Friday 11 August 2017

களப்பிரர் யார் - 2

களப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள்  சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களும், கர்நாடகாவின் வடபகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களும் தங்கள் அரசை விரிவு படுத்த ஆரம்பித்தனர். இதனால் நெருக்கப்பட்ட கர்நாடகாவின் தென்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அரச மரபினர் தெற்குநோக்கிக் குடிபுகுந்தனர். இவர்கள்தான் களப்பிரர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு இவர்கள் முதலில் ஆட்சி புரிந்துவந்தனர் என்பதை,

அருளுடை பெரும்புகழ் அச்சுதர் கோவே
இணையை ஆதலின் பனிமதி தவழும் 
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே  

என்கிறது அமிர்தசாகரனார் எழுதிய யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலின் விருத்தியுரை மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள் (அச்சுதன் எனும் களப்பிர அரசனைப் பற்றி நான்கு செய்யுள்கள் இதில் உள்ளன). இந்த நந்தி மலையைச் சுற்றிய பகுதிகள் களவர நாடு என்று அழைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள சிக்கபல்லபூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு

"நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு" என்று உறுதி செய்கிறது (Epigraphic Carnatica Vol 10 - Chikballpur Inscription no. 21) 

பொயு பதினோராம் நூற்றாண்டின் நூலான கல்லாடம் "படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநாட வேந்தன் (கல்லாடம் - 56) என்றும்,   பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில்  "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்"  என்றும் களப்பிரர் வடுகர்கள் என்றும் கர்நாடகாவிலிருந்தே வந்தனர் என்றும் கூறுகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசர்களை அகற்றி இவர்கள் ஆட்சியைப் பிடித்தனர் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள்

அளவரிய ஆதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்  (வேள்விக்குடிச் செப்பேடு பாடல் வரி 39)

என்று குறிப்பிடுகின்றன. களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பதை, தளவாய்புரச் செப்பேடுகள்

...தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாறு கவினலங்காற் களப்பாழர் குலங்களைந்தும்

என்று உறுதிசெய்கின்றன.

இப்படி வடக்கிலிருந்து வந்த களப்பிரர் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்டனர்.  இவர்கள் சமண சமயத்தையும் (கர்நாடகாவில் அப்போது பெருமளவில் பரவி இருந்த சமயம்), பௌத்த சமயத்தையும் (உறையூரை ஆண்ட அச்சுதக் களப்பாளன் பௌத்தத் துறவியான புத்ததத்தரை ஆதரித்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் சைவ, வைணவ சமயக் கடவுளர்களையும் வழிபட்டனர்.  நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களப்பிரரே என்பதை திருத்தொண்டர் திருவந்தாதி 'கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே' என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.  ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் களப்பிர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கலியன், கலிகன்றி என்ற அவருடைய அடைமொழிகளால் அறியலாம்.தவிர


'இருளறு திகிரியோடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி'  எனும் யாப்பெருங்கலத்தின் பாடல் வரிகள் திருமாலை வழிபட்டு பெருநிலத்தைக் களப்பிரர் பெற்றதாகக் கூறுகிறது.

களப்பிரர்களின் மொழியைப் பொருத்தவரை, பிராகிருதத்தின் ஒரு பிரிவான சூரசேனி என்ற மொழியையே அவர்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். ஆனாலும், தமிழ் மொழியின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை இவர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. பொயு 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் இவர்களது ஆட்சியை நீக்கியதை

..களப்ரனெனுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பரிதிபோல் பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து   என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இது போலவே பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சோழ நாட்டில் ஆட்சி புரிந்த களப்பிரர்களை வென்றான். அதன்பின், தமிழகத்தின் சில பகுதிகளில் பாண்டிய, பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக களப்பிரர் ஆண்டனர். தமிழர்களோடு ஒன்றாகக் கலந்தும் விட்டனர்.

களப்பிரர் காலத்தை 'இருண்ட காலம்' என்று குறிப்பிடுவது, அவர்களைப் பற்றிய இலக்கிய, கல்வெட்டு, நாணய ஆதாரங்கள் பல நாட்களுக்குக் கிடைக்காததால்தான். சொல்லப்போனால், சங்க இலக்கியங்கள் கிடைக்காதவரை அதற்கு முந்தைய காலம் பற்றிய தகவல்களும் அறியப்படாமல்தான் இருந்தது. தற்போது கிடைக்கப்பட்ட பல இலக்கிய ஆதாரங்களாலும், அண்மையில் பூலாங்குறிச்சி, பொன்னிவாடி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளாலும் களப்பிரர் காலத்தில் வெளிச்சம் பாய ஆரம்பித்திருக்கிறது.  ஒரு இடத்தை மன்னன் ஒருவன் கைப்பற்றி ஆட்சி புரிவதும், அவனை வேறொரு மன்னன் வென்று அந்த இடத்தைக் கைப்பற்றிக்கொள்வதும் அவனை வேறொருவன் வெல்வதும் வரலாற்றில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். தமிழகத்தில் முதலில் மூவேந்தர்கள் ஆண்டார்கள், அவர்களைக் களப்பிரர் வென்றார்கள், அவர்களுக்குப் பின் பாண்டியர்களும் பல்லவர்களும், அதன்பின் சோழர்கள் என்று இப்படிச் செல்லும் வரலாற்றுக்கண்ணியில் களப்பிரர்களும் ஒரு கண்ணி என்பதே நாம் அறியவேண்டிய செய்தி. அவர்களின் புகழை யாரும் குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை. தமிழகத்தை ஆண்ட அரசர்களில் அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. வருங்காலத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடைய வரலாறும் செறிவடையக்கூடும்.


உசாத்துணைகள்

1. புறம் 9 -  http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l12803c0.htm
2. புறம் 367 - http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=367&file=l1280374.htm
3. The Chronology of Early Tamils - by K N Sivaraja Pillai - Page 128 onwards
4. The History of South India - K A Nilakanta Sastri - Page 121
5. களப்பிரர் - நடனகாசிநாதன், தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு
6. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி. கே. இரவீந்திரன் (விகடன் பிரசுரம்)
7. பாண்டியர் செப்பேடுகள் - டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப









8 comments:

  1. சில புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  2. ஆய், பாரி, நன்னன் வேளிர்கள். இவர்கள் வடநாட்டிலிருந்து வந்தவர்களா?

    களப்பிரர் பெருமையை கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்ல. அருமையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வடநாட்டிலிருந்து வந்த வேளிர் வழிவந்தவர்கள்.

      Delete
  3. /சிலம்பும் மணிமேகலையும் இயற்றப்பட்டது சங்கம் மருவிய காலமான பொயு 1ம் நூற்றாண்டு/

    1) சங்கம் 1ம்லயே மருவிடுச்சா?

    சங்கப்பாடல்களின் கடைசி நூல் (என்று கருதப்படும்) பரிபாடலின் காலம் என்ன?

    மொழியை வைத்துப் பார்த்தால் பரிபாடலும், சிலம்பும் ஒரே நூற்றாண்டில் எழுதப்பட்டவை போல தோன்றவில்லையே.

    செங்குட்டுவன், கயவாகுவை வைத்து கதை நிகழ்வுகள் நடந்த காலத்தை தோராயமாக புரிந்துகொள்ளலாம். ஆனால் அப்போதே தான் இயற்றவும் பட்டது என்று கூறுவதற்குக் காரணம் இளங்கோ செங்குட்டுவனின் தம்பி என்ற கருத்தினால் தானே.
    இளங்கோ என்பது prince என்ற ஒரு பொதுப்பெயர் மட்டும்தானே? அவரது காலம் பற்றிய புரிதல் அத்தனை உறுதியானதா?

    சிலம்பு பாடல்களின் மொழியை மட்டுமே அகச்சான்றாக (!) வைத்துச் சொல்கிறேன். இல்லை, நான் சொல்லும் அளவு சங்கப்பாடல்களுக்கும், சிலம்புக்கும் மொழி வித்தியாசம் இல்லையா?



    /ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்/

    தலையாலங்கானத்துப் போரா?
    இது வேற போரா?

    ReplyDelete
    Replies
    1. சங்கம் என்பதையே சரியாக வரையறுக்க முடியாத நிலையில், ஒரு approximation ஆகத்தான் சங்கம் மருவிய காலத்தையும் வரையறுக்கு முடிகிறது. அப்படிப் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்து பொயு 1ம் நூற்றாண்டுதான். பரிபாடல் சங்ககாலத்தில் எழுதப்பட்டதாகவே நான் கருதுகிறேன் (பொயுமு 2/1 நூற்றாண்டுகளில்). சிலம்பிற்கு முன்பே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். சிலம்பையே பொயு 5ம் நூற்றாண்டிற்குத் தள்ளிக்கொண்டு போகும் ஆய்வாளர்கள் உண்டு (வையாபுரிப்பிள்ளை). ஆனால் பரிபாடலும் சிலம்பும் வெவ்வேறு காலத்தியவை என்பதில் சந்தேகமில்லை.

      இந்த செங்குட்டுவன் / கயவாகு காலம்பற்றி எனக்கு சந்தேகங்கள் உண்டு. செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் என்றால், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் சமகாலத்தவர் ஆகிறார் அவர். அப்படியென்றால், சிலம்பு சங்க காலத்தின் முதல் பகுதிக்குக் கொண்டு செல்லப்படவேண்டிய நூல். சதகர்ணி போன்றவர்களோடு ஒப்பிடும்போது இது இடிக்கிறது. எனவே செங்குட்டுவனின் தம்பி இளங்கோ என்ற கருத்தை நாம் நிராகரிக்கவேண்டும். நீங்கள் சொல்வது போல சங்க கால நூல்களுக்கும் சிலம்பிற்கும் மொழி வித்தியாசம் உண்டு. எனவே முன்பு நடந்த ஒரு கதையை இளங்கோவடிகள் பாடியதாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அது பொயு 1ம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

      'ஆலங்கானத் தமர்' தலையாலங்கானத்துப் போர்தான். மதுரைத் தமிழ்ச்சங்கம் வைத்துப் பாண்டியர்கள் நடத்தியதும் இச்செப்பேட்டால் உறுதிசெய்யப்பட்டது.

      Delete
    2. பரிபாடல் பொயுமு-வா?
      படிச்சவரைக்கும் கட்டக்கடைசி சங்கநூலா தெரியுதுங்களே.

      உள்ளடக்கம் வச்சு சொல்லலை. அப்படி சொல்றது ஒரு circular reasoning, to be rejected in-limini.
      மொழியை வச்சு சொல்றேன்.

      Of course, புறநானூறு, அகநானூறுலயே இன்றும் புரியும் எளிய பாடல்களும் உண்டு (அதானே அதிசயமே!). ஆனா பரிபாடல்ல அனேக பாடல்கள் என்னைப்போன்ற
      ஓரளவே பரிச்சயம் உள்ள எளிய வாசகர்களுக்கும் புரியறாப்ல இருக்கு.

      அதைப் பின் நகர்த்தினால், சிலம்பும் (இன்னும்) நகரும்.


      /ஆலங்கானம்/

      எனக்கு அப்போ அந்த வரி புரியலை.
      ஆலங்கானத்துப் போர் சங்க்ககாலத்துல நடந்தது.

      /ஆலங்கானத்து அமர் வென்று ஞாலம் காவல் எய்தியும்/
      rightu

      /கடிஞாறு கவின் அலங்காற் களப்பாழர் குலம் களைந்தும்/



      இருவேறு காலகட்டங்களில் நடந்த பாண்டிய வெற்றிகளை பறைசாற்றுகின்றதா இந்த செப்பேடு?

      Delete
    3. கட்டக்கடைசி சங்க நூல்தான். ஆனால் கடைச்சங்கம் பொயுமு 2/1ம் நூற்றாண்டுவரை இருந்ததுதானே. பொயு ஆரம்பத்தில் களப்பிரர் வந்துவிடுகின்றனர். சில ஆராய்ச்சியாளர்கள் பொயுமு 161ல் பரிபாடல் இயற்றப்பட்டதாகக் கூறுவர் என்று புலியூர்க்கேசிகன் கூறுகிறார். ஆனால், இதையெல்லாம் ஓரளவுக்குத்தான் ஊகிக்கமுடியும். சங்ககாலத்தைப் பொருத்த வரை உறுதியான முடிவு என்று ஏதுமில்லை.

      ஆமாம், தளவாய்புரம் செப்பேடுகள் பாண்டியரின் பெருமைகளாக, சுனாமியை அடக்கியதிலிருந்து தமிழ்ச்சங்கம் வைத்தது, களப்பாளர் குலம் அழித்தது என key highlights களைப் பட்டியலிடுகின்றன.

      Delete