Sunday 11 August 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3



குஸ்ரூ கான் டெல்லி சென்றதும் நடந்தவை, கிட்டத்தட்ட மாலிக்கபூர் டெல்லி சென்றதும் நடந்ததைப் போலவே, ஒரு ஆக்‌ஷன் ரீப்ளேயாக, இருந்தது. தனது எஜமானனான முபாரக்கை தந்திரமாக வீழ்த்திவிட்டு தான் மன்னனாக முடிசூட்டிக்கொண்டான் குஸ்ரூ கான். ஆனால் இது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. காஸி மாலிக் என்பவன் குஸ்ரூவை வீழ்த்திவிட்டு தானே சுல்தான் என்று பிரகடனம் செய்துகொண்டான். கியாசுதீன் துக்ளக் என்ற பெயருடன் டெல்லியில் துக்ளக் வம்சத்தை ஸ்தபித்தான். 

தொடர்ந்த குழப்பங்களால் சீர்கெட்டிருந்த டெல்லி நிர்வாகத்தைச் சீரமைக்கத்தொடங்கிய கியாசுதீன், தன் மகனான உலூக் கானை அடுத்த வாரிசாக அறிவித்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் 'பிரசித்தி பெற்ற' முகமது பின் துக்ளக். வாரிசாக நியமிக்கப்பட்ட உலூக்கானின் பார்வை முதலில் தக்காணத்தின்பால் திரும்பியது. காகதீயர்கள் போர்க்கொடி தூக்கியதால் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்த உலூக்கான் முதலில் தோல்வியையே சந்தித்தான். தேவகிரிக்குப் பின்வாங்கி, பிறகு மீண்டும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாரங்கல்லின் மீது படையெடுத்து, காகதீயர்களைத் தோற்கடித்தான். 'மாபாரின்' செல்வங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த உலூக்கான், அந்த செல்வங்களைக் கொள்ளையடிக்க மட்டும் எண்ணாமல், துக்ளக்கின் ஆட்சியை மதுரைவரை நீட்டிக்க ஆசை கொண்டான். எனவே தமிழகத்தின் மீது தனது தாக்குதலைத் தொடங்கினான். வடபகுதியில் அவனை எதிர்க்க வலுவான ஆட்சியாளர்கள் இல்லாததால், கண்ணனூர்க் கொப்பம் வரை உலூக்கானால் எளிதாக முன்னேற முடிந்தது. 

பொயு 1323ம்  ஆண்டு, பங்குனித் திருவிழா ஶ்ரீரங்கத்தில் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.  பங்குனி எட்டாம் திருநாள் உற்சவத்தில் நம்பெருமான் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளினார். அருகிலுள்ள சமயபுரம் வரை உலூக்கானின் படைகள் வந்துவிட்டதை எண்ணி மனம் கலங்கினர் ஆலய நிர்வாகிகள். திருவிழாவைத் தொடர்வதா, நிறுத்துவதா என்று பெருமாளிடம் உத்தரவு கேட்கப்பட்டது. தொடர்ந்து நடத்துமாறு உத்தரவும் வந்தது.  விழா நடப்பதை அறிந்த உலூக்கானின் படைகள் ஆற்றைக் கடந்து விரைந்து வந்தன. காரியம் கைமீறிவிட்டதை அறிந்த பட்டர்கள், பிள்ளை லோகாச்சாரியாரிடம் நம்பெருமான் விக்ரகத்தை ஒரு பல்லக்கில் ஏற்றி ஒப்படைத்து தெற்கு நோக்கி அனுப்பிவைத்தனர். விக்ரகத்தைக் காணாததால் ஆத்திரமடைந்த டெல்லிப் படைகள் திருவிழாவில் கூடியிருந்தோரை, ஆண், பெண் சிறுவர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். ஶ்ரீரங்கம் நகரின் மீதும் படையெடுத்து கோவிலைத் தாக்கியழித்தனர். நிராயுதபாணிகளான பலரின் தலை வெட்டப்பட்டு குருதி ஆறு ஓடியது. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்' என்று இந்நிகழ்ச்சி குருபரம்பரைச் சரிதத்தில் குறிப்பிடப்படுகிறது. தெற்கு நோக்கிப் பயணித்த நம்பெருமான், கேரளா வழியாக மேல்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டதும்,  பின் குமார கம்பண்ணர் மதுரையை மீட்டபின் ஶ்ரீரங்கம் எழுந்தருளியதும் 'திருவரங்கன் உலா' என்ற கதையில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஶ்ரீரங்கத்தைத் தாக்கியழித்த உலூக்கான் அடுத்து தனது இலக்கான மதுரையை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். அங்கே பராக்கிரம பாண்டியரின் ஆட்சி நடந்துகொண்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். டெல்லிப் படைகள் மீண்டும் வருவதைக் கண்ட பராக்கிரம பாண்டியன் காளையார் கோவில் நோக்கிப் பின்வாங்கினான். ஶ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்ந்த கதையை அறிந்த மதுரை ஸ்தானீகர்கள் மதுரைக் கோவிலைக் காக்க முனைந்தனர். உற்சவ மூர்த்திகளை சிலரிடம் கொடுத்து தென்பாண்டி நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். சுவாமி சன்னதியின் விமானத்தில் மீனாட்சி அம்மையை அஷ்டபந்தனம் செய்து மறைத்து வைத்தனர். சன்னதியின் வாயிலை சுவர் எழுப்பி மூடிவிட்டு அதன் முன் வேறொரு லிங்கத்தை வைத்தனர். மதுரை நகருக்குள் புகுந்த உலூக்கானின் படைகள் பேரழிவை நிகழ்த்தின. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கோவிலுக்கும் பெருத்த சேதம் நிகழ்ந்தது. சன்னதியின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் உடைக்கப்பட்டது. 



                 (உலூக்கானின் படைகளால் சிதைக்கப்பட்ட லிங்கத்திருமேனி)


நகருக்கு நடந்த அழிவைக் கேள்விப்பட்ட பராக்கிரம பாண்டியர், தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு உலூக்கானுடன் மோதினார். ஆனால் அவருக்கு முன்பு போல் வெற்றி கிட்டவில்லை. டெல்லி திரும்பும் போது உலூக்கானால்  சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்ட பராக்கிரம பாண்டியர் வழியிலேயே உயிரிழந்தார். அவரோடு மதுரைப் பாண்டியர் வம்சம் முடிவுக்கு வந்தது. மதுரையை வெற்றி கண்ட உலூக்கான் 'மாபார்' என்ற பெயரோடு அதை துக்ளக் ஆட்சியின் ஒரு மாகாணமாக அறிவித்தான். தன் பிரதிநிதியாக ஜலாலுதீன் ஆசான் கான் என்பவனையும் நியமித்து டெல்லி திரும்பினான். அங்கே முகமது பின் துக்ளக் என்ற பெயரோடு முடிசூடிக்கொண்டான்.  பின்னால் ஆசான் கான் பொயு 1335ல் மதுரையை தனி சுல்தானகமாக அறிவித்ததும், அந்த ஆட்சி சுமார் 43 ஆண்டுகள் நடந்ததும், பின்னர் குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அந்த சுல்தானகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததும் தனிக்கதை. 

எனவே, நடந்த மூன்று படையெடுப்புகளில் தமிழகத்தில் பேரழிவை நிகழ்த்தியதும், சுமார் 43 ஆண்டுகள் தமிழகமும் தமிழர்களும் பெரும் அவதிக்குள்ளாவதற்குக் காரணமாக இருந்ததும் உலூக்கான் நடத்திய இந்த மூன்றாவது படையெடுப்பே ஆகும். குமார கம்பண்ணர் மட்டும் தமிழகத்தை மீட்டிராவிடில், இன்று வடநாடுகளின் பல பகுதிகளைப் போலவே தமிழகமும் தன்னுடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஏன் மொழியையும் கூட இழந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 









No comments:

Post a Comment