“கம கம” வென மடப்பள்ளியிலிருந்து வாசனை வந்துகொண்டிருந்தது. சிவபெருமானுக்கு உகந்த நைவேத்தியங்கள் செய்வதில் சம்பந்தனுக்கு அலாதிப் பிரியம். ஏனோ தானோவென்று செய்யாமல், பார்த்துப் பக்குவமாக ஒவ்வொரு தடவையும் பாகங்கள் செய்வான் அவன். அதனால் உச்சிகாலமாக இருந்தாலும் அர்த்தஜாமமாக இருந்தாலும் அந்தப் பிரசாதத்தைச் சாப்பிடுவதற்கே கூட்டம் கூடிவிடும்.
இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இராது என்று அவனுக்குத் தெரியும். வெளியே கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது. அவ்வப்போது மத்தளம் கொட்டுவதைப் போல இடியோசை வேறு. விரைவாக இருட்டிவிடும் என்பதால்அவசரமாக பூஜைகளை சிவாச்சாரியார் முடித்துவிடுவார். ஆகவே நைவேத்தியமும் சீக்கிரமாக தயாராக வேண்டும். அந்தவேலையில் அவன் மும்முரமாக இருந்தபோது அண்ட கடாகங்கள் உடைவது என்று சொல்வார்களே அப்படி ஒரு பெரும் இடிஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து இன்னொரு பெரும் சப்தம். ஏதோ விபரீதம் தான் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தசம்பந்தன் மழையையும் பொருட்படுத்தாமல் மடப்பள்ளிக்கு வெளியே ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி !
சிறுகளப்பூர் காளத்தீஸ்வரர் கோவில் அவ்வளவு பெரிய கோவில் இல்லை என்றாலும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்துமக்கள் அடிக்கடி வந்து தரிசித்துச் செல்லும் கோவில் என்பதால் எப்போதும் அங்கே ஓரளவு கூட்டம் இருக்கும். காவிரிக்கரைக்கு அருகில் இருந்தாலும் அந்த ஆற்றின் இருகரைகளிலும் உள்ள பல கோவில்களைக் கற்றளியாக மாற்றிக்கட்டிய ஆதித்த சோழன் என்ன காரணத்தாலோ அந்தக் கோவிலை, குறிப்பாக விமானத்தை செங்கல் திருப்பணியாகவேவிட்டுச்சென்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து வந்த சோழ ராஜாக்களும் கோவிலை மாற்றிக் கட்டவில்லை. கொஞ்சநாட்களாகவே விரிசல் விட்டுச் சிதிலமாக இருந்த விமானம் அன்று பெய்த மழையில் முற்றிலுமாகச் சிதைந்து விட்டது. இடிஅதன் மேல் விழுந்ததோ பக்கத்தில் விழுந்ததோ, விமானம் முற்றிலுமாகச் சேதமடைந்து வீழ்ந்து கிடந்தது. அந்தக்காட்சியைப் பார்த்த சம்பந்தனின் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. அழகான அந்த விமானம், காளத்தீஸ்வரரின் சிரத்திற்குக்குடையாக நின்று கொண்டிருந்த விமானம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே என்பதை நினைத்து அவன் கண்ணில் நீர் ஆறாகப்பெருகி ஓடியது.
கோவில் பரிசாரக வேலை சம்பந்தனுக்குப் பரம்பரையாக வந்தது. இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டஅவனுக்கு அந்தக் கோவில்தான் எல்லாமே. கோவிலில் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கும் வேலையைமனமகிழ்ச்சியுடன் செய்துவந்தான் அவன். உமையிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தனின் பெயரையே அவனுக்கும்வைத்திருந்தார் அவன் தந்தை. ஆகவே சிவபக்தி அவனிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால்தான் கோவிலுக்கு ஏற்பட்டஇந்த இழப்பை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலையில் ஊர்ச்சபை கூடியது. விமானம் விழுந்தது அபசகுனம் என்றும் அதற்குத் தகுந்த பரிகாரங்கள்செய்யவேண்டும் என்று ஊர்ப்பெரியவர்கள் முடிவுசெய்தனர். கோவில் சிவாச்சாரியாரான பிச்சை குருக்கள் அதற்குத் தகுந்தஏற்பாடுகளை ஏற்கனவே செய்துவிட்டதாகவும் திருத்தவத்துறையிலிருந்து (லால்குடி) உபாத்தியாயர்கள் வருகின்றனர் என்றும்சொன்னார்.
“அதெல்லாம் சரி விழுந்த விமானத்தை திரும்பக் கட்டவேண்டாமா, எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம்செய்யணும்” என்றார் ஊரின் பாட்டோலையான அத்தியூரான்
“அதையும் செய்துவிடுவோம், ஏற்கனவே இருந்ததுபோலவே செங்கலால் கட்டிவிடுவோம்” என்றார் ஊர் நாட்டாமை
இப்போது கூட்டத்தில் இருந்து நடப்பவைகளை கவனித்துக்கொண்டிருந்து சம்பந்தன் குறுக்கிட்டான் “ஐயா, ஒருவிண்ணப்பம்”
“சொல்லு சம்பந்தா, என்ன விஷயம்”
“உங்களுக்குத் தெரியாததில்ல, செங்கல் விமானம் ரொம்ப நாள் நீடிக்காது. திருப்பியும் இந்த மாதிரி ஆகிடும். அதனால தான்ஆதித்த மகாராஜா பல கோவில்கள கருங்கல்லா மாத்தினார். நாமளும் அது மாதிரி கருங்கல் விமானமா ஆக்கிடுவோம்” என்றான் சம்பந்தன்.
கூட்டத்தில் அதைக் கேட்டு சலசலப்புக் கிளம்பியது. கருங்கல் விமானம் வைக்கணும்னா அது என்ன சின்ன விஷயமா என்றார்ஒருவர். அதற்குச் செலவு அதிகம் பிடிக்குமே என்று சந்தேகம் கிளப்பினார் வரிப்பொத்தகக் கணக்கன் நாராயணன். அந்தவேலையெல்லாம் யார் இழுத்துப் போட்டுச் செய்யறது. ஊரில் மழைச் சேதம் அதிகமாக இருக்கு,அதைக் கவனிக்கிறதாஇல்லை விமான வேலையையா என்றார் இன்னொருவர்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க, ஆளுக்காள் சத்தம் போடாதீங்க” என்று அடக்கிய நாட்டாமை, “சம்பந்தா, நீ சொல்றதுசரிதான். ஆனாலும் அதற்கான ஸ்தபதிகளை வெளியூரிலிருந்து கொண்டுவரணும். கல் விலை அதிகம். திருப்பணிக்கு அதிகசெலவும் வேலையும் பிடிக்கும். இதையெல்லாம் யாரப்பா செய்வது? குலோத்துங்க ராஜாவிடம் உதவி கேட்கலாம்னா அவர்பாண்டிய நாட்டுக்குப் போர் செய்யப் போயிருக்கார். அவர் எப்போ வருவது, எப்போ இந்த வேலை முடிவது? அதனால்இப்போதைக்கு செங்கல் விமானமே கட்டுவோம்” என்றர்.
“ஐயா, பண்ணுவது ஒரு தடவை. இப்போவே அதை திருத்திச் செய்வதுதானே சரி. செய்வன திருந்தச் செய்னுதானேமுன்னோர்கள் சொல்லிருக்காங்க” என்றான் சம்பந்தன்.
“அதெல்லாஞ்சரி, அதற்குப் பணம் எங்க இருந்து வரும்? யார் இந்த வேலையைச் செய்வது?” என்று கேட்டார் பாட்டோலை
“நான் செய்கிறேன் ஐயாக்களே. ஊர் ஊராகப் போய் சிவன் திருப்பணின்னு சொல்லி பணம் கொண்டுவருகிறேன். எல்லாவேலையையும் நானே செய்கிறேன். காளத்தீஸ்வரருக்கு நாம செய்யலைன்னா யார் செய்வா” என்று உணர்ச்சிவசப்பட்டான்சம்பந்தன்.
இதைக் கேட்டு கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. நடக்கிற காரியமா இது என்று சிலர் வெளிப்படையாகவே பேசினார்கள்.
அப்போது பிச்சைக் குருக்கள் சம்பந்தனுக்கு ஆதரவாகப் பேச வந்தார். “சம்பந்தன் சொல்வதும் சரிதான். அடிக்கடி விமானம்விழுவது ஊருக்கு நல்லதில்லை. கட்டறதுதான் கட்டறோம், கல்விமானமாகவே கட்டிடலாம். சம்பந்தன் தான் வேலைசெய்யறேன்னு சொல்றானே. அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்போமே. முடியலைன்னா இருக்கவே இருக்கு செங்கல்விமானம்” என்றார் அவர்.
நாட்டாமை யோசித்தார். அப்போது ஊர்த்தலையாரியான நாகப்பன் “அதெல்லாம் சரிப்படாது தலைவரே, சம்பந்தன்ஒண்டிக்கட்டை. ஊர்த்திருப்பணின்னு காசை வசூலிச்சுட்டு கம்பி நீட்டிட்டான்னா கொடுத்தவங்களுக்கு யார் பதில் சொல்றது. பக்கத்து ஊர் கோவிலில் நடந்த விஷயம் தெரியுமுல்ல” என்றார். பிரசாதத்தைக் கொஞ்சம் அதிமாகச் செய்து தனக்குத்தரவேண்டும் என்று அவர் கேட்டபோது சம்பந்தன் அதை மறுத்து, சிவன் சொத்து குலநாசம் என்று அவருக்கு அறிவுரை வேறுசொன்னான் என்பதால் அவருக்கு அவன் மேல் எப்போது ஒரு கோபம் உண்டு.
இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்டு ஊரார் வாயடைத்துத் தான் போனார்கள். பக்கத்து ஊர் கோவிலில் இது போலத்திருப்பணி செய்கிறேன் என்று கிளம்பிய ஒருவன் காசை வசூலித்தபிறகு ஊரை விட்டே ஓடிவிட்டான். ஆகவே சம்பந்தனும்அது போலச் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அனைவரது மனத்திலும் எழும்பியதில் வியப்பில்லை.
ஊராரின் சிந்தனை எந்த திசையில் ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்ட சம்பந்தன் வெகுண்டெழுந்தான் “சிவன் சொத்துக்குலநாசம்னு உங்க எல்லாருக்கும் சொல்லும் நான் அப்படிச் செய்வேனா? இருந்தாலும் உங்க சந்தேகம் போகணும்இல்லையா? அப்போ நான் சொல்வதைக் கேளுங்கள். என்னுடைய கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டிவிடுங்கள். விலங்கின் சாவி நாட்டமையிடமே இருக்கட்டும். வசூலித்த காசில் என் சொந்த செலவுக்கு எதுவும் எடுக்கமாட்டேன். அதற்குஅடையாளமா என்னுடைய உடம்பில் ஒற்றை ஆடை மட்டுமே இருக்கும். கீரை மட்டுமே எனக்குச் சாப்பாடு. திருப்பணி முடியும்வரை இதுதான் என்னுடைய வாழ்க்கை. இது காளத்தீஸ்வரர் மேல சத்தியம்” என்று ஆவேசமாகக் கூறினான்.
ஊர் மக்களுக்கு இதைக் கேட்டதும் மெய்சிலிர்த்தது. “அதுக்கில்லை சம்பந்தா” என்று ஏதோ கூறவந்த நாட்டாமையை அடக்கிய அவன். “ஐயா தயவுசெய்து எந்த மறுப்பும் சொல்லாதீர்கள்” என்று அவர் காலில் விழுந்தான். அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.
சம்பந்தன் விருப்பப்படியே அவன் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டது. ஒற்றை ஆடை அணிந்து ஊர் ஊராகப் போய் பணம்கொண்டுவந்தான் அவன். முத்தையா ஸ்தபதி என்ற சிறந்த சிற்பியால் கோவில் விமானம் கற்றளியாக உருவெடுத்தது.
இதோ நல்ல நாளில் பிச்சை குருக்கள் கும்பம் ஏந்திவர விமானத்திற்கு அபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. சம்பந்தனின்விலங்குகளை அகற்றிய நாட்டாமை நாத்தழுதழுக்க “சம்பந்தா நீ செய்த பணிக்கு ஈடு எதுவும் இல்லை. இருந்தாலும்எங்களால் முடிந்த ஒன்றை நாங்க செய்திருக்கிறோம்” என்று சொல்லி கோவில் மண்டபத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கேஒரு தூணுக்குத் திரை போட்டிருந்தது. “உன் கையால் அந்தத் திரையை எடு சம்பந்தா” என்றார்.
திரை விலகியதும். சம்பந்தனின் கண்ணில் நீர் பெருக்கோடியது. அங்கே கை, கால் விலங்கோடு சம்பந்தனின் சிற்பம்வடிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோவிலும் விமானமும் உள்ள வரையிலும் உன் பெயர் நிலைத்து நிற்கும் சம்பந்தா என்றுசொன்ன நாட்டாமை. அதுமட்டுமல்ல, இந்த நிகழ்வை கல்வெட்டாகவும் இந்தக் கோவிலில் பொறித்து வைத்துவிட்டோம். கைமாறில்லாமல் நீ செய்த சிவப்பணி என்றைக்கும் நிலைத்திருக்கும் என்றார் அவர்.
காளத்தீஸ்வரரை நோக்கிக் கை கூப்பினான் சம்பந்தன்.
*பாட்டோலை - ஊரில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பெடுப்பவர்
(கோவில் படம் : சித்தரிக்கப்பட்டது)
சிறுகளப்பூர் காளத்தீஸ்வர் கோவில் கல்வெட்டு :