Skip to main content

தமிழர்களின் வானியல்இன்று நண்பரொருவர் பகிர்ந்த, மதுரையில் வைகை நதியில் புதுப்புனல் வரும் படத்தை ட்விட்டரில் போட்டு அதனுடன் சங்க இலக்கியமான பரிபாடலின் ஒரு சில வரிகளையும் கொடுத்திருந்தேன். என்னதான் பாரதத்திலிருந்து தமிழகத்தையும் தமிழர்களையும் தனித்துக்காட்ட ஒரு கும்பல் கூச்சல் போட்டுக் குதித்தாலும், பாரதப் பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழகம் என்பதை நிறுவும் பல சங்க இலக்கியப் பாடல்களுள் இதுவும் ஒன்று என்பதால்  கொஞ்சம் விரிவாகவே அதைப் பார்க்கலாம்.

முதலில் இந்தப் பாடல். பரிபாடல்(கள்) வரிசையில் பதினொன்றாவது. பரிபாடலில் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். பாடியவர் நல்லந்துவனார்.

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, 
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன் 
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை 
மதியம் மறைய, வரு நாளில்  வாய்ந்த 

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி 
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் 
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால் 
புரை கெழு சையம் பொழி மழை தாழ, 
நெரிதரூஉம் வையைப் புனல். 

இந்தப் பாடலில் இந்திய வானியல், வானிலை இயல், சோதிடத்தின் சில கூறுகள் என அனைத்தும் கலந்துவருவதைக் காணலாம். 

விரிகதிர் மதியம், அதாவது நிலவு ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கிற நாளில் - பௌர்ணமியில்
எரி - கார்த்திகை நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட இடபவீதி, சடை - சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுன வீதி, வேழம் - யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேடவீதி  ஆகிய மூன்று வீதிகளைக் கொண்டு
அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம்  இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் பன்னிரண்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில் 
வெள்ளி ஏற்றியல் - தனக்குரிய இடப ராசியை அடைய, வருடை - மேடம், மேஷ ராசியை படிமகனான செவ்வாய் அடைய, புந்தி - புதன் மிதுன ராசியில் நிற்க, புலர் விடியல் - சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்தின் மேலுள்ள கடகத்தில் இருக்க, அந்தணன் - வியாழன் பங்கு - சனியின் துணை இல்லங்களான மகர, கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய, யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலைவை மறைக்க - அதாவது அன்று சந்திரக் கிரகணம் 
அப்படிப்பட்ட ஒரு நாளில், பொதியில் முனிவன் - அகத்தியனுக்கு உரிய நட்சத்திரமான அகத்திய நட்சத்திரம் (Canopus) மிதுன ராசியை அடைந்தது. அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக வையையில் புதுப்புனல் வந்தது. 

ஒரே பாடலில் எவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் பாருங்கள். முதலில் பால்வீதி என்று இன்று அழைக்கப்படும் நமது வான்வெளியை மூன்று தெருக்களாகச் சமைத்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார். 

கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறான். இதைக்கொண்டு அது ஆடி மாதம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுனுடனே பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறார்கள். ஆக, சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன (அதனால்தானோ என்னவோ புலவர் ராசிகளுக்கு இருக்கை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்). சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறார். அதனால் தான் அன்று பௌர்ணமி. போதாக்குறைக்கு ராகு அதனை மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். தோராயமாக அன்று உத்திராட நட்சத்திரமாக இருக்கக்கூடும். 

தவிர அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது.  ஒரு சிலர் இந்தக் கிரக நிலைகளை ஆராய்ந்து, இந்த நாள் பொயுமு 161ம் ஆண்டு வந்திருக்கக் கூடுமென்று  கணித்திருக்கின்றனர். தொல் வானியலில் அதி நவீன மென்பொருட்கள் வந்திருக்கிற இந்தக் கால கட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கணக்கீடு  சரியா என்று தெரிவிக்கலாம். அது பரிபாடலின் காலத்தை அறியவும் உதவும். 

மேற்குறிப்பிட்ட கூறுகள் எல்லாமே நமது பாரதத்தின் வானியலிலும், சோதிட சாஸ்திரத்திலும் காணப்படும் கூறுகளாகும். எனவே தமிழர் மற்ற பகுதிகளைப் போன்றே ஒரு பொதுவான வானியலைப் பின்பற்றியே வந்துள்ளனர் என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா என்ன? Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

சரஸ்வதி துதி - பாரதியார்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள், உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள், கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள்  1 மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழழையில் உள்ளாள், கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவுச் சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்  2 வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள், வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம்.   3 தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம், உய்வ மென்ற கருத்திடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம், செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம், கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம்