சமீபகாலமாக ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி கவனப்படுத்தும் வழக்கம் அதிகமாக வருகிறது. அப்படி ஒன்று நேற்று கண்ணில் பட்டது. திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுபவன் ராஜராஜ சோழன் இல்லையாம். ஏனென்றால் அவனுடைய காலத்திற்கு முன்பே கல்வெட்டுகளில் பதிகம் படித்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். அவற்றை வரிசையாக அடுக்கி இந்தக் கேள்வியை ஒருவர் எழுப்பியிருந்தார். இந்த விஷயத்தில் நான் பெரிதும் மதிக்கும் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் சிறிது இடறியிருப்பதால் கொஞ்சம் விரிவாக இதைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். முதலில் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததற்காகக் கிடைக்கும் ஒரே சான்று திருமுறை கண்ட புராணம் என்ற நூல்தான். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது. அதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையை மூடி வைத்துவிடலாம். ஏனென்றால் ஒட்டுமொத்த விவாதமும் இந்த நூலை ஒட்டியே இருக்கிறது. அந்த நூலில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். சோழவம்சத்தில் வந்த அரசன் ஒருவன் தேவாரப் பதிகம் ஒன்றைக் கேட்கிறான். அதனால் மனம் உருகி மற்ற பாடல்களையும் கேட்க நினைக்கிறான். ஆனால் யாரிடமும் மொத்தத் தொ