Wednesday 17 March 2021

மீண்டும் காந்தளூர்ச்சாலை


தங்களுக்கு அரசியல் லாபம் ஏதாவது தேவையென்றால் ராஜராஜ சோழனை சீண்டுவது தமிழகத்தில் சிலரின் வழக்கம். அப்படி தமிழகத்தேர்தலை ஒட்டி (??!!) எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. 

அதன் லிங்க் இதோ

முதலில் அதில் உள்ள அபத்தங்களைப் பார்த்துவிடுவோம். 

//இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்!//

'காந்தளூர்ச்சாலை கலம் அறுத்து' அந்தக் கல்விக்கூடத்தை ராஜராஜன் அழித்துவிட்டால் பிறகு ஏன் மற்ற சோழ மன்னர்கள் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் காந்தளூர்ச்சாலை கலமறுத்ததைக் குறிப்பிடுகின்றன. 

"குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தான்" என்கிறது சடையவர்மன் பராந்தக பாண்டியனின் மெய்க்கீர்த்தி. ஏன் இப்படி ஒரு 'கல்விக்கூடத்தை' ஏன் 'போர் செய்து' பலரும் அழிக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அடுத்து

//இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன்//

நந்திவர்ம பல்லவனின் காலம் பொயு 8ம் நூற்றாண்டு. பெருமாளை வைத்ததை எதிர்த்து தில்லை வாழ் அந்தணர் கலகம் செய்தார்களாம். விஜயாலயன் முதல் தொடர்ந்து சைவர்களாக, சிவபாத சேகரர்களாக, சிவசரண சேகரர்களாக இருந்த பெருமன்னர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் நானூறு ஆண்டுகள் கழித்து பதவிக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன் அதைச் செய்தானாம். எப்படி இருக்கிறது கதை. ஆனால் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை தில்லை வாழ் அந்தணர்கள் வழிபட்டனர் என்று வைணவ ஆழ்வார்களே குறிப்பிடுவதில் இந்தச் சாயம் வெளுத்து விடுகிறது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம் (பெரிய திருமொழி)

“தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்” (குலசேகர ஆழ்வார்)

//சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள்.//

இதற்கெல்லாம் ஆதாரங்கள் என்ன என்று கேட்கக்கூடாது. மூச். வீரநாராயண ஏரியை வெட்டிய ராஜாதித்தர் குறுகிய காலத்திலேயே மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிரான தக்கோலப்போரில் மரணமடைந்துவிட்டார் என்று பொன்னியின் செல்வன் வாசகர்களுக்குக் கூடத்தெரியும். அடுத்து பட்டத்திற்கு வந்தது பரம சைவரான கண்டராதித்தர். அவர் காலத்தில் சேரர்கள் இங்கே குடியேறினார்களாம். மேலும்

//எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள்//

ஒரு வழியாக பாலகுமாரனின் உடையார் கதைக்கு வந்துவிட்டார். கதைக்கு எதற்கு ஆதாரம் ? ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சேர நாட்டவர் என்பதற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.

"பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும். ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம்"

மிகத்தெளிவாக குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருப்பது கொலை செய்தவர்கள் பாண்டிய நாட்டவர் என்பது. வீரபாண்டியனின் தலையை ஆதித்தன் வெட்டிய அடாத செயலுக்கு எதிராகவே இந்தப் படுகொலையைச் செய்தனர் அவர்கள். உடையார் போன்ற நாவலை வைத்துக்கொண்டு சரித்திரம் எழுதினால் இப்படித்தான் ஆகும். கட்டுரை முடிவில் பனைமரத்தில் பசுவைக் கட்டிய கதையாக 'பெரியார்' 'சாலை என்பது பிராமண ஆதிக்கம்' என்று ஏதேதோ சொல்லி கட்டுரையை முடித்து வைத்துவிட்டார். 

இவ்வளவு அபத்தங்கள் நிறந்த இந்தக் கட்டுரை சொல்லவருவது என்ன. சாலை என்பது சேரநாட்டு அந்தணர்களால் நிறுவப்பட்ட கல்விக்கூடம். அதைத்தான் ராஜராஜன் முதலில் அழித்தான் என்பதுதான் கட்டுரையின் அடித்தளமாக இருக்கிறது. ஆனால் இதில் உள்ள பெரிய ஓட்டை காந்தளூர்ச்சாலை அமைந்திருந்தது அப்போதைய 'ஆய்வேளிர்' ஆண்டு கொண்டிருந்த நாட்டுப் பகுதியில். சேர நாட்டுத் 'தளி'களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. சேர நாட்டின் எல்லை ராஜராஜன் ஆட்சி செய்த பொயு 10ம் நூற்றாண்டில் கோட்டயம்/ திருக்கடித்தானமாகவே இருந்தது. இதன் காரணமாகவே பின்னால் சேர நாட்டின் மீது படையெடுத்த ராஜராஜன் உதகையை அழித்தான். காந்தளூச்சாலை பாண்டிய நாட்டவர்களால் கைப்பற்றப்பட்டு 10ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆதரவாளர்களான ஆய் மன்னர்களின் கையில்தான் இருந்தது. ஆகவே பாண்டிய அரசனான அமரபுஜங்கனை வெற்றி கொண்ட கையோடு (திருவாலங்காட்டுச் செப்பேடுகள்) ஆய் குல அரசர்களின் கடற்படைத்தளங்கள் / துறைமுகங்களான விழிஞத்தையும் காந்தளூர்ச்சாலையையும் ராஜராஜன் தாக்கி அழித்து பாண்டியர்கள் தலைதூக்காவண்ணம் செய்தான். 

அப்போது காந்தளூச்சாலை என்பது என்ன? "வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ" என்கிறார் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில். வேலை என்றால் கடல். அந்தக் கடலைக் கொண்டு விழிஞம் அழித்து சாலையைக் கைக்கொண்டாய்' என்று புகழ்கிறார் அவர். கடலில் அருகே காந்தளூர்ச்சாலை இருந்ததால் இது ஒரு கடற்படைத் தளமாகவோ அல்லது கடற்படைப் பயிற்சி நிலையமாகவோ இருந்திருக்கவேண்டு. மேலும் "வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து" என்று முதலாம் ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி குறிப்பிட்டு இதை உறுதிப்படுத்துகிறது. கடல் அருகே உள்ள காந்தளூர்சாலை ஒரு கடற்படைத் தளமே. குறைந்தபட்சம் இது வீரர்களுக்கான பயிற்சிப்பாசறையாக இருந்திருக்கக்கூடும். அதனால் தான் 'தண்டு கொண்டு' - படை கொண்டு அல்லது 'கன்னிப்போர்' செய்து இதை அழிக்கவேண்டியிருக்கிறது. அந்தணர்களின் கல்விக்கூடத்தை அழிக்கப் படை எதற்கு? 

எதையாவது எழுதி அந்தணர் ஆதிக்கம் என்ற பயமுறுத்தலைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். இதற்கு பல பிரம்மதேயங்கள் அமைத்தவனும் அந்தணர்பால் பேரன்பு கொண்டவனுமான ராஜராஜனைத் துணைக்கழைத்திருப்பதுதான் நகைச்சுவை. Wednesday 3 March 2021

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு யாருடைய காலத்தியது ?புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் குடுமியான்மலை. இந்த ஊரில் உள்ள குன்றில் குடுமித்தேவர் என்ற பெயரில் உள்ள சிவபெருமானின் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள் புகழ் பெற்றவை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் அளிந்த நிவந்தங்களைப் பற்றிய கல்வெட்டுகள் குடுமித்தேவர் கோவிலிலும் அதை அடுத்துள்ள குடைவரைக் கோவிலிலும்  உள்ளன.  அவற்றில் மிகவும் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது குடைவரைக்கோவிலில் காணப்படும் இசைக்கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் இருந்துவரும் இசை மரபினுடைய ஆழத்தைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அது பற்றிய விவரங்களை விரிவாக இன்னொரு சமயம் ஆராயலாம். 

அந்த இசைக் கல்வெட்டும் குடைவரையும் யார் காலத்தியது என்பது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான திரு. மீனாட்சி போன்றவர்கள் இது மகேந்திர பல்லவன் காலத்தியது என்றும் அவனால் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, இக்கல்வெட்டு பல்லவ கிரந்தத்தால் அமைந்துள்ளது, மகேந்திர பல்லவன் இசையில் தேர்ச்சி பெற்றவன், இக்கல்வெட்டின் அருகே பரிவாதினி என்ற யாழின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. அதிலும் தேர்ச்சி பெற்றவன் மகேந்திரன் போன்றவை ஆகும். 

ஆனால் பேராசிரியர் மகாலிங்கம், வெங்கையா ஆகியோர் இதிலிருந்து மாறுபடுகின்றன. இதைப் பற்றிய விவரங்களை ஆராய்ந்ததிலிருந்து இவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக்கவே வேண்டியிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 

1) குடைவரைக் கோவிலின் அமைப்பு, அதன் தூண்கள், துவாரபாலகர்கள் ஆகியவை அமைந்துள்ள முறை மகேந்திர பல்லவனின் குடைவரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. பாண்டியர் பாணிக் கட்டடக் கலையை அவை  பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. 

2) உதாரணத்திற்கு இசைக் கல்வெட்டிற்கு அருகிலுள்ள விநாயகர் சிலையைப் பார்ப்போம். வலது காலை ஊன்றி, இடது காலை மடித்து கையில் மோதகத்துடன் காணப்படும் இத்திருமேனியை போன்ற விநாயகர்களை பல பாண்டியர் குடைவரைகளில் காணலாம். ஆகவே இது பாண்டியர் பாணி என்பது ஊர்ஜிதமாகிறது. 


குடுமியான் மலை விநாயகர்


திருமலாபுரம் குடைவரை

3) இந்தக் கோவிலில் பல்லவர் கல்வெட்டுகள் ஏதுமில்லை. மாறாகப் பாண்டியன் மாறன்  சடையன், ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் போன்ற இடைக்காலப் பாண்டியர்களுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

4) மகேந்திரன் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களில் பலரும் இசை ஆர்வம் கொண்டவர்களே. உதாரணமாக வேள்விக்குடிச் செப்பேடுகள் பாண்டியன் நெடுஞ்சடையனை கீத கிந்நரன் என்று அழைக்கின்றன. 

5) பரிவாதினி என்ற யாழ் மகேந்திரனால் மட்டும் பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதும் சரியல்ல. காளிதாசனின் ரகுவம்சத்திலும், பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்திலும் பரிவாதினி என்ற யாழ் இடம்பெற்றுள்ளது. 

6) இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு, மகேந்திரனை அவன் வென்றவுடன் காவிரியில் யானைகளால் பாலம் அமைத்து சோழ, பாண்டியர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறது. ஆகவே காவிரி ஆறே மகேந்திரனின் தெற்கெல்லையாக இருந்ததை இது தெளிவாக்குகிறது. குடுமியான்மலை, திருமெய்யம் போன்ற இடங்களில் பாண்டியர்களின் குடைவரைகள் பெரும்பாலும் காணப்படுவது இதற்கு ஆதரவு சேர்க்கிறது. 

அப்படியானால், இந்தக் கல்வெட்டு யாருடையது என்ற கேள்வி எழுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதியில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம் இதை ஓரளவு தெளிவுபடுத்துகிறது. 

"ருத்ராச்சர்ய சிஷ்யேண பரம மாஹேஸ்வரேண ரா(க்ஞா) சிஷ்ய ஹிதார்த்தம் க்ருதா ஸ்வராகமா"

அதாவது ருத்ராச்சார்யரின் சீடனும் பரம மாஹேஸ்வரனுமான அரசன் ஒருவன், மாணவர்களின் பயன்பாட்டுக்காக இந்த இசைக் கல்வெட்டை வடித்தான் என்கிறது இந்த வரிகள். மகேந்திர பல்லவன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினாலும், அவன் மாஹேஸ்வர சைவத்தைப் பின்பற்றியதற்கான சான்று இல்லை. அதன் பிரிவான கபாலிகத்தை அவன் மத்த விலாசப் பிரகசனத்தில் கிண்டல் செய்வதைப் பார்க்கலாம். ஆகவே மாஹேஸ்வரர்கள் என்று கூறப்படும் பாசுபத சைவப் பிரிவைச் சேர்ந்த மன்னன் ஒருவனே இதை வடித்திருக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் பலர் பாசுபத சைவத்தை போற்றினார்கள் என்பது தெளிவு. மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் குடைவரையில் பாசுபதத்தைத் தோற்றுவித்த லகுலீசர் சிற்பம் அமைத்திருப்பது தெரிந்த விஷயம். 

ஆகவே பாண்டிய மன்னன் ஒருவனால் இந்தக் கல்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பராந்தக நெடுஞ்சடையன் தன்னை 'பரம வைஷ்ணவன்' என்று சீவரமங்கலச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக்கொள்கிறான். அவன் பெயரானான முதலாம் வரகுண பாண்டியன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். பல சிவன் கோவில்களுக்குத் திருப்பணி செய்தவன். மாறன் சடையன் என்ற பெயரில் அவனுடைய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. ஆகவே இந்தக் கல்வெட்டு அவனால் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் கல்வெட்டுகள் இங்கே இருந்தாலும் அவன் வைணவ நெறியைப் பின்பற்றியவன். பெரியாழ்வாரின் சீடன். ஆகவே இங்கே பரம மாஹேஸ்வரன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்வது மாறன் சடையானான வரகுண பாண்டியன் என்றே முடிவு செய்யலாம். இதிலிருந்து இக்கல்வெட்டு பொயு 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெளிவாகிறது 

படங்கள் நன்றி : இணையம்