த ராஜராஜ நரேந்திரன், கீழைச்சாளுக்கிய அரசனான விமலாதித்தனுக்கும் ராஜராஜ சோழனின் மகள் குந்தவைக்கும் பிறந்தவன். ராஜேந்திரனின் மகளான அம்மங்கை தேவியின் கணவன். (முதல் குலோத்துங்கனின் தந்தை)  இந்தச் செப்பேடு வேங்கி நாட்டில் நடந்த வாரிசுரிமைப் போரைப் பற்றிப் பேசுகிறது.


வேங்கி அரியணைக்கு ராஜராஜ நரேந்திரனைத்தவிர  விஜயாதித்தன் என்பவனும் போட்டியிட்டான். விஜயாதித்தனை மேலைச்சாளுக்கியர்கள் ஆதரித்தனர். ஆகவே தன் மருமகனைக் காக்க ராஜராஜ பிரும்ம மகராஜ் என்பவனை ராஜேந்திரர் வேங்கிக்கு தூதனாக அனுப்பினார். அவன் வேங்கி நாட்டை புதையல் ஒன்றைக் காக்கும் நாகம் போல காத்துவந்தான் (வரிகள் 77 - 85). ராஜராஜ நரேந்திரனை அகற்ற கர்நாடகப் படை ஒன்று வேங்கி நோக்கி வந்தது. அந்தப் படையோடு சோழர்களின் சேனை   விஜயவாடாவுக்கு அருகில் கலிதண்டி என்ற இடத்தில் மோதியது. 

பிரம்ம மகாராஜோடு சோழ தளபதிகளான உத்தம சோட சோடகோனும் உத்தமச் சோழ மிலாடுடையானும் சேர்ந்து கொண்டு சண்டையிட்டனர். சோழர் படைகள் வெற்றியடைந்தாலும் பிரம்மமகராஜும் மற்ற இரு தளபதிகளும் போரில் உயிர்துறந்தனர் என்று அந்தச் செப்பேடு தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்தப் போரைப் பற்றி சோழர் ஆவணங்களிலோ ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியிலோ தகவல் ஏதும் இல்லை என்பதுதான். இந்தப் போரில் உயிர் துறந்த சோழப் படைத்தலைவர்கள் மூவருக்கும் ராஜராஜ நரேந்திரன் பள்ளிப்படைக் கோவில்கள் அமைத்தான் என்றும் அந்தக் கோவில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் இன்னின்ன என்றும் இந்த கலிதண்டிச் செப்பேடு பட்டியலிடுகிறது. இன்றும் இந்த மூன்று கோவில்களும் அந்த ஊரில் உள்ளன. 

மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து பிரம்மமாராயன் ஒரு முக்கியமான படைத்தலைவனாகவும் வேங்கியில் சோழர்களின் தூதுவனாகவும் இருந்ததும், அவன் தலைமையில் தான் வேங்கிப் போர் நிகழ்ந்தது என்றும் தெளிவாகிறது. 'ராஜராஜ பிரும்ம மகராஜ்' என்ற பட்டத்தையும் சாண்டில்யன் இந்தச் செப்பேட்டில் இருந்துதான் எடுத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிவிட்டது. சோழர் ஆவணங்கள் பெரிதாகக் குறிப்பிடாத ஒரு செய்தியை ஒரு தெலுங்குச் செப்பேட்டிலிருந்து எடுத்து தன்னுடைய புனைவில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட சாண்டில்யனின் திறமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை !!