ராமனுடைய வில்லின் திறம் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். அவற்றில் எல்லாம் உச்சமானது மூலபல சேனை வதத்தைப் பற்றிய பகுதிதான் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அந்தச் சேனையின் எண்ணிக்கையும் வலுவும் அப்படிப்பட்டது. மூலபல அரக்கர் சேனையை தனியொருவனாக எதிர்த்து நின்று ராமன் முறியடித்த விதத்தைக் கம்பன் சொல்லியபடி விளக்குவதென்றால் ஒரு பதிவு அல்ல, ஒரு நூறு பதிவும் போதாது. இருப்பினும் அதைச் சுருங்கக் காண்போம்.
இந்திரஜித்தின் வதத்தை அடுத்து சொல்லொணாத் துயரம் அடைந்த ராவணன் சீதையை வெட்டிப்போட விரைகிறான். அப்போது அவனைத் தடுத்த அமைச்சனான மகோதரன், அச்செயலால் நம்மீது பழிதான் வரும் என்றும், எல்லா உலகிலும் உள்ள அரக்கர்களைத் திரட்டி ராமனை வெல்லும் வழி காணுவோம் என்றும் கூறுகிறான். இந்த அரக்கர்களின் சேனைதான் மூல பல சேனை என்று அழைக்கப்பட்டது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகிலும் கீழே உள்ள ஏழு உலகிலும் உள்ள அரக்கர்கள் அனைவரையும் கொண்டது இந்தச் சேனை. அவர்கள் அனைவரையும் சம்மன் அனுப்பி மகோதரன் வரவழைத்தான். அந்தச் சேனையில் சாகத்தீவினர், குசைத்தீவினர், இலவத் தீவினர், அன்றில் தீவினர், பவளக்குன்றினர், கந்தமாதானத்தோர், மலையத்து மறவோர், புட்கரத்தீவினர், இறலித்தீவினர், பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று பல பிரிவினர் இருந்தனராம்.
அவர்களைக் கண்ட ராவணன் அவர்களது எண்ணிக்கை யாவது என்று மகோதரனிடம் கேட்டான். அந்த அரக்கர் சேனையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடக்க இயலாது என்று மகோதரன் பதிலுரைத்தான். சரி, ஆட்களைத்தான் எண்ண முடியவில்லை, படைத்தலைவர்களையாவது கொண்டுவாருங்கள் என்று ராவணன் தன் தூதர்களை அனுப்பி அந்தச் சேனையின் தலைவர்கள் எல்லாரையும் தருவித்தான்.
அவர்களிடம் ராம,லட்சுமணர்களையும் வானரவீரர்களையும் வெல்ல வேண்டிய காரணத்தைக் கூறியதும், அவர்கள் வெடிச்சிரிப்புச் சிரித்தனர்.
உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரோடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை?
ஏம்பா, எங்களை நீ கூப்பிட்டது உலகை ஆதிசேடனின் தலைமேல் இருந்து எடுக்கவோ, ஏழு மலைகளை வேரோடு பிடுங்கி எறியவோ, கடலை உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவோ என்று பார்த்தால் போயும் போயும் மலர்களோடு இலைகளை உண்டு தின்னும் குரங்குகளைக் கொல்லச்சொல்கிறாயே என்று அவர்கள் ஆத்திரப்பட்டனர்.
அதன்பிறகு ராவணன் ராம, லட்சுமணர்களின் வீரத்தைப் பற்றியும் அனுமன் முதலிய வானரர்களின் வலிமையைப் பற்றியும் விளக்கிக்கூற அவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அந்தச் சேனா வீரர்களிடம் நீங்கள் ராம, லட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி ராவணனும் போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்திற்கு வந்த அந்தச் சேனையில், எத்தனை மேகங்கள் இருந்தனவோ அத்தனை யானைகள் இருந்ததாம், எத்தனை யானைகள் இருந்ததோ அவற்றிற்கு ஈடாக தேர்கள் இருந்தனவாம், உலகில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கைக்கு ஈடாக குதிரைகள் இருந்தனவாம். இப்படிப் பெருங்கூட்டமாக வந்த இந்தச் சேனையைக் கண்டு வானரங்கள் போர்க்களத்தை விட்டு சிட்டாகப் பறந்து விட்டன. தொண்டர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்படி இருந்திருக்கிறார்கள். ராம, லட்சுமணர்களுடன் அனுமன், சுக்ரீவன், அங்கதன் ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அரக்கர் சேனையைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கூறி அவர்களை அழைத்துவர ராமன் அங்கதனை அனுப்பினான். ஒருவழியாக அங்கதன் அவர்களை அழைத்துவந்ததும் அவர்களைக் காக்க லட்சுமணனையும் அவனுக்குத் துணையாக அனுமனையும் அனுப்பிவிட்டு, தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மூலபல சேனையை எதிர்த்து நின்றான். துணை ஏதும் வேண்டாத தோள் வலியன் அல்லவா அவன்.
ராமனின் வில் எழுப்பிய ஒலியைக் கண்டு அச்சமுற்ற அரக்கர்கள், அவன் தனியே வந்து நின்ற கோலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள்,
விரைந்து புள்ளின்மீது விண்ணுளோர்களொடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான்
முப்புரங்களை எரித்த சிவனுக்கு தேர் இருந்தது, தேவர்களுக்கும் அவர்களுக்குரிய வாகனங்கள் இருந்தன, விஷ்ணுவுக்கு கருடன் வாகனமாக இருந்தான். ஆனால் இவன் மட்டும் தனியே வந்து எதிர்க்கிறானே என்று வியந்தனராம் அவர்கள்.
"வேங்கை மவன் ஒத்தையில நிக்கான்' என்றெல்லாம் வசனம் பேசாமல் தன்னைச் சூழ்ந்த அரக்கர் படைமீது ராமன் தனது பாணங்களைத் தொடுத்தான்.
ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும்,ஆடல் மா
மீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வெவ்
வாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின்மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான்.
அரக்கர் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் திரிந்து அதிவேகமாக தமது பாணங்களை ராமன் விட்டதால் அரக்கர் படை பெருமளவில் அழிந்தது. இருந்தாலும் பல்லாயிரம் கோடி வீரர்களைக் கொண்ட சேனை அணி அணியாக வந்து ராமனை எதிர்த்தது.
அரக்கர் சேனை அயராமல் வந்து வந்து தாக்கினாலும், ராமன் தொடர்ந்து கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் தோன்றி தனது அம்புகளினால் அரக்கர்களைக் கொன்று குவித்தான். ஒருவனாக இருந்த ராமன் இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் தோன்றுவதைக் கண்டு குழப்பமடைந்த அரக்கர்களும் தங்களையே ஒருவருக்கொருவர் வெட்டிக்கொன்று அழிந்தனர். இப்படியாக மூலபல சேனை முற்றிலுமாக அழிந்தது.
ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே
ஆயிரம் ஆனைகள், பதினாயிரம் தேர், குதிரைகள் ஒரு கோடி, படைவீரர் ஆயிரம் பேர் இறந்துபட்டால், போர்க்களத்தில் ஒரு கவந்தம் எழுந்து கூத்தாடுமாம். அப்படி ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் ராமனுடைய வில்லில் கட்டியிருக்கும் மணி ஒன்று கணீர் என்று ஒலிக்குமாம். இந்தச் சேனையை ராமன் அழித்த போது ஏழரை நாழிகை (சுமார் மூன்று மணி நேரம்) அந்த மணி இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்ததாம். அத்தனை பெரிய சேனை, அத்தனை அரக்கர்கள்.
என்னே ராமனின் வில் திறம் !!
நல்ல பதிவு.
ReplyDeleteஏனோ இப்பதிவைப் படிக்கும்போது Game of Thrones நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட இதே போல ஒரு காட்சி அதிலும் உள்ளது. காண்க இப்படத்தை: https://giphy.com/gifs/everything-shot-favourite-AuZBvFodG7nqg
GoT மற்றும் மகாபாரதம்/இராமாயணம் என்று ஒப்பிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரை கூட எழுதலாம். நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
> அனைவரையும் சம்மன் அனுப்பி மகோதரன் வரவழைத்தான்
சம்மன் ? summon ? ஆங்கிலச் சொல் தவிர்த்திருக்கலாமே ? வடமொழியிலும் உள்ளதா ?
Arumai ayya .mei silirthadu , kavantha padali padikum podu
ReplyDelete