Sunday 29 October 2017

இராஜராஜப் பெருவேந்தன்



இன்று சதயத்திருநாள். இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவரான ராஜராஜனின் பிறந்த நாள். தமிழகத்தின் ஆகச் சிறந்த மன்னனாக அவரைச் சந்தேகமில்லாமல் அறிவிக்கலாம். அப்படி அவர் செய்த செயற்கரிய செயல் என்ன? மற்ற மன்னர்களிடமிருந்து, ஏன் கடல்கடந்து வெற்றிகளைக் குவித்த அவருடைய மகன் ராஜேந்திரனிடமிருந்து கூட  ராஜராஜன் மாறுபட்டது எப்படி?

பண்டைக்கால (சிறந்த) மன்னர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம், அவர்கள் முடிசூடினார்கள், எதிரிகளை போர்க்களத்தில் வீழ்த்தினார்கள், மக்களைக் கொடுமைப்படுத்தாமல் வாழ்ந்தனர், கோவில்களைக் கட்டினார்கள், குளங்களை வெட்டினார்கள் என்பதுதான். ராஜராஜனும் இவை எல்லாவற்றையும் செய்தார். ஆனால் அவருடைய செயல்முறையின் வேறுபாடே அவரை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

முதலில் ராஜராஜன் அரியணை ஏறிய விதத்தையே எடுத்துக்கொள்வோம். அவர்  தமையனான ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தான். சோழ வம்சத்தின் மற்றொரு கிளையின் வாரிசான  மதுராந்தகத்தேவன் அரியணை ஏறும் ஆசை கொண்டிருந்தான். இருந்தாலும், அருள்மொழிவர்மனே தங்களது மன்னராக வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதினார்கள். அவர்  நினைத்திருந்தால், எந்தவிதச் சிக்கலுமின்றி ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்க முடியும். ஆனாலும், தன்னுடைய சிங்காதனத்தை தனது சித்தப்பாவிற்கு விட்டுக்கொடுத்ததன் மூலம் ஆட்சியை விட அறமே உயர்ந்தது என்பதை நிலைநிறுத்தினார்  ராஜராஜன். ஒருவழியாக உத்தமசோழருக்குப் பின் அவர் அரியணை ஏறும் போது  (பொயு 985) அவருக்கு வயது 38.

அதன்பிறகுதான், அவரது முக்கியமான படையெடுப்புகள் நிகழ்ந்தன. மிகக்குறுகிய அரசாக இருந்த சோழதேசம் பேரரசாக உருவெடுத்தது. தென்னகம் முழுவதும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அதுவரை முன்னோர்களின் புகழையே பாடிக்கொண்டிருந்த நடைமுறைகளுக்கு மாறாக தனது வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக அகவற்பாவில்  கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறிக்கச்செய்தது ராஜராஜன் தான். தனது வெற்றிகளைக் குறித்ததிலும் ஒரு கண்ணியத்தைக் கையாண்டவர் ராஜராஜன்.

வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்

என்று தான் வெற்றி பெற்ற இடங்களைக் குறிப்பிட்டாரே அல்லாது, எந்த எந்த அரசர்களை வெற்றி கொண்டேன் என்று குறிப்பிட்டு அவர்களை அவமானப்படுத்தவில்லை. 

பெற்ற வெற்றிகளை அடுத்து, ராஜராஜன் செய்த மிகப்பெரிய செயல் இன்றளவும் அவர் பெயரைக் கூறிக்கொண்டிருக்கும் ராஜராஜேஸ்வரம் என்னும் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை நிர்மணித்ததே ஆகும். தமிழர் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக இந்தக் கோவிலைக் கூறலாம். இதன் மேலுள்ள விமானம் எப்படிக் கொண்டு சொல்லப்பட்டது என்பது பற்றிய விவாதங்கள் இப்போதுதான் ஓய்ந்திருக்கின்றன. அந்த அளவு அனைவரையும் வியக்கச் செய்த நிபுணத்துவம் பல இந்தக் கோவிலில் உண்டு. பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இந்தக் கோபுரம் முழுவதும் பொன்வேயப்பட்டது.  ராஜராஜனுடைய ஆட்சியின் 25ம் ஆண்டில், அதாவது அவருக்கு 63 வயது ஆகும்போது இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் கோவில் கட்டிய ஒட்டுமொத்தப் பெருமையையும் தனக்கே உரியதாகச் சொல்லிக்கொள்ளவில்லை இம்மன்னன். கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்த சாதாரண மனிதர்கள் உட்பட்ட ஒவ்வொருவருடைய பெயரையும் சுற்றுச்சுவர்கள் கல்வெட்டாகப் பொறித்து வைத்தார். தன் வாய்மொழியாகவே இதற்கான ஆணையைப் பிறப்பித்தார்  என்பதற்கு இந்தக் கல்வெட்டு சான்றாக விளங்குகிறது. 

நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஶ்ரீ ராஜராஜே வரிமுடையார்க்கு நாம் கொடுத்தனவும், அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும்,ஶ்ரீ விமானத்தில் கல்லிலே வெட்டுக  என்ற திருவாய்மொழிஞ்சருள ..

இந்தக் கல்வெட்டை ஒருவர் வாசிப்பதை இங்கே காணலாம். 

இதில்  மனையாட்களை (பெண்டுகள்) பின் தள்ளி விட்டு அக்கன் குந்தவையை முன்னால் கூறியிருப்பதிலிருந்து தன் தமக்கையின் மீது ராஜராஜன் கொண்டுள்ள மரியாதை தெளிவாகத் தெரிகிறதல்லவா. 

தவிர, கோவிலின் அரணான திருச்சுற்று மாளிகை முழுவதையும் தனது படைத்தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரால் கட்டச்செய்து அவர் பெயரையும் பொறிக்கச்செய்தவர் ராஜராஜன். ஒரு சிறந்த தலைவனின் அடையாளம், தன்னுடன் பணி செய்தவர்களை அரவணைத்து, முன்னிறுத்துவதுதான் என்ற தற்கால மேலாண்மைக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ராஜராஜன். 

கோவிலைத் தவிர சைவ சமயத்திற்காக ராஜராஜன் ஆற்றிய பெரும்பணி, மூவர் பாடிய தேவாரத்தை தில்லைக் கோவிலிலிருந்து மீட்டது. அந்த ஓலைச் சுவடிகளை மீட்டெடுப்பதில் சிக்கல் எழுந்தபோது சாதுர்யமாக அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைக் கொண்டுவந்து அந்தச் சிக்கலைத் தீர்த்து, சுவடிகளை மீட்டெடுத்தார் அவர். இதைப்பற்றி திருமுறை கண்ட புராணம் கூறுகையில் 


அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால்  அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும் 
மெய்தகு சீர் அம்பலவர்க்கு உற்ற செல்வவிழாஎடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை 
உய்த்தணி வீதியினில் உலா வருவித்து உம்பர்நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே 

சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச்சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான்


அதன்பின் நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு அவற்றை முறையாகத் தொகுத்ததிலும் ராஜராஜனின் பங்கு உண்டு. ஆனால், அதற்காக அவர் மற்ற சமயங்களைப் புறந்தள்ளினார் என்று நினைக்கவேண்டாம். பழையாறையில் இருந்த விண்ணகரம் உட்பட பல திவ்யதேசங்களுக்கு அவரும் குந்தவையும் நிவந்தங்களை வழங்கியிருக்கிறார்கள். அவரது ஆட்சிக்காலத்தில் நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட சூடாமணி விஹாரத்திற்கு பெரும் நிவந்தங்களும் சலூகைகளும் அளிக்கப்பட்டன என்பதை ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிக்கின்றன. 

நிர்வாகத்தைப் பொருத்தவரை,  எவ்வளவு திறமையாக அரசு நிர்வாகம் செய்யப்பட்டது என்பதை அவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கிராமசபைகளும், பொதுக்குழுக்களும் ஓரளவு தன்னிச்சையாக இயங்கினாலும், தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் நடவடிக்கைகள் கண்கணிக்கப்பட்டன. நாடெங்கும் நிலங்களை முறையாக அளந்து நிலவரி விதிக்கும் முறையை ஏற்படுத்தி, தற்போதைய வருவாய்த் துறையைப் போன்று செயலர்களால் நடத்தப்படும் நிர்வாகத்துறையை அவர் செம்மைப்படுத்தினார். இந்த நிலங்களை அளக்கும் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. இந்த நிலம் அளக்கப்பயன்படுத்தப்பட்ட கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதற்கு உலகளந்த கோல் என்று பெயரிடப்பட்டது. இந்த அலுவலைத் தலைமையேற்று நடத்திய அதிகாரி உலகளந்தான் என்ற சிறப்புப் பெயர் பெற்று, குரவன் உலகளந்தான் ராஜராஜ மாராயன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். நாடு முழுவதும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட ன. 

 இப்படி ஆட்சிமுறை, நுண்கலை, கட்டடக்கலை, படைத்திறன், சமயம், இலக்கியம் போன்று பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து பல்வேறு பட்டப்பெயர்களை ராஜராஜன் பெற்றிருந்தாலும், சிவநெறியைத் தழைக்கச் செய்ததன் அடையாளமாக தன்னைச் 'சிவபாத சேகரன்' என்று அழைப்பதையே விரும்பினார். இறைவனுடைய அடிக்கமலங்களைத் தவிர வேறு எதுவும் வேண்டேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராஜராஜர். 

Saturday 9 September 2017

திருமங்கை ஆழ்வாரின் காலம்

ஆழ்வார்களிலேயே அவரது காலம் இன்னது என்று தெளிவாகத் தெரியக்கூடியது திருமங்கை ஆழ்வாரின் காலம்தான். ஆனாலும் ஒரு பரம்பரைக் கதை அவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்ததாகக் கூறுவதால் பலருக்கு இந்த விதத்தில் குழப்பம் நேரிடுகிறது.



முதலில் திருஞானசம்பந்தரின் காலத்தைப் பார்ப்போம். இவர் திருநாவுக்கரசரின் சமகாலத்தவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்பரின் முதிய காலத்தில் சிறுவயதினரான சம்பந்தரோடு பல இடங்களுக்குச் சென்று பதிகங்கள் இயற்றியதைப் பற்றி பெரிய புராணமும் மற்றும் பல நூல்களும் குறிப்பிடுகின்றன.  மகேந்திர பல்லவரை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்பதால் அவருடைய காலத்தில் பிற்பகுதியில் சம்பந்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. சிறுத்தொண்டரான ' மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகச்' செய்த பல்லவ தளபதி பரஞ்சோதியை ஞானசம்பந்தர் சந்தித்தது பற்றியும் குறிப்புகள் உண்டு. எனவே சம்பந்தர் நரசிம்மவர்மரின் சமகாலத்தவர் என்பது வெள்ளிடைமலை.

அதேபோல, சமணரான கூன்பாண்டியனை சைவத்திற்கு சம்பந்தர் மாற்றினார் என்பதற்கும் ஆதாரங்கள் பல உண்டு. கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் மதுரை சென்றதும் சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் புரிந்ததும், அரசன் 'நின்றசீர் நெடுமாறனாகியதும்' தெரிந்த வரலாறே. 'நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்' என்று சுந்தரரால் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் இம்மன்னனின் நெல்வேலிப்போரைப் பற்றி சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்று அழைக்கப்படும் இம்மன்னன் வாழ்ந்தது பொயு 640-670ம் ஆண்டைச் சேர்ந்தவன். எனவே சம்பந்தரின் காலமும் இதை ஒட்டியதே.




அடுத்து திருமங்கை மன்னருக்கு வருவோம். பரமேசுவர விண்ணகரத்தில் உறையும் பெருமானை ஆழ்வார் இப்படிப் பாடுகிறார்

இலகிய நீள்முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 

(பெரிய திருவாய்மொழி, திவ்யார்த்த தீபிகை)

பல்லவமன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் கருவூரில் நடந்த போரைப் பற்றி தளவாய்புரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. எனவே நந்திவர்மனின் சமகாலத்தவர் திருமங்கை மன்னர் என்பது தெளிவு. மேலும்,

'மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி ' 

என்று ஆழ்வார் பெரிய திருவாய்மொழி திருவட்டபுயகரம் பாசுரத்தில் பாடுகிறார். இந்த வயிரமேகன் என்பது நந்திவர்மனின் மறுபெயர்.

பல்லவன் இரண்டாம் நந்திவர்மனின் காலம் பொயு 731-796. எனவே திருமங்கையாழ்வாரும் அக்காலகட்டத்திலேதான் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது தெளிவு. ஆக, சம்பந்தரும் திருமங்கை ஆழ்வாரும் சந்தித்தார்கள் என்பது சாத்தியமேயில்லாத விஷயம்.


உசாத்துணைகள்

1) பாண்டியர் செப்பேடுகள்
2) பெரிய திருவாய்மொழி









Friday 11 August 2017

களப்பிரர் யார் - 2

களப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள்  சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களும், கர்நாடகாவின் வடபகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களும் தங்கள் அரசை விரிவு படுத்த ஆரம்பித்தனர். இதனால் நெருக்கப்பட்ட கர்நாடகாவின் தென்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அரச மரபினர் தெற்குநோக்கிக் குடிபுகுந்தனர். இவர்கள்தான் களப்பிரர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு இவர்கள் முதலில் ஆட்சி புரிந்துவந்தனர் என்பதை,

அருளுடை பெரும்புகழ் அச்சுதர் கோவே
இணையை ஆதலின் பனிமதி தவழும் 
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே  

என்கிறது அமிர்தசாகரனார் எழுதிய யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலின் விருத்தியுரை மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள் (அச்சுதன் எனும் களப்பிர அரசனைப் பற்றி நான்கு செய்யுள்கள் இதில் உள்ளன). இந்த நந்தி மலையைச் சுற்றிய பகுதிகள் களவர நாடு என்று அழைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள சிக்கபல்லபூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு

"நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு" என்று உறுதி செய்கிறது (Epigraphic Carnatica Vol 10 - Chikballpur Inscription no. 21) 

பொயு பதினோராம் நூற்றாண்டின் நூலான கல்லாடம் "படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநாட வேந்தன் (கல்லாடம் - 56) என்றும்,   பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில்  "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்"  என்றும் களப்பிரர் வடுகர்கள் என்றும் கர்நாடகாவிலிருந்தே வந்தனர் என்றும் கூறுகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசர்களை அகற்றி இவர்கள் ஆட்சியைப் பிடித்தனர் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள்

அளவரிய ஆதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்  (வேள்விக்குடிச் செப்பேடு பாடல் வரி 39)

என்று குறிப்பிடுகின்றன. களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பதை, தளவாய்புரச் செப்பேடுகள்

...தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாறு கவினலங்காற் களப்பாழர் குலங்களைந்தும்

என்று உறுதிசெய்கின்றன.

இப்படி வடக்கிலிருந்து வந்த களப்பிரர் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்டனர்.  இவர்கள் சமண சமயத்தையும் (கர்நாடகாவில் அப்போது பெருமளவில் பரவி இருந்த சமயம்), பௌத்த சமயத்தையும் (உறையூரை ஆண்ட அச்சுதக் களப்பாளன் பௌத்தத் துறவியான புத்ததத்தரை ஆதரித்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் சைவ, வைணவ சமயக் கடவுளர்களையும் வழிபட்டனர்.  நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களப்பிரரே என்பதை திருத்தொண்டர் திருவந்தாதி 'கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே' என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.  ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் களப்பிர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கலியன், கலிகன்றி என்ற அவருடைய அடைமொழிகளால் அறியலாம்.தவிர


'இருளறு திகிரியோடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி'  எனும் யாப்பெருங்கலத்தின் பாடல் வரிகள் திருமாலை வழிபட்டு பெருநிலத்தைக் களப்பிரர் பெற்றதாகக் கூறுகிறது.

களப்பிரர்களின் மொழியைப் பொருத்தவரை, பிராகிருதத்தின் ஒரு பிரிவான சூரசேனி என்ற மொழியையே அவர்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். ஆனாலும், தமிழ் மொழியின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை இவர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. பொயு 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் இவர்களது ஆட்சியை நீக்கியதை

..களப்ரனெனுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பரிதிபோல் பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து   என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இது போலவே பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சோழ நாட்டில் ஆட்சி புரிந்த களப்பிரர்களை வென்றான். அதன்பின், தமிழகத்தின் சில பகுதிகளில் பாண்டிய, பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக களப்பிரர் ஆண்டனர். தமிழர்களோடு ஒன்றாகக் கலந்தும் விட்டனர்.

களப்பிரர் காலத்தை 'இருண்ட காலம்' என்று குறிப்பிடுவது, அவர்களைப் பற்றிய இலக்கிய, கல்வெட்டு, நாணய ஆதாரங்கள் பல நாட்களுக்குக் கிடைக்காததால்தான். சொல்லப்போனால், சங்க இலக்கியங்கள் கிடைக்காதவரை அதற்கு முந்தைய காலம் பற்றிய தகவல்களும் அறியப்படாமல்தான் இருந்தது. தற்போது கிடைக்கப்பட்ட பல இலக்கிய ஆதாரங்களாலும், அண்மையில் பூலாங்குறிச்சி, பொன்னிவாடி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளாலும் களப்பிரர் காலத்தில் வெளிச்சம் பாய ஆரம்பித்திருக்கிறது.  ஒரு இடத்தை மன்னன் ஒருவன் கைப்பற்றி ஆட்சி புரிவதும், அவனை வேறொரு மன்னன் வென்று அந்த இடத்தைக் கைப்பற்றிக்கொள்வதும் அவனை வேறொருவன் வெல்வதும் வரலாற்றில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். தமிழகத்தில் முதலில் மூவேந்தர்கள் ஆண்டார்கள், அவர்களைக் களப்பிரர் வென்றார்கள், அவர்களுக்குப் பின் பாண்டியர்களும் பல்லவர்களும், அதன்பின் சோழர்கள் என்று இப்படிச் செல்லும் வரலாற்றுக்கண்ணியில் களப்பிரர்களும் ஒரு கண்ணி என்பதே நாம் அறியவேண்டிய செய்தி. அவர்களின் புகழை யாரும் குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை. தமிழகத்தை ஆண்ட அரசர்களில் அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. வருங்காலத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடைய வரலாறும் செறிவடையக்கூடும்.


உசாத்துணைகள்

1. புறம் 9 -  http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l12803c0.htm
2. புறம் 367 - http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=367&file=l1280374.htm
3. The Chronology of Early Tamils - by K N Sivaraja Pillai - Page 128 onwards
4. The History of South India - K A Nilakanta Sastri - Page 121
5. களப்பிரர் - நடனகாசிநாதன், தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு
6. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி. கே. இரவீந்திரன் (விகடன் பிரசுரம்)
7. பாண்டியர் செப்பேடுகள் - டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப









Thursday 10 August 2017

களப்பிரர் யார் - 1

'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.



களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது.  பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாமூலனாரின் காலத்தை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த ராசமாணிக்கனார் போன்ற பல வரலாற்றாசிரியர்களின் கருத்து. இது போலத்தான் திருக்குறளின் காலமும் பொயுமு 3ம் நூற்றாண்டிலிருந்து பொயுமு 1ம் நூற்றாண்டு வரை என்பது ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. சிலம்பும் மணிமேகலையும் இயற்றப்பட்டது சங்கம் மருவிய காலமான பொயு 1ம் நூற்றாண்டு, இவை இயற்றப்பட்டது களப்பிரர் வருகை தந்த பொயு 2ம் நூற்றாண்டிற்கு முன்னால். சோழன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் ஆகிய அரசர்களைப் பற்றிப் பேசும் சிலம்பு, களப்பிர மன்னர்களைப் பற்றி, அப்படி ஒரு இனம் இருந்ததைப் பற்றியே எந்தக் குறிப்பையும் தராததை நாம் இங்கு நினைவுகூரவேண்டும். 

இப்படி இலக்கியத்தைப் பற்றி எல்லாக்கணக்கையும் களப்பிரர் காலத்தில் எழுதியதை, போனால் போகிறது என்று மேலே சென்றால் திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தருகிறார் ஆசிரியர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் குடித்தலைவர்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறார். ஏதோ தமிழ்வாணன் நாவலைப் படித்துவிட்டு தூங்காமல் தவித்த இரவில் இதை அவர் எழுதியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் பல்யாக சாலை முதுகுடுமியைப் பற்றிப் பார்ப்போம். ஆய்வாளர்களால் கடைச்சங்க காலத்திற்கு முற்பட்டவராகக் குறிப்பிடப்படுகிறார் இவர். புறநானூற்றின் இப்பாண்டிய மன்னனைப் பற்றி ஐந்து பாடல்கள் உள்ளன. (புறம் 6,9, 12,15, 64). இதில் 

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவினெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம் - 9) 

 என்று நெட்டிமையார் பாடுகிறார். குமரிகண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றின் மணலைக் காட்டிலும் பலகாலம் வாழிய என்று பெருவழுதியை அவர் வாழ்த்துகிறார். பஃறுளி ஆற்றைப் பற்றிய இந்தக் குறிப்பை வைத்து  அவர் கடைச்சங்க காலத்திற்கு முந்தியவர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர். தவிர கடைச்சங்கப் பாண்டிய மன்னர்களின் புகழ்பெற்றவனான தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் புகழைப் பாடும் மதுரைக் காஞ்சி பல்யாகசாலை முதுகுடுமியை நெடுஞ்செழியனின் முன்னோன் என்று குறிக்கிறது 

பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறை போக்கிய
தொல்லாணை நல் ஆசிரியர்  (மதுரைக் காஞ்சி)

பல்சாலை முதுகுடுமியைக் களப்பிரர் படுகொலை செய்த பிறகு பெருவீரனான நெடுஞ்செழியன் எப்படி  மதுரையை ஆண்டான் என்பது கட்டுரை ஆசிரியருக்கே வெளிச்சம். ஏதோ யாகம் செய்தான் என்பதற்காக ஒரு பெருவீரனான தமிழ் மன்னனை ஆசிரியர் படுகொலை செய்துவிட்டார் பாவம். 

இப்போது ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கு வருவோம். கடைச்சங்ககாலத்திற்கு மூத்தவரான பல்சாலை முதுகுடுமிக்கு நேரெதிராக, கடைச்சங்ககாலத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் இவன். புறம் 367ல் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோரோடு இணைந்து ஔவையாரால் பாடப்படும் மன்னன் இவன். இவனை யாரோ கொன்றதாக எந்த ஆதாரத்தை வைத்து ஆசிரியர் சொன்னாரோ தெரியவில்லை. சோழ வம்சம் இவனுக்குப் பின்னும் தொடர்ந்தது. முற்காலச் சோழவம்சத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் கோச்செங்கணான். புறநானூறும் ஒட்டக்கூத்தரின் மூவருலாவும் இதைப் பற்றிக்குறிக்கின்றன. இவனுடைய காலம் பொயு முதல் நூற்றாண்டு.  சேரன் கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணானை பொய்கையார் களவழி நாற்பது பாடி விடுவித்தார் என்பது வரலாறு. இந்தக் களவழி நாற்பது என்பது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. ஆக, முதுகுடுமியையும் பெருநற்கிள்ளியையும் கொன்று விட்டு களப்பிரர் ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். 

அடுத்து மகாவம்சத்தைக் குறிப்பிட்டு பல மன்னர்களின் பட்டியலை ஆசிரியர் அடுக்குகிறார். இவர்கள் எல்லாரும் களப்பிரர் என்பதற்கு என்ன ஆதாரம் என்பது தெரியவில்லை. இதில் எருமையூர், கர்நாடகாவின் நடுப்பகுதி வரைக்கும் தமிழர் பகுதியாக தடாலடியாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டின் எல்லையும் நாட்டில் அடங்கிய பகுதிகளும் தெளிவாக வகுக்கப்பட்டதை அவர் ஏனோ அறியவில்லை. 

'தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண்பூழி, பன்றி, அருவா, அதன் வடக்கு, நன்றாய சீத மலாடு, புனல் நாடு என்று பன்னிரண்டு பிரிவாக தமிழகம் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தமிழ் நிலத்தை சூழ்ந்த இடங்களாக கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம் போன்ற பகுதிகள் நன்னூல் குறிக்கிறது. ஆக கன்னடம் தமிழகத்தின் பகுதி என்று கூறுவது தவறான வாதம். அங்கிருந்து வந்த களப்பிரர் தமிழர்களே அல்ல. 

கட்டுரையை அவர் எப்படி முடிக்கிறார் என்று பார்ப்போம். 

//மகேந்திரபல்லவன் எல்லா களப்பிரப் பகுதிகளையும் கைப்பற்றி பல்லவ சாம்ராச்சியத்தை உருவாக்கினான். இந்தப் பல்லவர்களும் முதலில் பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் மகேந்திர பல்லவன் காலத்தில் சைவ சமயத்திற்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம்//

வரலாறு சொல்வது 

- களப்பிரர்களை வென்றவர்கள் பாண்டியர்கள் (ஆதாரம் வேள்விக்குடிச் செப்பேடுகள்) பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணு வடபகுதியில் ஆண்ட சில களப்பிரச் சிற்றரசர்களை வென்றார். மகேந்திரன் களப்பிரர்களோடு போர் புரியவேயில்லை. சாளுக்கியப் புலிகேசியோடு பொருதுவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. 

- பல்லவ அரசைத் தோற்றுவித்தவன், 'சிவஸ்கந்த வர்மன்'. அடுத்து வந்த அரசர்களில் ஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் ஆகியோர் உண்டு. இவர்கள் எப்படி பௌத்த மதத்தவர் ஆனார்கள்? சிம்மவிஷ்ணு விஷ்ணுவின் சிறந்த பக்தர் என்று உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மகேந்திரவர்மனும் முதலில் சார்ந்திருந்தது சமண சமயத்தை. அவனைச் சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்ற வேளாளர். 

ஆக உண்மை என்பதை பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டியிருந்த இந்தக் கட்டுரையை விடுத்து, களப்பிரர் என்பவர்கள் யார், தமிழக வரலாற்றின் அவர்கள் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

 (அடுத்து) 







Sunday 6 August 2017

சத்யபுத்திரர்கள் யார்?

தமிழ் வரலாற்றில் சங்க கால நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ள இலக்கியங்களே பெரிதும் உதவியாக இருக்கின்றன. கல்வெட்டுகளோ / செப்பேடுகளோ இன்ன பிற ஆவணங்களோ அக்காலத்தில் இல்லை. இருந்தாலும் அதிகம் அறியப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அசோகரது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட கல்வேட்டு ஒன்று பெரும் ஆய்வுக்கு உட்பட்டது.
குஜராத்தில் உள்ள கிர்நார் மலைச்சரிவில் (சிங்கங்களது சரணாலயம் இருக்கிறதே, அதே கிர்நார்தான்) அசோகரது கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. தமது அரசின் எல்லைகளை குறித்து சாஸனம் செய்திருக்கும் அவர். அரசின் எல்லைப்புற மன்னர்களாக “சோட, பாட, சத்யபுதோ, சேரபுதோ, தம்மபாணி” என்று குறித்திருக்கிறார். அசோகர் குறிக்கும் தமிழக மன்னர்களை சோட – சோழ, பாட – பாண்டிய, சேரபுதோ- சேர என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தம்மபாணி என்பது இலங்கை அரசர்களைக் குறிப்பதாகும். இதில் சத்யபுதோ யார் என்பது பற்றி குழப்பம் நிலவியது. ஏனெனில் தமிழ் இலக்கியங்களோ, வேறு ஆவணங்களோ இப்படி ஒரு மன்னர்குலம் இருப்பதை பதிவுசெய்யவில்லை. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர்களே சத்யபுத்திரர்கள் என்று சொன்னார்கள். இன்னும் சிலர், மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்யபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர். கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ் வரலாற்றாசிரியர்கள், மற்ற தமிழ் மன்னர்களோடு சேர்ந்து வருவதால், இவர்கள் ஒரு தமிழ் மன்னர் குலத்தவராகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இந்தக் குழப்பத்துக்கு முடிவாக திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் பொது வருடங்களுக்கு முன்பான முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் ப்ராமியில் இருந்த இந்தக்கல்வெட்டைக் கீழே காணலாம்.

இந்தக் கல்வெட்டில் எழுதியிருப்பது இதுதான்
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி”
அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்யபுத்திரர் பரம்பரையில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்யபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. யாருக்கு அஞ்சி இதைக் கொடுத்தான் என்று கேட்டுவிடாதீர்கள். நெடுமான் அஞ்சி என்பது அந்த மன்னனின் பெயர்.
தகடூரை ஆண்ட அதியமான்களே சத்யபுத்திரர் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியதுமட்டுமல்லாமல் அசோகரின் கல்வெட்டில் இடம்பெறும் அளவுக்கு மூவேந்தர்களுக்கு இணையாக இவ்வரசன் விளங்கினான் என்பதையும் பதிவுசெய்கிறது இந்த ஜம்பை கல்வெட்டு.

Wednesday 19 July 2017

ஆதி சங்கரரின் பணி



ஆதி சங்கரரைப் பற்றிப் பரப்பப்படும் பல தவறான செய்திகளில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் புத்த, ஜைன சமயங்களை அழித்தார் என்பதுதான். நேற்று ஒரு டிவிட்டர் இழையிலும் இதுபோன்ற ஒரு கருத்து வந்ததைக் காண நேர்ந்தது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பது வெள்ளிடைமலையாகப் புலப்படும்.

முதலில் புத்த, ஜைன மதங்களின் காலத்தை எடுத்துக்கொள்வோம். பொயுமு நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்த மதங்கள் வலுப்பெறத்துவங்கின. ஜைன மதம் வணிகர்களாலும், சந்திரகுப்த மௌரியர், அஜாதசத்ரு, காரவேலர் ஆகிய அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது. இன்றும் வட நாட்டில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெரு வணிகர்கள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போல, புத்த மதம் அசோகச்சக்கரவர்த்தியின் காலத்தில் பெரும் சிறப்பை அடைந்தது. ஆனால், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து இந்த இரண்டு மதங்களும் பல சிக்கல்களைச் சந்தித்தன. ஜைனர்களின் கடுமையான கட்டுப்பாடுகள், சடங்குகளைத் தாங்காத மக்கள் அதிலிருந்து விலகத் துவங்கினர். புத்த மதத்திற்கும் அரசர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்தியாவில் அதன் செல்வாக்கு குறையத் துவங்கியது. அடுத்த வந்த குப்தர்கள், ஹிந்து சமயத்தவர்கள். இந்தக் காலத்தில் வேதச் சடங்குகளை முன்னிருத்தும் 'பூர்வ மீமாம்ஸை' என்ற கோட்பாடு வேகமாகப் பரவத் தொடங்கியது. இதை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் 'குமரில பட்டர்'. பௌத்தர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவலால், பௌத்த மடமொன்றில் துறவியாக இணைந்து அவர்களது கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு அவர்களையே வாதப் போரில் தோற்கடித்து மீமாம்ஸையை நிலைநாட்ட ஆரம்பித்தார் அவர். போதாக்குறைக்கு, வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்து வந்த ஹூணர்கள், புத்த மதத்திற்குப் பெரும் எதிரிகளாக இருந்து, அதைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்தி, மடாலயங்களை அழித்து விட்டனர்.  இதன் காரணமாகவும் புத்த மதம் தேய ஆரம்பித்தது. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவ்விரண்டும் பெருமதங்கள் என்ற நிலையை இழந்து விட்டன.

ஆதி சங்கரரின் காலத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்த போதிலும், வரலாற்று ரீதியாக பொயு 7ம் நூற்றாண்டே அவர் காலம் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளக்கூடியது. (மஹாப்பெரியவர்கள் உள்ளிட்ட காஞ்சி ஆச்சாரியார்கள் இக்காலகட்டத்தை ஏற்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியது, ஆனால் சங்கரர் ஸ்தபித்த மற்றொரு மடமான சிருங்கேரி இந்தக் காலத்தை ஏற்றுக்கொள்கிறது). எனவே, ஆதிசங்கரர் தனது விஜயத்தை ஆரம்பிக்கும்போது புத்த, ஜைன மதங்கள் மங்கி விட்டன. ஆனால் ஹிந்து மதம், சடங்குகளே பிரதானம் என்று கூறி தெய்வத்தை ஒப்புக்கொள்ளாத பூர்வ மீமாம்ஸகர்களிடமும், நரபலி போன்ற கொடூரமான வழக்கங்களைக் கொண்ட கபாலிகர்களிடமும், இன்னும் இது போன்ற பல குழுக்களிடமும் சிக்கியிருந்தது. எனவே ஹிந்து மதத்தை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அத்வைதம் என்னும் சித்தாந்தத்தையும் அவர் அளித்தார். இது வேதாந்தக் கருத்துகளின் அடிப்படையில் ஆனது. வேதாந்தங்கள் பிரம்மம் எனும் இறைவனை ஒப்புக்கொள்கின்றன. இது மீமாம்ஸர்களுக்கு ஒவ்வாத விஷயம் என்பதால் சங்கரரோடு அவர்கள் வாதில் ஈடுபட்டனர். மீமாம்ஸர்களின் குருவான 'குமரில பட்டரோடு விவாதிக்கத்தான் சங்கரர் முதலில் செல்கிறார். ஆனால், பௌத்தன் என்று பொய் கூறிய தன் செயலுக்கு வருந்தி தற்கொலை செய்யும் நிலையில் அவர் இருந்ததால், அவர் வழிகாட்டுதலின் படி மீமாம்ஸர்களின் மற்றொரு ஆச்சாரியரான  'மண்டன மிஸ்ரரோடு' வாதிட்டு அவரை சங்கரர் வென்றார். இது போலவே கபாலிகர்களுடனும் அவர் மோத வேண்டியிருந்தது. இப்படி ஹிந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களோடு அவர் வாதப்போர் செய்யவேண்டியிருந்ததே தவிர, பெரிய புத்த, ஜைனத்துறவிகளோடு அவர் வாதிட்டதாக குறிப்பேதும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, பல்வேறு பிரிவுகளாகக் கிடந்த ஹிந்து மதத்தை ஒன்றிணைத்து வேதாந்தத்தின் அடிப்படையில் அதைக் கட்டமைத்த பெருமைதான் சங்கரரைச் சேரும். புத்த, ஜைன மதங்களை அழித்தவராக அவரைக் கருதுவது தவறு.








Sunday 2 July 2017

சீனத் தமிழ் கல்வெட்டு

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பண்டைக்காலத்திலிருந்தே தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்து வந்தார்கள் என்று சங்க இலக்கியம் முதல் வரலாற்றுக் குறிப்புகள் வரை நமக்குத் தெரிவிக்கின்றன. சோழ அரசு சிறப்பான நிலையை ராஜராஜன் காலத்திலிருந்து அடையத் துவங்கியவுடன், வணிகக் குழுக்களின் வீச்சும் விரிவடைந்தது. நானா தேசத்து ஐந்நூற்றுவர் போன்ற குழுக்கள் வலுவடைந்தன.

இந்த வணிகக் குழுக்கள் வெறுமனே கப்பல் மூலம் சென்று துறைமுக நகரங்களில் வணிகம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தாம் செல்கின்ற நாடுகளில் குடியிருப்புகளையும் அமைத்து அந்தந்த நாடுகளில் உள்நாட்டு வணிகத்தையும் விரிவுபடுத்தினர். அப்படி அமைந்ததுதான், தென் சீனாவில், க்வாங்சூ மாகணத்தில், சுவான் சௌ என்ற இடத்தில் ஏற்பட்ட குடியிருப்பும். கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப,  அங்கே ஒரு கோவிலையும் அவர்கள் கட்டினர். அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்தவர் மங்கோலிய வம்சத்தவரும், செங்கிஸ்கானுடைய கொள்ளுப்பேரருமான குப்ளாய் கான். அவரைப் பற்றி மார்க்கோ போலோவின் மூலம் அறிந்துகொண்டிருப்பீர்கள். குப்ளாய் கானுடைய முழுப்பெயர் குப்ளாய் செக்ஸன் கான்.

அவருடைய அனுமதியின் பெயரிலேயே அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டப்பட்டது. அதற்கான அனுமதியை அங்கே கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு விளக்குகிறது.



ஹர : என்ற சிவ வழிபாட்டுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டு, சக சகாப்தம் 1203ம் (பொயு 1281) ஆண்டு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்திரா பௌர்ணமி நாள்), 'தவச்சக்கரவர்த்திகளான சம்பந்தப்பெருமாள்'  செகசை கானுடைய 'பிர்மானின்' (ஆணையின்) படி, அவரது 'திருமேனி நன்றாக' (உடல் நலத்திற்காக), 'உடையார் திருக்கதலீச்சரம் உடையநாயனார்' திருப்பணியைச் செய்ததாக குறிப்பிடுகிறது. செக்ஸன் கான் என்பதே செகசைகான் என்று மருவியிருக்கவேண்டும். கதலீச்சரம் என்பது அந்தக் கோவிலின் பெயராக இருந்திருக்கக்கூடும்.

இது போன்ற இன்னும் சில கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றைப் பின்னால் பார்ப்போம்.