உலகில் நீண்ட நெடு வரலாற்றை உடைய தொல் நகரங்களில் ஒன்று மதுரை. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான நகர் இது. நகரின் எல்லைகள் அவ்வப்போது விரிந்தும் சுருங்கியும் வந்திருந்தாலும், அதன் மையப்பகுதி அதிகமாக மாறவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரில் இரு ஆலயங்கள் தனிச்சிறப்புடையனவாகத் திகழ்ந்தன. அதில் 'மழுவாள் நெடியோன்' என்று மதுரைக் காஞ்சி போற்றும் ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அங்கே திருமாலின் கோவில் எங்கே இருந்தது என்பதை ஆராய்வோம். பண்டைக்காலத்தில் மதுரையின் கோட்டை தற்போது ஆவணி மூல வீதி என்று அழைக்கப்படும் வீதியைச் சுற்றியே இருந்தது. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீருர், பூவின் இதழகத் தனைய தெருவம்; இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் என்ற பரிபாடலின் வரிகள் பூவின் இதழ்களைப் போல வட்டமான தெருக்கள் இருந்தனவென்றும் நடுநாயகமாக ஆலவாய் அண்ணல் கோவில் இருந்தது என்றும் விளக்குகிறது. இந்தக் கோட்டையின் வெளிப்புறத்தில், நகரின் தென்மேற்கு மூலையில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதி