Skip to main content

மன்னன் மகளும் ஒரு கீழைச்சாளுக்கியச் செப்பேடும்

சாண்டில்யனுடைய 'மன்னன் மகள்' படித்திருக்கிறீர்களா ? அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக நான் கருதும் புனைவு அது. ராஜேந்திர சோழர் காலத்திய சோழ -சாளுக்கியச் சண்டைகளையும் சோழர்களின் கங்கைப் படையெழுச்சியையும் தொட்டுச் செல்லும் அந்தக் கதையின் நெருடல் கதாநாயகனும் நாயகியுமே கற்பனைப் பாத்திரங்களாக இருப்பதுதான். தற்காலத்தைய  'வரலாற்றுப் புனைவாளர்கள்' பல நிகழ்வுகளையே 'ரூம் போட்டு' அடித்து விடுவதைப் பார்க்கும் போது அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைதான். நிற்க. இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்தக் கதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய அப்பாவுக்கு இதில் வரும் பிரம்மமாராயன் பாத்திரம் மிகவும் பிடித்த ஒன்று. இத்தனைக்கும் பிரம்மமாராயனை மிகவும் அவசரபுத்திக்காரனாகவும் முன்கோபியாகவும் படைத்திருப்பார் சாண்டில்யன். வேங்கி நாட்டில் சோழ நாட்டுத் தூதுவர் பதவியில் இருப்பவன் இந்த பிரம்மமாராயன். அங்கே  ராஜேந்திர சோழரின் மருமகனான ராஜராஜ நரேந்திரனை அரியணையில் அமர்த்தும் முயற்சியில் கதாநாயகனான கரிகாலனுக்கும் பிரம்மமாராயனுக்கும் பல சச்சரவுகள் ஏற்படும். பல சமயங்களில் இருவரும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். ஆனாலும் பிரம்மமாராயனும் சோழ நாட்டிற்கு விசுவாசமானவன் தான். அவனைப் பற்றி சாண்டில்யனே இந்தக் குறிப்பை அளித்திருப்பார். 'பிரம்மமாராயன் முன்கோபியாக இருந்தாலும் ராஜவிசுவாசத்தில் வந்தியத்தேவருக்கோ மற்ற யாருக்கோ சளைத்தவன் அல்ல. கரிகாலன் மேல் உண்டான வெறுப்பு அவனை கரிகாலனோடு மோதச்செய்தது' என்பது போல அவனைப் பற்றி எழுதியிருப்பார். பிற்பாடு அரையன் ராஜராஜன் தலைமையிலான கங்கைப் படையெடுப்பிலும் இந்தப் பிரம்மமாராயன் பங்குகொள்வான். 'அந்தணனா அரக்கனா' என்று பார்ப்போர் வியக்கும் படியாக எதிரிகளைக் கொன்று குவிப்பான். அவனை  'ராஜராஜப் பிரும்ம மகராஜ்' என்று சோழர்கள் புகழ்வதாகவும் சாண்டில்யன் குறிப்பிட்டிருப்பார். தவிர, பின்னாளில் வேங்கிப் போரில் சோழர்களுக்காகப் போரிட்டு பிரம்மமாராயன் உயிர் துறந்ததாகவும் அவர் குறித்திருப்பார். 

எந்தச் சரித்திரப் புனைவு படித்தாலும் அதிலுள்ள பாத்திரங்களில் கற்பனைப் பாத்திரங்கள் யார் யார். சரித்திரத்தில் இருந்தோர் யார் யார் என்று அறிவதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு. சரித்திரப் பாத்திரங்கள் யார் என்று தெரிந்தால் அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் நிகழ்வுகள் உண்மைதானா என்பதையும் தேடிப்படிப்பேன். எந்தப் புத்தகங்களில் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது என்று சாண்டில்யனே பல முறை அடிக்குறிப்பு கொடுத்திருப்பார். ஆனால் இந்தப் பிரம்மமாராயனைப் பற்றிய தகவல்கள் சுத்தமாக இல்லை. ராஜேந்திரருடைய அதிகாரிகளாக கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயர், அவருடைய மகனான அருண்மொழியான உத்தமச் சோழ பிரம்மராயன் ஆகியோரைப் பற்றி பண்டாரத்தார் குறித்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் பிரதான படைத்தலைவர்கள். அதிலும் கிருஷ்ணன் ராமன், ராஜராஜன் காலத்திலிருந்து சோழர் படைத்தலைவராக இருந்தவர். ஆகவே அவர்கள் வேங்கி நாட்டில் இருந்திருக்கச் சாத்தியம் இல்லை. அடுத்து உத்தமச் சோழ மிலாடுடையான் என்ற அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடும் பண்டாரத்தார் அவனும் இராசராச பிரம்மமாராயன், உத்தம சோட சோடகோன் ஆகியோரும் மேலைச்சாளுக்கியர்களுக்கு இடையேயான போரில் உயிர்துறந்ததாக ஒரு வரியில் குறிப்பிட்டுச் சென்றுவிடுகிறார். இந்த பிரம்மமாராயனைத்தான் சாண்டில்யன் தன் கற்பனையை கொஞ்சம் ஓடவிட்டு மன்னன் மகளில் அந்தப் பாத்திரமாகப் படைத்திருக்கிறார் என்று விட்டுவிட்டேன். 

அண்மையில் வேறு ஒரு விஷயத்தைத் தேடிக்கொண்டிருந்த போது, 'Epigraphia Indiaca Vol XXIX' இல் கீழைச்சாளுக்கியர்களின் கலிதண்டிச் செப்பேடுகளை பற்றிப் படித்தேன். தெலுங்கு லிபியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் உள்ள இந்தச் செப்பேட்டில் ராஜராஜ நரேந்திரனால் அளிக்கப்பட்ட ஒரு தானத்தைப் பற்றிய விவரம் உள்ளது. இந்த ராஜராஜ நரேந்திரன், கீழைச்சாளுக்கிய அரசனான விமலாதித்தனுக்கும் ராஜராஜ சோழனின் மகள் குந்தவைக்கும் பிறந்தவன். ராஜேந்திரனின் மகளான அம்மங்கை தேவியின் கணவன். (முதல் குலோத்துங்கனின் தந்தை)  இந்தச் செப்பேடு வேங்கி நாட்டில் நடந்த வாரிசுரிமைப் போரைப் பற்றிப் பேசுகிறது.


வேங்கி அரியணைக்கு ராஜராஜ நரேந்திரனைத்தவிர  விஜயாதித்தன் என்பவனும் போட்டியிட்டான். விஜயாதித்தனை மேலைச்சாளுக்கியர்கள் ஆதரித்தனர். ஆகவே தன் மருமகனைக் காக்க ராஜராஜ பிரும்ம மகராஜ் என்பவனை ராஜேந்திரர் வேங்கிக்கு தூதனாக அனுப்பினார். அவன் வேங்கி நாட்டை புதையல் ஒன்றைக் காக்கும் நாகம் போல காத்துவந்தான் (வரிகள் 77 - 85). ராஜராஜ நரேந்திரனை அகற்ற கர்நாடகப் படை ஒன்று வேங்கி நோக்கி வந்தது. அந்தப் படையோடு சோழர்களின் சேனை   விஜயவாடாவுக்கு அருகில் கலிதண்டி என்ற இடத்தில் மோதியது. 

பிரம்ம மகாராஜோடு சோழ தளபதிகளான உத்தம சோட சோடகோனும் உத்தமச் சோழ மிலாடுடையானும் சேர்ந்து கொண்டு சண்டையிட்டனர். சோழர் படைகள் வெற்றியடைந்தாலும் பிரம்மமகராஜும் மற்ற இரு தளபதிகளும் போரில் உயிர்துறந்தனர் என்று அந்தச் செப்பேடு தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்தப் போரைப் பற்றி சோழர் ஆவணங்களிலோ ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியிலோ தகவல் ஏதும் இல்லை என்பதுதான். இந்தப் போரில் உயிர் துறந்த சோழப் படைத்தலைவர்கள் மூவருக்கும் ராஜராஜ நரேந்திரன் பள்ளிப்படைக் கோவில்கள் அமைத்தான் என்றும் அந்தக் கோவில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் இன்னின்ன என்றும் இந்த கலிதண்டிச் செப்பேடு பட்டியலிடுகிறது. இன்றும் இந்த மூன்று கோவில்களும் அந்த ஊரில் உள்ளன. 

மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து பிரம்மமாராயன் ஒரு முக்கியமான படைத்தலைவனாகவும் வேங்கியில் சோழர்களின் தூதுவனாகவும் இருந்ததும், அவன் தலைமையில் தான் வேங்கிப் போர் நிகழ்ந்தது என்றும் தெளிவாகிறது. 'ராஜராஜ பிரும்ம மகராஜ்' என்ற பட்டத்தையும் சாண்டில்யன் இந்தச் செப்பேட்டில் இருந்துதான் எடுத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிவிட்டது. சோழர் ஆவணங்கள் பெரிதாகக் குறிப்பிடாத ஒரு செய்தியை ஒரு தெலுங்குச் செப்பேட்டிலிருந்து எடுத்து தன்னுடைய புனைவில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட சாண்டில்யனின் திறமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை !!

Comments

  1. Excellent...Chandilyan had a knack of presenting history with his own imagination...though his descriptions were a little long especially the romantic parts the history was intact...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ