Sunday 28 July 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1

(சுருக்கமான) முன்னுரை

தமிழகத்தின் மீது நடைபெற்ற டெல்லி சுல்தான்களின் படையெடுப்பைப் பற்றி பல்வேறு விதமான கதைகள் / தகவல்கள் உலவுகின்றன. நன்கு கற்றறிந்த நண்பர்களே கூட இவற்றைப் பற்றி எழுதும்போது பல தவறுகளைச் செய்வதைக் காண முடிந்தது. குறிப்பாக 'எல்லாக் கேசையும்' மாலிக்கபூர் மீதே எழுதிவிடுகிறார்கள். கொஞ்ச நாள் முன்பு நான் படித்த கட்டுரை ஒன்றில் வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்த நண்பர் ஒருவரே பல பிழைகளைச் செய்திருந்தார். இதற்கான காரணமாக நான் கருதுவது, ஏதாவது ஒரு ஆதாரக் கட்டுரையை எடுத்துக்கொண்டு கால வித்தியாசங்களைச் சரிபார்க்காமல், மற்ற தரவுகளை ஒப்புநோக்காமல் எழுதுவதே ஆகும்.  முடிந்த மட்டிலும் அதற்கான ஆய்வைச் செய்து, இந்த விஷயத்தில்  ஓரளவுக்கு தெளிவான பார்வையை அளிக்க முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தப் படையெடுப்புகளைப் பற்றி நான் இந்த ப்ளாக்கில் எழுதிய 'சித்திரைத் திருவிழா' கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தத் தகவல்களை கொஞ்சம் விரிவாக இப்போது பார்க்கலாம்.



முதல் படையெடுப்பு

தமிழ்நாட்டின் மீது பொயு 14ம் நூற்றாண்டில் மும்முறை டெல்லி சுல்தான்களின் படைகள் தாக்குதல் நிகழ்த்தின. இதில் மூன்றாவது தாக்குதல்தான் தமிழகத்தை இருளில் அமிழ்த்தியது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அலாவுதீன் கில்ஜி டெல்லியில் ஆட்சி செய்துகொண்டிருந்த போது, அவனது படைத்தலைவனாக இருந்தவன் மாலிக்கபூர்.  மாபார் என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்ட மதுரையின் செல்வ வளத்தைப் பற்றி மார்க்கோ போலோவும், மற்ற தூதர்களும் கில்ஜியிடம் கதை கதையாகச் சொல்லியிருந்தார்கள். பாண்டிய நாட்டில் இருந்த யானைகள் எப்படி வலுவானதாகவும் போர்த்திறன் கொண்டதாகவும் இருந்தன என்பதையும் பற்றி அவனுக்குச் சொன்னார்கள். தவிர, இஸ்லாத்தை தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் பரப்ப வேண்டும் என்ற வேட்கையும் கில்ஜிக்கு இருந்தது. ஆகவே ஏற்கனவே வாரங்கல் வரை வந்து வெற்றியடைந்திருந்த மாலிக்கபூரை தமிழகத்தில் வந்து கொள்ளையடிப்பதற்காக கில்ஜி அனுப்பிவைக்க முனைந்தான்.

பொயு 1310ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படை டெல்லியிலிருந்து கிளம்பியது. இரு மாதங்கள் கழித்து, தக்காணத்திலுள்ள தேவகிரிக்கு வந்து முகாமிட்டது இந்தப் படை. அங்கு சில நாள் தங்கிவிட்டு, கோதாவரியையும் பீமா நதியையும் கடந்து பண்டரிபுரத்தை அடைந்தது அந்தப் படை. அங்கு தங்கி தென்னகத்தின் நிலையை ஆய்வு செய்தான் மாலிக்கபூர். அப்போது துவாரசமுத்திரத்தை (தற்போதைய ஹலேபீடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்தவன் ஹொய்சாள மன்னன் வீர வல்லாளன். தமிழகத்தின் வடபகுதி வரை அவனது ஆட்சி பரவியிருந்தது. தமிழகத்தின் தென்பகுதியை பாண்டியர்கள் ஆண்டுவந்தனர். பாண்டிய சகோதரர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் சகோதரர்களுக்கு இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டு, இளையவனான வீர பாண்டியன், மூத்தவன் சுந்தர பாண்டியனைத் துரத்திவிட்டு மதுரை ஆட்சியைக் கைப்பற்றி இருந்தான். இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைத்த வீர வல்லாளன், தன் படையோடு கிளம்பி பாண்டிய நாட்டின் மீது போர்தொடுக்க வந்துகொண்டிருந்தான்.

இந்த நிலையில், தன் நாட்டின் வட எல்லையில் மாலிக்கபூர் பெரும் படையோடு வந்து தங்கியிருப்பதை அறிந்த வல்லாளன், அவசரமாக பாண்டிநாட்டுப் படையெடுப்பைக் கைவிட்டு தலைநகர் திரும்ப நேரிட்டது. இதற்குள் மாலிக்கபூர் துவாரசமுத்திரத்தை நெருங்கி விட்டான். கில்ஜியின் வலுவான படைகளைக் கண்ட வல்லாளன், சமாதானத்தைக் கோரத் தீர்மானித்தான். இதற்கிடையில், அடுத்து தனக்குத்தான் ஆபத்து வரும் என்று கணித்த வீர பாண்டியன், வல்லாளனோடு இருந்த பகையை மறந்து அவனுக்கு உதவத் தீர்மானித்து ஒரு படையை துவாரசமுத்திரத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால், இந்த உதவியை வீர வல்லாளன் நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், நன்றி மறந்து சுந்தர பாண்டியனுக்கு உதவத் தீர்மானித்தான். தன்னோடு சமாதானமாகப் போனால், மதுரைப் படையெடுப்புக்கு உதவுவதாக மாலிக்கபூருக்கு ஓலை ஒன்றையும் அனுப்பினான் வீர வல்லாளன்.

ஆனால், மாலிக்கபூர் உடனே சமாதானத்தை ஏற்கவில்லை. அரண்மனையிலிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மதத்திற்கு வல்லாளன் மாறவேண்டும் அல்லது ஜிசியா வரியைச் செலுத்துவதாக ஒப்புக்கொள்ளவாவது வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைத்தான். இதை ஏற்றுக்கொண்டு 'தன்னுடைய பூணூலைத் தவிர' மற்ற எல்லாவற்றையும் டெல்லிப் படைகளிடம் ஒப்படைத்தான் வீர வல்லாளன். அந்தச் செல்வத்தோடு வல்லாளனின் மகன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றான். வீர வல்லாளன் மாலிக்கபூருக்கு வழிகாட்ட, கில்ஜியின் படைகள் தமிழகத்தில் நுழைந்தன.

'சர்மலி மற்றும் தபார்' கணவாய்கள் வழியாக இந்தப் படைகள் தமிழத்தில் நுழைந்தன என்று அமீர் குஸ்ரு தெரிவிக்கிறார். இவை, சேர்வராயன் மலைகள் மற்றும் தோப்பூர்க் கணவாயாகவே இருக்கவேண்டும். இவற்றைக் கடந்து காவிரியின் கரையில் அந்தப் படைகள் முகாமிட்டன. துவாரசமுத்திர நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த வீர பாண்டியன், தன் படைகளோடு பாண்டிய நாட்டின் வடக்கெல்லையான ஜெயங்கொண்ட சோழபுரத்தில் முகாமிட்டிருந்தான். அங்கே விரைந்த மாலிக்கபூரின் படைகளுக்கும் பாண்டியப் படைகளுக்கும் கடும் போர் மூண்டது. போரில் தோல்வியடைந்த வீர பாண்டியன் கண்ணனூர் கொப்பத்தை (சமயபுரம்) நோக்கிப் பின்வாங்கினான். கில்ஜியின் படைகள் அங்கேயும் அவனைத் துரத்திச் சென்றன. அப்போது பாண்டியப் படைகளில் இருந்த இஸ்லாமியப் பிரிவு, அவர்களுக்குத் துரோகம் செய்து மாலிக்கபூரிடம் சேர்ந்து கொண்டது.   எனவே இங்கேயும் பாண்டியர்கள் தோல்வியடைந்தனர். இப்போது பாண்டியன் மீண்டும் மேற்கு நோக்கிச் சென்று கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தான். மூன்றாவது முறையாக மாலிக்கபூர் அங்கே அவனைத் தோற்கடித்தான். வீர பாண்டியன் கொல்லி மலைகளுக்குத் தப்பிச் சென்றான். இந்தத் தோல்விகளைப் பற்றி அறிந்த சுந்தர பாண்டியன் இப்போது மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான்.

பாண்டியப் படைகளை நிர்மூலமாக்கியது மட்டுமல்லாமல், போகும் இடங்களையெல்லாம் கொள்ளையடித்த மாலிக்கபூரின் பார்வை இப்போது சிதம்பரத்தை நோக்கித் திரும்பியது. 'பிரும்மஸ்தபுரி' (பிரும்மபுரி - சிதம்பரம்) என்ற இடத்தில் பெரும் செல்வமும், தங்கமும், யானைகளும் இருப்பதாக அறிந்த மாலிக்கபூர் சிதம்பரத்தை இரவில் தாக்கினான். கோவில் தரைமட்டமாக்கப்பட்டது. பொன்னும் பொருளும் 250 யானைகளும் கைப்பற்றப்பட்டன. 'விக்ரக வழிபாட்டாளர்கள், பிராமணர்கள் ஆகியோரின் தலைகள் கழுத்திலிருந்து உருண்டன, இரத்த ஆறு ஓடியது' என்று மாலிக்கபூரோடு வந்த வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். லிங்கத் திருமேனியை உடைத்ததோடு மட்டுமல்லாமல், 'தியோ நாராயண்',  சித்திரகூடப் பெருமாளையும் அவர்கள் வீழ்த்தினர்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, மாலிக்கபூரின் படைகள் 'தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல'  அவனுடைய நண்பனாக இருந்த சுந்தர பாண்டியன் ஆட்சி செய்த மதுரையை நோக்கி விரைந்தன. வழியிலுள்ள ஆலயங்கள் இடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நிலைமையைப் புரிந்து கொண்ட சுந்தர பாண்டியன், மதுரையை விட்டு ஓடிப்போனான். மதுரைக் கோவிலைத் தாக்கி அழித்த மாலிக்கபூர், அங்கிருந்து எண்ணிலடங்கா அளவு பொன்னையும், விலையுயர்ந்த நவமணிகளையும், 512 யானைகளையும், குதிரைகளையும் கைப்பற்றி டெல்லி திரும்பினான்.

                                                                                                                                         (அடுத்து)








4 comments:

  1. Much needed. Thank You.

    பிரம்மபுரி என்பது சிதம்பரமா சீர்காழியா?
    அங்கு ஸ்வாமிக்கு பெயரும் பிரமபுரீஸ்வரர்.
    பிரமாபுரம் மேவிய பெம்மான் (உள்ளங்கவர் கள்வன் பதிகத்தில் ஒரு பாடலில் வரும்).

    ReplyDelete
    Replies
    1. ப்ரம்மபுரி - சிதம்பரம். பிரம்மபுரம் - சீர்காழி

      Delete
  2. மாலிக் கபூர் வாயிலாக இஸ்லாமியர்கள் முதல் முறையாக தமிழ்நாட்டிற்குள் நுழைகிறார்கள்..எப்டி அதற்க்கு முன்பே பாண்டியன் படையில் இஸ்லாமிய படை பிரிவு இருந்திருக்கும்??

    ReplyDelete
  3. இஸ்லாமியர்கள் அதற்குப் பல நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் நுழைந்துவிட்டனர். பாண்டியர்களின் குதிரைகளைப் பழக்கியதில் அவர்கள் பெரும்பங்கு வகித்தனர்.

    ReplyDelete