ஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன? எப்படி இதை அறிந்து கொள்வது ?
வார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம். பன்னிரண்டு ராசிகளில், இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு. இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்' மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க). இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு. இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.
இதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி குறைவென்றும் தெரிகிறதல்லவா. அந்தக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்களில், அதன் சக்தி குறைவான திசையை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே இந்த சாஸ்திரத்தின் தாத்பர்யம். மேலே உள்ள அட்டவணையில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் விதிவிலக்குகள் உண்டு. இதன் காரணம், இவை அந்த திசையின் மத்தியில் அல்லாது, அவற்றின் கோணத்தில் அதாவது தென்கிழக்கு மற்றும் வடமேற்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற காரணத்தால். எனவே அவற்றின் சக்தி குறைவான திசைகளும் மாறுபடுகின்றன. இதன்படி சந்திரனுக்கு கிழக்கு திசையிலும் சுக்கிரனுக்கு மேற்கு திசையிலும் ஆதிக்கம் குறைவு.
எனவே, ஞாயிறன்று, சூரியனின் சக்தி குறைவாக உள்ள மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல, திங்களன்று கிழக்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதைத்தான், ஞாயிறன்று மேற்கே சூலம், திங்களன்று கிழக்கே சூலம் என்று குறிப்பிட்டனர். இந்த வாரசூலை அட்டவணை கீழே
சரி, தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் திசைகள் நோக்கி அந்த நாட்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? ஜோதிட சாஸ்திரம் இதற்கான பரிகாரங்களையும் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இதற்கான பரிகாரத்தைச் செய்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. சூரிய உதயத்திலிருந்து திங்கள், சனிக்கிழமைகளில் 8 நாழிகைக்கு மேலும், செவ்வாய், புதன் கிழமைகளில் 11 நாழிகைக்கு மேலும், வியாழன் 20 நாழிகைக்கு மேலும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 12 நாழிகைக்கு மேலும் இந்தப் பரிகாரத்தைச் செய்தால் பலன் அளிக்கும். அட, பரிகாரம் என்னவென்று சொல்லு என்கிறீர்களா. அதிகமில்லை, கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும். அம்புட்டுத்தான்.
நிற்க, இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயம். நம்பிக்கை இருந்தால் இந்த சாஸ்திரங்களைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் 'நாளென்செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த கோள் என்செயும்' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்.
சூலம் பார்ப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதோடு சரி. நானெல்லாம் நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது போல... நாளென் செயும் வினைதான் என் செயும்.. ஆள். ஆனாலும் இதன் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். நீங்கள் பதிவாகவே இட்டமை சிறப்பு. :)
ReplyDelete