Wednesday, 19 July 2017

ஆதி சங்கரரின் பணி



ஆதி சங்கரரைப் பற்றிப் பரப்பப்படும் பல தவறான செய்திகளில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் புத்த, ஜைன சமயங்களை அழித்தார் என்பதுதான். நேற்று ஒரு டிவிட்டர் இழையிலும் இதுபோன்ற ஒரு கருத்து வந்ததைக் காண நேர்ந்தது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பது வெள்ளிடைமலையாகப் புலப்படும்.

முதலில் புத்த, ஜைன மதங்களின் காலத்தை எடுத்துக்கொள்வோம். பொயுமு நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்த மதங்கள் வலுப்பெறத்துவங்கின. ஜைன மதம் வணிகர்களாலும், சந்திரகுப்த மௌரியர், அஜாதசத்ரு, காரவேலர் ஆகிய அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது. இன்றும் வட நாட்டில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெரு வணிகர்கள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போல, புத்த மதம் அசோகச்சக்கரவர்த்தியின் காலத்தில் பெரும் சிறப்பை அடைந்தது. ஆனால், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து இந்த இரண்டு மதங்களும் பல சிக்கல்களைச் சந்தித்தன. ஜைனர்களின் கடுமையான கட்டுப்பாடுகள், சடங்குகளைத் தாங்காத மக்கள் அதிலிருந்து விலகத் துவங்கினர். புத்த மதத்திற்கும் அரசர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்தியாவில் அதன் செல்வாக்கு குறையத் துவங்கியது. அடுத்த வந்த குப்தர்கள், ஹிந்து சமயத்தவர்கள். இந்தக் காலத்தில் வேதச் சடங்குகளை முன்னிருத்தும் 'பூர்வ மீமாம்ஸை' என்ற கோட்பாடு வேகமாகப் பரவத் தொடங்கியது. இதை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் 'குமரில பட்டர்'. பௌத்தர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவலால், பௌத்த மடமொன்றில் துறவியாக இணைந்து அவர்களது கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு அவர்களையே வாதப் போரில் தோற்கடித்து மீமாம்ஸையை நிலைநாட்ட ஆரம்பித்தார் அவர். போதாக்குறைக்கு, வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்து வந்த ஹூணர்கள், புத்த மதத்திற்குப் பெரும் எதிரிகளாக இருந்து, அதைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்தி, மடாலயங்களை அழித்து விட்டனர்.  இதன் காரணமாகவும் புத்த மதம் தேய ஆரம்பித்தது. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவ்விரண்டும் பெருமதங்கள் என்ற நிலையை இழந்து விட்டன.

ஆதி சங்கரரின் காலத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்த போதிலும், வரலாற்று ரீதியாக பொயு 7ம் நூற்றாண்டே அவர் காலம் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளக்கூடியது. (மஹாப்பெரியவர்கள் உள்ளிட்ட காஞ்சி ஆச்சாரியார்கள் இக்காலகட்டத்தை ஏற்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியது, ஆனால் சங்கரர் ஸ்தபித்த மற்றொரு மடமான சிருங்கேரி இந்தக் காலத்தை ஏற்றுக்கொள்கிறது). எனவே, ஆதிசங்கரர் தனது விஜயத்தை ஆரம்பிக்கும்போது புத்த, ஜைன மதங்கள் மங்கி விட்டன. ஆனால் ஹிந்து மதம், சடங்குகளே பிரதானம் என்று கூறி தெய்வத்தை ஒப்புக்கொள்ளாத பூர்வ மீமாம்ஸகர்களிடமும், நரபலி போன்ற கொடூரமான வழக்கங்களைக் கொண்ட கபாலிகர்களிடமும், இன்னும் இது போன்ற பல குழுக்களிடமும் சிக்கியிருந்தது. எனவே ஹிந்து மதத்தை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அத்வைதம் என்னும் சித்தாந்தத்தையும் அவர் அளித்தார். இது வேதாந்தக் கருத்துகளின் அடிப்படையில் ஆனது. வேதாந்தங்கள் பிரம்மம் எனும் இறைவனை ஒப்புக்கொள்கின்றன. இது மீமாம்ஸர்களுக்கு ஒவ்வாத விஷயம் என்பதால் சங்கரரோடு அவர்கள் வாதில் ஈடுபட்டனர். மீமாம்ஸர்களின் குருவான 'குமரில பட்டரோடு விவாதிக்கத்தான் சங்கரர் முதலில் செல்கிறார். ஆனால், பௌத்தன் என்று பொய் கூறிய தன் செயலுக்கு வருந்தி தற்கொலை செய்யும் நிலையில் அவர் இருந்ததால், அவர் வழிகாட்டுதலின் படி மீமாம்ஸர்களின் மற்றொரு ஆச்சாரியரான  'மண்டன மிஸ்ரரோடு' வாதிட்டு அவரை சங்கரர் வென்றார். இது போலவே கபாலிகர்களுடனும் அவர் மோத வேண்டியிருந்தது. இப்படி ஹிந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களோடு அவர் வாதப்போர் செய்யவேண்டியிருந்ததே தவிர, பெரிய புத்த, ஜைனத்துறவிகளோடு அவர் வாதிட்டதாக குறிப்பேதும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, பல்வேறு பிரிவுகளாகக் கிடந்த ஹிந்து மதத்தை ஒன்றிணைத்து வேதாந்தத்தின் அடிப்படையில் அதைக் கட்டமைத்த பெருமைதான் சங்கரரைச் சேரும். புத்த, ஜைன மதங்களை அழித்தவராக அவரைக் கருதுவது தவறு.








Sunday, 2 July 2017

சீனத் தமிழ் கல்வெட்டு

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பண்டைக்காலத்திலிருந்தே தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்து வந்தார்கள் என்று சங்க இலக்கியம் முதல் வரலாற்றுக் குறிப்புகள் வரை நமக்குத் தெரிவிக்கின்றன. சோழ அரசு சிறப்பான நிலையை ராஜராஜன் காலத்திலிருந்து அடையத் துவங்கியவுடன், வணிகக் குழுக்களின் வீச்சும் விரிவடைந்தது. நானா தேசத்து ஐந்நூற்றுவர் போன்ற குழுக்கள் வலுவடைந்தன.

இந்த வணிகக் குழுக்கள் வெறுமனே கப்பல் மூலம் சென்று துறைமுக நகரங்களில் வணிகம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தாம் செல்கின்ற நாடுகளில் குடியிருப்புகளையும் அமைத்து அந்தந்த நாடுகளில் உள்நாட்டு வணிகத்தையும் விரிவுபடுத்தினர். அப்படி அமைந்ததுதான், தென் சீனாவில், க்வாங்சூ மாகணத்தில், சுவான் சௌ என்ற இடத்தில் ஏற்பட்ட குடியிருப்பும். கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப,  அங்கே ஒரு கோவிலையும் அவர்கள் கட்டினர். அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்தவர் மங்கோலிய வம்சத்தவரும், செங்கிஸ்கானுடைய கொள்ளுப்பேரருமான குப்ளாய் கான். அவரைப் பற்றி மார்க்கோ போலோவின் மூலம் அறிந்துகொண்டிருப்பீர்கள். குப்ளாய் கானுடைய முழுப்பெயர் குப்ளாய் செக்ஸன் கான்.

அவருடைய அனுமதியின் பெயரிலேயே அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டப்பட்டது. அதற்கான அனுமதியை அங்கே கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு விளக்குகிறது.



ஹர : என்ற சிவ வழிபாட்டுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டு, சக சகாப்தம் 1203ம் (பொயு 1281) ஆண்டு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்திரா பௌர்ணமி நாள்), 'தவச்சக்கரவர்த்திகளான சம்பந்தப்பெருமாள்'  செகசை கானுடைய 'பிர்மானின்' (ஆணையின்) படி, அவரது 'திருமேனி நன்றாக' (உடல் நலத்திற்காக), 'உடையார் திருக்கதலீச்சரம் உடையநாயனார்' திருப்பணியைச் செய்ததாக குறிப்பிடுகிறது. செக்ஸன் கான் என்பதே செகசைகான் என்று மருவியிருக்கவேண்டும். கதலீச்சரம் என்பது அந்தக் கோவிலின் பெயராக இருந்திருக்கக்கூடும்.

இது போன்ற இன்னும் சில கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றைப் பின்னால் பார்ப்போம்.