Wednesday 19 July 2017

ஆதி சங்கரரின் பணிஆதி சங்கரரைப் பற்றிப் பரப்பப்படும் பல தவறான செய்திகளில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் புத்த, ஜைன சமயங்களை அழித்தார் என்பதுதான். நேற்று ஒரு டிவிட்டர் இழையிலும் இதுபோன்ற ஒரு கருத்து வந்ததைக் காண நேர்ந்தது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பது வெள்ளிடைமலையாகப் புலப்படும்.

முதலில் புத்த, ஜைன மதங்களின் காலத்தை எடுத்துக்கொள்வோம். பொயுமு நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்த மதங்கள் வலுப்பெறத்துவங்கின. ஜைன மதம் வணிகர்களாலும், சந்திரகுப்த மௌரியர், அஜாதசத்ரு, காரவேலர் ஆகிய அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது. இன்றும் வட நாட்டில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெரு வணிகர்கள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போல, புத்த மதம் அசோகச்சக்கரவர்த்தியின் காலத்தில் பெரும் சிறப்பை அடைந்தது. ஆனால், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து இந்த இரண்டு மதங்களும் பல சிக்கல்களைச் சந்தித்தன. ஜைனர்களின் கடுமையான கட்டுப்பாடுகள், சடங்குகளைத் தாங்காத மக்கள் அதிலிருந்து விலகத் துவங்கினர். புத்த மதத்திற்கும் அரசர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்தியாவில் அதன் செல்வாக்கு குறையத் துவங்கியது. அடுத்த வந்த குப்தர்கள், ஹிந்து சமயத்தவர்கள். இந்தக் காலத்தில் வேதச் சடங்குகளை முன்னிருத்தும் 'பூர்வ மீமாம்ஸை' என்ற கோட்பாடு வேகமாகப் பரவத் தொடங்கியது. இதை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் 'குமரில பட்டர்'. பௌத்தர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவலால், பௌத்த மடமொன்றில் துறவியாக இணைந்து அவர்களது கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு அவர்களையே வாதப் போரில் தோற்கடித்து மீமாம்ஸையை நிலைநாட்ட ஆரம்பித்தார் அவர். போதாக்குறைக்கு, வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்து வந்த ஹூணர்கள், புத்த மதத்திற்குப் பெரும் எதிரிகளாக இருந்து, அதைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்தி, மடாலயங்களை அழித்து விட்டனர்.  இதன் காரணமாகவும் புத்த மதம் தேய ஆரம்பித்தது. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவ்விரண்டும் பெருமதங்கள் என்ற நிலையை இழந்து விட்டன.

ஆதி சங்கரரின் காலத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்த போதிலும், வரலாற்று ரீதியாக பொயு 7ம் நூற்றாண்டே அவர் காலம் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளக்கூடியது. (மஹாப்பெரியவர்கள் உள்ளிட்ட காஞ்சி ஆச்சாரியார்கள் இக்காலகட்டத்தை ஏற்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியது, ஆனால் சங்கரர் ஸ்தபித்த மற்றொரு மடமான சிருங்கேரி இந்தக் காலத்தை ஏற்றுக்கொள்கிறது). எனவே, ஆதிசங்கரர் தனது விஜயத்தை ஆரம்பிக்கும்போது புத்த, ஜைன மதங்கள் மங்கி விட்டன. ஆனால் ஹிந்து மதம், சடங்குகளே பிரதானம் என்று கூறி தெய்வத்தை ஒப்புக்கொள்ளாத பூர்வ மீமாம்ஸகர்களிடமும், நரபலி போன்ற கொடூரமான வழக்கங்களைக் கொண்ட கபாலிகர்களிடமும், இன்னும் இது போன்ற பல குழுக்களிடமும் சிக்கியிருந்தது. எனவே ஹிந்து மதத்தை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அத்வைதம் என்னும் சித்தாந்தத்தையும் அவர் அளித்தார். இது வேதாந்தக் கருத்துகளின் அடிப்படையில் ஆனது. வேதாந்தங்கள் பிரம்மம் எனும் இறைவனை ஒப்புக்கொள்கின்றன. இது மீமாம்ஸர்களுக்கு ஒவ்வாத விஷயம் என்பதால் சங்கரரோடு அவர்கள் வாதில் ஈடுபட்டனர். மீமாம்ஸர்களின் குருவான 'குமரில பட்டரோடு விவாதிக்கத்தான் சங்கரர் முதலில் செல்கிறார். ஆனால், பௌத்தன் என்று பொய் கூறிய தன் செயலுக்கு வருந்தி தற்கொலை செய்யும் நிலையில் அவர் இருந்ததால், அவர் வழிகாட்டுதலின் படி மீமாம்ஸர்களின் மற்றொரு ஆச்சாரியரான  'மண்டன மிஸ்ரரோடு' வாதிட்டு அவரை சங்கரர் வென்றார். இது போலவே கபாலிகர்களுடனும் அவர் மோத வேண்டியிருந்தது. இப்படி ஹிந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களோடு அவர் வாதப்போர் செய்யவேண்டியிருந்ததே தவிர, பெரிய புத்த, ஜைனத்துறவிகளோடு அவர் வாதிட்டதாக குறிப்பேதும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, பல்வேறு பிரிவுகளாகக் கிடந்த ஹிந்து மதத்தை ஒன்றிணைத்து வேதாந்தத்தின் அடிப்படையில் அதைக் கட்டமைத்த பெருமைதான் சங்கரரைச் சேரும். புத்த, ஜைன மதங்களை அழித்தவராக அவரைக் கருதுவது தவறு.
2 comments:

 1. /ஜைனர்களின் கடுமையான கட்டுப்பாடுகள், சடங்குகளைத் தாங்காத மக்கள் அதிலிருந்து விலகத் துவங்கினர்/

  ஜைனத்தின் கடுமையான கட்டுப்பாடு என்று எதைச் சொல்கிறீர்கள்?
  சடங்கு தவிர்த்தல் (எளிமையாக்குதல்) அன்றோ ஜைனத்தின் usp.

  துறவிகளுக்குத் தானே கட்டுப்பாடு.
  எல்லா மதங்களிலும் பூசகர்களுக்கு moderatioனே வாழ்முறையாக விதிக்கப்பட்டிருக்கிறது அல்லவா.

  மக்கள் ஒரு மதத்திலிருந்து விலகி இன்னொன்றுக்கு மாறினர் - என்ற கருத்தையே 'ஒரு கிள்ளு உப்புடன்' எடுத்துக்கொள்ளவேண்டும். என்றுமே அவர்கள் தங்கள் மூதாதையர்கள் வழிபாட்டு முறைகளை முற்றிலும் புறக்கணித்துவிடவில்லை.

  மக்கள் எல்லா துறவிகளுக்கும் உணவளித்து போஷித்தார்கள்.

  i.e. துறவிகளே ஒற்றை மதத்தைச் சேர்ந்தவர்கள்.
  சமூகத்தில் பல ஜாதிகளில் அப்படிப்பட்ட தீர்க்கமான பாகிபாடுகள் இல்லாமலே இருந்திருக்கும்.

  நீங்கள் சொல்லும், அரசனின் பேணுதல் இல்லாமல் தான் அழிதல் சாத்தியம். அதுவும் தளர்தல், கரைதல், உரையாடல் மூலம் மையப்புள்ளி மாறுதல் போன்ற 'மெதுவான' மாற்றங்கள் மூலமாகவே நடந்தேறியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

  சடங்கு தவிர்த்த தூய-தத்துவ-அறத்தொகையாக இருக்க முயலும் எந்த 'மதத்து'க்கும் அல்பாயுசு தான்.

  மத்தபடி நாம் கவனிக்கக்கூடிய அளவு 'வேகமாக' நிகழ்ந்த மாற்றங்கள், அரசர்களின் கோபாவேசத்தால் வருபவையே.

  ReplyDelete
 2. அசோகரையும் காரவேளரையும் நீங்கள் குறிப்பிட்டிருந்ததால் ஒரு கமெண்ட்.

  சென்ற செப்டம்பர் புவனேஸ்வர் சென்றிருந்தேன்.
  முதல் நாள் தௌலிகிரி. கலிங்கப்போர் நடந்த தலம். மலை மீது இப்போது ஜப்பானியர் கட்டிய ஒரு ஷாந்தி ஸ்தூபா.
  மலையடிவாரத்தில் - 'ரத்த ஆறாக ஓடிய' - தயா நதி.

  அந்த மலையில் தான் 'பிரஜைகளைக் தன் மக்களாக பார்த்துக்கொள்வேன்' என்று 2200 வருடம் முன்பு ஒரு அரசன் பொரித்த கல்வெட்டு. (அதில் ஒரு சில வரிகள் அசோகரின் veiled threat என்று சொல்பவர்கள் உண்டு).

  அதற்குப் பின் மூன்று தலைமுறைகள் கூட தாங்கவில்லை மௌரிய அரசு.

  காரவேளர் மீண்டும் கைப்பற்றி புவனேஸ்வரின் மறுகோடியில் உதயகிரி கல்வெட்டின் மீது யானைவடிவ குகையில் (ஹாதிகும்பா) கல்வெட்டு பொரிக்கிறார்.

  அந்த உதயகிரி மலையைத் தேர்ந்தெடுத்தது தற்செயல் அல்ல என்று தான் நினைக்கத்தோன்றும்: உதயகிரியிலிருந்து பார்த்தால் தௌலிகிரி தெளிவாகத் தெரிந்தது :-)

  ReplyDelete