Skip to main content

தமிழகத்தில் சக்தி வழிபாட்டின் தொன்மை

தமிழ்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் தற்போது கீழடி ஒன்றே பிரதானமாக முன்னிருத்தப் படுகிறது. மற்றவையெல்லாம் ஏதோ காரணமாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி அதிகமாகப் பிரபலமாகாத கல்வெட்டு ஒன்றினைப் பற்றினைப் பற்றி இந்த நவராத்திரி நன்னாளில் பார்ப்போம். 

தமிழகத்தில் சக்தி வழிபாட்டினைப் பற்றி அறிய ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியத்திலிருந்து தொடங்கி சிலப்பதிகாரம் வரை பல்வேறு வடிவங்களில் சக்தி போற்றப்படுகிறாள். ஆனால் இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏதேனும் உண்டா என்ற கேள்வி பலகாலமாக இருந்து வந்தது. அதற்கு விடையாகக் கிடைத்தது திருப்பரங்குன்றத்தில் கண்டறியப்பட்ட ஒரு கல்வெட்டு. அதைப் பார்ப்பதற்கு முன்னால் திருப்பரங்குன்றம் மலைக்கோவிலைப் பற்றிய ஒரு சிறிய புராணக்கதை. இதைப் படிக்க விரும்பாதவர்கள் இரண்டு பாரா தாவிவிடவும். 

திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் மிகப்பழமையான இடங்களில் ஒன்று. மதுரையின் புறநகர்ப்பகுதியாக கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஊர் இருந்திருக்கிறது. முருகப்பெருமானின் முதல்படை வீடாகக் குறிப்பிடப்படும் இந்த ஊரைப் பற்றி சங்க இலக்கியச் சான்றுகள் அதிகம். அதிகம் பிரபலமான அடிவாரக் குடைவரைக் கோவிலைத் தவிர, இந்தக் குன்றின் மேலே காசி விசுவநாதார் கோவில் ஒன்றும் உண்டு. அது தொடர்பான கதைதான் இது. மதுரைச் சங்கத்தின் தலைமைப் புலவரான நக்கீரர் சிவபக்தர். திருப்பரங்குன்றம் மலையை அடுத்த சரவணப்பெய்கையின் கரையில் தவம் செய்யும் வழக்கம் அவருக்கு உண்டு. அப்படி தினமும் தன் தவத்தைக் காலையில் முடித்துக்கொண்டு இலிங்க வடிவமான மலையைச் சுற்றிவிட்டு, அங்கே குடிகொண்டிருக்கும் முருகனைத் தரிசிக்காமல் சென்றுவிடுவார். இதைக் கண்ட முருகன் அவரிடம் விளையாட நினைத்தான். பொய்யாமொழிப் புலவர் போல தகப்பனை மட்டும் வழிபட்டு தன்னைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும் நக்கீரரை ஆட்கொள்ள நினைத்தான் முருகன். அதனால் தன்னுடைய கணங்களான அண்டராபரணரையும் உக்கிரமூர்த்தியையும் சரவணப்பெய்கைக்கு அனுப்பி வைத்தான். (இவர்கள் இருவரையும் திருப்பரங்குன்றம் கோவிலில் கம்பத்தடி மண்டபத்திலிருந்து ஏறும் படிகளின் இருபுறமும் காணலாம்) 

இரு கணங்களும் நக்கீரர் தவம் செய்யும் இடத்திற்குச் சென்றனர். அவரின் தவ வலிமையால் அவரை நெருங்க முடியாமல் இருவரும் தவித்தனர். அப்போது அண்டராபரணர், மரத்திலிருந்து ஒரு இலையைக் கிள்ளி அதன் ஒரு பகுதியை நீரிலும் மற்றொன்றை நிலத்திலும் போட்டார். நீரிலுள்ளது மீனாகவும் நிலத்திலுள்ளது கொக்காகவும் மாறி இரண்டும் சண்டையிட ஆரம்பித்தன. இதனால் நக்கீரரின் தவம் கலைந்தது. அந்த தருணத்தைப் பயன்படுத்தி இரண்டு கணங்களும் அவரைச் சிறைப்படுத்தி மலைமேல் கொண்டு சென்று அடைத்துவைத்துவிட்டனர். உண்மையை உணர்ந்த நக்கீரர் முருகனைப் புகழ்ந்து திருமுருகாற்றுப்படை பாடினார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு அருள் செய்து அவர் முன் காட்சியளித்தான். நக்கீரர் வேண்டியபடி காசி விஸ்வநாத லிங்கத்தையும் கங்கையையும் அங்கேயே வரவழைத்து அவருக்கு காசி சென்ற பலனையும் வழங்கினான். இந்தக் கோவில்தான் மலை மீது காசிவிஸ்வநாதர் கோவிலாக இப்போது உள்ளது. அருகில் கங்கை சுனையாக உள்ளது. முழுக்கப் பாறையான இந்த மலையில், அந்தச் சுனையில் பெரும்பாலும் நீர் நிரம்பி இருப்பது ஓர் ஆச்சரியம். அந்தச் சுனை கொஞ்சம் வற்றியபோது அங்கே சென்ற சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுதான் இந்தக் கல்வெட்டு. அதில் என்ன எழுதியிருந்தது என்றால், தமிழ் பிராமி எழுத்துகளில் 


"மூநாகரா மூசகதி"   என்று எழுதியிருந்தது. இந்த மலையில் பின்புறத்தில் சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. அதைவைத்து இது மூநாகாரா என்ற சமண முனிவர் மோட்சகதி அடைந்ததைக் குறிக்கிறது என்று சமண லாபியைச் சேர்ந்தவர்கள் திரிக்க ஆரம்பித்தனர்.  ஆனால் தமிழ் பிராமியைப் பொருத்தவரை 'மூ' வின் வடிவம் வேறு 'மோ' வேறு. தவிர சமணத்தில் மோட்ச கதி அடைந்ததையெல்லாம் குறிப்பிடுவதில்லை. ஆகவே அது தவறான கருத்து என்பதைப் பலர் உறுதி செய்தனர். அதன்பின் இந்தச் சொற்களை ஆராய்ந்ததில், பண்டைக்காலத்தில் தமிழ் பிராமியின் எழுத்தமைதியைப் பொருத்தவரை குறில் நெடிலுக்கான வேறுபாடு பல இடங்களில் பேணப்படுவதில்லை (இதனைப் பிற்காலக் கல்வெட்டுகளில் கூடக் காணலாம்) என்ற காரணத்தாலும், மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் பின்னாளில்தான் வந்தது என்ற காரணத்தாலும் (ஐராவதம் மகாதேவனின் புள்ளி தந்த பிள்ளையார் நினைவிருக்கலாம்), இந்தக் கல்வெட்டை 'மூநகர மூசக்தி' என்று வாசித்தனர். இதன் பொருள் என்னமூ என்ற மூத்த. மூ நகரா - மூத்த நகரத்தின் மூ சக்தி அதாவது மூத்த சக்தி. மூத்த நகரமான மதுரையில் குடிகொண்டிருக்கும் மூத்த சக்தி என்பதே இதன் உட்பொருளாகும். பொயுமு 200ம் ஆண்டிற்குப் பிறகே தமிழ் பிராமி எழுத்துகளில் புள்ளி வைக்கும் வழக்கம் வந்ததால், இந்தக் கல்வெட்டின் ஆண்டு பொயுமு 200க்கு முன்பு இருக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த எழுத்துகளில் அருகில் உள்ள சூலமும் இங்கே கவனிக்கத் தகுந்தது. பாண்டியர் நாணயங்களிலும் இதுபோன்ற சூலம் இருப்பதைக் காணலாம். அது பாண்டியர்களின் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனைக் குறிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. ஆகவே மதுரையில் குடிகொண்ட அன்னை மீனாட்சியையே இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இப்படி மதுரையின் தொன்மையையும் அதன் தெய்வமான மீனாட்சி அம்மனின் தொன்மையும் ஒருங்கே குறிப்பிடும் இந்தக் கல்வெட்டைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகாவிட்டாலும், சக்தி வழிபாட்டின் தொன்மையைப் போற்றும் தமிழகத்தின் ஆகப்பழைய கல்வெட்டுகளில் ஒன்றாக இது உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 

படம் : நன்றி - தி இந்து  Comments

 1. பொயுமு 200லேயே மீனாட்சியா?
  உங்கள் லேடஸ்ட் புஸ்தகத்தில் விரித்தெழுதியிருக்கிறீர்களா?
  வாங்கியாகிவிட்டது, படிக்கவேண்டிய சின்னஞ்சிறு வேலை தான் பாக்கி.


  /ஐராவதம் மகாதேவனின் புள்ளி தந்த பிள்ளையார் நினைவிருக்கலாம்/
  இதையும் நீங்களே சொல்லிருங்க

  ReplyDelete
 2. Sir, I stumbled onto your blog recently and I am hooked. Very detailed and clear posts. Thank you! I would like to delve deeper into Indian (and Tamil) history. What are some interesting and accurate Indian history books you would suggest for a newbie? Do you have any favorites? :-)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ