Skip to main content

சிலப்பதிகாரத்தின் காலம் - 3சென்ற பகுதியில் கோவலனும் கண்ணகியும் மே 8, 130ம் ஆண்டு புறப்பட்டு கவுந்தியடிகளோடு மதுரை சென்றார்கள் என்று பார்த்தோம். ஆங்காங்கே தங்கி அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி அவர்கள் உறையூர் வந்து அங்கே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து மதுரை செல்லும் வழிகளைப் பற்றிக் கேட்கின்றனர். அவன் கொடும்பாளூரிலிருந்து சிவபெருமானின் சூலாயுதம் போல மூன்று வழிகள் மதுரை நோக்கிச் செல்கின்றன என்று கூறுகிறான். ஒன்று தற்போதைய ரயில் பாதை, அதாவது திண்டுக்கல் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழி, இரண்டு நத்தம், திருமாலிருஞ்சோலை வழியாக மதுரை செல்லும் வழி. மூன்று மேலூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதைய தேசிய நெடுஞ்சாலை). இதில் மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்து பயணிகள் செல்கின்றனர். இடைப்பட்ட காலக்குறிப்புகள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 11, 130

புகாரிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் பாண்டிய நாட்டில் உள்ள ஒரு பாலை நிலத்தை அடைகின்றனர். இது மேலூருக்கு அருகில் உள்ள பகுதியாக இருக்கக்கூடும். இன்னும் இது வறண்ட நிலமாகவே உள்ளது. காலை 'செங்கதிர் வெம்மையின் தொடங்க', வெய்யில் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள ஐயையின் கோட்டத்தை அடைகின்றனர். இது எந்தக் கோவில் என்பது ஆய்வுக்குரியது. அங்கே வேட்டுவ வரி நிகழ்கின்றது. மாலை வருகிறது. அதன்பின் கவுந்தியடிகள் கண்ணகியிடம் ஆறுதல் சொல்லத்தொடங்கி " வேனில் திங்களும் வேண்டுதி" என்கிறார். அதாவது இளவேனிலின் பொழுது கணவனைப் பிரிந்து இருந்த உனக்கு இந்த முதுவேனில் சந்திரன் வேண்டும் போலும் என்கிறார். இதிலிருந்து அது முதுவேனில் என்பது தெளிவாகிறது (ஆனி -ஆடி முதுவேனில் காலம்). இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால் 'குடும்பத்தில் குழப்பம்' வந்துவிடும் என்பதைக் கண்ட கோவலன் சரி கிளம்பலாம் என்று சொல்கிறான். இரவு முழுவதும் நடந்து காலையில் 

"கான வாரணம் கதிர் வரவு இயம்ப" ....கோழி கூவும் வேளையில் "மறைநூல் வழக்கத்துப் புறைநூல் மார்பர் உறை பதி" - அந்தணர்கள் வாழும் ஒரு ஊரைச் சென்று அடைகின்றனர். வேதபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட திருவாதவூராகவே இது இருக்கக்கூடும். 

ஜூலை 12, 130

கண்ணகியையும் கவுந்தியடிகளையும் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு கோவலன் நீர்க்கடன்களை அளிக்க நீர்நிலை ஒன்றைத் தேடிச் செல்கிறான். அங்கே கௌசிகன் என்ற வேதியனைப் பார்க்கிறான். 'பாசிலைக் குருகின் பந்தலைப் பொருத்தி' - குருக்கத்தி இலைகளால் ஆன நிழலில் இருவரும் உரையாடுகின்றனர். பூக்களெல்லாம் உதிர்ந்ததால் குருக்கத்தி உள்ள நிழல், அதாவது முதுவேனில் என்பது இவ்வரிகளால் மேலும்  உறுதியாகிறது. அதன்பின் கோவலன் திரும்பி வந்து பாணர்களோடு அன்றைய பொழுதைக் கழிக்கிறான். அவர்களிடம் மதுரை எவ்வளவு தொலைவு என்று கேட்க, நகரின் வாசம் இப்போது காற்றில் வருவதால் அருகில்தான் இருக்கிறது என்று பாணர்கள் கூற. 'முன் நாள் முறைமையின் இருந்தவ முதல்வியோடு' - முதல் நாளைபோலவே இரவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலையில் மதுரையின் எல்லையை அடைகின்றனர். 

ஜூலை 13, 130

ஊருக்கு வெளியில் உள்ள புறஞ்சேரி ஒன்றில் மூவரும் தங்குகின்றனர். சூரியன் உதிக்கிறது. கோவலன் கவுந்தியடிகளிடம் அனுமதி கேட்டு மதுரையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான். இங்கே இரண்டு குறிப்புகள் வருகின்றன.

"குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்" அதாவது மேல் திசையிலிருந்து காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கொடிகள் அசைகின்றன. ஆகவே தென்மேற்குப் பருவக்காற்று வேகமாக வீசும் ஆடி மாதம் அது என்பது தெளிவாகிறது. மேலும் 

"வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர

ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்"

என்கிறார் இளங்கோவடிகள். வேனில் காலத்தில் அரசன் வேறு இடத்திற்குச் செல்லவிருக்கின்ற கடை நாள், அதாவது முதுவேனிலின் கடைசிப் பகுதி என்கிறார். ஆடி மாதக் கடைசி இது என்பது இந்த ஜூலை 13ம் தேதிக்குப் பொருந்தி வருகிறது. ஆவணி அவ்வருடம் 23ம் தேதி பிறந்துவிடுகிறது  

மாலை வீடு திரும்புகின்ற கோவலனையும் கண்ணகியையும் ஆயர் குல மகளான மாதரியிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கிறார் கவுந்தியடிகள். மாதரி ஒரு வீட்டை அவர்களுக்கு ஒதுக்குகிறாள். கண்ணகி இரவு உணவு சமைத்துப் போடுகிறாள். அன்று இரவே கோவலன் சிலம்பை விற்கப் புறப்படுகிறான். பொற்கொல்லன் வஞ்சம் செய்ததும் அதனால் கோவலன் இரவோடு இரவாகப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்த விஷயம்.

ஜூலை 14, 130

காலையில் கண்ணகியிடம் செய்தி சொல்லப்படுகிறது. கோவலனைப் பார்த்துக் கதறுகிறாள். அதன்பின் அவன் உயிர்பெற்று வானுலகம் செல்கிறான். பிறகு கண்ணகி பாண்டியன் அரண்மனை செல்கிறாள். அங்கே வழக்கு நடைபெறுகிறது. உண்மை தெரிந்து பாண்டியனும் பாண்டிமாதேவியும் உயிர் துறக்கின்றனர்.  கண்ணகி வஞ்சினம் உரைக்கிறாள். அந்தநாள் தான் 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து, அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளி வாரம்

இது ஜூலை 14, 130க்கு பொருந்தி வருவதைப் பார்த்தோம். ஆகவே இதுவரை காலக்கணக்குச் சரியாகவே வருகிறது. 

இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பொயு 130ல் நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இது சிலம்பின் காலத்தை சுட்டியது மட்டுமல்லாமல், சங்க காலப் பாண்டியர் வம்சத்தின் கால வரிசையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்  


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ