Sunday 15 November 2020

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன. 

ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம். முன்னிரவு வேளை ஆகவே, மீன ராசி முழுவதுமாக மேற்கு வானில் மறைந்து விட்டிருக்கிறது. மேஷ ராசியும் கிட்டத்தட்ட மறைந்து விட்டது. ஆகவே கிழக்கு வானில் அவருக்குத் தெரிவது ஓரியன் நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள பிரகாசமான திருவாதிரை (betelgeuse) நட்சத்திரம்தான். (இதைப் பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன்)



அப்படியே கிழக்கில் பார்க்கிறார். அப்போது அங்கே விருச்சிக ராசி உதயமாகத் தொடங்கியிருக்கிறது. அதன் முகப்பில் உள்ள அனுஷ நட்சத்திரத்தைப் பார்க்கிறார். அதோ அதற்கடுத்து கேட்டையும் வந்துவிட்டது. இப்போது வானில் தெளிவாகத்தெரியும் நட்சத்திரங்களை எண்ணுகிறார். மேற்கில் திருவாதிரை, அடுத்து புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை ஆக மொத்தம் பதின்மூன்று நட்சத்திரங்கள். அப்போது அவர் மனதில் ஓர் எண்ணம். சேர மன்னனான யானைக்கண்சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறையின் உடல்நிலையைப் பற்றி சில தகவல்கள் அவருக்குக் கிட்டியிருந்தன. ஆகவே அதைப் பற்றிக் கவலைகொண்டு அவர் வானத்தை மீண்டும் பார்க்கிறார். அப்போது உச்சியில் சிம்ம ராசி, அதன் கடையிலிருந்த உத்தர நட்சத்திரம் மேற்கு நோக்கி நகரத்தொடங்கியிருந்தது. இப்போது கிழக்கில் விருச்சிகத்தின் கடையில் உள்ளதும் உத்திரத்திலிருந்து எட்டாவது நட்சத்திரமான  மூல நட்சத்திரமும் தெரியத்தொடங்கி விட்டது. அதே சமயம் மேற்கில் திருவாதிரைக்கு முன்னால், உத்திரத்திலிருந்து எட்டு நட்சத்திரங்கள் முன் உள்ள மிருகசீரிட நட்சத்திரம் கீழே இறங்கத்தொடங்கிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு எரிமீன் அடிவானத்தில் உள்ள அறுமீன்களான கார்த்திகை நட்சத்திரத்தை நோக்கிச் சென்றது. அது கிழக்கிலும் செல்லாமல் மேற்கிலும் செல்லாமல் வடகிழக்குத் திசையை நோக்கிச் சென்று வீழ்ந்தது. இதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் கூடலூர் கிழார். உடனே அவர் சேரன் தலைநகரான கருவூர் நோக்கிப் புறப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஊரை அடைந்த அவருக்கு அங்கும் தீய சகுனங்களே தென்பட்டன. பட்டத்து யானை தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது, முரசு கிழிந்து உருண்டுகிடந்தது, வெண்குடையின் காம்பு உடைந்திருந்தது, அரசனின் புரவி நிலை குலைந்ததிருந்தது. இதையெல்லாம் கண்ட அவர் அரசன் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டான் என்று வருந்தி இந்த நிகழ்வுகளை எல்லாம் புறநானூறு 229ம் பாடலில் பதிந்து வைத்தார். அதன் சில வரிகளின் விளக்கத்தைப் பார்ப்போம். 

ஆடு இயல் அழல் குட்டத்து - அழல் அதாவது கார்த்திகை முதல் பாதம் வரை கொண்ட மேஷ (ஆடு) ராசி மண்டலத்தில். கார்த்திகை நெருப்பு (அழல்) நட்சத்திரம் அதனால்தான் அக்னி நட்சத்திரம் கார்த்திகையில் சூரியன் சஞ்சரிக்கும் போது வருகிறது. 

பங்குனி உயர் அழுவத்து - பங்குனி மாதம் நடுப்பகுதியில்

ஆர் இருள் அரை இரவில் - இருள் அரையாக, அதாவது தொடங்கும் போது

முடப் பனையத்து வேர் முதலா - வளைந்த பனை போன்ற தோற்றமுடைய அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்து அதன் வேர் போல உள்ள கேட்டை மீன் முதல். இங்கே விருச்சிக ராசியில் ஆரம்பத்தில் பனை போன்ற அனுஷத்தையும் அடுத்து கேட்டை (Antares) நட்சத்திரத்தையும் காணலாம். வால் பகுதியில் தெரிவது மூல நட்சத்திரம்.



கடைக் குளத்துக் கயம் காய - கயம் அதாவது குளம் போன்ற நட்சத்திரக் கூட்டமான புனர்பூசத்திற்கு முன்னால் உள்ள திருவாதிரை வரையான 13 நட்சத்திரங்களும் ஒளிவீச  (புனர்பூசம் குளம் போன்று இருப்பதை இங்கே காணலாம்)



தலைநாள் மீன் நிலை திரிய - உச்சியில் உள்ள மீனான உத்திரம் நிலை மாற

நிலைநாள் மீன் அதன் எதிர் ஏர் தர - அதிலிருந்து எட்டாவதான மூலம் கீழ்த்திசையில் எழ

தொல்நாள் மீன் துறை படிய - உத்திரத்தின் முன்னுள்ள எட்டாம் நட்சத்திரமான மிருகசீரிடம் மேற்திசையில் மறைய

ஒரு மீன் பாசிச் செல்லாது ஊசி முன்னாது - ஒரு எரிமீன் பாசி, அதாவது கிழக்குத் திசை நோக்கிச் செல்லாமல் (சமஸ்கிருத ப்ராசீயின் தமிழ் வடிவமே பாசி, ப்ராசீ, தக்ஷிணாய, ப்ரதீச்சி, உதீச்சி என்று திசை வணக்க ஸ்லோகங்கள் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்), ஊசி அதாவது உதீச்சி என்ற வடதிசை நோக்கிச் செல்லாமல் நடுவே வடகிழக்காக

அளக்கர்த் திணை விளக்காக - கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்

கனை எரி பரப்ப கால் எதிர்ப்புப் பொங்கி  - கால் என்றால் காற்று. காற்றில் விண்கல் மோதுவதால் தீப்பற்றி அது எரிமீனாக வீழ்கிறது. அதைத்தான் குறிக்கிறார் புலவர். காற்றை எதிர்த்து கனல் எரி பரப்பி வீழ்ந்ததாம் அது. 

விழுந்தன்றால் விசும்பினானோ - விசும்பிலிருந்து வீழ்ந்தது. 

இதற்கான விளக்கமாக பலர், எரிமீன் விழுந்தது தீய சகுனம் ஆகவே அரசன் இறந்துபட்டான் என்று சுருக்கமாகச் சொல்லி முடிக்கின்றனர். ஆனால் புலவர் அதை மட்டும் சொல்லவில்லையே. மற்ற வானியல் செய்திகளை அதாவது வானத்தின் ராசி நிலைகள் நட்சத்திரங்களின் போக்குகள் என்று பல செய்திகளை ஏன் தெரிவிக்கிறார்? அங்குதான் பிரஸ்ன ஜோதிடம் வருகிறது. 

ஜோதிடத்தில் பலவகைகள் உண்டு என்று நமக்குத் தெரிந்திருக்கும். ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லும் ஆரூடம், நாடி ஜோதிடம், பிரஸ்னம் என்று பல பிரிவுகள். இதில் பிரஸ்ன ஜோதிடம் என்பது ஒரு கேள்வி மனதில் உருவாகும் நேரத்தில் உள்ள லக்னம், அப்போதைய நட்சத்திர கிரக நிலைகள், அந்த நேரத்தில் தோன்றும் சகுனம் ஆகியவற்றைக் கண்டு சொல்வது. லக்னம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிழக்கில் எந்த ராசி எழுகின்றதோ அந்த ராசியைக் குறிக்கும். உதாரணமாக சூரியன் உதிக்கும் நேரத்தில் உள்ள லக்கினம் அந்த மாதத்தில் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கின்றானோ அந்த லக்கினமாகும்.

கூடலூர் கிழார் மன்னனின் உடல் நிலையைப் பற்றி நினைக்கும்போது விருச்சிக லக்கினம் மேற்கில் எழுந்தது என்று பார்த்தோம். அது செவ்வாய்க்குள்ள லக்கினம். அந்த நேரத்தில் அவர் பார்த்த அனுஷ நட்சத்திரத்தின் அதிபதி சனி. இதையும் மேலும் பல நட்சத்திர நிலைகளையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போது எரிமீனும் விழுந்தது. இதையெல்லாம் வைத்தே மன்னன் உயிருக்கு ஆபத்து என்று கணித்தார் அவர். இந்தப் பிரஸ்ன ஜோதிடம் இன்றும் பிரபலமாக விளங்குவது சேர நாட்டில்தான் என்பதும் இங்கே நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியது. ஆகவே ஜோதிடத்தின் ஒரு பிரிவான பிரஸ்ன ஜோதிடத்தின் மூலம் செய்யப்பட்ட கணிப்பைப் பதிவு செய்வதே இந்தப் பாடல் என்று நாம் கொள்ளலாம். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் சந்திரன் உட்பட மற்ற கோள்மீன்களைப் பற்றிய தகவல்கள் எதையும் புலவர் இங்கே குறிப்பிடவில்லை என்பது. ஆகவே இது தேய்பிறைக்காலமாக இருக்கக்கூடும். மற்ற கிரகங்கள் அனைத்தும் விருச்சிகம் முதல் மேஷம் வரையிலான ராசிகளில் இருந்திருக்கலாம்.  இதன் மற்ற கூறுகளும் தகுந்த ஜோதிடர்களால் ஆராயப்பட்டால் இன்னும் பல உண்மைகள் நமக்குத் தெரியவரலாம். 

இதிலிருந்து நமக்குத் தெரியும் மற்ற ஒரு செய்தி இந்திய மரபான வானவியலிலும் ஜோதிடத்திலும் தமிழகமும் ஒரு அங்கமாக எப்போதும் இருந்தது என்பதே. இந்திய மரபிலிருந்து தமிழகத்தைப் பிரித்துப் பார்க்க முயல்வதெல்லாம் திரிபுவாதமே அன்றி வேறில்லை. 

பாடல் மாந்தஞ்சேரல் இரும்பொறையைப் பாடுவதால் பொயுமு முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். ஆகவே அப்போதே நமக்கு இவ்வளவு விரிவாக வானவியல் நிகழ்வுகளைப் பதியும் ஆற்றல் இருந்திருக்கிறது. 

அந்த முழுப்பாடல் கீழே உள்ளது. 

                                         ஆடு இயல் அழல் குட்டத்து

                         ஆர்  இருள்  அரை இரவில்,


                         முடப் பனையத்து வேர் முதலாக்

                         கடைக் குளத்துக்  கயம்  காய,

                         பங்குனி உயர் அழுவத்துத்

                         தலைநாள் மீன் நிலை திரிய,

                         நிலைநாள் மீன் அதன்எதிர் ஏர்தர,

                         தொல்நாள் மீன் துறைபடிய,

                         பாசிச் செல்லாது ஊசி முன்னாது,

                         அளக்கர்த் திணை விளக்காகக்

                         கனைஎரி பரப்ப, கால்எதிர்பு பொங்கி

                         ஒருமீன் விழுந்தன்றால், விசும்பினானே !

                       

                          அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர்

                         பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்

                         நோயிலன் ஆயின் நன்று ! மற்று இல்லென

                         அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,

                         அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;

                         மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்

                         திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்

                         காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்

                         கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,

                         மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்

                         ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்

                         தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ !

                         பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு

                         அளந்துகொடை அறியா ஈகை,

                         மணிவரை அன்ன மாஅ யோனே !





Friday 16 October 2020

தமிழகத்தில் சக்தி வழிபாட்டின் தொன்மை

தமிழ்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் தற்போது கீழடி ஒன்றே பிரதானமாக முன்னிருத்தப் படுகிறது. மற்றவையெல்லாம் ஏதோ காரணமாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி அதிகமாகப் பிரபலமாகாத கல்வெட்டு ஒன்றினைப் பற்றினைப் பற்றி இந்த நவராத்திரி நன்னாளில் பார்ப்போம். 

தமிழகத்தில் சக்தி வழிபாட்டினைப் பற்றி அறிய ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியத்திலிருந்து தொடங்கி சிலப்பதிகாரம் வரை பல்வேறு வடிவங்களில் சக்தி போற்றப்படுகிறாள். ஆனால் இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏதேனும் உண்டா என்ற கேள்வி பலகாலமாக இருந்து வந்தது. அதற்கு விடையாகக் கிடைத்தது திருப்பரங்குன்றத்தில் கண்டறியப்பட்ட ஒரு கல்வெட்டு. அதைப் பார்ப்பதற்கு முன்னால் திருப்பரங்குன்றம் மலைக்கோவிலைப் பற்றிய ஒரு சிறிய புராணக்கதை. இதைப் படிக்க விரும்பாதவர்கள் இரண்டு பாரா தாவிவிடவும். 

திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் மிகப்பழமையான இடங்களில் ஒன்று. மதுரையின் புறநகர்ப்பகுதியாக கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஊர் இருந்திருக்கிறது. முருகப்பெருமானின் முதல்படை வீடாகக் குறிப்பிடப்படும் இந்த ஊரைப் பற்றி சங்க இலக்கியச் சான்றுகள் அதிகம். அதிகம் பிரபலமான அடிவாரக் குடைவரைக் கோவிலைத் தவிர, இந்தக் குன்றின் மேலே காசி விசுவநாதார் கோவில் ஒன்றும் உண்டு. அது தொடர்பான கதைதான் இது. மதுரைச் சங்கத்தின் தலைமைப் புலவரான நக்கீரர் சிவபக்தர். திருப்பரங்குன்றம் மலையை அடுத்த சரவணப்பெய்கையின் கரையில் தவம் செய்யும் வழக்கம் அவருக்கு உண்டு. அப்படி தினமும் தன் தவத்தைக் காலையில் முடித்துக்கொண்டு இலிங்க வடிவமான மலையைச் சுற்றிவிட்டு, அங்கே குடிகொண்டிருக்கும் முருகனைத் தரிசிக்காமல் சென்றுவிடுவார். இதைக் கண்ட முருகன் அவரிடம் விளையாட நினைத்தான். பொய்யாமொழிப் புலவர் போல தகப்பனை மட்டும் வழிபட்டு தன்னைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும் நக்கீரரை ஆட்கொள்ள நினைத்தான் முருகன். அதனால் தன்னுடைய கணங்களான அண்டராபரணரையும் உக்கிரமூர்த்தியையும் சரவணப்பெய்கைக்கு அனுப்பி வைத்தான். (இவர்கள் இருவரையும் திருப்பரங்குன்றம் கோவிலில் கம்பத்தடி மண்டபத்திலிருந்து ஏறும் படிகளின் இருபுறமும் காணலாம்) 

இரு கணங்களும் நக்கீரர் தவம் செய்யும் இடத்திற்குச் சென்றனர். அவரின் தவ வலிமையால் அவரை நெருங்க முடியாமல் இருவரும் தவித்தனர். அப்போது அண்டராபரணர், மரத்திலிருந்து ஒரு இலையைக் கிள்ளி அதன் ஒரு பகுதியை நீரிலும் மற்றொன்றை நிலத்திலும் போட்டார். நீரிலுள்ளது மீனாகவும் நிலத்திலுள்ளது கொக்காகவும் மாறி இரண்டும் சண்டையிட ஆரம்பித்தன. இதனால் நக்கீரரின் தவம் கலைந்தது. அந்த தருணத்தைப் பயன்படுத்தி இரண்டு கணங்களும் அவரைச் சிறைப்படுத்தி மலைமேல் கொண்டு சென்று அடைத்துவைத்துவிட்டனர். உண்மையை உணர்ந்த நக்கீரர் முருகனைப் புகழ்ந்து திருமுருகாற்றுப்படை பாடினார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு அருள் செய்து அவர் முன் காட்சியளித்தான். நக்கீரர் வேண்டியபடி காசி விஸ்வநாத லிங்கத்தையும் கங்கையையும் அங்கேயே வரவழைத்து அவருக்கு காசி சென்ற பலனையும் வழங்கினான். 



இந்தக் கோவில்தான் மலை மீது காசிவிஸ்வநாதர் கோவிலாக இப்போது உள்ளது. அருகில் கங்கை சுனையாக உள்ளது. முழுக்கப் பாறையான இந்த மலையில், அந்தச் சுனையில் பெரும்பாலும் நீர் நிரம்பி இருப்பது ஓர் ஆச்சரியம். அந்தச் சுனை கொஞ்சம் வற்றியபோது அங்கே சென்ற சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுதான் இந்தக் கல்வெட்டு. அதில் என்ன எழுதியிருந்தது என்றால், தமிழ் பிராமி எழுத்துகளில் 


"மூநாகரா மூசகதி"   என்று எழுதியிருந்தது. இந்த மலையில் பின்புறத்தில் சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. அதைவைத்து இது மூநாகாரா என்ற சமண முனிவர் மோட்சகதி அடைந்ததைக் குறிக்கிறது என்று சமண லாபியைச் சேர்ந்தவர்கள் திரிக்க ஆரம்பித்தனர்.  ஆனால் தமிழ் பிராமியைப் பொருத்தவரை 'மூ' வின் வடிவம் வேறு 'மோ' வேறு. தவிர சமணத்தில் மோட்ச கதி அடைந்ததையெல்லாம் குறிப்பிடுவதில்லை. ஆகவே அது தவறான கருத்து என்பதைப் பலர் உறுதி செய்தனர். அதன்பின் இந்தச் சொற்களை ஆராய்ந்ததில், பண்டைக்காலத்தில் தமிழ் பிராமியின் எழுத்தமைதியைப் பொருத்தவரை குறில் நெடிலுக்கான வேறுபாடு பல இடங்களில் பேணப்படுவதில்லை (இதனைப் பிற்காலக் கல்வெட்டுகளில் கூடக் காணலாம்) என்ற காரணத்தாலும், மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் பின்னாளில்தான் வந்தது என்ற காரணத்தாலும் (ஐராவதம் மகாதேவனின் புள்ளி தந்த பிள்ளையார் நினைவிருக்கலாம்), இந்தக் கல்வெட்டை 'மூநகர மூசக்தி' என்று வாசித்தனர். இதன் பொருள் என்ன



மூ என்ற மூத்த. மூ நகரா - மூத்த நகரத்தின் மூ சக்தி அதாவது மூத்த சக்தி. மூத்த நகரமான மதுரையில் குடிகொண்டிருக்கும் மூத்த சக்தி என்பதே இதன் உட்பொருளாகும். பொயுமு 200ம் ஆண்டிற்குப் பிறகே தமிழ் பிராமி எழுத்துகளில் புள்ளி வைக்கும் வழக்கம் வந்ததால், இந்தக் கல்வெட்டின் ஆண்டு பொயுமு 200க்கு முன்பு இருக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த எழுத்துகளில் அருகில் உள்ள சூலமும் இங்கே கவனிக்கத் தகுந்தது. பாண்டியர் நாணயங்களிலும் இதுபோன்ற சூலம் இருப்பதைக் காணலாம். அது பாண்டியர்களின் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனைக் குறிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. ஆகவே மதுரையில் குடிகொண்ட அன்னை மீனாட்சியையே இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இப்படி மதுரையின் தொன்மையையும் அதன் தெய்வமான மீனாட்சி அம்மனின் தொன்மையும் ஒருங்கே குறிப்பிடும் இந்தக் கல்வெட்டைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகாவிட்டாலும், சக்தி வழிபாட்டின் தொன்மையைப் போற்றும் தமிழகத்தின் ஆகப்பழைய கல்வெட்டுகளில் ஒன்றாக இது உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 

படம் : நன்றி - தி இந்து  



Sunday 20 September 2020

ராஜராஜரின் மெய்க்கீர்த்தி - புதிய தகவல்கள்

முதலில் ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையை இங்கே படித்துவிடுங்கள். சிறிய மெய்க்கீர்த்திதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல, ராஜராஜர் பெற்ற பெருவெற்றிகளைப் பட்டியலிடுகிறது இது. 



இப்படி வெற்றிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ராஜராஜரின் ஆரம்பப் போர்களைப் பற்றி குழப்பமே நிலவுகிறது. அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதைப் போல ஆரம்ப வரியில் உள்ள காந்தளூர்ச்சாலை எது என்பதைப் பற்றிய சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை.  ராஜராஜரின் வெற்றிகளைக் குறிப்பிடும் இன்னொரு முக்கிய ஆவணமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளோ இந்தக் காந்தளூர்ச்சாலையைப் பற்றிக் கூறாமல் பாண்டியன் அமரபுஜங்கனுக்கு எதிராக அவர் அடைந்த வெற்றியோடு ராஜராஜனின் திக்விஜயத்தை ஆரம்பிக்கிறது. 


இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அண்மையில் நான் வாசித்த கல்வெட்டு ஒன்று ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை அளித்தது. கல்வெட்டு என்னவோ புதிதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியகுளம் என்று ஒரு ஏரி உண்டு. இரண்டு பருவமழைக்காலங்களிலும் மழைப்பொழிவு உள்ள இந்த மாவட்டத்தில், இந்த ஏரி அடிக்கடி உடைப்பெடுத்துக்கொண்டது. அதனால் மக்கள் ராஜராஜனிடம் முறையிட, அவனும் அந்த ஊர் கோவிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டிருந்த நிலத்தின் ஒரு பகுதியை இந்த ஏரிக்கு அணை எடுப்பதற்காக ஊர் மக்களிடம் ஒப்படைத்தான். அப்படியே அணை எடுக்கப்பட்டு உடைப்பெடுக்கும் பிரச்சனை தீர்ந்தது. இதை அந்த ஏரியின் கரையில் உள்ள ஒரு கல்லில் கல்வெட்டாகப் பொறித்துக் கொடுத்திருக்கிறான் ராஜராஜன். அந்தக் கல்வெட்டின் பகுதிகள் இங்கே


இது வழக்கமாகச் செய்கிற விஷயம்தான் என்றாலும் இந்தக் கல்வெட்டின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ராஜராஜனின் மெய்க்கீர்த்தி ஒரு புதிய விஷயத்தைக் கொண்டுள்ளது. மெய்க்கீர்த்திகள் எல்லாக் கல்வெட்டுகளின் ஆரம்பத்திலும் குறிப்பிடப்படுவது வழக்கம்தான் என்றாலும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரிகள் மற்ற கல்வெட்டின் வரிகளோடு சிறிதே மாறுபட்டுள்ளன. அது என்னவென்றால் கங்கபாடியும், நுளம்பபாடியும், தடிகைபாடியும் என்ற வார்த்தைகளுக்குப் பிறகு வரும் “குடமலை நாட்டு கோவில் பள்ளியகமும்” என்ற வார்த்தைகள்தான். இது வேறெங்கும் காணப்படுவதாகத் தெரியவில்லை. குடமலை நாடும் என்பதோடு அந்த வெற்றிச் செய்தி முடிந்துவிடும். இங்கே குடமலை நாட்டு கோவில் பள்ளியகம் என்று குறிப்பிடப்படும் பகுதி எது? 


பள்ளி என்றால் நகரம், அரண்மனை என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ஆக கோவில் நகரம் ஒன்றை ராஜராஜன் வென்றிருக்கிறான் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட கோவில் நகர் எது?

இதற்கு விடைகாண ராஜராஜனின் ஆரம்ப வெற்றிகளைக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் செய்திகளைப் புரட்டிப் பார்த்தேன். சோழர்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதிய பண்டாரத்தாரும் நீலகண்ட சாஸ்திரிகளும் இந்த வெற்றிகளைப் பொருத்தவரையில் பல இடங்களில் வேறுபடுகின்றனர். பண்டாரத்தார் சேர மன்னனின் மீது ராஜராஜன் படையெடுத்து அடைந்த வெற்றிதான் காந்தளூர்ச்சாலை என்கிறார். ஆனால் இது தவறான செய்தி என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் இந்தச் சாலை இருந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஆய் குல வேளிர். அவர்கள் பாண்டியர்களோடு நெருங்கிய உறவு பூண்டவர்கள். தவிர இந்தச் செப்பேடு குறிப்பிடும் விழிஞம் துறைமுகம் பொயு 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குள் வந்துவிட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே பாண்டியன் அமரபுஜங்கனை எதிர்த்து வெற்றி பெற்ற போர்களில் ஒன்றாகவே விழிஞம் வெற்றி இருந்திருக்கிறது. அப்போது அவனுக்குத் துணை வந்த ஆய் குல மன்னர்களை வெல்லவே காந்தளூர்ச்சாலை அழிக்கப்பட்டது என்று நிறுவியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். 

ராஜரானுடைய சமகாலத்தவனான சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனின் தென் எல்லையாக கோட்டயம் அருகில் உள்ள பந்தனம் திட்டாதான் இருந்தது என்பதால் இன்னும் தெற்கில் உள்ள காந்தளூர்ச்சாலை சேரனுக்கு எதிரான போரில் அழிக்கப்பட்டது என்பது சரியானதல்ல என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அப்படியிருந்தால் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் பாண்டியனையும் சேரனையும் வென்று கொண்டு வந்த பண்டாரம் என்று குறிப்பிடப்படுவது எந்த வெற்றிகள் ? சேரனை எதிர்த்துப் போர் எப்போது நடந்தது என்று ஆராயவேண்டியிருக்கிறது. 

இதற்கான விடையை பிற்காலத்தில் வந்த ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் ஒட்டக்கூத்தரின் மூவர் உலாவும் அளிக்கின்றன.  கலிங்கத்துப் பரணி 

சதய நாள் விழா உதியர் மண்டிலம்
தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதயபானு ஒத்து உதகை வென்றகோன்

என்று ராஜராஜனைப் புகழ்கிறது. கூத்தர்பெருமானோ

தூதர்க்காப் பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோன்

என்று விக்கிரமசோழன் உலாவிலும் 

ஏறிப்பகலொன்றில் எச்சுரமும் போய் உதகை
நூறித் தன் தூதனை நோக்கினான்

என்று இரண்டாம் குலோத்துங்கன் உலாவிலும் 

மதகயத்தால் ஈரொன்பது சுரமு மட்டித்து
உதகையைத் தீயுய்த்த உரவோன்

என்று இரண்டாம் ராஜராஜன் உலாவிலும் முதலாம் ராஜராஜனைப் புகழ்கிறார். 

இங்கே கூறப்படும் நிகழ்வு என்ன என்று பார்த்தால், ராஜராஜன் அனுப்பிய தூதனை என்ன காரணத்தாலோ சேரன் பாஸ்கர ரவிவர்மன் சிறையில் அடைத்துவிட்டான். இந்த அடாத செயலைத் தண்டிப்பதற்காக உதகை மீது படையெடுத்து அவனை வென்றான் ராஜராஜன் என்று இரு புலவர்களும் கூறுகின்றனர். இந்த உதகை என்பது நாகர்கோவில் அருகில் உள்ளது என்று பண்டாரத்தார் குறிப்பிடுவது தவறான செய்தி. ஏற்கனவே தாம் கைப்பற்றிய பகுதிகளில் மீண்டும் ஏன் ராஜராஜன் படையெடுக்க வேண்டும். அங்கே எப்படி தூதனைச் சிறை செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. தவிர இந்தப் பகுதிகள் சேரநாட்டு எல்லைக்குத் தெற்கில் இருந்தன என்று ஏற்கனவே பார்த்தோம்.

இன்னும் சிலர் இந்த உதகை சேரர் தலைநகரான மகோதை (கொடுங்கோளூர்) என்று கூறுகின்றனர். இதற்குச் சாத்தியம் இருந்தாலும் மாற்று நாட்டு மன்னன்  தலைநகரம் வரை சென்று தான் பெற்ற வெற்றியை ஏன் தன்னுடைய மெய்க்கீர்த்தியில் ராஜராஜன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவனோடு சேர்ந்து பல போர்களில் ஈடுபட்ட அவன் மகனான ராஜேந்திரனும் இந்த வெற்றியைப் பற்றி தன்னுடைய செப்பேடுகளில் (திருவாலங்காடு, ஆனைமங்கலம் போன்ற) ஏன் குறிப்பிடவில்லை என்பதும் முக்கியமான கேள்வி. அடுத்ததாக, கூத்தர் பதினெட்டு (ஈரொன்பது) காடுகளை அழித்து ராஜராஜன் உதகையை வெற்றிகொண்டான் என்று கூறுகிறார். மகோதைக்குச் செல்ல ஏன் பதினெட்டு காடுகளை அழிக்கவேண்டும் ? பாலக்காட்டுக் கணவாய் வழியாக எளிதாக சேரநாட்டில் நுழைந்துவிடலாமே. 

இப்போது சாஸ்திரியார் என்ன கூறுகிறார் என்று பார்த்தால், இந்த உதகை என்பது குடகு நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு இடம் என்று கூறுகிறார் (சோழர்கள் ப-230). இந்த இடம் சேரமன்னனின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. அதற்கு அருகில்தான் தற்போது உதகமண்டலம் என்னும் ஊட்டி நகரும் அமைந்திருக்கிறது. ஆகவே உதகைக் கோட்டை குடகு மலைக்கு அருகில்தான் இருந்திருக்கிறது. அங்கே தான் ராஜராஜன் அனுப்பிய தூதனும் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறான். அடர்ந்த காடுகள் உள்ள இந்தப் பகுதியில்தான் பதினெட்டுக் காடுகளை அழித்து உதகையை வெற்றிகொண்டதாக மூவருலா கூறுகிறது. இதுவே குடமலை வெற்றியாகும். அப்போது குடமலைக் கோவில் பள்ளியகம் எங்கே இருக்கிறது?   குடகு மண்டலப் பகுதியில் வயநாட்டிற்கு அருகில் திருநெல்லி என்ற பிரசித்தி பெற்ற தலம் இருக்கிறது. பாஸ்கர ரவிவர்மனின் காலத்தில் மிகச்சிறந்த நகராக இது விளங்கியிருக்கிறது. இந்தத் தலத்திற்கு பாஸ்கர ரவிவர்மன் விடுத்த நிவந்தங்கள் இரண்டு செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்த கோவிலும் நகரமும் சேர்ந்த இந்த இடமே கோவில் பள்ளியகம் என்று அழைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த வெற்றியே குடமலை நாட்டுக் கோவில் பள்ளியகம் என்று கன்னியாகுமரி பெரியகுளம் மெய்க்கீர்த்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. 


சேரமான் பாஸ்கர ரவிவர்மனுக்கு எதிராக தன்னுடைய தூதனைக் காப்பதற்கு ராஜராஜன் போர்புரிந்த இடம் உதகைக் கோட்டையும் இந்த திருநல்லித் தலமும் ஆகும். பிற்பாடு ராஜேந்திரனுடைய தலைமையில் மீண்டும் குடகு நாட்டிற்குப் படையெடுத்து வந்து கொங்காள்வானை வென்றதெல்லாம் தனிக்கதை. இப்படி ராஜராஜன் பெற்ற ஒரு முக்கிய வெற்றியை சத்தமில்லாமல் தன்னுள்ளே ஒளித்து வைத்திருக்கிறது இந்தக் கல்வெட்டு. 

உசாத்துணைகள்

1. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

2. பிற்காலச் சோழர்கள் - சதாசிவப் பண்டாரத்தார்

3. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்

4. மூவருலா - ஒட்டக்கூத்தர்

5. திருநெல்லி தல வரலாறு - http://thirunellitemple.com/history.php

6. கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் - தொகுதி 6

7. South Indian Inscriptions Volume 2

படங்கள் நன்றி : சதீஷ் பாதிரிமங்கலம் 







Friday 4 September 2020

கிண்ணிமங்கலம் தெரிவிக்கும் வரலாற்றுச் செய்திகள்

கீழடியை விட கிண்ணிமங்கல ஆய்வுகள் முக்கியமானது, அது புதிய வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தப்போகிறது என்று பலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அது இப்போது உண்மையாகிவிட்டது (அது அவர்கள் நினைத்தபடிதானா என்பது வேறு விஷயம்). என்ன மாதிரியான செய்திகள் இப்போது வெளிவந்திருக்கின்றன என்பதை ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம். 

முதலில் கிண்ணிமங்கலம். மதுரைக்கு அருகே, உசிலம்பட்டி சாலையில் வடபழஞ்சியை அடுத்து உள்ள கிராமம் இது. இந்த கிராமத்தில் ஏகநாத சுவாமியின் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஜூலை மாதம் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு துண்டுக் கல் தூணும் சில பொருட்களும் கிடைத்தன. அந்தத் துண்டுக் கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களில் "எகன் ஆதன் கோட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுக் கல்வெட்டு இந்தப் படத்தில் உள்ளது.


இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், தமிழ் பிராமி எழுத்துகளில் 'எ' என்ற எழுத்து |> போன்று முக்கோணத்தைத் திருப்பி வைத்தது போல இருக்கும். இதன் நடுவே ஒரு புள்ளி வைத்துவிட்டால் அது 'ஏ'காரமாக ஆகிவிடும். காலப்போக்கில் இந்தப் புள்ளி தேய்ந்து இருக்கலாம் என்பதை வைத்து இதை 'ஏகன் ஆதன் கோட்டம்' என்று படியெடுத்தனர். எழுத்தமைதியை வைத்து இந்தக் கல்வெட்டின் காலம் பொயுமு 2-1 நூற்றாண்டுகளாக இருக்கலாம் என்பதையும் கணித்தனர்.  ஆதன் என்பதற்குத் தமிழில் தலைவன் என்று பொருள். ஏகம் என்பது வடமொழியில் ‘ஒன்று’ என்பதைக் குறிக்கும். கோட்டம் என்பது இறைவன் உறையும் இடமான கோவில். 'கோழிச் சேவல் கொடியோன் கோட்டம்' என்று சிலப்பதிகாரம் கூறுவதை அறிந்திருப்போம்.  ஆக, ஏகன் ஆதன் கோட்டம் என்பது, ஒரே தலைவனாக இந்த மடத்தைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படும் இறைவன் கோவில் உறுதியாயிற்று. 

அந்த இறைவன் யார் என்பதை அறிய, இந்த ஆய்வில் கிடைத்த மிக முக்கியமான பொருளான சிவலிங்கம் உதவி செய்தது. இன்றும் சைவ மடமாக இருக்கும் இந்தக் கோவில் சிவன் கோவிலாக இருந்ததை இங்கே கிடைத்த சிவலிங்கம் தெளிவுபடுத்தியது. 





இதை மேலும் வலுப்படுத்தியது அங்கே கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று. அதில் 'இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறையிலி என்றால் வரியில்லாத நிலம். ‘ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி’ என்று சொல்லப்படும் இந்தப் பள்ளிப்படை மண் தளிக்கு, அதாவது மண்ணால் அமைக்கப்பட்ட இந்தக் கோவிலுக்கு வரியில்லா நிலம் அளித்திருக்கிறார்கள். இந்தக் கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணித்தார்கள். அக்காலத்தில் குடைவரைக்கோவில்களும் மண்ணால் ஆன கோவில்களுமே பெருமளவு இருந்தன. அப்போதுதான் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கற்றளிகள், அதாவது கல் கோவில்கள் பெருமளவு கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலம். இங்கே பள்ளிப்படை என்று குறிப்பிடப்பட்டதால், இது பள்ளிப்படைக் கோவில் என்பதும் தெளிவாயிற்று. பள்ளிப்படை என்பது சிவ தீக்ஷை பெற்றவர்களின் சமாதியில் கட்டப்படும் கோவில். அந்தச் சமாதியின் மேலே சிவலிங்கத்தை வைத்துப் பூஜிப்பது வழக்கம். ஆகவே இது பள்ளிப்படையான ஒரு மண் கோவிலாக இருந்தது என்பது தெளிவாயிற்று. ஆனால், இதற்கு இறையிலி நிலம் 'ஈந்தது' யார் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. 

அதன்பின் தமிழக தொல்லியல் துறை மேலும் ஆய்வுகள் (19-08-2020) மேற்கொண்டு, நேற்று ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேற்சொன்ன இரு கண்டுபிடிப்புகளையும் உறுதி செய்த அறிக்கை மேலும் பல தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அவை என்ன ?


வட்டெழுத்துக் கல்வெட்டு பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதிசெய்யப்பட்டது. பொயு 8ம் நூற்றாண்டு மதுரை இடைக்காலப் பாண்டியர் ஆட்சியில் இருந்தது. அவர்களில் ஒரு அரசன் தான் இந்த இறையிலி தானத்தை அளித்திருக்கவேண்டும். அவன் யார் என்ற கேள்விக்கு அங்கே கண்டெடுக்கப்பட்ட பொயு 1722ஐச் சேர்ந்த விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் கல்வெட்டு விடையளித்தது. இந்தமுறை நடைபெற்ற ஆய்வில் வெளிப்பட்ட இந்த பலகைக் கல்வெட்டு 43 வரிகளைக் கொண்டது. மதுரை நாயக்கர் பரம்பரையில் 12ம் ஆட்சியாளர் இந்த விஜயரங்க சொக்கநாதர். இராணி மங்கம்மாளின் பேரர்.  இவர் ஏற்கனவே பாண்டியர்களால் வழங்கப்பட்ட இறையிலியை உறுதிசெய்து சாசனம் செய்துகொடுத்திருக்கிறார். எப்படி வேள்விக்குடிச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மானியங்களை இடைக்காலப் பாண்டியர் காலத்தில் மீண்டும் சாசனம் செய்து கொடுத்ததோ, எப்படி ராஜராஜன் கொடுத்த அறத்தை அவன் மைந்தன் ராஜேந்திரன் ஆனைமங்கலச் செப்பேடுகளாக மீள் சாசனம் செய்து கொடுத்தானோ, அப்படி மீள்சாசனம் செய்து கொடுக்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு இது. அதன் முக்கியமான சில வரிகளைப் பார்ப்போம். 

..... புனர்பூச சுபதியாக சுபதினத்தில்

சமூகம் மீனாட்சி நாயக்கரவர்கள் ஆகோசேத்திரத்தில்

மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி சன்

னதியில் கிண்ணிமங்கலம் ஶ்ரீ லஶ்ரீ

ஏகநாத குருமடத்தார்க்கு தன்ம சிலா சாசனப் பட்டயம்

எழுதிக்குடுத்தபடிக்கு 

இந்தச் சாசனம் மீனாட்சியம்மன் கோவிலில் செய்யப்பட்டிருக்கிறது. மீனாட்சியின் பரமபக்தர்களான நாயக்கர்கள் சைவ மடத்திற்கு அங்கே மானியம் அளித்ததில் வியப்பில்லை. அடுத்து



....இம்மடத்தார்க்கு பாத்தியப்பட்ட

நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு

திரல் விடையாகவும் நெடுஞ்சடையன் பரா

ந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்ட

டபடி குடும்பத்தாரின் வாரிசுகளால்

ஆதாயம் கையாடிக் கொண்டு இவர்களின்

குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம்

செய்து வரவும்

மேற்குறிப்பிட்ட வரிகளின் மூலம் இந்தச் சாசனத்தை முதலில் செய்து தந்தது பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் என்று தெளிவாகத் தெரிகிறது. நெடுஞ்சடையன் 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னன். அவன் ஆட்சிக்காலத்தில்தான் திருப்பரங்குன்றம், ஆனைமலை போன்ற பல குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டு அவற்றிற்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. வேள்விக்குடி, ஶ்ரீவரமங்கலம் போன்ற செப்பேடுகளை அளித்தவனும் அவனே. இந்தப் பள்ளிப்படைக் கோவிலுக்கு இறையிலியாக மானியம் அளித்ததும் அந்த மன்னனே என்பது தெளிவாகியது. மேலும்

......பரம்பரை சம்பி

ரதாயப்படி பள்ளிப்படை சமாது வைத்து வ

ணங்கி வரவும் 

என்ற வரிகள் இந்த மடத்தைச் சேர்ந்த குருக்களின் சமாதிகள் இங்கே வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கிறது. பெரிய மடங்களில், அந்த மடத்தைச் சேர்ந்த ஆச்சாரியர்கள், ஆதீனங்கள், குருமார்களின் சமாதிகள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். இதுவும் அதே போன்ற வழக்கத்தை அனுசரிக்கும் மடம் போலும். 

இடைக்காலப்  பாண்டியர்கள் தங்கள் முன்னோர்களான பாண்டியர்கள் கொடுத்த அறத்தையும், ராஜேந்திரன் தன் தகப்பன் கொடுத்த அறத்தையும் மீள் சாசனம் செய்ததில் வியப்பில்லை. ஆனால், நாயக்க மன்னர் ஒருவர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டியர் ஒருவர் செய்து கொடுத்த அறத்தை மீள்சாசனம் செய்து கொடுத்ததுதான் போற்றத்தகுந்த விஷயம். 

மேலும் இந்த நாயக்கர் கல்வெட்டு

....இத்தன்மத்துக்கு

விகாதம் செய்த பேர் சிவசன்னதியில் விளக்கை 

நிறுத்தியவன் போற பாவத்துக்குள்ளாவான்

என்றும் எச்சரிக்கிறது. ஆகவே சிவ அபராதத்திற்கு ஈடானது இந்த மடத்திற்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது என்று கூறுகிறது இந்தக் கல்வெட்டு.

இந்தக் கல்வெட்டைத் தவிர 1942ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சிவ, நந்தி அடையாளங்கள் இது சைவப் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதை மேலும் உறுதி செய்கிறது. 



ஆகவே, இது வரை நடந்த ஆய்வுகளிலிருந்து நாம் தெரிந்து  கொள்ளும் தகவல்கள் சுருக்கமாக : 

- தமிழகத்தின் மிகப் பழமையான, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ மடம் இங்கே இயங்கி வந்திருக்கிறது. அந்த மடத்தின் குருமார்களின் பள்ளிப்படைக் கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது. 

- இந்த மடத்திற்கு பாண்டியன் நெடுஞ்சடையன் இறையிலியாக நில மானியத்தை அளித்திருக்கிறான் (பொயு 8ம் நூற்றாண்டு)  

- அந்த மானியத்தை 18ம் நூற்றாண்டில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் உறுதிசெய்து மீள்சாசனம் செய்து கொடுத்திருக்கிறார். 

நம்முடைய சானதன தருமமும் சிவலிங்க வழிபாடும் மகான்களின் சமாதியை பள்ளிப்படைக் கோவிலாக அமைத்துப் போற்றும் வழக்கமும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்ற உண்மையை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறது இந்தக் கிண்ணிமங்கல ஆய்வுகள்

விஷயம் இப்படி இருக்க, இந்தச் செய்திகளையெல்லாம் வெளியிடாமல் 'சாருக்கு ஒரு ஊத்தப்பம்' என்பது போல 'கிண்ணிமங்கலத்தில் நீத்தார் நினைவுத்தூண் கண்டுபிடிப்பு' என்று ஒரு வரியோடு ஊடகங்கள் நிறுத்திக்கொண்டுவிட்டன.   



படங்கள் : நன்றி தொல்லியல் துறை  





Wednesday 8 July 2020

உவணச் சேவல் நியமம்

உலகில் நீண்ட நெடு வரலாற்றை உடைய தொல் நகரங்களில் ஒன்று மதுரை. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான நகர் இது. நகரின் எல்லைகள் அவ்வப்போது விரிந்தும் சுருங்கியும் வந்திருந்தாலும், அதன் மையப்பகுதி அதிகமாக மாறவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரில் இரு ஆலயங்கள் தனிச்சிறப்புடையனவாகத் திகழ்ந்தன. அதில் 'மழுவாள் நெடியோன்' என்று மதுரைக் காஞ்சி போற்றும் ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அங்கே திருமாலின் கோவில் எங்கே இருந்தது என்பதை ஆராய்வோம்.




பண்டைக்காலத்தில் மதுரையின் கோட்டை தற்போது ஆவணி மூல வீதி என்று அழைக்கப்படும் வீதியைச் சுற்றியே இருந்தது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையும் சீருர், பூவின் 
இதழகத் தனைய தெருவம்; 
இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

என்ற பரிபாடலின் வரிகள் பூவின் இதழ்களைப் போல வட்டமான தெருக்கள் இருந்தனவென்றும் நடுநாயகமாக ஆலவாய் அண்ணல் கோவில் இருந்தது என்றும் விளக்குகிறது.

இந்தக் கோட்டையின் வெளிப்புறத்தில், நகரின் தென்மேற்கு மூலையில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதி அமைந்திருந்தது. இங்கே தான் திருமாலுக்குப் பெரிய கோவில் ஒன்று அமைந்திருந்தது. சிலப்பதிகாரம் 'உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்'  அதாவது கருடக் கொடி உடையோன் நியமம் என்று கூறுவது இந்தக் கோவில்தான். நியமம் என்பதற்கு கோவில் என்ற பொருள் உண்டு. 

இருந்தையூரில் அமர்ந்த பெருமானைப் பற்றிப் பரிபாடல் பாடும்போது. 

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ


அதாவது வானில் இருந்து மழை பொழிந்து, அதன்மூலம் மலையிலிருந்து நீர் பெருகி வந்து மதுரையை எதிர்கொள்ளும் ஆற்றின் துறையில் உள்ள இருந்தையூரில் அமர்ந்திருக்கும் செல்வனே என்று திருமாலைப் போற்றுகிறது இந்தப் பாடல். மேலும், இந்த ஊரில் ஒரு பக்கம் மலையும், மற்றொரு பக்கம் வயல்களும் இன்னொரு பக்கம் நகரமும் உள்ளது என்றும் அது குறிக்கிறது. இந்த வருணனைக்குச் சரியாகப் பொருந்தி வருவது அக்கால மதுரையில் புறநகரில் இருந்ததும், திருமால் அமர்ந்த கோலத்தில் அருள் செய்து வருவதும், இருந்தையூர் என்ற இடத்தில் உள்ளதால் இருந்த வளமுடையார் என்ற பெருமை பெற்றதுமான தற்போதைய கூடலழகர் கோவில் ஆகும்.





இப்போது தெற்கு மாசிவீதி, மேல மாசி வீதி சந்திப்பிலிருந்து சில அடிகள் தூரமே உள்ள இந்தக் கோவில் அக்காலத்தில் பெரும் கோவிலாக இருந்திருக்கிறது. நாயக்கர் காலத்தில் மதுரைக் கோட்டை விரிவடைந்து அதன் உள் சுவர் தற்போதைய மாசி வீதிகளை ஒட்டியும் வெளிச்சுவர் தற்போதைய வெளி வீதிகளை ஒட்டியும் கட்டப்பட்ட போது இரண்டு சுவர்களுக்கும் இடையே இந்தக் கோவில் வந்துவிட்டது. அடுத்து ஆங்கில ஆட்சியில், வடம்போக்கித் தெருக்களும், மாரட் வீதியும் வந்தவுடன் இந்தக் கோவிலின் பகுதிகள் துண்டாடப்பட்டு விட்டன. இந்தக் கோவிலின் பகுதிகளாக இருந்த சக்கரத்தாழ்வார் கோவில், ஹனுமார் கோவில், மதனகோபால சுவாமி கோவில், வீரராகவப் பெருமாள் கோவில் ஆகியவை தனிக்கோவில்கள் ஆகிவிட்டன. (பார்க்க படம்) 






தற்போது 108 திருப்பதிகளில் ஒன்றாகப் பெருமை பெற்று விளங்கும் மதுரை கூடலழகப் பெருமான் கோவிலின் வரலாறு இதுதான். மதுரை நகரில் ஆலவாய் அண்ணலின் கோவிலும் இருந்தவளமுடையாரான கூடலழகப் பெருமானின் கோவிலும் இருபெரும் ஆலயங்களாகத் திகழ்ந்தன என்பதைத்தான் மதுரைக்காஞ்சி 'ஓவுக் கண்டென்ன இரு பெரு நியமத்து' என்று சுட்டிப் பாடுகிறது. 






Thursday 2 July 2020

சிலப்பதிகாரத்தில் ஆலவாய் அண்ணலும் அம்மையும்

(சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே ஆலவாய் அண்ணலாம் சொக்கநாதரின் கோவில் பெரிதாக விளங்கியது என்ற குறிப்பு இருந்ததைச் சுட்டி ட்விட்டரில் எழுதியிருந்தேன். அப்போது மீனாட்சி அம்மனைப் பற்றிய குறிப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது அல்லவா. எனவே அதையும் சேர்த்து இங்கே எழுதியிருக்கிறேன்)



மதுரை நகருக்கு ஆலவாய் அண்ணலின் கோவிலே பிரதானம் என்பதை சிலப்பதிகாரம் இரண்டு இடங்களில் சுட்டுகின்றது. கோவலனும் கண்ணகியும் மதுரை எல்லையை அடைந்து வைகையைக் கடக்கும் முன்பே கோவிலில் இருந்து எழும் ஓசைகள் அவர்களுக்குக் கேட்கத் தொடங்கிவிடுகின்றன. இது புறஞ்சேரி இறுத்த காதையில் வருகிறது.
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலைமுரசக் கனைகுரல் ஓதையும்


நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்
” அரும் தெறற்கடவுள்,அதாவது அரிதான அழித்தல் தொழிலில் வல்ல சிவபெருமானின் அகன்ற பெருங் கோவில் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.இப்போது போலவே பெரும் கோவிலாக அது இருந்திருக்கிறது. அங்கே நான்கு மறைகளையும் அந்தணர் ஓதுகின்றனர். முனிவர்கள் மந்திரங்களை ஓதுகின்றனர்.


இது தவிர ஊர்காண் காதையிலும் முதல் கோவிலாக "நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்" என்று நெற்றியில் கண்ணுடைய ஆலவாய் அண்ணலின் கோவிலையே பிரதானமாகக் கூறுகிறார் இளங்கோ அடிகள்.





அப்போது அம்மனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்றால், கட்டுரைக் காதையில், கண்ணகி மதுரையை எரித்த பிறகு, மதுராபதித் தெய்வமாக, மீனாட்சி அம்மையாக அவள் முன் தோன்றும் சிறப்பைச் சொல்கிறார் இளங்கோவடிகள். பாடலைப் பார்ப்போம்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி
கடை எயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி

இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி 

தெய்வங்களை வர்ணிக்கும்போது பாதாதி கேசம், அதாவது அடிமுதல் முடிவரை அல்லது கேசாதிபாதம் - முடிமுதல் அடிவரை என்று இரு முறைகளைக் கவிகள் பின்பற்றுவர். இங்கே இளங்கோவடிகள் கேசாதிபாதம் என்ற முறையைக் கையாள்கிறார். 

அம்மன் எப்படி இருக்கிறாள் என்றால் சடையும் அந்தச் சடையில் பிறையும் தாங்கிய முடியினை உடையவளாக, முகத்தில் சிரிப்பு அரும்பும் போது அந்தப் பவளச் செவ்வாயில் கடைவாய்ப் பல் தெரிகின்ற தோற்றம் உடையவளாக, நிலவின் நிறத்தை உடைய முத்துப்போன்ற பற்களை உடையவளாக இருக்கிறாளாம். 

இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்

இங்கே அர்த்தநாரீஸ்வர வடிவமாக அம்மையைக் காண்கிறார் இளங்கோ. இடப்பக்கம் நீல நிறம் ஆனால் வலப்பக்கமோ ஈசனுக்குரிய பொன் நிறம். 

இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால் 
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்

இடக்கையில் தாமரையையும் வலக்கையில் மழுவையும் தாங்கியவள். வலக்காலில் கழலையும் இடக்காலில் சிலம்பையும் கொண்டவள். 


கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், 
பொன்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி


கொற்கையின் தலைவனாகவும், குமரியின் துறையை ஆள்பவனும், இமயத்தை வரம்பாக, எல்லையாகக் கொண்டவனும், பொதிகை மலையை உடையவனுமாகிய பாண்டிய குலத்தின் முதல் தலைவி என்று மதுராபுரித் தெய்வமாகிய மீனாட்சி அம்மையை வாழ்த்துகிறார் இளங்கோவடிகள். 

பாண்டியர் குலத்தின் தன்மையையும், பாண்டியனின் நீதி தவறாத முறையையும், கண்ணகிக்கு இந்தத் தீங்கு நிகழ்ந்தது ஊழ் வினையாலேதான் என்று அத் தெய்வம் கூறி கண்ணகிக்கு வழி காட்டுதல் இந்தக் காதையில் அடுத்துச் சொல்லப்படுகிறது.










Monday 18 May 2020

சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன





தமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.

முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள்.  நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன?

இதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்டத்தைப் பற்றியும், இச்சம்பவம் நடந்த பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட போது, சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்தன. அவர்களுடைய ஆட்சி, வடக்கில் பல்லவ சிம்ம விஷ்ணுவாலும், தெற்கில் பாண்டியன் கடுங்கோனாலும் அகற்றப்பட்ட பிறகு சனாதன சமயங்கள் மறுமலர்ச்சி அடையத் துவங்கின. ஆனால், சிம்மவிஷ்ணுவின் குமாரரான மகேந்திர பல்லவர் (பொயு 600 -630) சமண சமயத்தைத் தழுவினார். ஆகவே புத்துயிர் அடைந்த சமணர்கள், சனாதனம் மீண்டும் தலையெடுக்கக்கூடாது என்ற கடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து சைவத்திற்குத் திரும்பிய நாவுக்கரசருக்குப் பெரும் துன்பம் விளைவித்தனர். 'கற்றுணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும்', 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை' போன்ற பாடல்கள் நாவுக்கரசருக்கு சமணர்கள் இழைத்த துன்பங்களுக்கான அகச்சான்றுகளாக விளங்குகின்றன. இப்படி அவருக்குத் துன்பம் தரப்போய், எதிர்பாராதவிதமாக மகேந்திர வர்மரே சைவத்திற்குத் திரும்பும்படி ஆகிவிட்டது சமணர்களுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது.

அடுத்ததாக, பாண்டியர் பரம்பரையில் வந்த நெடுமாற பாண்டியன் (பொயு 640 - 670) சமணத்தைத் தழுவினான். ஆக, தமிழக அரசபரம்பரையில் கடைசிப் பிடியாக சமணர்களுக்கு இது இருந்தது.  அப்போது ஞானசம்பந்தரை, பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசி மதுரைக்குத் தருவித்தார். அப்படிச் செல்கின்றபோதே நாவுக்கரசர், 'பிள்ளாய்! அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை' என்று ஞானசம்பந்தருக்கு எச்சரிக்கை செய்தே அனுப்புகிறார். அவர்கள் கையால் பெரும் துன்பங்களை அனுபவித்தவர் அல்லவா.

சம்பந்தர் மதுரை வந்து சேர்ந்த பிறகு, அவரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் தீ வைத்தனர். இந்த நிகழ்வைப் பற்றி சம்பந்தரே இப்படிக் குறிப்பிடுகிறார்.

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

பாண்டியனை வெப்பு நோய் தாக்க, அதைத் தீர்க்குமாறு சம்பந்தரை வேண்டுகிறார் அரசி. இப்போது சமணர்கள் எங்களாலும் முடியும் என்று சொல்லி, அரசரது இடது பக்கத்தில் உள்ள வெப்பு நோயைத் தீர்க்க மயில்பீலியால் மந்திரம் செய்கிறார்கள். அது உதவவில்லை, எனவே 'மந்திரமாவது நீறு' என்ற பதிகத்தைப் பாடி பாண்டியனின் வலது பக்கத்திலும், பின்பு அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க உடல் முழுவதிலும் உள்ள வெப்பு நோயை சம்பந்தர் நீக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த நெடுமாறன் தாம் சைவநெறிக்கு மாறுவதாக உறுதியளிக்கிறான். இப்போது தங்கள் வசமிருந்த அரசு கைநழுவிப் போனதால் கோபமும் பொறாமையும் வந்து தாக்குகிறது சமணர்களுக்கு சம்பந்தரை வாதுக்கு அழைக்கிறார்கள். முதலில் அனல் வாதம் நடைபெறுகிறது. தனது 'தளரிள வளரொளி' என்ற பதிகத்தில் 'கொற்றவன் எதிரிடை எரியினில் இட' என்று சம்பந்தர் இந்த நிகழ்வைப் பதிவு செய்கிறார்.

அடுத்து ஏடு, ஆற்றின் போக்கை எதிர்த்துச் செல்லுமா என்ற புனல் வாதம் நடைபெறுகிறது. 'வாழ்க அந்தணர்' என்று தான் எழுதிய பதிகத்தில், அந்த ஏடு வெள்ளத்தை எதிரிட்டுச் செல்வதை

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே


என்றும் சம்பந்தர் பதிவு செய்திருக்கிறார். இப்படி இந்த வாது நிகழ்வுகளை அகச்சான்றாகப் பதிவு செய்திருக்கும் சம்பந்தர், கழுவேற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமல்ல, சமகாலத்தவரான அப்பரும், பின்னால் திருத்தொண்டர் புராணம் பாடிய சுந்தரரும் கூட இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சரி, எதிர்தரப்பான சமணர்களாவது இதைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவர்களும் இதைப் பற்றிப் பதிவுசெய்யவில்லை. இத்தனைக்கும், இந்த நிகழ்வு நடந்த பின்னர் பல நூற்றாண்டுகள் பாண்டி நாட்டிலும், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சமணர்கள் வாழ்ந்திருந்தனர். 'யாப்பருங்கலக்காரிகை' போன்ற பல நூல்களை எழுதியிருக்கின்றனர். எந்த ஒரு நூலிலும் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அண்மையில் இந்தக் கழுவேற்றம் பற்றிய நூல் ஒன்றை எழுதிய கோ. செங்குட்டுவன், சமண குருமார்களில் ஒருவரைப் பேட்டி கண்டபோது அவரும் இது தொடர்பான குறிப்புகள் ஏதும் சமணர்களிடம் இல்லை என்றே தெரிவித்திருக்கிறார். அப்படியானால், இந்தத் தொன்மம் எப்படி உருவானது ?

இந்த நிகழ்வைப் பற்றி முதலில் குறிப்பிடுபவர் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த, ராஜராஜனின் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி. 

அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கி 
அமண் கணங்கழு வேற்றி 
என்று சம்பந்தரைப் புகழ்கிறார் அவர். ஆனால் இங்கும் அப்படிக் கழுவேறிய சமணர்களின் எண்ணிக்கை பற்றி அவர் ஏதும் தகவல் தரவில்லை.  அவரது காலத்திற்குப் பின் வந்த  சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் இந்த நிகழ்வை விரிவாகவே தொகுத்து அளிக்கிறார். அதுவும் புனல் வாதத்தில் நாங்கள் தோற்றால், நாங்களே கழு ஏறுவோம் என்று சமணர்கள் பொறாமையின் காரணமாகச் சொன்னார்கள் என்று குறிக்கிறார் அவர்.

அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே ‘தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங் கழு ஏற்றுவான் இவ் வேந்தனே’ என்று சொன்னார்

அப்படித் தோற்ற பிறகு, 'எண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்' என்றும் குறிக்கிறார் சேக்கிழார்.

இங்கு எட்டாயிரம் என்பது மிகை, இடைப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு மாறுபாடுகள் அடைந்த தொன்மத்தின் விளைவே என்று சிலர் கூறுகிறார்கள்.  இந்த எண்ணாயிரவர் என்பது எட்டாயிரம் ஆட்களல்ல. மதுரையைச் சுற்றி எட்டு குன்றங்களில் வாழ்ந்த 'எண்ணாயிரம்' என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

எப்படியிருந்தாலும் 'எட்டாயிரம் பேரைக் கழுவேற்றிய' ஒரு நிகழ்வு நடந்திருக்கச் சாத்தியமேயில்லை என்பதைத் தான் இந்த குறிப்புகள் உணர்த்துகின்றன. கழுவேற்றும் நிகழ்வு நடந்திருந்தாலும், அது வாதில் ஈடுபட்ட சில சமணர்களால், அவர்களின் சபதப்படியே நடந்திருக்கும் சாத்தியமே அதிகம் என்பதையும் இது தெளிவாக்குகிறது. இதை வைத்து சனாதன தர்மத்தின் மீதும் சைவத்தின் மீதும் அவதூறு காண்பிக்கவே இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட தரப்பே மறுக்கும் இந்த நிகழ்வில் உண்மை இல்லை என்பதே நிதர்சனம்.














Wednesday 8 April 2020

அனுமனின் பேராற்றல் - மருந்து மலைப் படலம்

இன்று வடநாட்டில் அனுமனின் ஜயந்தி உற்சவம். இந்நன்னாளில் அனுமனது பராக்கிரமத்தில் ஒன்றான சஞ்சீவி மலையைக் கொண்டுவந்தது பற்றி எழுதுவது பொருத்தமானது அல்லவா



(முதலில் ஒரு குறிப்பு. சஞ்சீவி மலை எங்கிருந்தது என்பது பற்றிப் பல தியரிகள் உண்டு. நான் கம்பனில் இருந்து, பெரியவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதியிருக்கிறேன். இது தவறு, சஞ்சீவி மலை என் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளித்தான் இருந்தது என்று சொல்பவர்கள் தயை கூர்ந்து கடந்து செல்லவும்.)

ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்த மருந்து மலைப் படலம் வருகிறது. இந்திரஜித்தால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டு வானரசேனைகள் அனைத்தும் வீழ்கின்றன. லக்ஷ்மணனும் அயர்ந்து வீழ்ந்துவிடுகிறான். அப்போது போர்க்களத்தில் இல்லாதவர்கள் ராமனும் விபீஷணனும். பின்னால் போர்க்களத்திற்கு வந்த ராமன்,  அனுமன் உட்பட அனைவருக்கும் நேர்ந்த கதியைப் பார்த்து திடுக்கிடுகிறான். மூர்ச்சையடைந்து வீழ்கிறான். இப்போது விபீஷணனும் அங்கே வந்து சேருகிறான். அவனுக்கும் அதிர்ச்சி. இது பிரம்மாஸ்திரத்தால் வந்த விளைவே என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. இதைச் சரிசெய்யும் வழி என்ன? யாராவது உயிருடனிருக்கிறார்களா என்று தேடும்போது அனுமனைக் காண்கிறான் விபீஷணன். அனுமனின் களைப்பைத் தெளிவித்த பின் இருவரும் ஆலோசிக்கின்றனர். சாம்பவன் எங்கே இருக்கிறார் என்று அனுமன் வினவ, இருவரும் அவரைத் தேடிச்செல்கின்றனர். வீரர்கள் அனைவரும் வீழ்ந்ததால் மனவருத்தமுற்று சோர்ந்து கிடந்த சாம்பவான் இருவரையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அனைவரும் உயிர்பெற சஞ்சீவனி மூலிகைகளைக் கொண்டுவருவதே சிறந்த வழி, அதைச் செய்து முடிக்கக்கூடியவன் அனுமன் ஒருவனே என்று கூறி, முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அந்தச் செய்தியை முரசறிவித்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிவந்ததால் தனக்கு அந்த மூலிகை கிடைக்கும் இடம் தெரியும் என்று சொல்லி, அந்த மூலிகை இருக்கும் இடமான மருந்து மலைக்கு வழியும் கூறுகிறார் சாம்பவான்முக்கியமாக விடிவதற்குள் அந்த மூலிகைகளை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார் அவர்

எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல்லற மூர்த்தி தானும்,
வழுவல் இல் மறையும், உன்னால்வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி
.

உடனே அந்த மருந்தை விரைவில் எடுத்துவருவேன் எனக்கூறி அனுமன் பேருருவம் கொள்கிறான்

ஓங்கினன் வான் நெடுமுகட்டை யுற்றனன் பொற்றோளிரண்டுந் திசையோ டொக்க
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே யென வளர்ந்தான் வேதம் போல்வன்

அப்படிப் பேருருவம் கொண்டு மிகுந்த வேகத்துடன் வான் வழியாகச் கிளம்பிச் செல்கிறான் ஆஞ்சநேயன். அதைக் கம்பன் வர்ணிக்கும்போது

கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு அகல் வேலை; கிழக்கும் மேற்கும்;
பொழிந்தன,மீன் தொடர்ந்து எழுந்த, பொருப்பு இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன வானவர் மானம், ஆகாயத்திசையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல் கீறின போய்த் திசைகள் எல்லாம்


அப்படி காற்றைக் கிழித்துக்கொண்டு அனுமன் செல்கையில் பேரொலி தோன்றியதாம். தற்போதைய Supersonic விமானங்களை விட விரைந்து சென்றிருப்பான் போலும். அப்படி இலங்கையிலிருந்து கிளம்பிச் சென்ற அனுமன் முதலில் இமய மலையைக் கடக்கிறான். அங்கே கயிலை மலையில் அமர்ந்திருந்த ஈசன் அனுமனை உமாதேவிக்குச் சுட்டிக்காட்டுகிறார். அதன் பிறகு ஹேமகூட மலையைத் தாண்டி, நிடத மலையை அடைகிறான். அதனையும் கடந்து மேரு மலையை அடைகிறான். இந்த மேரு மலை உலகத்திற்கு அச்சு போன்றது என்று கூறப்படுகிறது. அந்த மேரு மலையில்தான் நாவல் மரம் ஒன்று உள்ளது. அதை வைத்தே இப்பெருநிலம் ஜம்புத்வீபம் (நாவலாந்தீவு) என்று அழைக்கப் படுகிறது. அந்த நாவல் மரத்தைக் கண்டு வணங்கி, அதனையும் தாண்டிச் செல்கிறான் அனுமன். அடுத்து உத்தரகுரு எனும் இடத்தை அடைகிறான். அங்கு வந்தவுடன் விடிந்து விடுகிறது.

அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த அண்ணல்,
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், ‘விடிந்தது ‘என்னா ‘முடிந்தது என் வேகம் ‘என்றான்.


ஆகா, விடிவதற்குள் இந்த மூலிகையைச் சென்று சேர்க்க வேண்டியிருந்தது போக, இப்போது விடிந்துவிட்டதே. எனது வேகமும் முடிந்துவிட்டது என்று தளர்ச்சியுற்றான் அனுமன். ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகு அவனுக்கு ஒன்று புலப்படுகிறது. அனுமன் இலங்கையிலிருந்து கிளம்பிச்சென்றது மாலை முடியும் நேரத்தில். அவன் வடதிசை நோக்கிச் செல்கிறான். ஆனால் இப்போது அவனது இடப்பக்கம், அதாவது மேற்குத் திசையில் சூரியன் தோன்றுகிறது. அதெப்படி மேற்கில் சூரியன் உதிக்கும் என்று சிந்தித்தான். தான் வடபகுதியை, அதாவது வடதுருவத்தைத்தாண்டி வந்துவிட்டதால், பூமிக்கு அந்தப்பக்கமாக வந்துவிட்டோம். அங்கே இப்போது பகல் அல்லவா, அதனால்தான் சூரியன் இடப்பக்கம் தோன்றுகிறான் என்று புரிகிறது அவனுக்கு. உடனடியாக உற்சாமடைந்து நீலமலையைக் கடந்து மேலே சென்று மருந்து மலையைக் காண்கிறான். அங்கே உள்ள தெய்வங்களை வேண்டி, மருந்து மலையையே அலாக்காகத் தூக்கி வந்து விடுகிறான். இதிலிருந்து பார்க்கும்போது சஞ்சீவிமலை பூமிக்கு மறு பக்கத்தில், அதாவது அமெரிக்கக் கண்டத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதிலும் மலைகள் பல நிறைந்திருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்தே அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்தான் என்று கூறுபவர்கள் உண்டு.

அப்படி மருந்து மலையை வேகமாக இலங்கைக்கு கொண்டுவருகிறான் அனுமன். இப்போது பூமிக்கு இந்தப்பக்கம் இன்னும் இரவாகவே இருக்கிறது. வந்து, வானரங்களையும், லக்ஷ்மணன் முதலான அனைவரையும் உயிர்ப்பிக்கிறான். இராமனுக்கு பெரும் சந்தோஷம். அனுமனைப் புகழ்ந்து இராமன் கூறுவது.

அழியுங்கால் தரும் உதவி ஐயனே!
மொழியுங்கால் தரும் உயிரின் முற்றுமோ?
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நன் மறையும் காத்தனை


என்னே அனுமனின் பெருமை !!