சென்ற பகுதியில் மாலிக்கபூரின் படையெடுப்பைப் பற்றிப் பார்த்தோமல்லவா. அந்தப் படையெடுப்பின் விவரத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, வசாப், பார்னி போன்றவர்கள் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பலர் சொல்வது போல், ஶ்ரீரங்கத்தில் மாலிக்கபூர் நிகழ்த்திய சேதங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. சமயபுரம் வரை வந்த மாலிக்கபூர் ஶ்ரீரங்கத்தை விட்டு வைத்திருக்க முடியாது என்றாலும், "மற்ற கோவில்களையும் கொள்ளையடித்தான்" என்று அமீர் குஸ்ரூ ஒரே வரியில் முடிப்பதால், கோவிலில் பெரும் கொள்ளை நடந்திருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளலாம். இதே போலத்தான் மதுரையிலும். செல்வங்கள் கொள்ளை போயினவே தவிர கோவிலுக்கு அதிகம் சேதமில்லை என்றே நாம் கருதலாம். மாலிக்கபூர் சிதம்பரம் கோவிலைச் சேதப்படுத்திய விவரங்கள் மட்டுமே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவன் ராமேஸ்வரம் வரை சென்றான் என்பதற்குக் கூட தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் மாலிக்கபூரின் படையெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாண்டியப் பேரரசை வலுவிழக்க வைத்துவிட்டது.
மாலிக்கபூர் அப்பால் சென்றவுடன் வீரபாண்டியன் மீண்டும் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்யத்தொடங்கினான். ஆனால், சேரமான் ரவிவர்மன் குலசேகரன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து அவனைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல், காஞ்சி நகர் வரை தனது படையெடுப்பை மேற்கொண்டு நடுவிலுள்ள பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றினான். பிற்பாடு, பாண்டிய தாயாதி அரசர்கள் பெரும்பாடு பட்டு மதுரையை அவனிடமிருந்து மீட்டனர். அவர்கள் ஒருவனான பராக்கிரம பாண்டியன் பொயு 1315லிருந்து மதுரையை ஆளத்தொடங்கினான்.
ஹொய்சாளர்களின் நிலை இதற்கு எவ்வளவோ மேம்பட்டதாக இருந்தது. நாட்டைத் துரிதமாக புனர்நிர்மாணம் செய்ததாக வீர வல்லாளன் அவனுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறான். துவாரசமுத்திரத்தை மட்டுமல்லாமல், நாட்டின் மேற்கெல்லையில் ஹம்பி நகர் வரை அவன் தன்னுடைய அரண்களை வலுப்படுத்தினான். அது மட்டுமல்லாமல், தலைநகரை விட்டு மேற்கு எல்லையில் தன்னுடைய முகாமை அமைத்துக்கொண்டான்.
இரண்டாம் படையெடுப்பு
தென்னகத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது வடக்கிலும் பெரும் குழப்பம் நிலவியது. பொயு 1311ம் ஆண்டின் இறுதியில் மாலிக்கபூர் டெல்லியைச் சென்று அடைந்தான். அதன்பின் அலாவுதீன் கில்ஜியை தன் கைப்பொம்மையாக ஆட்டி வைத்து, அவனுடைய மகன்களைக் குருடாக்கியும் கொன்றும் பல கொடுமைகள் செய்தான். அலாவுதீனையும் 1315ல் மாலிக்கபூர் கொலைசெய்து விட்டு, அரசைக் கைப்பற்றிக்கொண்டான். ஆனால், இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அலாவுதீனின் மகன்களில் ஒருவனான முபாரக் கான், கபூரைக் கொன்று ஆட்சியைப் பிடித்தான். எப்படி அலாவுதீனுக்கு மாலிக்கபூரோ, அப்படி முபாரக் கானின் அடிமையாக இருந்தவன் குஸ்ரூ கான். இருவருமாகச் சேர்ந்து தக்காணத்தின் மீது படையெடுத்தனர்.
தேவகிரியை வென்ற பிறகு, அவர்களின் கவனம் காகதீயப் பேரரசின்மீது திரும்பியது. டெல்லிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை காகதீய அரசன் பிரதாபருத்திரன் நிறுத்தியிருந்தான். அதனால், குஸ்ரூ கான் வாரங்கல்லின் மேல் படையெடுத்து அதனை வென்றான். இதற்கிடையில் முபாரக் கான் டெல்லி நோக்கித் திரும்பவே, குஸ்ரூ கான் மீதியுள்ள செல்வங்களைக் கொள்ளையடிக்கும் ஆசையில் பொயு 1318ல் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தான்.
குஸ்ரூ கானின் படை அதிக எதிர்ப்பைச் சந்திக்காமல் மதுரை நோக்கி முன்னேறியது. டெல்லிப் படைகள் வருவதை அறிந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு கானப்பேர் (காளையார்கோவில்) சென்று ஒளிந்து கொண்டான். எதிர்ப்பேதும் இல்லாமல் மதுரையைக் கைப்பற்றிய குஸ்ரூ கான் அங்கே சில காலம் தங்கியிருந்தான். அங்கேயிருந்து கொண்டு டெல்லியைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.
அப்போது மதுரையில் கடும் மழைக்காலம் தொடங்கியது. (உண்மைதான் நம்புங்கள்). தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு வந்து குஸ்ரூ கானை எதிர்த்தான். எதிர்பாராத இந்தத் தாக்குதலாலும், கவனம் டெல்லியில் இருந்ததாலும் குஸ்ரூ கான் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு டெல்லி திரும்பினான். மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வந்தது. இந்தப் படையெடுப்பைப் பொருத்தவரை, தமிழகம் தனது செல்வங்களை மீண்டும் ஒருமுறை இழந்தாலும் மற்றபடி சேதங்கள் குறைவாகவே இருந்ததது.
அடுத்து