சென்ற பகுதியில் கோவலனும் கண்ணகியும் மே 8, 130ம் ஆண்டு புறப்பட்டு கவுந்தியடிகளோடு மதுரை சென்றார்கள் என்று பார்த்தோம். ஆங்காங்கே தங்கி அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி அவர்கள் உறையூர் வந்து அங்கே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து மதுரை செல்லும் வழிகளைப் பற்றிக் கேட்கின்றனர். அவன் கொடும்பாளூரிலிருந்து சிவபெருமானின் சூலாயுதம் போல மூன்று வழிகள் மதுரை நோக்கிச் செல்கின்றன என்று கூறுகிறான். ஒன்று தற்போதைய ரயில் பாதை, அதாவது திண்டுக்கல் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழி, இரண்டு நத்தம், திருமாலிருஞ்சோலை வழியாக மதுரை செல்லும் வழி. மூன்று மேலூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதைய தேசிய நெடுஞ்சாலை). இதில் மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்து பயணிகள் செல்கின்றனர். இடைப்பட்ட காலக்குறிப்புகள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜூலை 11, 130
புகாரிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் பாண்டிய நாட்டில் உள்ள ஒரு பாலை நிலத்தை அடைகின்றனர். இது மேலூருக்கு அருகில் உள்ள பகுதியாக இருக்கக்கூடும். இன்னும் இது வறண்ட நிலமாகவே உள்ளது. காலை 'செங்கதிர் வெம்மையின் தொடங்க', வெய்யில் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள ஐயையின் கோட்டத்தை அடைகின்றனர். இது எந்தக் கோவில் என்பது ஆய்வுக்குரியது. அங்கே வேட்டுவ வரி நிகழ்கின்றது. மாலை வருகிறது. அதன்பின் கவுந்தியடிகள் கண்ணகியிடம் ஆறுதல் சொல்லத்தொடங்கி " வேனில் திங்களும் வேண்டுதி" என்கிறார். அதாவது இளவேனிலின் பொழுது கணவனைப் பிரிந்து இருந்த உனக்கு இந்த முதுவேனில் சந்திரன் வேண்டும் போலும் என்கிறார். இதிலிருந்து அது முதுவேனில் என்பது தெளிவாகிறது (ஆனி -ஆடி முதுவேனில் காலம்). இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால் 'குடும்பத்தில் குழப்பம்' வந்துவிடும் என்பதைக் கண்ட கோவலன் சரி கிளம்பலாம் என்று சொல்கிறான். இரவு முழுவதும் நடந்து காலையில்
"கான வாரணம் கதிர் வரவு இயம்ப" ....கோழி கூவும் வேளையில் "மறைநூல் வழக்கத்துப் புறைநூல் மார்பர் உறை பதி" - அந்தணர்கள் வாழும் ஒரு ஊரைச் சென்று அடைகின்றனர். வேதபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட திருவாதவூராகவே இது இருக்கக்கூடும்.
ஜூலை 12, 130
கண்ணகியையும் கவுந்தியடிகளையும் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு கோவலன் நீர்க்கடன்களை அளிக்க நீர்நிலை ஒன்றைத் தேடிச் செல்கிறான். அங்கே கௌசிகன் என்ற வேதியனைப் பார்க்கிறான். 'பாசிலைக் குருகின் பந்தலைப் பொருத்தி' - குருக்கத்தி இலைகளால் ஆன நிழலில் இருவரும் உரையாடுகின்றனர். பூக்களெல்லாம் உதிர்ந்ததால் குருக்கத்தி உள்ள நிழல், அதாவது முதுவேனில் என்பது இவ்வரிகளால் மேலும் உறுதியாகிறது. அதன்பின் கோவலன் திரும்பி வந்து பாணர்களோடு அன்றைய பொழுதைக் கழிக்கிறான். அவர்களிடம் மதுரை எவ்வளவு தொலைவு என்று கேட்க, நகரின் வாசம் இப்போது காற்றில் வருவதால் அருகில்தான் இருக்கிறது என்று பாணர்கள் கூற. 'முன் நாள் முறைமையின் இருந்தவ முதல்வியோடு' - முதல் நாளைபோலவே இரவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலையில் மதுரையின் எல்லையை அடைகின்றனர்.
ஜூலை 13, 130
ஊருக்கு வெளியில் உள்ள புறஞ்சேரி ஒன்றில் மூவரும் தங்குகின்றனர். சூரியன் உதிக்கிறது. கோவலன் கவுந்தியடிகளிடம் அனுமதி கேட்டு மதுரையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான். இங்கே இரண்டு குறிப்புகள் வருகின்றன.
"குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்" அதாவது மேல் திசையிலிருந்து காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கொடிகள் அசைகின்றன. ஆகவே தென்மேற்குப் பருவக்காற்று வேகமாக வீசும் ஆடி மாதம் அது என்பது தெளிவாகிறது. மேலும்
"வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்"
என்கிறார் இளங்கோவடிகள். வேனில் காலத்தில் அரசன் வேறு இடத்திற்குச் செல்லவிருக்கின்ற கடை நாள், அதாவது முதுவேனிலின் கடைசிப் பகுதி என்கிறார். ஆடி மாதக் கடைசி இது என்பது இந்த ஜூலை 13ம் தேதிக்குப் பொருந்தி வருகிறது. ஆவணி அவ்வருடம் 23ம் தேதி பிறந்துவிடுகிறது
மாலை வீடு திரும்புகின்ற கோவலனையும் கண்ணகியையும் ஆயர் குல மகளான மாதரியிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கிறார் கவுந்தியடிகள். மாதரி ஒரு வீட்டை அவர்களுக்கு ஒதுக்குகிறாள். கண்ணகி இரவு உணவு சமைத்துப் போடுகிறாள். அன்று இரவே கோவலன் சிலம்பை விற்கப் புறப்படுகிறான். பொற்கொல்லன் வஞ்சம் செய்ததும் அதனால் கோவலன் இரவோடு இரவாகப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்த விஷயம்.
ஜூலை 14, 130
காலையில் கண்ணகியிடம் செய்தி சொல்லப்படுகிறது. கோவலனைப் பார்த்துக் கதறுகிறாள். அதன்பின் அவன் உயிர்பெற்று வானுலகம் செல்கிறான். பிறகு கண்ணகி பாண்டியன் அரண்மனை செல்கிறாள். அங்கே வழக்கு நடைபெறுகிறது. உண்மை தெரிந்து பாண்டியனும் பாண்டிமாதேவியும் உயிர் துறக்கின்றனர். கண்ணகி வஞ்சினம் உரைக்கிறாள். அந்தநாள் தான்
ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து, அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளி வாரம்இது ஜூலை 14, 130க்கு பொருந்தி வருவதைப் பார்த்தோம். ஆகவே இதுவரை காலக்கணக்குச் சரியாகவே வருகிறது.
இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பொயு 130ல் நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இது சிலம்பின் காலத்தை சுட்டியது மட்டுமல்லாமல், சங்க காலப் பாண்டியர் வம்சத்தின் கால வரிசையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்