Sunday 6 August 2017

சத்யபுத்திரர்கள் யார்?

தமிழ் வரலாற்றில் சங்க கால நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ள இலக்கியங்களே பெரிதும் உதவியாக இருக்கின்றன. கல்வெட்டுகளோ / செப்பேடுகளோ இன்ன பிற ஆவணங்களோ அக்காலத்தில் இல்லை. இருந்தாலும் அதிகம் அறியப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அசோகரது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட கல்வேட்டு ஒன்று பெரும் ஆய்வுக்கு உட்பட்டது.
குஜராத்தில் உள்ள கிர்நார் மலைச்சரிவில் (சிங்கங்களது சரணாலயம் இருக்கிறதே, அதே கிர்நார்தான்) அசோகரது கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. தமது அரசின் எல்லைகளை குறித்து சாஸனம் செய்திருக்கும் அவர். அரசின் எல்லைப்புற மன்னர்களாக “சோட, பாட, சத்யபுதோ, சேரபுதோ, தம்மபாணி” என்று குறித்திருக்கிறார். அசோகர் குறிக்கும் தமிழக மன்னர்களை சோட – சோழ, பாட – பாண்டிய, சேரபுதோ- சேர என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தம்மபாணி என்பது இலங்கை அரசர்களைக் குறிப்பதாகும். இதில் சத்யபுதோ யார் என்பது பற்றி குழப்பம் நிலவியது. ஏனெனில் தமிழ் இலக்கியங்களோ, வேறு ஆவணங்களோ இப்படி ஒரு மன்னர்குலம் இருப்பதை பதிவுசெய்யவில்லை. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர்களே சத்யபுத்திரர்கள் என்று சொன்னார்கள். இன்னும் சிலர், மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்யபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர். கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ் வரலாற்றாசிரியர்கள், மற்ற தமிழ் மன்னர்களோடு சேர்ந்து வருவதால், இவர்கள் ஒரு தமிழ் மன்னர் குலத்தவராகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இந்தக் குழப்பத்துக்கு முடிவாக திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் பொது வருடங்களுக்கு முன்பான முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் ப்ராமியில் இருந்த இந்தக்கல்வெட்டைக் கீழே காணலாம்.

இந்தக் கல்வெட்டில் எழுதியிருப்பது இதுதான்
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி”
அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்யபுத்திரர் பரம்பரையில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்யபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. யாருக்கு அஞ்சி இதைக் கொடுத்தான் என்று கேட்டுவிடாதீர்கள். நெடுமான் அஞ்சி என்பது அந்த மன்னனின் பெயர்.
தகடூரை ஆண்ட அதியமான்களே சத்யபுத்திரர் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியதுமட்டுமல்லாமல் அசோகரின் கல்வெட்டில் இடம்பெறும் அளவுக்கு மூவேந்தர்களுக்கு இணையாக இவ்வரசன் விளங்கினான் என்பதையும் பதிவுசெய்கிறது இந்த ஜம்பை கல்வெட்டு.

No comments:

Post a Comment