முதலில் ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையை இங்கே படித்துவிடுங்கள். சிறிய மெய்க்கீர்த்திதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல, ராஜராஜர் பெற்ற பெருவெற்றிகளைப் பட்டியலிடுகிறது இது.
இப்படி வெற்றிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ராஜராஜரின் ஆரம்பப் போர்களைப் பற்றி குழப்பமே நிலவுகிறது. அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதைப் போல ஆரம்ப வரியில் உள்ள காந்தளூர்ச்சாலை எது என்பதைப் பற்றிய சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை. ராஜராஜரின் வெற்றிகளைக் குறிப்பிடும் இன்னொரு முக்கிய ஆவணமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளோ இந்தக் காந்தளூர்ச்சாலையைப் பற்றிக் கூறாமல் பாண்டியன் அமரபுஜங்கனுக்கு எதிராக அவர் அடைந்த வெற்றியோடு ராஜராஜனின் திக்விஜயத்தை ஆரம்பிக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அண்மையில் நான் வாசித்த கல்வெட்டு ஒன்று ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை அளித்தது. கல்வெட்டு என்னவோ புதிதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியகுளம் என்று ஒரு ஏரி உண்டு. இரண்டு பருவமழைக்காலங்களிலும் மழைப்பொழிவு உள்ள இந்த மாவட்டத்தில், இந்த ஏரி அடிக்கடி உடைப்பெடுத்துக்கொண்டது. அதனால் மக்கள் ராஜராஜனிடம் முறையிட, அவனும் அந்த ஊர் கோவிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டிருந்த நிலத்தின் ஒரு பகுதியை இந்த ஏரிக்கு அணை எடுப்பதற்காக ஊர் மக்களிடம் ஒப்படைத்தான். அப்படியே அணை எடுக்கப்பட்டு உடைப்பெடுக்கும் பிரச்சனை தீர்ந்தது. இதை அந்த ஏரியின் கரையில் உள்ள ஒரு கல்லில் கல்வெட்டாகப் பொறித்துக் கொடுத்திருக்கிறான் ராஜராஜன். அந்தக் கல்வெட்டின் பகுதிகள் இங்கே
இது வழக்கமாகச் செய்கிற விஷயம்தான் என்றாலும் இந்தக் கல்வெட்டின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ராஜராஜனின் மெய்க்கீர்த்தி ஒரு புதிய விஷயத்தைக் கொண்டுள்ளது. மெய்க்கீர்த்திகள் எல்லாக் கல்வெட்டுகளின் ஆரம்பத்திலும் குறிப்பிடப்படுவது வழக்கம்தான் என்றாலும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரிகள் மற்ற கல்வெட்டின் வரிகளோடு சிறிதே மாறுபட்டுள்ளன. அது என்னவென்றால் கங்கபாடியும், நுளம்பபாடியும், தடிகைபாடியும் என்ற வார்த்தைகளுக்குப் பிறகு வரும் “குடமலை நாட்டு கோவில் பள்ளியகமும்” என்ற வார்த்தைகள்தான். இது வேறெங்கும் காணப்படுவதாகத் தெரியவில்லை. குடமலை நாடும் என்பதோடு அந்த வெற்றிச் செய்தி முடிந்துவிடும். இங்கே குடமலை நாட்டு கோவில் பள்ளியகம் என்று குறிப்பிடப்படும் பகுதி எது?
பள்ளி என்றால் நகரம், அரண்மனை என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ஆக கோவில் நகரம் ஒன்றை ராஜராஜன் வென்றிருக்கிறான் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட கோவில் நகர் எது?
இதற்கு விடைகாண ராஜராஜனின் ஆரம்ப வெற்றிகளைக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் செய்திகளைப் புரட்டிப் பார்த்தேன். சோழர்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதிய பண்டாரத்தாரும் நீலகண்ட சாஸ்திரிகளும் இந்த வெற்றிகளைப் பொருத்தவரையில் பல இடங்களில் வேறுபடுகின்றனர். பண்டாரத்தார் சேர மன்னனின் மீது ராஜராஜன் படையெடுத்து அடைந்த வெற்றிதான் காந்தளூர்ச்சாலை என்கிறார். ஆனால் இது தவறான செய்தி என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் இந்தச் சாலை இருந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஆய் குல வேளிர். அவர்கள் பாண்டியர்களோடு நெருங்கிய உறவு பூண்டவர்கள். தவிர இந்தச் செப்பேடு குறிப்பிடும் விழிஞம் துறைமுகம் பொயு 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குள் வந்துவிட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே பாண்டியன் அமரபுஜங்கனை எதிர்த்து வெற்றி பெற்ற போர்களில் ஒன்றாகவே விழிஞம் வெற்றி இருந்திருக்கிறது. அப்போது அவனுக்குத் துணை வந்த ஆய் குல மன்னர்களை வெல்லவே காந்தளூர்ச்சாலை அழிக்கப்பட்டது என்று நிறுவியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
ராஜரானுடைய சமகாலத்தவனான சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனின் தென் எல்லையாக கோட்டயம் அருகில் உள்ள பந்தனம் திட்டாதான் இருந்தது என்பதால் இன்னும் தெற்கில் உள்ள காந்தளூர்ச்சாலை சேரனுக்கு எதிரான போரில் அழிக்கப்பட்டது என்பது சரியானதல்ல என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அப்படியிருந்தால் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் பாண்டியனையும் சேரனையும் வென்று கொண்டு வந்த பண்டாரம் என்று குறிப்பிடப்படுவது எந்த வெற்றிகள் ? சேரனை எதிர்த்துப் போர் எப்போது நடந்தது என்று ஆராயவேண்டியிருக்கிறது.
இதற்கான விடையை பிற்காலத்தில் வந்த ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் ஒட்டக்கூத்தரின் மூவர் உலாவும் அளிக்கின்றன. கலிங்கத்துப் பரணி
சதய நாள் விழா உதியர் மண்டிலம்
தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதயபானு ஒத்து உதகை வென்றகோன்
என்று ராஜராஜனைப் புகழ்கிறது. கூத்தர்பெருமானோ
தூதர்க்காப் பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோன்
என்று விக்கிரமசோழன் உலாவிலும்
ஏறிப்பகலொன்றில் எச்சுரமும் போய் உதகை
நூறித் தன் தூதனை நோக்கினான்
என்று இரண்டாம் குலோத்துங்கன் உலாவிலும்
மதகயத்தால் ஈரொன்பது சுரமு மட்டித்து
உதகையைத் தீயுய்த்த உரவோன்
என்று இரண்டாம் ராஜராஜன் உலாவிலும் முதலாம் ராஜராஜனைப் புகழ்கிறார்.
இங்கே கூறப்படும் நிகழ்வு என்ன என்று பார்த்தால், ராஜராஜன் அனுப்பிய தூதனை என்ன காரணத்தாலோ சேரன் பாஸ்கர ரவிவர்மன் சிறையில் அடைத்துவிட்டான். இந்த அடாத செயலைத் தண்டிப்பதற்காக உதகை மீது படையெடுத்து அவனை வென்றான் ராஜராஜன் என்று இரு புலவர்களும் கூறுகின்றனர். இந்த உதகை என்பது நாகர்கோவில் அருகில் உள்ளது என்று பண்டாரத்தார் குறிப்பிடுவது தவறான செய்தி. ஏற்கனவே தாம் கைப்பற்றிய பகுதிகளில் மீண்டும் ஏன் ராஜராஜன் படையெடுக்க வேண்டும். அங்கே எப்படி தூதனைச் சிறை செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. தவிர இந்தப் பகுதிகள் சேரநாட்டு எல்லைக்குத் தெற்கில் இருந்தன என்று ஏற்கனவே பார்த்தோம்.
இன்னும் சிலர் இந்த உதகை சேரர் தலைநகரான மகோதை (கொடுங்கோளூர்) என்று கூறுகின்றனர். இதற்குச் சாத்தியம் இருந்தாலும் மாற்று நாட்டு மன்னன் தலைநகரம் வரை சென்று தான் பெற்ற வெற்றியை ஏன் தன்னுடைய மெய்க்கீர்த்தியில் ராஜராஜன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவனோடு சேர்ந்து பல போர்களில் ஈடுபட்ட அவன் மகனான ராஜேந்திரனும் இந்த வெற்றியைப் பற்றி தன்னுடைய செப்பேடுகளில் (திருவாலங்காடு, ஆனைமங்கலம் போன்ற) ஏன் குறிப்பிடவில்லை என்பதும் முக்கியமான கேள்வி. அடுத்ததாக, கூத்தர் பதினெட்டு (ஈரொன்பது) காடுகளை அழித்து ராஜராஜன் உதகையை வெற்றிகொண்டான் என்று கூறுகிறார். மகோதைக்குச் செல்ல ஏன் பதினெட்டு காடுகளை அழிக்கவேண்டும் ? பாலக்காட்டுக் கணவாய் வழியாக எளிதாக சேரநாட்டில் நுழைந்துவிடலாமே.
இப்போது சாஸ்திரியார் என்ன கூறுகிறார் என்று பார்த்தால், இந்த உதகை என்பது குடகு நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு இடம் என்று கூறுகிறார் (சோழர்கள் ப-230). இந்த இடம் சேரமன்னனின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. அதற்கு அருகில்தான் தற்போது உதகமண்டலம் என்னும் ஊட்டி நகரும் அமைந்திருக்கிறது. ஆகவே உதகைக் கோட்டை குடகு மலைக்கு அருகில்தான் இருந்திருக்கிறது. அங்கே தான் ராஜராஜன் அனுப்பிய தூதனும் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறான். அடர்ந்த காடுகள் உள்ள இந்தப் பகுதியில்தான் பதினெட்டுக் காடுகளை அழித்து உதகையை வெற்றிகொண்டதாக மூவருலா கூறுகிறது. இதுவே குடமலை வெற்றியாகும். அப்போது குடமலைக் கோவில் பள்ளியகம் எங்கே இருக்கிறது? குடகு மண்டலப் பகுதியில் வயநாட்டிற்கு அருகில் திருநெல்லி என்ற பிரசித்தி பெற்ற தலம் இருக்கிறது. பாஸ்கர ரவிவர்மனின் காலத்தில் மிகச்சிறந்த நகராக இது விளங்கியிருக்கிறது. இந்தத் தலத்திற்கு பாஸ்கர ரவிவர்மன் விடுத்த நிவந்தங்கள் இரண்டு செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்த கோவிலும் நகரமும் சேர்ந்த இந்த இடமே கோவில் பள்ளியகம் என்று அழைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த வெற்றியே குடமலை நாட்டுக் கோவில் பள்ளியகம் என்று கன்னியாகுமரி பெரியகுளம் மெய்க்கீர்த்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.
உசாத்துணைகள்
1. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
2. பிற்காலச் சோழர்கள் - சதாசிவப் பண்டாரத்தார்
3. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
4. மூவருலா - ஒட்டக்கூத்தர்
5. திருநெல்லி தல வரலாறு - http://thirunellitemple.com/history.php
6. கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் - தொகுதி 6
7. South Indian Inscriptions Volume 2
படங்கள் நன்றி : சதீஷ் பாதிரிமங்கலம்
No comments:
Post a Comment