பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி 'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக) பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும். இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,