Wednesday 3 March 2021

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு யாருடைய காலத்தியது ?



புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் குடுமியான்மலை. இந்த ஊரில் உள்ள குன்றில் குடுமித்தேவர் என்ற பெயரில் உள்ள சிவபெருமானின் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள் புகழ் பெற்றவை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் அளிந்த நிவந்தங்களைப் பற்றிய கல்வெட்டுகள் குடுமித்தேவர் கோவிலிலும் அதை அடுத்துள்ள குடைவரைக் கோவிலிலும்  உள்ளன.  அவற்றில் மிகவும் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது குடைவரைக்கோவிலில் காணப்படும் இசைக்கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் இருந்துவரும் இசை மரபினுடைய ஆழத்தைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அது பற்றிய விவரங்களை விரிவாக இன்னொரு சமயம் ஆராயலாம். 

அந்த இசைக் கல்வெட்டும் குடைவரையும் யார் காலத்தியது என்பது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான திரு. மீனாட்சி போன்றவர்கள் இது மகேந்திர பல்லவன் காலத்தியது என்றும் அவனால் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, இக்கல்வெட்டு பல்லவ கிரந்தத்தால் அமைந்துள்ளது, மகேந்திர பல்லவன் இசையில் தேர்ச்சி பெற்றவன், இக்கல்வெட்டின் அருகே பரிவாதினி என்ற யாழின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. அதிலும் தேர்ச்சி பெற்றவன் மகேந்திரன் போன்றவை ஆகும். 

ஆனால் பேராசிரியர் மகாலிங்கம், வெங்கையா ஆகியோர் இதிலிருந்து மாறுபடுகின்றன. இதைப் பற்றிய விவரங்களை ஆராய்ந்ததிலிருந்து இவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக்கவே வேண்டியிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 

1) குடைவரைக் கோவிலின் அமைப்பு, அதன் தூண்கள், துவாரபாலகர்கள் ஆகியவை அமைந்துள்ள முறை மகேந்திர பல்லவனின் குடைவரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. பாண்டியர் பாணிக் கட்டடக் கலையை அவை  பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. 

2) உதாரணத்திற்கு இசைக் கல்வெட்டிற்கு அருகிலுள்ள விநாயகர் சிலையைப் பார்ப்போம். வலது காலை ஊன்றி, இடது காலை மடித்து கையில் மோதகத்துடன் காணப்படும் இத்திருமேனியை போன்ற விநாயகர்களை பல பாண்டியர் குடைவரைகளில் காணலாம். ஆகவே இது பாண்டியர் பாணி என்பது ஊர்ஜிதமாகிறது. 


குடுமியான் மலை விநாயகர்


திருமலாபுரம் குடைவரை

3) இந்தக் கோவிலில் பல்லவர் கல்வெட்டுகள் ஏதுமில்லை. மாறாகப் பாண்டியன் மாறன்  சடையன், ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் போன்ற இடைக்காலப் பாண்டியர்களுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

4) மகேந்திரன் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களில் பலரும் இசை ஆர்வம் கொண்டவர்களே. உதாரணமாக வேள்விக்குடிச் செப்பேடுகள் பாண்டியன் நெடுஞ்சடையனை கீத கிந்நரன் என்று அழைக்கின்றன. 

5) பரிவாதினி என்ற யாழ் மகேந்திரனால் மட்டும் பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதும் சரியல்ல. காளிதாசனின் ரகுவம்சத்திலும், பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்திலும் பரிவாதினி என்ற யாழ் இடம்பெற்றுள்ளது. 

6) இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு, மகேந்திரனை அவன் வென்றவுடன் காவிரியில் யானைகளால் பாலம் அமைத்து சோழ, பாண்டியர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறது. ஆகவே காவிரி ஆறே மகேந்திரனின் தெற்கெல்லையாக இருந்ததை இது தெளிவாக்குகிறது. குடுமியான்மலை, திருமெய்யம் போன்ற இடங்களில் பாண்டியர்களின் குடைவரைகள் பெரும்பாலும் காணப்படுவது இதற்கு ஆதரவு சேர்க்கிறது. 

அப்படியானால், இந்தக் கல்வெட்டு யாருடையது என்ற கேள்வி எழுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதியில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம் இதை ஓரளவு தெளிவுபடுத்துகிறது. 

"ருத்ராச்சர்ய சிஷ்யேண பரம மாஹேஸ்வரேண ரா(க்ஞா) சிஷ்ய ஹிதார்த்தம் க்ருதா ஸ்வராகமா"

அதாவது ருத்ராச்சார்யரின் சீடனும் பரம மாஹேஸ்வரனுமான அரசன் ஒருவன், மாணவர்களின் பயன்பாட்டுக்காக இந்த இசைக் கல்வெட்டை வடித்தான் என்கிறது இந்த வரிகள். மகேந்திர பல்லவன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினாலும், அவன் மாஹேஸ்வர சைவத்தைப் பின்பற்றியதற்கான சான்று இல்லை. அதன் பிரிவான கபாலிகத்தை அவன் மத்த விலாசப் பிரகசனத்தில் கிண்டல் செய்வதைப் பார்க்கலாம். ஆகவே மாஹேஸ்வரர்கள் என்று கூறப்படும் பாசுபத சைவப் பிரிவைச் சேர்ந்த மன்னன் ஒருவனே இதை வடித்திருக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் பலர் பாசுபத சைவத்தை போற்றினார்கள் என்பது தெளிவு. மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் குடைவரையில் பாசுபதத்தைத் தோற்றுவித்த லகுலீசர் சிற்பம் அமைத்திருப்பது தெரிந்த விஷயம். 

ஆகவே பாண்டிய மன்னன் ஒருவனால் இந்தக் கல்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பராந்தக நெடுஞ்சடையன் தன்னை 'பரம வைஷ்ணவன்' என்று சீவரமங்கலச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக்கொள்கிறான். அவன் பெயரானான முதலாம் வரகுண பாண்டியன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். பல சிவன் கோவில்களுக்குத் திருப்பணி செய்தவன். மாறன் சடையன் என்ற பெயரில் அவனுடைய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. ஆகவே இந்தக் கல்வெட்டு அவனால் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் கல்வெட்டுகள் இங்கே இருந்தாலும் அவன் வைணவ நெறியைப் பின்பற்றியவன். பெரியாழ்வாரின் சீடன். ஆகவே இங்கே பரம மாஹேஸ்வரன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்வது மாறன் சடையானான வரகுண பாண்டியன் என்றே முடிவு செய்யலாம். இதிலிருந்து இக்கல்வெட்டு பொயு 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெளிவாகிறது 

படங்கள் நன்றி : இணையம் 


 



No comments:

Post a Comment