Friday 2 September 2022

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள். 


பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வந்தது. நாடு பிடிக்கும் ஆசையினாலா? இல்லை. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது சோழ நாட்டு வர்த்தகம். எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் வெளிநாட்டு வர்த்தகம் வளர்ச்சியடைந்து, வணிகக் குழுக்கள் தோன்றின. அவற்றில் மிகப் பெரியதும் பிரபலமானதுமாக இருந்தது, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் குழு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களை கப்பல்கள் மூலம் தூரக்கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு சென்று வர்த்தகம் செய்ய ஆரம்பித்தனர் இவர்கள். ஒரு புறம் வர்த்தகம் பல்கிப் பெருகினாலும் மற்றொரு புறம் அரபு நாடுகளைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் இவர்களுக்கு ஆபத்துகள் பல நேர்ந்தன. இது வர்த்தகத்தைப் பாதிக்க ஆரம்பிக்கவே, அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சோழர் கடற்படையிடம் வந்து சேர்ந்தது. முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகளை ராஜராஜ சோழர் வெற்றி கொண்டது, இந்தக் கடற்கொள்ளையர் ஆதிக்கத்தைத் தகர்க்கவே. அதில் ஓரளவு அவர் வெற்றியடைந்ததால், சோழர் வர்த்தகம் முன்பு போலவே வளர்ச்சிப்பாதையில் செல்லத்துவங்கியது. 


ஆனால், ராஜேந்திரர் கங்கைப் படையெடுப்பை நிகழ்த்திய பிறகு, சிக்கல் அவர்களுடைய நெருங்கிய நண்பர்களான ஶ்ரீவிஜயப் பேரரசர்களிடமிருந்து வந்தது. சோழப்பேரரசும் ஶ்ரீவிஜயமும் சீனாவிடம் போட்டி போட்டு வர்த்தகம் செய்துகொண்டிருந்தன. ஆனால், வளர்ந்துவந்த சோழர் வணிகத்தைக் கண்டு அசூயை அடைந்த ஶ்ரீவிஜய அரசர்கள், சோழர்கள் தங்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் என்றும் அதனால் வர்த்தகத்தில் தங்களுக்கே முன்னுரிமை வேண்டும் என்றும் சீனப்பேரரசரிடம் ‘போட்டுக்கொடுத்துவிட்டனர்’. இதனால் வெகுண்ட ராஜேந்திரர் ஶ்ரீவிஜயத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். இத்தனைக்கும் ஶ்ரீவிஜயப்பேரரசு ஒன்றும் அல்பசொல்பமானதல்ல. பல ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டு பரந்து விரிந்த சாம்ராஜ்யம் அது. இதைப் பற்றி அரபுப் பயணியான மஸ்’உடி இப்படி எழுதியிருக்கிறார். 


In the sea of Champa is the empire of Maharaja, the king of the islands, who rules over an empire without limit and has innumerable troops. Even the most rapid vessels could not complete in two years a tour round the isles which are under his possession. The territories of this king produce all sorts of spices and aromatics, and no other sovereign of the world gets as much wealth from the soil." (Mas'udi)


இப்படிப்பட்ட அரசைத் தோற்கடிக்க திறமையான பரதவர்களையும், மாலுமிகளையும், கப்பலில் இருந்து நிலத்திலிறங்கிப் போரிடும் வீரர்களையும் கொண்ட படை ஒன்று உருவானது. சோழர்களின் கப்பல் படை நாகப்பட்டினத்திலிருந்து நேரடியாக ஶ்ரீவிஜயம் நோக்கிச் சென்றது என்பது பலரின் கருத்தாக இருந்தாலும், கலிங்க நாட்டிலிருந்த பாலூர்த் துறைமுகத்திற்குச் சென்று அங்கிருந்துதான் சோழர்கள் ஶ்ரீவிஜயம் சென்றனர் என்பது சில ஆசிரியர்களின் கருத்து. காற்று தென்கிழக்குத் திசையை நோக்கி, அனுகூலமாக அந்தத் துறைமுகத்திலிருந்துதான் வீசும் என்பதாலும், இதனால் அதிக சிரமமில்லாமல் அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை எட்டிவிடலாம் என்பதாலும், சோழர்கள் அந்தத் துறைமுகத்தைத் தொட்டுவிட்டு அங்கிருந்து தென்கிழக்கு நோக்கிச் சென்றனர். (பிரபல சரித்திரநாவலாசிரியர் சாண்டில்யன், ‘கடல்புறா’ வில் பாலூர்த் துறைமுகத்திலிருந்தே கதாநாயகன் இளையபல்லவன் கடாரம் செல்வதாகக் காட்டியிருப்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்). இந்தப் பாலூர், தற்போது ஒடிசாவின் கோபால்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமாக ஆகிவிட்டது. 


பொயு 1025ம் ஆண்டு, சோழ நாட்டிலிருந்து புறப்பட்ட கடற்படை எந்தெந்த இடங்களை வெற்றிகொண்டது என்பதைப் பற்றி ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி விவரிக்கிறது. அந்தப் பகுதியைப் பார்ப்போம். 


அலைகடல் நடுவுட் பலகலம் செலுத்திச் 

சங்கிராம விசையோத் துங்க வர்ம 

னாகிய கடாரத் தரசனை வாகையும் 

பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்

துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்

ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் 

விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்

புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும் 

நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் 

வண்மலையூ ரெயிற் றொன்மலையூரும்

ஆழ்கட லகழ்சூழ் மாயிருடிங்கமும் 

கலங்கா வல்வினை இலங்காசோகமும் 

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் 

காவலம் புரிசை மேவிலம் பங்கமும்

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்

கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்

தீதமர் பல்வினை மாதமாலிங்கமும் 

கலாமுதிர் கடுந்திறல் லிலாமுரி தேசமும் 

தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் 

தொடுகடற் காவற் கடுமுரண் கடாரமும் 

மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான 

உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு


முதலிலேயே எதற்காக இந்தப் படையெடுப்பு என்பதைத் தெளிவாகச்சொல்லிவிடுகிறது மெய்க்கீர்த்தி. சங்கிராம விசயோத்துங்க வர்மனாகிய கடாரத்தரசனை வெற்றி வாகை கொள்ளும் பொருட்டு இந்தப் படையெடுப்பு நடந்தது என்பது தெரிகிறது. அதன்பின் பதின்மூன்று இடங்களை சோழர் படை தாக்கியதாக மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது. முதலில் வருவது ஶ்ரீவிஜயம், பேரரசின் தலைநகரான இந்த இடம் தற்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள பாலெம்பங் என்ற இடமாகும். அடுத்து துறைநீர்ப் பண்ணை. இதுவும் சுமத்ராத் தீவின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது.  தற்போது பன்னெய் என்று அழைக்கப்படுகிறது. சுமத்ராத் தீவில் இருக்கும் இன்னொரு நகரமான மலையூர் ஜம்பி நதியின் முகத்துவாரத்தில் உள்ளது. மாயிருடிங்கம் என்பது மலேசியத் தீபகற்பத்தின் நடுவில் உள்ளது. சீனர்கள் அதை ஜிலோடிங் என்று அழைத்துள்ளனர். இலங்காசோகம் மலேசியாவின் கிழக்கில் அமைந்துள்ள ஒரு நகரம். பப்பாளம், தற்போதைய கிரா பூசந்தியின் பழைய பெயர் (Isthumus of Kra). தக்கோலம் என்பது தற்போதைய தாய்லாந்தில் கிரா பூசந்திக்கு தெற்கில் உள்ள தகோபா எனும் ஊர். தமாலிங்கம், தற்போதைய மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள Temiling என்ற நகரம். இலாமுரி தேசம், சுமத்ராவின் முனையில், அக்ஷய முனை என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய ‘Aceh’ என்ற பெயரையுடைய நாடாகும். நக்காவரம் என்பது நிகோபார் தீவுகளின் பழைய பெயர். கடாரம், மலேசியாவின் மேற்கிலுள்ள கேடா நகரம். இலம்பங்கம், வளைப்பந்தூர் ஆகிய ஊர்கள் எங்கிருக்கின்றன என்பது இன்னும் அறியப்படவில்லை. இதை ஓரளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வர முனைந்திருக்கின்றேன். 





இக்காலத்தில், ராணுவ வியூகங்களில் ‘Operation Garland’ என்றெல்லாம் சொல்கிறார்களே, அதை அப்போதே ராஜேந்திரர் எப்படி செயல்படுத்தியிருக்கின்றார் என்பது இப்படத்திலிருந்து புலப்படும். ஶ்ரீவிஜயப் பேரரசைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் அவர் சூறையாடியிருக்கின்றார். மலேயா தீபகற்பத்தின் கிழக்குக்கடற்கரையிலும் நெடுந்தூரம் சென்றிருக்கின்றன சோழர் படைகள். இதன் காரணமாக ஶ்ரீவிஜயத்தின் கடற்படை வலு தகர்க்கப்பட்டது. அவர்களுடைய யானைப்படைகள் அழிக்கப்பட்டன (கும்பக் கரியோடு மகப்படுத்தி) . இது ஶ்ரீவிஜயப்பேரரசிற்கு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் ஒரு செய்தியை உணர்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் படையெடுப்பைத் தொடர்ந்து சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்தது. பின்னால், ராஜேந்திரரின் மருமகனான குலோத்துங்கன் சீனாவிற்குத் தூது சென்று வரும் அளவிற்கு இந்த உறவு வலுப்பட்டது. 


அரசியல் ரீதியாக இந்தப் போருக்குப் பின்னான விளைவுகள் என்ன? தற்போது பலர் ‘மேப்’ வரைந்து காட்டுவதுபோல், சோழப்பேரரசு இந்த இடங்களில் எல்லாம் ஆட்சி செலுத்தவில்லை. அந்த நாடுகளை தங்களுக்குக் கீழ் கொண்டுவர சோழர்கள் எந்த முயற்சியும் எடுக்கவுமில்லை. இது ஒரு ‘Shock and Awe’ போர் மட்டும்தான். வர்த்தகத்தைத் தவிர சோழர்களுக்கு இந்தப் படையெடுப்பின் மூலம் இன்னொரு லாபமும் கிடைத்தது. மெய்க்கீர்த்தியின் முதல் வரிகள் அதைத்தான் குறிப்பிடுகின்றன. ‘உரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்’,  கடாரத்தரசன் நியாயமான முறையில் சேமித்து வைத்திருந்த செல்வங்களையெல்லாம் சோழப்படைகள் எடுத்துக்கொண்டன. ‘புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும்’ - நகைகளைக் கொண்ட சிறிய வாயில்களையும் பெரிய மணிகளைக் கொண்ட கதவுகளையும் படைகள் தகர்த்து எடுத்துக்கொண்டன. இந்தோனேசியா அக்காலத்தில் செல்வம் கொழிக்கும் பூமியாக, சுவர்ண பூமி என்ற பெயரில் வழங்கியது. அங்கிருந்து அளவிலாச்செல்வத்தை எடுத்துக்கொண்டு நாடு திரும்பினர் சோழர்கள்.  வர்த்தகத்தை மீண்டும் செழிப்புறச் செய்தது மட்டுமல்லாமல், நாட்டின் நிதிவசதியையும் பெருக்கி பல நன்மைகளைச் சோழர்களுக்குச் செய்தது இந்தப் படையெடுப்பு. 




No comments:

Post a Comment