Thursday 21 April 2016

சித்திரைத் திருவிழா - நிறைவு

திருமலை மன்னருக்குப் பிறகு மதுரை பல ஆட்சி மாற்றங்களையும் எண்ணற்ற சிக்கல்களையும் குழப்பங்களையும் கண்டது. ஆனாலும் அவர் ஏற்படுத்திய கட்டளைப் படி திருவிழாக்களும் அதில் உள்ள நடைமுறைகளும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன. திருவிழாக்களை ஏற்படுத்தியதோடு மற்றும் நின்றுவிடவில்லை அவர், மீனாட்சி கோவிலிலும், அழகர் கோவிலிலும், திருப்பரங்குன்றத்திலும் எண்ணற்ற திருப்பணிகள் செய்தார் அவர். சிதிலமடைந்த பகுதிகளை எல்லாம் செப்பனிட்டார்.  சாதாரணமாக சுண்ணம் சேர்த்து அதனால் செய்த கலவைகளை வைத்து செப்பனிடுவதற்குப் பதிலாக, கடற்சங்குகளை சுட்டு, அரைத்து அதனால் செய்யப்பட்ட விசேஷமான கலவைகளைப் பயன்படுத்தினார்.

ஒரு ஆட்சியாளராக திருமலை நாயக்கர் மீது எண்ணற்ற விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தராக அவர் அரும்பணி ஆற்றியிருக்கிறார். ஹிந்து மதத்தை மட்டும் அல்லாமல், மற்ற மதங்களையும் அரவணைத்தே சென்றிருக்கிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலி, எல்லா பிரிவைச் சேர்ந்த தெய்வங்களையும் சித்திரைத் திருவிழாவில் பங்குபெறச் செய்ததன் மூலம், சில்லறை மதச்சண்டைகளை ஒழித்துக்கட்டி மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஓங்கச் செய்தார். தானே அதற்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டினார்.

இந்தத் திருவிழா ஒருங்கிணைப்புகளையும் திருப்பணிகளையும் அவர் தான் தோன்றித்தனமாக, சர்வாதிகாரியைப் போல் செய்யவில்லை. தமது குருவும், சாக்த உபாசகரும், ஆகம விற்பன்னருமான நீலகண்ட தீட்சதர், கோவில் ஸ்தானீக பட்டர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக் கேட்டே செய்தார். அதனால்தான் அவர் பெயர் சொல்லும் அளவில் இன்று வரை சித்திரைப் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் 

மதுரை நகரில் இரண்டு கோபுரங்களைக் கட்டியதைப் பற்றி சொன்னீர்கள், மற்ற இரண்டு கோபுரங்களும் எப்போது கட்டப்பட்டன என்று ஒருவர் கேட்டிருந்தார். தெற்கு கோபுரத்தை 14ம் நூற்றாண்டின் மத்தியில் சிராப்பள்ளில் சிவத்தலிங்கம் செட்டி என்பவர் கட்டியிருக்கிறார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வடக்கு கோபுரத்தை நாயக்கர்கள் கட்ட முயன்று பாதியில் அந்தப் பணி நின்று போய் விட்டது.  அதனால் அது மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில், 19ம் நூற்றாண்டில், அன்பர்கள் பலரால் அந்தப் பணி நிறைவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரை இவ்வளவு நாள் பொறுமையுடன் படித்து வந்து, ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.










Wednesday 20 April 2016

சித்திரைத் திருவிழா - 11

மதுரை நகரின் தெற்கில் சுமார் 8 கிமீ தொலைவில் இருக்கும் திருப்பரங்குன்றமும் பழமைவாய்ந்த நகரம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை பெற்றது. பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையினிலும், மதுரைக் காஞ்சியிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழ்ச்சங்க வரிசையில் கடைச்சங்கம் இங்குதான் இருந்தது என்றும் சொல்வது உண்டு. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் குடைவரைக் கோவில் வகையைச் சார்ந்தது. இந்தக் கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் எழுப்பப் பட்டது.  கருவறையில் விநாயகர், சிவன், துர்கை, முருகன், பெருமாள் என்று ஐந்து தெய்வங்களைக் கொண்ட கோவில் இது.




மாசி வீதிகளில் ஆடி வரும் தேர் 

திருமலை மன்னர் இங்கும் 'சில பல' வேலைகளைச் செய்து வைத்திருந்தார். அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்க்கலாம். சித்திரைத் திருவிழாவை பெரும் திருவிழாவாக மாற்றிய பிறகு திருப்பரங்குன்ற முருகனையும்  அதோடு இணைக்கத் திட்டமிட்டார். திருமணம் நடைபெறுகிற வேளையில் மீனாட்சி அம்மானை சொக்கநாதருக்கு தாரை வார்த்துத் தரவேண்டும் அல்லவா. அழகரை ஒரு கதை சொல்லி அக்கரையிலேயே நிற்கவைத்தாகி விட்டது. எனவே திருப்பரங்குன்றத்தில் உறையும் பவளக்கனிவாய்  பெருமாளை, மீனாட்சி அம்மனின் அண்ணன் என்ற முறையில் சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக்கொடுக்க மதுரைக்கு எழுந்தருளச் செய்தார்.  அவரோடு திருப்பரங்குன்றம் முருகனும் உடன் வந்தார். திருமணத்திற்கு வருகின்ற முருகன்   தன்னோடு தன்னை வழிபடுகின்ற மக்களையும்  அழைத்து வந்தார்.

திருக்கல்யாண மேடையில் நீங்கள் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, முருகன், பவளக்கனிவாய் பெருமாள் என்று நால்வரையும் ஒருங்கே தரிசிக்கலாம். திருமணம் முடிந்து இரண்டொரு நாள் மதுரையில் தங்கிவிட்டு பெருமாளோடு புஷ்பப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவார் அவர்.


தமது தேவியருடன் திருமலை மன்னர் 

இப்படியாக திருவிழாக்களை உருவாக்கிய பின்னர் அவற்றின் செலவுக்காக ஆகும் தொகையை கட்டளையாக எழுதிவைத்தார் திருமலை மன்னர்.  திருமலை நாயக்கர் கட்டளை என்று அழைக்கப்படும் அதில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பின்வருமாறு

ஆவணிமூலத் திருவிழா                                - 100 பணம்
தெப்பத் திருவிழா                                           - 150 பணம்
சித்திரைத் திருவிழா                                         - 200 பணம்
நாதஸ்வரம் வாசிப்போர் இருவருக்கு      -  48 பணம்
ஒத்து ஊதுபவருக்கு                                          -   18 பணம்
டமாரம் வாசிப்பவருக்கு                                  - 24 பணம்
குடை சுருட்டி கொண்டுவருபவருக்க        - 15 பணம்
வேதபாராயணம் செய்யும் 10 பேருக்கு        - 240 பணம்
யானைக்குத் தீனி                                                - 120 பணம்

இவையெல்லாம் அந்தக் கட்டளையின் ஒரு பகுதிதான். இவையெல்லாம் எவ்வளவு பார்த்துப் பார்த்து மன்னர் செய்தார் என்பதை புரிந்துகொள்ளவே இங்கே குறிப்பிட்டேன். இது போன்ற கட்டளைகளையும் நிவந்தங்களையும் அளித்தது மட்டுமில்லாமல், மதுரை, அழகர் கோவில், திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகளையும் செய்தார் திருமலை நாயக்கர்.





Tuesday 19 April 2016

சித்திரைத் திருவிழா - 10

மாசித் தேரோட்டத்தை அழகர் ஆற்றில் இறங்கும் சித்ரா பௌர்ணமி விழாவோடு சேர்க்கத் திட்டமிட்டார் திருமலை நாயக்கர்., தேரோட்டத்தோடு பங்குனி மாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த திருக்கல்யாண வைபவத்தையும், அதோடு பட்டாபிஷேகம், திக்விஜயம் ஆகிய நிகழ்ச்சிகளையும் சேர்த்துவிட்டார். அதன்படி, பங்குனி உத்திரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருக்கல்யாணம் சித்திரை மாதம் உத்திரத்திலும் அதற்கு அடுத்த நாள் தேரோட்டமும் அதற்கு அடுத்து சித்திரை பௌர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடந்தது. பட்டாபிஷேகமும் திக்விஜயமும் திருக்கல்யாண வைபவத்திற்கு முந்தைய நாட்கள் நடந்தன. இப்படி மூன்று விழாக்களை ஒருங்கிணைத்து பெருந்திருவிழாவாக மாற்றிய நாயக்கர், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தொலைவிலுள்ள தேனூரிலிருந்து மதுரை நகரில், வைகைக்கு அக்கரையில் உள்ள வண்டியூருக்கு மாற்றி அங்கே தேனூர் மண்டபம் என்ற மண்டபத்தையும் அந்த விழா நடப்பதற்காகக் கட்டிக்கொடுத்தார்.

இதனால் சித்திரைத் திருவிழாவிற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். தேரோட்டமும் சிறப்பாக நடந்து முடிந்தது.  சுவாமி அம்மன் வீதியுலா மாசி வீதிகளில் நடைபெற்றது. 'அதெல்லாஞ்சரி, ஏற்கனவே சித்திரை மாதம் வஸந்த உற்சவம் நடந்திட்டு இருக்கே  அத என்ன பண்ணப் போறீஹ' என்று வடிவேலு போல் யாரோ அவரிடம் கேட்டிருக்கக்கூடும். வஸந்த உற்சவத்திற்காக அம்மன் சன்னதிக்கு எதிரில் புது மண்டபம் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபம் ஒன்றைக் கட்டி, அதைச்சுற்றி அகழி போல் நீரை விடச் செய்து, உற்சவத்தையும் வைகாசி மாதத்திற்கு மாற்றிவிட்டார். சித்திரைத் திருவிழாவும் பதினான்கு  நாட்கள் ஜாம் ஜாம் என்று நடைபெற ஆரம்பித்தது. இந்தத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும் வண்ணம் இருபது ஊர்களையும் கோவிலுக்கு நிவந்தமாக அளித்தார்.


மீனாக்ஷி திருக்கல்யாணம் 

இதை ஒட்டி ஒரு புதுக்கதையும் உருவானது. தங்கை மீனாட்சி திருமணத்திற்கு அண்ணனான கள்ளழகர் வருவதாகவும், வரும் வழியில் வைகையில் வெள்ளம் வந்ததால் அவரால் ஆற்றைக்கடந்து குறித்த நேரத்தில் வர முடியாமல் போனதாகவும், அதற்குள் திருமணம் நடந்துமுடிந்துவிடவே, கோபம் கொண்டு திரும்பிப் போனதாகவும் மக்கள் இடையே கதை ஒன்று உலவ ஆரம்பித்தது. அதனால் தான் வைகையாற்றின் கரைக்கு வந்து ஊருக்குள் வராமல் அழகர் திரும்பிப் போகிறார் என்றும் கூறப்பட்டது.




வெள்ளி யானை வாகனத்தில் சொக்கநாதரும் ஆனந்தராயர் தந்தப் பல்லக்கில் அம்மனும் 

அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக தாம் ஆட்சி செய்கிறோம் என்பதைக் குறிக்கும் (பட்டாபிஷேக தினத்தன்று) செங்கோல் வாங்கும் நிகழ்ச்சியையும் ஏக தடபுடலுடன் நடத்தினார் திருமலை நாயக்கர். மதுரையில் தான் தங்குவதற்காகக் கட்டிக்கொண்ட திருமலை நாயக்கர் மஹாலில் இருந்து பாளையக்காரர்கள் புடைசூழ யானைமேல் அமர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புறப்படுவார் திருமலை மன்னர். கோவில் ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மை பட்டாபிஷேகம் நடைபெறும். பட்டாபிஷேகம் நிறைவடைந்த பின்னர், மாலை மரியாதைகள்  பரிவட்டங்கள் மன்னருக்கு அளிக்கப்படும். அதன் பின் அம்மனின் கையிலிருந்த செங்கோலைப் பெற்றுக்கொண்டு மதுரை நகர் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று அரண்மனையை அடைவார் திருமலை நாயக்கர் என்று ஶ்ரீதளம் குறிப்பிடுகிறது.

மீனாட்சி கோவில், அழகர் கோவில் மட்டுமல்லாது மதுரை நகரைச் சுற்றியுள்ள பல கோவில்களையும் இந்தத் திருவிழாவில் பங்கு பெறச்செய்தார் திருமலை மன்னர். தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோவில், கருப்பண்ண சாமி கோவில், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் என்று எல்லாக் கோவில்களின் மூர்த்திகளும் ஏதோ ஒரு வகையில் இந்தத் திருவிழாவில் பங்கேற்றன. அதனால் அந்தந்தக் கோவிலுக்குரிய மக்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

அடுத்ததாக நாயக்கரின் கவனம் சென்றது மதுரையின் தெற்கில் இருந்த திருப்பரங்குன்றத்திற்கு.



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி





Monday 18 April 2016

சித்திரைத் திருவிழா - 9

தாம் செய்த வலுவான தேர்களை இழுக்க போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையே என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கும் திருமலை நாயக்கரை அப்படியே விட்டுவிட்டு, மதுரைக்கு வட கிழக்கில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகர் மலைக்குச் செல்வோம்.

திருமாலிருஞ்சோலை, அழகர்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வைணவத்தலம் புராதனமான வரலாற்றை உடையது. இந்தக் கோவிலில் உறையும் சுந்தரராஜப் பெருமாள் ஆழ்வார்களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர். 'சுந்தரத் தோளுடையான்' என்று ஆண்டாள் இவரை அழைக்கிறார். பரிபாடலில் இந்தத் தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில் மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளில் ஒன்றாக திருமால் குன்ற வழியை மாங்காட்டு மறையவன் உரைக்கின்றான். அங்கேயுள்ள சிலம்பாற்றைப் பற்றியும் கூறுகின்றான்.

இப்படிப் பல சிறப்புகள் கொண்ட அழகர் கோவில், சிறு தெய்வம், பெரும் தெய்வம் என்று சிலர் இப்போது அடிக்கும் ஜல்லிக்கு எல்லாம் அப்பாற்பட்டது. இந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கெல்லாம் அழகர்தான் குல தெய்வம். அவர்களால் கள்ளழகர் என்று அன்போடு அழைப்படுபவர் இவர். அதே சமயம், கிராம தேவதையாகக் கருதப்படும் கருப்பண்ணசாமிக்குத் தான் இந்தக் கோவிலில் முதற்பூசை.  பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமியாக இங்கு அருள்பாலிக்கும் அவருக்கு முறையான பூஜைகள் செய்த பிறகே அழகர் வெளியே கிளம்புவார். இக்கோவிலின் இன்னொரு சிறப்பு, உற்சவ மூர்த்தியான சுந்தர ராஜப் பெருமாள், அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னால் செய்யப்பட்டவர். இப்போது நாம் சுத்தத் தங்கம் என்று சொல்லும் பொன் பத்தரை மாற்று, அதாவது பத்து பங்கு தங்கத்திற்கு அரைப்பங்கு செம்பு சேர்த்துச் செய்யப்பட்டது. அப்படியானால் அபரஞ்சிப் பொன் எவ்வளவு தூய்மையான தங்கம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.




ஒன்பதாம் திருநாளில் திக்விஜயம் புறப்படும் மீனாட்சியம்மையும் அவருடன் போர்புரியத் தயாராகும் சொக்கநாதரும்

இந்த அழகர் கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் புராணக் கதை ஒன்று உண்டு. இங்கேயுள்ள சிலம்பாற்றில் சுதபஸ் என்னும் முனிவர் நீராடிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த துர்வாசரைக் கவனியாது இருந்துவிட்டதால் அவரைத் தவளையாகுமாறு துர்வாசர் சபித்துவிட்டார். அவர் சாப விமோசனம் வேண்டவே, வைகையாற்றில் தவம் செய்யுமாறும் அங்கே அழகர் பெருமான் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்றும் கூறிச்சென்றார். அதன்படியே வைகையாற்றில் தவம் செய்துகொண்டிருந்த முனிவருக்கு அழகர் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றின் கரையில், மதுரைக்கு வடமேற்கில், சமயநல்லூருக்கும் சோழவந்தானுக்கும் இடையில் உள்ள,  தேனூர் என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதற்காக மலையிலிருந்து அழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் வரை வருவார். அச்சமயம் அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் அழகரைச் சந்திக்கப் புறப்பட்டு வருவார்கள். கள்ளர் வேடமணிந்து அழகரை வழிபடுவார்கள்.

இந்த மக்கள் கூட்டத்தை மதுரைத் தேர்த்திருவிழாவுக்காக பயன்படுத்திக்கொள்ள மாஸ்டர் பிளான்  ஒன்றைத் தீட்டினார் திருமலை நாயக்கர்.
                                                                                                                                            அது ......



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar
2.   Madurai through the ages - Devakunjari

Sunday 17 April 2016

சித்திரைத் திருவிழா - 8

இப்போது நம் தொடரின் நாயகனான(!!) திருமலை நாயக்கருக்கு வருவோம்.

பொயு 1627ம் ஆண்டு வாக்கில் திருமலை நாயக்கர் மன்னராகப் பொறுப்பேற்றார். நாயக்கர்கள் வரிசையில் ஏழாவது மன்னர் அவர். அவருக்கு முன்பு ஆண்ட முத்து வீரப்பர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றியதால், அவரும் திருச்சியிலிருந்தே ஆட்சியைத் தொடர்ந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்கு வந்த புதிதில் தென்னாட்டில் ஏகக்குழப்பங்கள். விஜயநகரம் தன் வலிமையை இழந்து பாமினி சுல்தான்களோடு போராடிக்கொண்டிருந்தது. மைசூர் உடையார்கள் தனியரசை உருவாக்கியிருந்தனர். தஞ்சாவூர் நாயக்கர்கள் மதுரைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இராமநாதபுரத்தில் சேதுபதிகள் நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுபட முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஆட்சியின் முதல் ஏழாண்டுகள் இவற்றையெல்லாம் ஓரளவு சமாளித்துக்கொண்டிருந்த திருமலை நாயக்கர், 1634ல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

இந்தத் தலைநகர் மாற்றத்திற்குச் சரியான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பாக வழங்கப்படும் கதை ஒன்று இப்படிச் சொல்கிறது. திருமலை மன்னர் மண்டைச்சளி (catarrh) நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய சொக்கநாதப் பெருமான், மதுரையம்பதியே நீ ஆளவேண்டிய ஊர், தலைநகரை மாற்றி உன் ஆட்சியை மதுரையிலிருந்து நடத்து,  உன் உடல்நிலை சீராகும் என்று கூறியதாகவும். அதன்படியே அவர் சளித்தொல்லை குணமானது என்றும், அதன்காரணமாகவே அவர் மதுரைக்கு தலைநகரை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.






மீனாட்சியம்மையின் பட்டாபிஷேகத் திருவிழா 



வைரக்கிரீடம் அணிந்து  பாண்டியர்களின் வேப்பம்பூ மாலை சூடி  செங்கோல் பிடித்து ஆட்சிசெய்யும் மீனாட்சி  அம்மை


எப்படியோ, மதுரைக்கு தலைநகரை மாற்றிய திருமலை மன்னர் தம்முடைய நோயைக் குணப்படுத்திய சொக்கருக்கும் மீனாட்சிக்கும் பொன்னும் மணியும் நகைகளுமாக வழங்கினார். சுவாமியும் அம்மனும் உலா வருவதற்காக இரு பெரும் தேர்களை வலுவான, வைரம்பாய்ந்த மரங்களைக் கொண்டு செய்வித்தார். கோவில் நிர்வாகம் நடைபெறும் முறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர், கடந்த சில ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் முறையற்ற வழியில் அபகரிக்கப்படுவதைக் கண்டுபிடித்தார். இதைத் தடுக்க கோவில் நிர்வாகத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதே சரியான வழி என்று எண்ணிய அவர், கோவில் அபிஷேகப் பண்டாரத்தை தம் குருவாக ஏற்றார். நாயக்கர்கள் அனைவரும் வைணவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திருமலை மன்னருக்கும்  சைவரான கோவில் பண்டாரத்தை குருவாக ஏற்பதில் தயக்கமேதுமில்லை. ஆனால், கோவில் ஸ்தானீகர்கள் இந்த ஏற்பாடுகளை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

திருமலை மன்னர் ஒரு autocratic ஆட்சியாளர். முடிவே முயற்சிகளைத் தீர்மானிக்கிறது என்ற கொள்கையுள்ளவர். தாம் நினைத்ததை நடத்துவதற்கு சாமம், தானம், பேதம், தண்டம் என்ற எந்த முறையையும் கையாளத்தயங்காதவர். எனவே கலகம் செய்தவர்களுக்கு பணம் கொடுத்தும், பதவிகளைக் கொடுத்தும், மிரட்டியும் தாம் சொல்வதைக் கேட்க வைத்தார். படிப்படியாக் கோவில் நிர்வாகம் அவர் கையில் வந்தது. கோவில் திருப்பணிகளையும் தம் பார்வையில் ஜரூராக ஆரம்பித்தார்.

இந்தக் கட்டத்தில் மதுரைக் கோவிலின் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடைபெற்றுவந்தது என்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் (இல்லையென்றால் இங்கே அதைப்பற்றிப் படிக்கலாம்). மாசி மாதம் தேரோட்டம் நடந்துவந்தது என்று பார்த்தோமல்லவா. திருமலை மன்னர் செய்த வலுவான தேர்களை இழுக்க அதிக அளவு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆனால், மாசி மாதம் அறுவடைக்காலம் முடிந்து மக்கள் ஓய்வு எடுக்கும் காலம். எனவே தேர் இழுக்க ஆட்கள் மதுரைக்கு வரவில்லை. இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார் நாயக்கர்.

                                                                                                               அடுத்து

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar 



Saturday 16 April 2016

சித்திரைத் திருவிழா - 7

கம்பண்ணர் மதுரையை சுல்தான்களிடமிருந்து மீட்டதும், சீர்கெட்டுப் போயிருந்த நிர்வாகத்தை செம்மைப் படுத்த முயன்றார். மதுரை முறைப்படி விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டது. பாழடைந்து கிடந்த மீனாட்சி அம்மன் கோவிலும் சீரமைக்கப்பட்டது. கம்பண்ணர் ஆட்சி அமைத்ததைக் கேட்ட ஸ்தானீகர்களும் நாடு திரும்பினர். கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் துவக்கப்பட்டன.

கம்பண்ணருக்குப் பிறகு விஜயநகரத்தின் பிரதிநிதியாக இரண்டாம் ஹரிஹரரின் மகன் பொறுப்பேற்றார். அதன்பின் 'உடையார்கள்' என்று அழைக்கப்பட்ட விஜயநகரின் பிரதிநிதிகள் மதுரையை ஆண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக அந்த அரசின் பிடி தளர்ந்தது. சங்கம வம்சத்தை அடுத்து சாளுவ வம்சமும் அதன்பின் துளு வம்சமும் விஜயநகரத்தை ஆண்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மதுரையை வாணாதிராயர்கள் பிடித்துக்கொண்டனர். அதன் பின் மதுரையின் ஆட்சியுரிமையில் பெருங்குழப்பம் நிலவியது. ஆளுக்காள் உரிமை கோரி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.



ஏழாம் திருநாளில்  -   நந்திகேஸ்வர வாகனத்தில் சுவாமியும் யாளி வாகனத்தில் அம்மனும் 

இதற்கிடையில் விஜயநகரத்தின் அரசராக கிருஷ்ணதேவராயர் 1509ம் ஆண்டு பொறுப்பேற்றார். பாமினி சுல்தான்களையும் தம்மை எதிர்த்த மற்ற சிற்றரசர்களையும் வென்று வலிமையான அரசு ஒன்றை உருவாக்கினார். மதுரையின் பிரதிநிதியாக பலம் வாய்ந்த தளபதியான நாகம நாயக்கரை அனுப்பினார். இது கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் எந்த ஆண்டு நடந்தது என்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் மதுரைக்கு வந்த நாகம நாயக்கர் விஜயநகரப் பேரரசை எதிர்த்துப் புரட்சி செய்தார். இதனால் வெகுண்ட கிருஷ்ணதேவராயர் அவரை பணியவைக்க நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கரை அனுப்பினார். தந்தை என்றும் பாராமல், நாகம நாயக்கரைத் தோற்கடித்த விஸ்வநாதர், அவரைச் சிறைப்பிடித்து கிருஷ்ணதேவராயரிடம் கொண்டு சென்றார். விஸ்வநாத நாயக்கரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டி அவரையே மதுரையின் பிரதிநிதியாக நியமித்தார். தனது நண்பரும் தளவாயுமான அரியநாத முதலியருடனும் பிரதானியான கேசவப்பருடனும் மதுரை பயணமானர் விஸ்வநாத நாயக்கர். அவருடன் நாகம நாயக்கர் அவருக்காக சேர்த்து வைத்திருந்த பெரும் செல்வத்தையும் எடுத்துச் சென்றார்.

பொயு 1530ல் மதுரையின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார் விஸ்வநாத நாயக்கர். அவருடன் மதுரை நாயக்கர் வம்சம் துவங்கியது. தென் தமிழகத்தின் நிர்வாகத்தை சீர்திருத்தியதில் அவரது தளவாயான அரியநாதரின் பங்கு அளப்பரியது. பாளையக்காரர் முறையை அவர்தான் கொண்டுவந்தார். அதைத் தவிர மதுரைக் கோவிலையும் புனரமைத்தார். மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவை திரும்பக்கட்டப்பட்டன. புதிதாக ஆயிரங்கால் மண்டபத்தையும் அரியநாதர் கட்டினார். கோவில் நிர்வாகம், பூஜைகள், திருவிழாக்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டன. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கெல்லாம், விஸ்வநாத நாயக்கர் தம் சொந்தப் பணத்தையே செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி உத்திர நாளில் மீனாக்ஷியம்மன் திருமணம் நடைபெற்றது என்று முன்னரே பார்த்தோம். அதற்கு முந்தைய நாள் மீனாட்சியம்மையின் திக்விஜயமும், அதற்கு முன் பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றுவந்தன (இன்று அந்த பட்டாபிஷேக வைபவம் நடக்கிறது) . கம்பண்ணர் மீனாக்ஷியின் வாளைப் பெற்று மதுரை ஆட்சியுரிமையை அடைந்ததைக் குறிக்கும் விதமாக, பட்டாபிஷேகத்திருநாள் அன்று, மீனாக்ஷியம்மனின் கையிலிருந்து செங்கோலை நாயக்க மன்னர் பெற்றுக்கொண்டு அம்மையின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் வைபவம் ஏற்படுத்தப்பட்டது.



தளவாய் அரியநாதரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் 

விஸ்வநாத நாயக்கருக்குப் பின் ஐந்து நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டனர். ஐந்தவதாக ஆட்சி செய்த முத்து வீரப்ப நாயக்கர், தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார். தஞ்சாவூர் நாயக்கர்களின் தொல்லைகளைச் சமாளிக்கவும், வடக்கே இருந்து வரக்கூடிய படையெடுப்புகளின் அபாயத்தைத் தவிர்க்கவுமே அவர் இந்த ஏற்பாட்டைச் செய்ததாகக் கூறப்படுகிறது.அதன்பின் நாயக்கர் ஆட்சி திருச்சியிலிருந்து தொடர்ந்தது.

                                                                                                                  அடுத்து



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar 
2. A History of South India - K A  Neelankanta Sastri 



Friday 15 April 2016

சித்திரைத் திருவிழா - 6

மதுரை  சுல்தான்கள் வரிசையை துக்ளக்கின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆசன் கான் துவக்கி வைத்தான் என்று பார்த்தோம். இதைக் கேள்விப்பட்ட முகமது பின் துக்ளக் அவனைக் கொல்ல ஒரு படையை அனுப்பி வைத்தான். ஆனால், அந்தப் படைவீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் பக்கம் திருப்பிக்கொண்டான் ஆசன்கான். இதைக் கேள்விப்பட்டு கடும்கோபம் அடைந்த துக்ளக் ஆசன்கானின் மகனை சித்ரவதை செய்து, இரு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தான். துக்ளக்கின் அவையில் இருந்தவரும் அக்காலத்திய பயணக்குறிப்புகளை எழுதியவருமான இபின் பதூதா, ஆசன் கானின் மகளை மணம் புரிந்திருந்தார். மைத்துனனுக்கு நேர்ந்த கதி தமக்கும் நேரலாம் என்று அஞ்சி அவர் நாட்டை விட்டுக்கிளம்பினார்.  ஆனால் இலங்கைக்கு அருகில், அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. தப்பிப் பிழைத்த அவர் மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கு ஆசன் கானின் இன்னொரு மகளைத் திருமணம் செய்த கியாசுதீன் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார் (1340). தன் 'சகலையை' மரியாதையுடன் வரவேற்று சில காலம் அங்கேயே தங்கச்செய்தார் கியாசுதீன். அங்கு, தாம் பார்த்தவைகளைக் குறிப்புகளாக எழுதிவைத்திருக்கிறார் பதூதா.

அந்தக் குறிப்புகளில் ஒன்று, இந்த நிகழ்ச்சியை விவரிக்கிறது. ஒருநாள் கியாசுதீனும் பதூதாவும் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு ஒரு கோவிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களை அருகில் அழைத்த  கியாசுதீன், அவர்களை இரவு முழுவதும் கூடாரமொன்றில் அடைத்து வைத்தான். மறுநாள் காலையில், அவர்களில் ஆண்களை கூராகச் சீவப்பட்ட குச்சிகளில் கழுவேற்றியதாகவும், பெண்களையும் குழந்தைகளையும் கழுத்தை வெட்டிக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. "ஒருநாள் நானும் காஜியும் சுல்தானுடன் உணவருந்திக்கொண்டிருந்தோம், அப்போது ஒரு தம்பதியும் அவர்களது ஏழுவயது மகனும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் தலையை வெட்டி விடுமாறு சுல்தான் உத்தரவிட்டான். நான் தலையைத் திருப்பிக்கொண்டேன், மீண்டும் அங்கு பார்த்தபோது அவர்களின் தலை அவர்கள் உடலில் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் பதூதாவின் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.   ஹொய்சாள அரசரான வீர வல்லாளர் (மாலிக்கபூருக்கு வழிகாட்டி வந்தவர்) கியாசுதீன் மீது போர்தொடுத்தார். கண்ணனூர் கொப்பம் (சமயபுரம்) என்ற இடத்தில் நடந்த போரில் முதலில் வல்லாளர் வெற்றி அடைந்தாலும், மின்னல்வேகத்தாக்குதல் ஒன்றை நடத்திய கியாசுதீன் ஹொய்சாளப்படைகளைத் தோற்கடித்தான். வல்லாளரைச் சிறைப்பிடித்து, அவர் தோலை உரித்து வைக்கோலை அடைத்து மதுரை கோட்டைவாயிலில் தொங்கவிட்டான் கியாசுதீன். இப்படி பல கொடுமைகள் நடந்ததாலோ என்னவோ, மதுரையில் பிளேக் நோய் பரவியது. மதுரை மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். கியாசுதீனும் அவன் குடும்பமும் இந்த நோய்க்குப் பலியானார்கள். அவரை அடுத்து நசிரூத்தீன் ஷா பதவியேற்றார்.  இப்படியாக மொத்தம் ஏழு சுல்தான்கள் மதுரையை ஆண்டனர்.

இது ஒருபுறம் இருக்க, துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு ஒன்று உருவாகியிருந்தது. ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் குரு வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் இந்த அரசை ஏற்படுத்தியிருந்தனர். சிறிது சிறிதாக தென்னிந்தியாவின் பல பகுதிகளை தங்கள் அரசின் கீழ் கொண்டுவந்தனர் அவர்கள்.  புக்கரின் மகனான கம்பண்ணர் 1364ம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தின்மேல்  படையெடுத்து, அந்த நகரைக் கைப்பற்றி அங்கேயே தங்கியிருந்தார். அவரோடு அவர் மனைவியான கங்காதேவியும் வந்திருந்தார். கம்பண்ணரின் திக்விஜயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை 'மதுரா விஜயம்' என்ற பெயரில் ஒரு அழகான காவியமாக பின்னால் எழுதினார் கங்காதேவி. காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பண்ணரை சந்திக்க வந்தார் ஒரு பெண். தமிழகத்தின் இருண்ட நிலையைப் பற்றிக்கூறிய அவர், திருவரங்கமும், சிதம்பரமும், மதுரையும் அடைந்த அழிவுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள கோவில்களில் பூஜைகள் நின்றுபோய்விட்டதையும், பல கோவில்கள் மண்ணடித்துப் போனதையும் சொல்லிய அவர், பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த வாளை எடுத்து கம்பண்ணரிடம் கொடுத்தார். தாம் மீனாட்சி தேவியே என்றும், மதுரையை இந்த வாளின் துணைகொண்டு மீட்குமாறும் சொல்லி மறைந்தார் என்று மதுராவிஜயம் கூறுகிறது.



திருவிழாவின் ஆறாம் திருநாள் - விடை வாகனத்தில் அம்மையும் அப்பனும் 

தமது படைகளைத் திரட்டிக்கொண்டு 1378ம் ஆண்டு மதுரை நோக்கி வந்தார் குமார கம்பண்ணர். மதுரையை அப்போது சிக்கந்தர்கான் என்ற சுல்தான் ஆண்டுகொண்டிருந்தார். அவரது படைகள் கம்பண்ணரிடம் தோற்றோடின. மதுரையை விட்டுத் தப்பித்த சுல்தான், திருப்பரங்குன்றம் மலைமேலேறி பதுங்கிக்கொண்டான். கம்பண்ணரின் படைகள் திருப்பரங்குன்றம் மலையைச் சூழ்ந்து முற்றுகையிட்டன. சுல்தானின் படைபலம் சொற்பமே என்று உணர்ந்த கம்பண்ணர், அவரை தன்னுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைத்தார். இருவருக்கும் இடையே திருப்பரங்குன்றம் மலைமீது துவந்த யுத்தம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று, சிக்கந்தரைக் கொன்றார் கம்பண்ணர். அவருக்கு அந்த மலைமேல் ஒரு சமாதியும் எழுப்பச்செய்தார்.

பின் படைகளை அழைத்துக்கொண்டு வெற்றி வீரராக மதுரை திரும்பி, மீனாட்சி அம்மையின் கோவிலை அடைந்தார், இடிபாடுகளை அகற்றி,  மண்ணை நீக்கி, கருவரையின் முன் வைக்கப்பட்ட, சுல்தான்களின் படைகளால் சேதம் செய்யப்பட்ட லிங்கத்தை எடுத்து வைத்துவிட்டு, கருவரையின் மூடப்பட்ட சுவரை இடித்து உள்ளே நுழைந்தார். அங்கு சொக்கநாதரின் மேல் சார்த்தப்பட்ட மாலை வாடாமல், கருவறையை மூடிய போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அவருக்கு தரிசனம் கிடைத்தது. அதன்பின், கம்பண்ண உடையார் மதுரையில் தங்கி நகரையும் கோவிலையும் சீர்ப்படுத்த முனைந்தார்.





சுல்தான்களால்  சேதப்பட்ட லிங்கம், இன்று சுவாமி சன்னதியின் இடப்புறத்தில், எல்லாம் வல்ல சித்தர் சன்னதிக்கு அருகில் உள்ளது.

                                                                                                  அடுத்து என்ன நடந்தது ?



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1. The India they saw - Meenakshi Jain
2. A History of South India - K A  Neelankanta Sastri 
3. South India and her Muhammadan Invaders - S Krishnaswamy Iyangar






Thursday 14 April 2016

சித்திரைத் திருவிழா - 5

அடுத்தடுத்த இரண்டு படையெடுப்புகளால் நிலைகுலைந்த மதுரை நகரையும் கோவிலையும், பராக்கிரம பாண்டியர் சீரமைக்க முயன்றுகொண்டிருந்தார் என்று பார்த்தோம். ஆனால் அவரை விதி விடவில்லை.

டெல்லியில் கில்ஜிகளின் ஆட்சி முடிவடைந்து துக்ளக் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. இந்த  இடைப்பட்ட காலத்தில்  வாரங்கல்லின் காகதீயர்களும் துவாரசமுத்திரத்தில் ஹொய்சாளர்களும் தங்கள் நாட்டை மீண்டும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். காகதீய அரசனான பிரதாபருத்திரன்  ஒரு படி மேலே போய் டெல்லிக்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டான்.  இவர்களை அடக்குவதற்காக, டெல்லி சுல்தானான கியாசுதீன் துக்ளக் தன்னுடைய மூத்த மகனும் இளவரசனுமான உலூக் கானை தென்னிந்தியாவுக்கு ஒரு படையோடு அனுப்பிவைத்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் டெல்லி அரியணை ஏறிய 'பிரசித்தி' பெற்ற முகம்மது பின் துக்ளக். அப்பாவியாகவும் காமெடியனாகவும் சித்தரிக்கப்படும் இவன் உண்மையில் மிகக் கொடூரமானவன்.

1323ல் கிளம்பிய உலூக் கான் வாரங்கல்லையும் துவாரசமுத்திரத்தையும் வென்று சூறையாடி தமிழகத்திற்குள் நுழைந்தான். திருவரங்கத்தில் அந்த ஆண்டு பங்குனித் திருவிழாவில் புகுந்து இவனது படைகள் பேரழிவை ஏற்படுத்தின.ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலையும் பாழ்படுத்தின இவனது படைகள்.   நம்பெருமானை எடுத்துக் கொண்டு கோவிலிலிருந்து தப்பிய ஆச்சார்யார்கள் தென்னகத்தின் பல பகுதிகளுக்கும் அவரை எடுத்துச் சென்றதையும் அதில் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் வைணவ குரு பரம்பரை சரித்திரம் சொல்லுகிறது. திருவரங்கன் உலா என்ற பெயரில் ஸ்ரீவேணுகோபாலன் இந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் படித்துப்பாருங்கள்.



ஐந்தாம் நாள் திருநாளில் குதிரை வாகனத்தில் சுவாமியும் அம்மனும் 

இப்போது மதுரைக்கு வருவோம், உலூக் கானின் படைபலத்தையும் அவன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அழிவையும் கேட்ட பராக்கிரம பாண்டியன், 'வழக்கம்' போல் மதுரையை விட்டு ஓடி காளையார் கோவிலில் தஞ்சம் புகுந்தான். காக்க வேண்டிய அரசன் ஓடிவிட்டதையும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்ந்த அழிவையும் கேட்ட கோவில் ஸ்தானீகர்கள் மனம் கலங்கினார்கள். கோவிலைக் காக்க சில ஏற்பாடுகளையும் செய்தனர். சொக்கநாதர் சன்னதி கருவறையின் வாயிலில் ஒரு சுவரை எழுப்பி மூடி. அதன் முன் ஒரு கிளிக்கூண்டையும் வைத்தனர்.  சன்னதியின் முன் ஒரு லிங்கத்தை வைத்துவிட்டு,  மீனாட்சி அம்மையை கோவில்  விமானத்தில் அஷ்டபந்தனம் செய்து மறைத்து வைத்தனர். இளையனார் போன்ற உற்சவ மூர்த்திகளை பூமிக்கடியில் மறைத்துவைத்துவிட்டு,  சுவாமி,  அம்மன் விக்கிரகங்களுடன் நாஞ்சில் நாட்டில் தலைமறைவானார்கள்.

தடுக்க யாரும் இல்லாமல் மதுரையில் நுழைந்த உலூக் கான், நகரை சூறையாடி கோவிலின் பல பகுதிகளுக்கும் அழிவை ஏற்படுத்தினான். அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவை அழிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக கருவறையை அவர்கள் சேதப்படுத்தவில்லை. கருவறையைச் சுற்றியிருந்த கல்யானைகளைக் கண்ட படைவீரர்கள், அதைப் பற்றிக் கேட்டபோது, கல்யானைக்கு கரும்பு அளித்த திருவிளையாடல் அவர்களிடம் கூறப்பட்டதாகவும், அதைக் கேலி செய்ய அவர்களில் ஒருவன் ஒரு கரும்பை யானை ஒன்றின் வாயில் திணித்ததாகவும் அதை யானை சாப்பிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீரர்கள், ஏதோ மந்திர சக்தி அங்கு இருப்பதாக எண்ணி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியானாலும் கருவறை சேதமடையவில்லை.

இதற்கிடையில் காளையார் கோவிலில் பதுங்கியிருந்த பராக்கிரம பாண்டியர் உலூக் கானின் படைகள் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தார். ஆனால், குஸ்ராவ் கானுக்கு எதிராகக் கிடைத்த வெற்றி போல்  இங்கே கிடைக்கவில்லை. போரில் தோல்வியுற்று கைதியாக டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார் பராக்கிரம பாண்டியர். போகும் வழியில் கொலை செய்யப்பட்டு மாண்டார். இவ்வாறாக பாண்டியன் முடத்திருமாறனால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைப் பாண்டியர் வம்சம் பராக்கிரம பாண்டியருடன் முடிவுக்கு வந்தது.

மாலிக் கபூரும், குஸ்ராவ் கானும் நிகழ்த்திய முந்தைய படை எடுப்புகளின் நோக்கம் கொள்ளை மட்டும்தான். ஆனால் உலூக் கானின் நோக்கம் மாபார் என்று அழைக்கப்பட்ட மதுரையை தன்னுடன் சேர்த்துக்கொள்வதும் கூட. எனவே தன்னுடைய பிரதிநிதியாக ஜலாலுதீன் ஆசன் கான் என்பவனை மதுரையில் அமர்த்திவிட்டு டெல்லி திரும்பினான் உலூக்கான். சிறிது காலம் துக்ளக்கின் பிரதிநிதியாக மதுரையை ஆண்ட ஆசன் கான், 1335ல்  உலூக்கானின் ஆதரவாளர்களைக் கொன்றுவிட்டு  தானே மதுரையின் சுல்தான் என்று பிரகடனப் படுத்திக்  கொண்டான். அதிலிருந்து 43 ஆண்டுகள் மதுரை சுல்தான்கள் தனி ராஜ்ஜியமாக மதுரையை ஆண்டனர். அக்காலத்தில் மதுரை பேரழிவுகளைச் சந்தித்தது. கோவில் வழிபாடுகள் முற்றிலும் நின்று போயின.

இந்த இருளைப் போக்கும் ஒளி வடக்கே துங்கபத்திரை நதிக்கரையில் தோன்றியது.

                                                                                                                                   அடுத்து


படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1. The India they saw - Meenakshi Jain
2. Madurai through the ages - Devakunjari
3. South India and her Muhammadan Invaders - S Krishnaswamy Iyangar

Wednesday 13 April 2016

சித்திரைத் திருவிழா - 4

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்திலும் அதற்குப் பின் வந்த மாறவர்மன் குலசேகரன் காலத்திலும் பாண்டிய நாடு பெரும் செல்வத்தை ஈட்டியது என்று பார்த்தோம். இந்த செல்வ வளத்தைப் பற்றி குலசேகரன் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ தன்னுடைய பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். பொன்னும் மணியும் முத்தும் குவியல் குவியலாக அரண்மனையில் கொட்டிக்கிடந்தன என்று எழுதியிருக்கும் அவர், புதிய அரசர் பட்டமேற்றவுடன், முந்தைய அரசர் ஈட்டிய செல்வத்தை பயன்படுத்தாமல், வர்த்தகத்தின் மூலமும் போர்களின் மூலமும் புதிதாக செல்வத்தை ஈட்டி கஜானாவில் சேர்த்தனர் என்று குறித்திருக்கிறார்.





சித்திரைத் திருநாள் நான்காம் நாள் - தங்கப்பல்லக்கில் சுவாமியும் அம்மனும்

இப்போது வரலாற்றைத் தொடர்வோம். குலசேகர பாண்டியர் தமது அடுத்த வாரிசாக ஒருவரை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு பட்டமகிஷியின் மூலம் பிறந்த சுந்தர பாண்டியர் மதுரையிலும் ஆசைநாயகியின் மூலம் பிறந்த வீரபாண்டியர் கொற்கையிலும் பாண்டிய குல வழக்கப்படி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். முறைப்படி பட்டத்திற்கு வரவேண்டிய சுந்தர பாண்டியரைக் காட்டிலும், அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியதால் இளையவரான வீரபாண்டியரே அரசாளத் தகுந்தவர் என்று குலசேகர பாண்டியர் கருதி, அவருக்கே அரசு என்று அறிவித்தும் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாண்டியர் தந்தையைக் கொன்று மதுரை அரசைக் கைப்பற்றிக்கொண்டார். வீரபாண்டியர் சும்மா இருப்பாரா, தனக்கு வேண்டியவர்களுடன் படை திரட்டி மதுரையை வென்று, ஆட்சிபீடத்தைத் தனதாக்கிக்கொண்டார். சுந்தர பாண்டியரையும் நாட்டை விட்டு விரட்டி விட்டார். இதனால் பெரும் கோபமடைந்த சுந்தரபாண்டியர் வீரபாண்டியரை விரட்ட தகுந்த சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் டெல்லியில் அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்திருந்தார். அவருக்கு யாரோ தென்னாட்டில் அதிக அளவு செல்வம் குவிந்து கிடக்கிறது என்று ஆசையைக் கிளப்பி விடவே, அந்தச் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவர மாலிக்கபூர் என்ற தன் தளபதியை சுமார் ஒரு லட்சம் குதிரை வீரர்கள், ஆப்கானிய வில்லாளிகள், செங்கிஸ்கானின் பீரங்கிகளுடன் தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். முதலில் வாரங்கலையும் அடுத்து ஹொய்சாளர்களின் தலைநகரான துவாரசமுத்திரத்தையும் (இன்றைய ஹளபீடு) தாக்கி வென்று, அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும்செல்வத்துடன் கோலாரில் முகாமிட்டிருந்தார் மாலிக்கபூர். அவரிடன் தோற்றோடிய ஹொய்சாள அரசர் வீர வல்லாளர் அவரிடம் சமாதானம் பேசவேண்டிய நிலையில் இருந்தார். இவரிடம் நமது சுந்தர பாண்டியர் போய்ச் சேர்ந்தார். இருவரும் மாலிக்கபூரைச் சந்தித்தனர். பாண்டிய நாட்டில் பெரும் செல்வம் குவிந்து கிடப்பதாக ஆசை காட்டிய சுந்தர பாண்டியர் தனது தம்பியை வென்று நாட்டைத் தனக்கு அளித்தால், அந்த செல்வத்தின் பெரும் பகுதியை மாலிக்கபூருக்குத் தருவதாக ஆசை காட்டினார். நெடுந்தூரம் படை நடத்திக் களைத்திருந்தாலும், பண ஆசையால் பாண்டிய நாட்டின் மேல் படையெடுக்க மாலிக்கபூரும் ஒப்புக்கொண்டு, வீர வல்லாளரின் படை வழிகாட்ட, கில்ஜியின் படை மதுரை நோக்கி வந்தது. (மார்ச் 1311ம் ஆண்டு)

மாலிக்கபூரின் படைபலத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த வீரபாண்டியர், மதுரையை விட்டு ஓடிவிட்டார். மாலிக்கபூர் ஏப்ரல் 10, 1311ல் மதுரை நகரை வந்தடைந்தார்.  கில்ஜியின் படைகள் மதுரை நகரில் பெரும் சேதத்தை விளைவித்தன. மீனாட்சியம்மன் கோவிலையும் அவர்கள் சூறையாடினர். முடிவில் சுந்தர பாண்டியர் அளித்த செல்வத்துடன் அவர்கள் மதுரையை விட்டுக்கிளம்பினர். அவர் அங்கிருந்து எடுத்துச் சென்றது 96000 மணங்குப் பொன், 612 யானைகள், இருபதாயிரம் குதிரைகள் என்று பார்னி என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு மணங்கு என்பது கிட்டத்தட்ட 11.2 கிலோவுக்குச் சமம், அப்படியானால் அவர் அடித்துச் சென்ற தங்கத்தின் எடையை நீங்களே கணக்கிட்டுட்டுக்கொள்ளுங்கள்.



பராக்கிரம பாண்டியர் கட்டிய மேற்குக்கோபுரம் 

மாலிக்கபூர் கிளம்பியவுடன் வீரபாண்டியர் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். மீண்டும் சகோதரர்களிடையே போர் மூண்டது. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட சேர மன்னர்  ரவிவர்மர் குலசேகரர்  இருவரையும் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றிக்கொண்டார். அதற்குப் பின் பல குழப்பங்கள். ஒரு வழியாக பாண்டியர்களின் தாயாதியான ஜாடவர்மர் பராக்கிரம பாண்டியர் பொயு 1315ல் மதுரை ஆட்சிக்கட்டிலில் ஏறினார். நாட்டின் நிலைமையை ஓரளவு சீர்திருத்தி மதுரை கோவிலில் அடுத்த கட்ட திருப்பணிகளைத் தொடங்கினார். கிழக்கு கோபுரத்திற்கு இணையாக மேற்கு வாயிலில்  ஒரு ஒன்பது நிலைக் கோபுரத்தை எழுப்பினார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் மீண்டும் டெல்லியிலிருந்து தொல்லைகள். குஸ்ராவ் கான் என்பவர் 1316ல் படையெடுத்து மதுரையைச் சூறையாடினார். குஸ்ராவ் கானின் படைகள் மதுரைக்கு வருவதற்கு முன்பாகவே அதை விட்டு ஓடிவிட்ட பராக்கிரம பாண்டியர், மறைந்திருந்து கானின் மீது கொரில்ல தாக்குதல்களைத் தொடுத்தார். அந்தத் தாக்குதல்களையும் மதுரையில் அப்போது பெய்த தொடர்மழையையும் தாங்க முடியாமல், கிடைத்ததை எடுத்துக்கொண்டு குஸ்ராவ் கான் டெல்லி திரும்பினார். இதற்குள் அவர் விளைவித்த சேதம் கொஞ்சநஞ்சமல்ல. அவர் அந்தப்பக்கம் போனவுடன், பராக்கிரமபாண்டியர் மீண்டும் மதுரையைப் பிடித்துக்கொண்டு கோபுரத் திருப்பணியைத் தொடர்ந்தார். ஆனால் டெல்லி சுல்தான்கள் அவரைச் சும்மாவிடவில்லை.


                                                                                                                             அடுத்து


உசாத்துணைகள்
1. Madurai through the ages - Devakunjari
2. South India and her Muhammadan Invaders - S Krishnaswamy Iyangar






Tuesday 12 April 2016

சித்திரைத் திருவிழா - 3

சோழர்களின் சிற்றரசர்களாக இருக்க வேண்டிய நிலையிலும் கோவிலுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை பாண்டியர்கள் நிறுத்தவில்லை. கோவிலின் முன்மண்டபங்களையும், உள் பிரகாரங்களிலும் தெய்வங்களின் சன்னதிகளின் மேலும் 'காடக கோபுரம்' போன்ற சிறு கோபுரங்களையும் பாண்டிய மன்னர்கள்  கட்டினர். கோவிலின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தினர். ஏழு ஸ்தானீகர்கள் கோவில் நிர்வாக அதிகாரிகளாகச் செயல்பட்டனர். அவர்கள் 'மகர முத்திரை' ,'மகரக் கொடி', 'பொன் எழுத்தாணி', வ்ருஷப முத்திரை',  'நாக முத்திரை' ஆகிய இலச்சினைகளைப் பயன்படுத்தியதாக 'மதுரை ஸ்தானீகர் வரலாறு' என்ற நூல் கூறுகிறது.  கோவிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட குறிப்பேடாக 'ஶ்ரீதளம்' என்ற நூல் உருவாகப்பட்டது. இறைவனுக்கு இசைந்த தமிழ்பாமாலைகளான தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா ஆகியவைகளை இசைக்க இரு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர்.




பொயு 1190 வாக்கில் அரியணை ஏறிய முதலாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியர்  இத் திருப்பணிகளை மேலும் செம்மைப்படுத்த எண்ணி, ஆடி வீதியைச் சுற்றி ஒரு மதிலும், சொக்கநாதர் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு வாசலில், ஒரு பெரும் கோபுரம் ஒன்றையும் உருவாக்கத்திட்டமிட்டார். இதற்கான வேலைகளும் துவக்கப்பட்டன. ஆனால், இங்கு அரசியல் குறுக்கிட்டது. என்ன காரணத்தாலோ அதுவரை சோழ நாட்டிற்கு செலுத்தி வந்த கப்பத்தை, செலுத்த முடியாது என்று பாண்டியர் மறுத்துவிட்டார். அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த மூன்றாம் குலோத்துங்க சோழர் இதைக் கேட்டு வெகுண்டெழுந்து மதுரையின் மீது பெரும்படையுடன் வந்து போர் தொடுத்தார். மட்டியூர், கழிக்கோட்டை (இன்றைய சிவகங்கை மாவட்டங்களில் இந்த ஊர்கள் உள்ளன) ஆகிய இடங்களில் நடந்த போர்களில் பாண்டியப் படை பெரும்தோல்வி கண்டது. குலசேகர பாண்டியரும் அவரது தம்பி சுந்தர பாண்டியரும் மதுரையை விட்டு ஓடிவிட்டனர். மதுரைக்குள் வெற்றி வீரனாக நுழைந்த குலோத்துங்கர் அரண்மனையின் பல கட்டடங்களை அழித்து பாண்டியர்களின் அபிஷேக மண்டபத்தை தீக்கிரையாக்கினார். சோழ பாண்டியன் என்ற பெயரில் விஜயாபிஷேகமும், வீராபிஷேகமும் செய்து கொண்டு, நாட்டிற்குத் திரும்பினார். பிற்பாடு, பாண்டிய நாடு குலசேகரருக்கு மீண்டும் அளிக்கப்பட்டது, சிற்றரசராகத் தொடரவேண்டும் என்ற எச்சரிக்கையுடன். கிழக்குக் கோபுரம் கட்டும் பணி இந்தக் காரணங்களால் நின்று போய் விட்டது.


குலசேகரருக்கு பின் வந்த அவர் தம்பி முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், (1216), தன் அண்ணன் அடைந்த தோல்விக்கு பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டு, பெரிய படை ஒன்றைத் திரட்டி சோழ நாட்டின் மேல் போர் தொடுத்தார். சோழப் படைகளை பல இடங்களில் தோற்கடித்து சோழ நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி மதுரை மீண்டார். அங்கிருந்து கொண்டு வந்த செல்வங்களை வைத்து கோவில் திருப்பணி மீண்டும் துவக்கப்பட்டது. ஒன்பது நிலைக் கோபுரமாக கிழக்குக் கோபுரம் எழுந்தது. இன்றும் இந்தக் கோபுரம் அவர் பெயரால் சுந்தரபாண்டியன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கோபுரத் திருப்பணி அவர் காலத்திலும் முற்றுப் பெறவில்லை. மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு, இரண்டாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய அரசர்கள் மதுரையை ஆண்டனர். அதற்குப் பின் 1251ல் அரியணை ஏறிய ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியில் பாண்டியப் பேரரசு பெரும் வளர்ச்சியை அடைந்தது.

மேற்கே சேரநாடு, கிழக்கே சோழநாடு, தெற்கே இலங்கை ஆகிய இடங்களில் படையெடுத்துச் சென்று அந்த நாடுகளையெல்லாம் பாண்டியர்களின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார் சுந்தர பாண்டியர், வடக்கே படையெடுத்துச் சென்று ஹொய்சாளர்களையும், காஞ்சிபுரத்தை ஆண்டு தெலுங்குச் சோழ அரசர்களையும் வென்று, ஆந்திர மாநிலத்தின் காகதீய கணபதியையும் அவர் மகள் ருத்ரமாதேவியையும் (இவர் சரித்திரம்தான் அனுஷ்கா நடித்துப் படமாக வெளிவந்தது) போரில் தோல்வியுறச்செய்தார் அவர். இப்படி சகல திசைகளிலும் வெற்றிமேல் வெற்றியைக் குவித்ததால், 'எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்', சமஸ்த ஜகதாதார ஸோமகுலதிலக', 'எல்லாம் தலையானான்', 'கோதண்ட ராமன்' என்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக்கொண்டார்.



இப்போர் வெற்றிகளினால் கிடைத்த பெருஞ்செல்வத்தை கோவில் திருப்பணிகளுக்குச் செலவிட்டார் சுந்தரபாண்டியர். தில்லைச் சிதம்பர விமானத்திற்கும், திருவரங்கத்தின் கோபுரத்திற்கும் பொன் வேய்ந்தார். தன் முன்னோர்கள் எழுப்பிய மதுரைக் கிழக்குக் கோபுரத் திருப்பணியையும் நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். அவருக்கு அடுத்து வந்த முதலாம் மாறவர்மர் குலசேகர பாண்டியரும் பாண்டிய அரசை வெற்றிப்பாதையில் செலுத்தவே, மதுரையும், மீனாட்சி அம்மன் கோவிலும் இக்காலகட்டத்தில் செல்வத்தில் கொழித்து,  மகோன்னதமான நிலையை அடைந்தது.

ஆனால் காலம் எப்போதும் எதையும் ஒரே நிலையில் இருக்க விடுவதில்லை அல்லவா, அதுதான் இங்கும் நடந்தது. அது ...

                                                                                                                                             அடுத்து

படங்கள் : நன்றி  ஸ்டாலின் போட்டோகிராபி

உசாத்துணைகள்
1. தமிழகக் கோபுரக்கலை மரபு - முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
2. Madurai Through Ages - Devakunjari
3. பிற்கால சோழர் சரித்திரம்  - சதாசிவப் பண்டாரத்தார் 




சித்திரைத் திருவிழா - 2

மதுரை மீனாட்சியம்மையின் கோவில்  நம் நாட்டிலுள்ள புராதனமான கோவில்களில் ஒன்று. சைவர்களின் தலையாய கோவில்களில் ஒன்றாகவும் சாக்தர்களின் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுவது இந்தத் தலம். லலிதா திரிபுரசுந்தரியின் மந்திரியான ராஜமாதங்கியின் அம்சமாக மீனாட்சியம்மை போற்றப்படுகிறாள்.   இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த, கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்த கடற்கோள்களால் தங்கள் தலைநகரங்களை மாற்றிக்கொண்டு வந்த பாண்டியர்கள், ஒருவழியாக மதுரையில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொண்டு, வைகையின் தென்கரையில் இந்தக் கோவிலைக் கட்டினார். முதலில் சிறியதொரு கோவிலாகத்தான் இது அமைக்கப்பட்டது. சுந்தரேஸ்வரர் சன்னதி, மீனாட்சி சன்னதி, மற்றும் ஒரு சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்தக் கோவில். கோவிலைச் சுற்றி தாமரை வடிவில் மதுரை நகர் அமைக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு.

சங்க காலப் பாண்டியர் காலத்திற்குப் பிறகு மதுரை நகர் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பாண்டியன் கடுங்கோன் களப்பிரர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டு இடைக்காலப் பாண்டிய அரசை அமைத்தார். அதன் பின் இந்தக் கோவிலை சீர் படுத்தி கோவில் நிர்வாகத்தை 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்ற ஆதி சைவர்களிடம் ஒப்படைத்தனர் பாண்டியர்கள். ஆகம விதிகளின் படி நித்தியக் கால பூஜைகளும்,   திருவிழாக்களும்  முறைப்படி நடைபெற ஆரம்பித்தன. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும், குறிப்பிட்ட சில திருவிழாக்கள் புகழ் பெற்றவை. அந்தத் திருவிழா வைபவங்கள் நடை பெரும் இடங்களாக, விழாவின் போது சுவாமி, அம்மன் உலா வரும் இடங்களாக,  கோவிலைச் சுற்றியிருந்த ஒவ்வொரு தெருக்களும் இடம் பெற்று அந்தத் திருவிழா நடைபெறும் மாதங்களின் பெயர்கள் அந்தத் தெருக்களுக்கு வைக்கப்பட்டன.




(படம் : இரண்டாம் நாள் திருநாளில் பூத வாகனத்தில் சுவாமியும் அன்ன வாகனத்தில் அம்மனும் )


ஆடி மாதம் எண்ணெய்க்காப்பு உற்சவம், கோவிலை சுற்றி முதலில் அமைந்துள்ள ஆடிவீதியில் நடைபெற்றது, அதற்கு அடுத்த சித்திரை வீதியில் சித்திரம் மாதம் வஸந்த உற்சவம் நடைபெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக்  குறிக்க நடைபெறும் ஆவணித்திருவிழா, மூன்றாம் நிலையிலுள்ள ஆவணி மூல வீதியில் நடந்தது. ஆவணி மூலத்திருநாளில்தான் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட விளையாடலைக் காட்டி அருளினான். மாசி மாதம் தேர்த்திருவிழா, மாசி வீதிகளில் நடைபெற்றது. இது தவிர, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களிலும் நடப்பது போல் பங்குனி உத்திர நாளில் இறைவன்- இறைவி திருமண நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இப்படி ஆலய வழிபாடுகள் வழக்கம்போல் நடந்துகொண்டு இருக்கும்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்லவர்களுடனான ஓயாத போர்களால், வலுவிழந்த பாண்டியர்கள், தங்கள் நாட்டை சோழர்களிடம் இழந்தனர். ராஜேந்திர சோழர் மதுரையைக் காப்பாற்றி தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக்கொண்டார். அதன் பின் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பாண்டியர்கள் தங்கள் நாட்டை மீட்டுக்கொண்டாலும் சோழர்களில் சிற்றரசர்களாகவே காலங்கழிக்கவேண்டியிருந்தது
               
                                                                                                                                 அடுத்து



Monday 11 April 2016

சித்திரைத் திருவிழா - 1

இதோ கொடியேற்றத்துடன் இன்னுமொரு சித்திரைப் பெருவிழா துவங்கி விட்டது. அடுத்த பதினைந்து நாட்களுக்கு மதுரை களைகட்டிவிடும். மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியம்மையின் திருமணத்தை மீண்டும் ஒரு தடவை காணப்போகிறோம் என்ற ஆனந்தத்திலும்,  'ஆத்தைக் கண்டேனா அளகரைச் சேவிச்சேனா' என்று கிடப்பதை விட்டுவிட்டு திருமாலிருஞ்சோலையிலிருந்து வரும் கள்ளழகரைச் சேவிக்கப் போகிறோம் என்ற உந்துதலிலும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் இந்நாட்களில் ஒன்று கூடப்போகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளும் பெரியோர்களும் மதுரை நகரை நிறைக்கப்போகிறார்கள்.





மதுரை நகரைப் பொறுத்தவரை திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை, குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்க சித்திரைத் திருவிழாவிற்கு என்ன சிறப்பு?  தமிழ்நாட்டுக்கோவில்களில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று என்பதைத் தவிர, இந்த சித்திரைத் திருவிழாவிற்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. சைவ - வைணவ கோவில்களின் திருவிழாக்கள் ஒன்றாக, ஒன்றிணைந்து கொண்டாடப்படும் ஒரே விழா இதுவாகத்தான் இருக்கவேண்டும்.  மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவில் மட்டும் இல்லாமால், மதுரையில் உள்ள எல்லாக் கோவில்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்தத் திருவிழாவில் சம்பந்தப் படுத்தப்பட்டுள்ளன. இது எப்படி நடந்தது ?

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட மதுரைக் கோவிலில் ஆதி முதல் இப்பெருவிழா நடந்து கொண்டிருந்ததா அல்லது இடையில் உருவானதா? இதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம். நடுநடுவே மதுரை நகரின் வரலாற்றையும் அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் பாண்டிய / நாயக்க மன்னர்களின் வரலாற்றையும் கொஞ்சம் ஆராய வேண்டியிருக்கும். இந்த விவரங்களை  மனதில் கொண்டு மேலும்  தொடரலாம்.