Tuesday, 12 October 2021

சிலப்பதிகாரத்தின் காலமும் மதுரை எரிக்கப்பட்ட நாளும்

ஒரு சிறு முன்னுரை 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் எதிராஜன், சிலப்பதிகாரம் பற்றிய என்னுடைய பழைய ட்வீட் ஒன்றைக் குறிப்பிட்டு அது நடந்த காலம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டீர்களா என்று கேட்டிருந்தார். சிலம்பில் இடம்பெற்ற வானியல் குறிப்பு பற்றிய ட்வீட் அது. அதற்கான நல்ல astronomy software ஒன்று வேண்டும் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நேற்று மதிப்பிற்குரிய ஜோதிடர் நரசிம்ம ராவ் அவர்கள் தன்னுடைய ஜெகந்நாத ஹோரா செயலியைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதில் சூரிய சித்தாந்தத்தை வைத்து மகாபாரத காலத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள் என்றும் அது தவறான முறை என்றும் தெரிவித்திருந்தார். தவிர பொயுமு 12899லிருந்து அந்த செயலியைப் பயன்படுத்தி திருக்கணித முறையில் கிரக நிலைகளை அறியலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்தது சிலம்பைப் பற்றிய ஆய்வில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜெகந்நாத ஹோரா செயலியையும் அந்த வானியல் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஆய்வு செய்தேன். அதன் விளைவே இந்தக் கட்டுரை. 



சிலப்பதிகாரத்தின் காலம் 

தமிழ் கூறும் நல்லுலகிற்கே உரிய வழக்கப்படி சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றி ஏகப்பட்ட ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இருப்பினும் பல ஆய்வாளர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களை சிலப்பதிகாரம் நடந்த காலமாக நிறுவுகிறார்கள். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது சிலப்பதிகாரம் நடந்த காலம் வேறு அது ஒரு காப்பியமாக எழுதப்பட்ட காலம் வேறு என்பதை. காப்பியம் நடந்த காலம் எதுவென்ற வேறுபாடு இருந்தாலும், அது எழுதப்பட்டது சமணமும், புத்த மதமும் தமிழகத்தில் தலை தூக்கத் தொடங்கிய சங்கம் மருவிய காலத்தில் என்பதில் பெரும்பாலான ஆய்வாளர்கள் ஒத்துப்போகிறார்கள். இதை கவனத்தில் இருத்திக்கொண்டு சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றிய ஆய்வுகளைக் கவனிக்கலாம்

பொயுமு 3ம் நூற்றாண்டு

சில ஆய்வாளர்கள் பொயுமு 3ம் நூற்றாண்டே சிலப்பதிகாரம் நிகழ்ந்த ஆண்டு என்று வாதிடுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பொயுமு 3ம் நூற்றாண்டு கடைச்சங்க காலத்தின் ஆரம்ப காலம். கடைச்சங்கப் புலவர்களில் மூத்தவர்களில் ஒருவரான மாமூலனார் 'வம்ப மோரியரின்' படையெடுப்பையும் அவர்களைத் தோற்கடித்த செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னனைப் பற்றியும் தன் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சிலப்பதிகாரமோ மூன்று பெரு மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது. சங்க காலச் சோழ மன்னர்களில் சிறந்தவனான கரிகாலச் சோழனின் இமயப் படையெடுப்பையும் அங்கே அவன் புலிக்கொடியைப் பொறித்ததையும் இந்திரவிழவு ஊர் எடுத்த காதை குறிப்பிடுகிறது. ஆகவே கரிகாலச் சோழன் சிலப்பதிகாரம் நடந்த காலகட்டத்திற்கு சற்று முன்னால் வாழ்ந்திருக்கக்கூடும். அதேபோல 'ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின்' ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் சிலப்பதிகாரம் நடந்திருக்கிறது. அடுத்ததாக வரும் சேரன் செங்குட்டுவன் இளையவன். காப்பியத்தின் நிறைவுப் பகுதிகளில் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று கனக விசயர் தலைமேல் கண்ணகிக்குச் சிலை வைக்க கல் கொண்டுவந்தான் என்று சொல்கிறது சிலப்பதிகாரம். 

பொயுமு 3ம் நூற்றாண்டு வட இந்தியாவில் மௌரியப் பேரரசு வலிமையாக இருந்த காலம். மாமூலனார் குறிப்பிடும் வம்ப மோரியரின் படையெடுப்பு பிந்து சாரரின் காலத்தில் நடந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. அவருக்குப் பின்வந்த அசோகர் தமிழ் மன்னர்களோடு நட்புடன் இருந்ததாக தன்னுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே மூன்று பெரிய தமிழ் மன்னர்கள் அடுத்தடுத்து வடநாட்டு மன்னர்களை, அதுவும் வலுவான அசோகரை வென்றதாகச் சான்று ஏதும் இல்லை.தவிர, பொயுமு 3ம் நூற்றாண்டில் நடந்த கதையை ஏன் கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் கழித்து சங்கம் மருவிய காலத்தில் இளங்கோவடிகள் காப்பியமாகப் படைக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், தமிழ் மன்னர்களுடைய காலக்கணக்கின் படி சங்க காலத்தின் ஆரம்பத்தில் இம்மூன்று பெரும் மன்னர்களும் ஆட்சி செய்ததாகக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட காரணங்களால் பொயுமு 3ம் நூற்றாண்டை ஒதுக்கிவிடலாம். 

பொயு 756ம் ஆண்டு 

திவான் பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை என்பவர் சிலப்பதிகாரத்தில் உள்ள வானியல் குறிப்புகளை வைத்து அது பொயு 756ம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வானியல் குறிப்புகள் சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருந்தி வரும் ஒன்று. பொயு 756 என்பது பல வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக நமக்குக் கிடைக்கும் ஒரு காலம். சைவ சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தோன்றி ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய காலம். சமணமும் பௌத்தமும் மறைந்துகொண்டிருந்த காலம். வட தமிழகத்தில் பல்லவர்களும் தென் தமிழகத்தில் பாண்டியர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். இடைக்காலப் பாண்டியர்களின் வம்சாவளி தெளிவாக செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற காலகட்டம் இது. நெடுஞ்செழிய பாண்டியனைப் பற்றியோ அல்லது மதுரை எரிந்தது போன்ற பெரு நிகழ்வைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. ஆகவே வரலாற்றுச் சான்றுகள் அதிகமாக கிடைக்கும் இந்த காலத்தில் சிலப்பதிகாரம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. 

பொயு 2ம் நூற்றாண்டு

மேற்சொன்ன காரணங்களை வைத்துப் பார்க்கும் போது, பல ஆய்வாளர்களின் கருத்தின் படி சிலப்பதிகாரம் நடந்தது பொயு 2ம் நூற்றாண்டு என்பதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வடநாட்டில் மௌரியப் பேரரசு வீழ்ந்து குப்தப் பேரரசு தலைதூக்காத இக்காலகட்டத்தில் பல சிறிய அரசுகள் அப்பகுதியை ஆண்டிருக்கின்றன. ஆகவே தமிழ் மன்னர்கள் வடபுலத்திற்குப் படையெடுத்துச் சென்று வெற்றியடைந்தனர் என்ற செய்தி சரியாகப் பொருந்திவருகின்றது. சிலப்பதிகாரம் இலங்கை மன்னனான கயவாகு கண்ணகிக்குக் கோவில் எடுத்த விழாவில் பங்கேற்றான் என்று குறிப்பிடுகிறது

குடகக் கொங்கரும்மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் - வரந்தரு காதை

இந்தக் கயவாகு அரசாட்சி செய்த காலமாக பொயு 114 - 136ம் ஆண்டுகளை மகாவம்சம் குறிப்பிடுகிறது. அவன் தமிழகத்திலிருந்து திரும்பி வரும்போது 'பத்தினிக் கடவுளின் கால்சிலம்பை' கொண்டுவந்தான் என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே இந்த அரசனை செங்குட்டுவனின் சமகாலத்தவனாகக் கருதலாம். 

மேலும் சாதவகனர்களின் அரசனும் வடபுலத்து மன்னர்களின் எதிரியுமான சதகர்ணி செங்குட்டுவனுக்கு வடநாட்டுப் படையெடுப்பில் உதவினான் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த 

நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே - கால்கோள் காதை

இங்கே நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடப்படுகின்ற சதகர்ணிகளின் ஆட்சிக்காலம் பொயு 2ம் நூற்றாண்டு. ஆகவே இந்தக் குறிப்புகளை வைத்து சிலப்பதிகாரம் பொயு 2ம் நூற்றாண்டில்தான் நடந்தது என்று நாம் கொள்ளலாம்.

வானியல் குறிப்பு

இப்போது சிலம்பில் உள்ள வானியல் குறிப்பிற்கு வரலாம். கண்ணகி மதுரையை எரித்த பிறகு அவள் முன் தோன்றிய மதுராபுரித் தெய்வமான அங்கயற்கண்ணி, 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து

அழல் சேர் குட்டத்துஅட்டமி ஞான்று

வெள்ளி வாரத்துஒள் எரி உண்ண

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்” எனும் 

உரையும் உண்டேநிரை தொடியோயே - கட்டுரை காதை

என்று உரைக்கிறாள். அதாவது ஆடி மாதம், இருள் பக்கமான தேய்பிறையில் அழல் என்ற கார்த்திகை நட்சத்திரம் குட்டமாக, அதாவது சிறிதாக இருக்கும் அஷ்டமி திதி, வெள்ளிக்கிழமை மதுரை எரிக்கப்படும் அரசு கேடு உறும் என்பது ஒரு கூற்று என்று அத் தெய்வம் உரைத்தது. இங்கு குட்டம் என்று குறிப்பிடப்படுவது அதன் நான்காம் பாதம் அதாவது ரிஷப ராசியில் என்று என்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. அது முதற் பாதத்தை, அதாவது ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே குறிக்கும் என்பதை உரையாசிரியர் தெரிவிக்கிறார். 

அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. "ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று

ஆக, நாம் கண்டுபிடிக்க வேண்டியது எந்த வருடத்தில் ஆடிமாதம், தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமை வந்தது என்பதைத்தான். இது ஒரு அபூர்வமான நிகழ்வு. ஏனெனில் ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கின்றான். கடக ராசி புனர்பூசத்தின் நான்காவது பாதத்தையும் பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களையும் கொண்டது. ஆகவே அந்த மாதத்தின் கிருஷ்ண பட்ச அஷ்டமி 6-7 நாட்களுக்கு முன்பு தான் வரும். பெரும்பாலும் அது ரேவதி, அசுவதி அல்லது பரணி நட்சத்திரமாகவே இருக்கும். 

இந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு ஜெகந்நாத ஹோரை செயலியில் தேட ஆரம்பித்தேன் கயவாகுவின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் மேற்குறிப்பிட்டபடி அஷ்டமி அசுவதி-பரணி நாட்களிலேயே பெரும்பாலும் வந்தது. ஜூன் 19, 116ம் ஆண்டு அஷ்டமியும் வெள்ளிக்கிழமையும் வந்தாலும் அன்று ரேவதி நட்சத்திரமாக இருந்தது. இப்படிப் பல ஆண்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், இந்த அபூர்வமான வானியல் நிகழ்வு நடந்திருப்பது ஜூலை 14ம் தேதி, 130ம் ஆண்டு என்று தெரியவந்தது. இந்த நாளில் ஆடி மாதமும் தேய்பிறை அஷ்டமியும் கார்த்திகையின் முதற்பாதமும் சேர்ந்திருந்தன. அன்று இரவுதான் மதுரை கண்ணகியால் எரியூட்டப்பட்டது. 



அதன்பின் நடந்த சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பும், அவனுக்கு உதவி செய்த சதகர்ணியின் காலமும் கண்ணகியின் கோவில் விழாவில் கலந்து கொண்ட கயவாகுவின் காலமும் இதனோடு கச்சிதமாக ஒத்துப்போகின்றன. கடைச் சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் நடந்த  இந்த நிகழ்வுகளை இளங்கோவடிகள் அடுத்த நூற்றாண்டான சங்கம் மருவிய காலத்தில் காப்பியமாகப் பாடியதும் சரியாகப் பொருந்துகிறது. ஆகவே சிலப்பதிகாரம் நடந்த ஆண்டு பொயு 2ம் நூற்றாண்டு. மதுரை எரிந்த நாள் ஜூலை 14, 130 என்பது மேற்சொன்ன ஆய்வின் மூலம் தெளிவாகிறது. 

சரி, அப்படியானால் சிலப்பதிகாரம் நிஜமாகவே நடந்ததா என்று சில நண்பர்கள் கேட்கலாம். என்னைப் பொருத்தவரை சில வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட காப்பியமாகவே அதைக் கருதுகிறேன். பல்வேறு நூல்களால் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் இக்காப்பியத்தை முழுக்க முழுக்கப் புனைவு என்று கருதுவது இயலாத ஒன்று. 






Saturday, 9 October 2021

ஆசீவகத் திரிபுகள்

ஒரு டிவிட்டர் விவாதத்தின் போது நண்பர் ஒருவர் இந்தப் பக்கத்தை தமிழகத்தின் தொல்மதம் ஆசீவகம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டினார். அதாவது ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசர் தமிழ்நாட்டுக்காரராம். இதை எழுதியவர் பெரும் ஆராய்ச்சியாளராம். விக்கி பக்கங்களிலெல்லாம் இதைச் சுட்டுகிறார்களாம். அந்தப் பக்கம் கீழே 



சரி அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவருக்கு ஒரு புறநானூறு பாடல் கிடைத்திருக்கிறது. அதில் அறப்பெயர்ச் சாத்தன் என்ற கொடையாளியின் பெயர் கிடைக்கிறது. அவர் பிடவூரைச் சேர்ந்தவர். அடுத்து தற்போது திருப்பட்டூர் என்று வழங்கப்படும் பிடவூரில் ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான். இரண்டுக்கும் சேர்ந்து முடிச்சுப்போட்டு அந்த அறப்பெயர்ச் சாத்தன்தான் இந்த ஐயனார். அவரே மற்கலி கோசர் என்று ஒரே போடாகப் போடுகிறார். இதில் இரண்டு மூன்று கல்வெட்டுகளையும் காட்டுகிறார். 

இதைக் கொஞ்சம் ஆராயலாமே என்று புகுந்தால், அவர் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் 395ஐ எழுதியவர் நக்கீரர். சங்க காலத்துப் புலவரான நக்கீரர் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப் படையையும் எழுதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சமகாலத்தவர். இந்த நெடுஞ்செழியனின் காலத்தைப் பார்த்தால் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். ஆக நக்கீரரும் அதே காலத்தைச் சேர்ந்தவராகிறார். 

அதேபோல, இந்தப் புறநானூற்றுப் பாடலில் தித்தன் என்ற சோழ அரசன் குறிப்பிடப்படுகிறார். சங்க காலத்து இலக்கியங்களில் முதன்முதலில் குறிப்பிடப்படும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி (மாமூலனாரால் பாடப்பட்டவன்) காலத்தில் இருந்து கணக்கிட்டால் இந்த மன்னனும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே இருக்கக்கூடும். இதுவும் இந்தப் பாடலின் காலத்தை உறுதி செய்கிறது. ஆகவே இந்தப் பாடலில் வரும் வள்ளலான அறப்பெயர்ச் சாத்தன் என்பவரும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும். 

ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசரோ பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமண சமயத்தின் தீர்ந்தங்கரரான மகாவீரரின் சமகாலத்தவர். அவரோடு இணைந்து பயணம் செய்தவர் என்றெல்லாம் சமண நூல்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க 2ம் நூற்றாண்டின் அறப்பெயர்ச் சாத்தன் எப்படி மற்கலி கோசராக இருந்திருக்க முடியும். அப்படி ஒரு சமயத்தை உருவாக்கியவரின் பெயர் ஏன் தமிழ் இலக்கியங்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை ? 

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறது என்று மேலும் கவனித்தால் சாத்தன் உள்ள பிடவூர் உறையூரின் கிழக்கில் (உறந்தைக் குணாது) இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

ஐயனார் கோவில் உள்ள திருப்பட்டூரோ உறையூரின் வடக்கில் இருக்கிறது. நக்கீரர் 'திக்குத் தெரியாமல்' ஏதாவது எழுதிவிட்டாரா என்ன? 

அவர் உதிர்த்த மற்றொரு முத்து "பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது"

அட அப்படியா  என்று அடுத்து அவர் சுட்டிய கல்வெட்டுகளைப் பார்த்தால் அவையெல்லாம் பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர்கள் காலத்துக் கல்வெட்டுகள். அவற்றில் ஐயனார் என்ற பெயரே இல்லை. 

'திருப்பிடவூர் நாட்டுத் தேவதான பிரமதேய திருப்பிடவூர் உடைய பிள்ளையாற்கு....'

தேவதானம் என்பது சைவ மரபுக் கோவில்களைக் குறிக்கும் செயல். அப்படியென்றால் இது சிவன் கோவிலோடு இணைந்த கோவில்தானே. பிள்ளையார் என்பது சிவனின் மகனாக ஐயனாரைச் சொல்வது என்று எடுத்துக்கொண்டாலும் ஆசீவகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு ? இந்தக் கல்வெட்டுகள் எதிலும் ஐயனார் என்ற பெயர் மட்டுமல்ல மற்கலி கோசர் அல்லது சாத்தன் என்ற பெயர் கூட வரவில்லை என்பதைக் கவனியுங்கள். இது எப்படி ஒரு ஆதாரமாகும் என்பதும் விளங்கவில்லை. 

சரி வெள்ளானைச் சுருக்கம் என்ன சொல்கிறது என்பதையாவது பார்ப்போம் என்று அதைப் படித்தால் சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலும் (வெள்ளானை) சேரமான் பெருமாள் நாயனார் குதிரையிலும் ஏறி கைலாயம் செல்கிறார்கள். அங்கே சிவபெருமானை வணங்கி எழுந்த பிறகு, சேரமான் பெருமாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் இறைவனைப் பாடுமாறு விண்ணப்பிக்கிறார் 

சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் 'திருஉலாப் புறம்' அன்று
சாரல் வெள்ளி யங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர்; நலத்தாலே.

திரு உலாப்புறம் என்ற அந்தப் பாடலை கைலாய மலையில் கேட்ட சாத்தனார் புவியில் வந்து திருப்பிடவூரில் அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு உரைத்தார் என்கிறது வெள்ளானைச் சருக்கம். பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர் கைலாயம் சென்ற பிறகுதான் அந்த சாத்தனார் இந்த ஊருக்கு வருகிறார் என்று சொல்கிறார் சேக்கிழார். அப்படியிருக்கு பொயுமு 5ம் நூற்றாண்டிலேயே அறப்பெயர்ச் சாத்தன் என்ற மற்கலி கோசர் இருந்ததற்கான ஆதாரமாக இது எப்படி உள்ளது? 

உண்மையில் சாத்தன் என்ற பெயர் சங்ககாலத்தில் புழங்கிய பெயர்களில் ஒன்று சீத்தலைச் சாத்தனார், சாத்தந்தையார், கருவூர் பூதஞ்சாத்தனார், அழிசி நச்சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் என்று பல பெயர்களை நாம் அக்காலத்தில் பார்க்கலாம் இதில் அறப்பெயர்ச் சாத்தனார் மட்டும் ஏன் மற்கலி கோசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  என்று தெரியவில்லை. 

தவிர மற்கலி கோசர் தமிழகத்தில் சமாதி அடைந்தது சித்தன்னவாசல் என்றும் அடித்துவிட்டிருக்கிறார். சித்தன்னவாசல் பொயு 2ம் நூற்றாண்டில் எழுந்த சமணர் பள்ளி. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் வளர்ந்த சமண மதங்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒன்று. இடைக்காலப்பாண்டியர் காலத்தில் பாண்டியன் ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபனின் அதிகாரிகளால் விரிவுபடுத்தப்பட்ட இடம். அங்கே போய் பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரின் சமாதி இருந்தது என்று எந்த ஆதாரத்தை வைத்து இவர் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. 

இப்படிக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத, ஆதாரம் கொஞ்சம் கூட இல்லாத ஒன்றை நிறுவ முற்பட்டு அதை ஆராய்ச்சி என்று காட்டுவது இங்கே தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற 'ஆராய்ச்சியாளர்களுக்கு' எப்படியோ அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது என்பது பெரும் கொடுமை.