Thursday 10 August 2017

களப்பிரர் யார் - 1

'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது.  பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாமூலனாரின் காலத்தை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த ராசமாணிக்கனார் போன்ற பல வரலாற்றாசிரியர்களின் கருத்து. இது போலத்தான் திருக்குறளின் காலமும் பொயுமு 3ம் நூற்றாண்டிலிருந்து பொயுமு 1ம் நூற்றாண்டு வரை என்பது ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. சிலம்பும் மணிமேகலையும் இயற்றப்பட்டது சங்கம் மருவிய காலமான பொயு 1ம் நூற்றாண்டு, இவை இயற்றப்பட்டது களப்பிரர் வருகை தந்த பொயு 2ம் நூற்றாண்டிற்கு முன்னால். சோழன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் ஆகிய அரசர்களைப் பற்றிப் பேசும் சிலம்பு, களப்பிர மன்னர்களைப் பற்றி, அப்படி ஒரு இனம் இருந்ததைப் பற்றியே எந்தக் குறிப்பையும் தராததை நாம் இங்கு நினைவுகூரவேண்டும். 

இப்படி இலக்கியத்தைப் பற்றி எல்லாக்கணக்கையும் களப்பிரர் காலத்தில் எழுதியதை, போனால் போகிறது என்று மேலே சென்றால் திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தருகிறார் ஆசிரியர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் குடித்தலைவர்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறார். ஏதோ தமிழ்வாணன் நாவலைப் படித்துவிட்டு தூங்காமல் தவித்த இரவில் இதை அவர் எழுதியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் பல்யாக சாலை முதுகுடுமியைப் பற்றிப் பார்ப்போம். ஆய்வாளர்களால் கடைச்சங்க காலத்திற்கு முற்பட்டவராகக் குறிப்பிடப்படுகிறார் இவர். புறநானூற்றின் இப்பாண்டிய மன்னனைப் பற்றி ஐந்து பாடல்கள் உள்ளன. (புறம் 6,9, 12,15, 64). இதில் 

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவினெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம் - 9) 

 என்று நெட்டிமையார் பாடுகிறார். குமரிகண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றின் மணலைக் காட்டிலும் பலகாலம் வாழிய என்று பெருவழுதியை அவர் வாழ்த்துகிறார். பஃறுளி ஆற்றைப் பற்றிய இந்தக் குறிப்பை வைத்து  அவர் கடைச்சங்க காலத்திற்கு முந்தியவர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர். தவிர கடைச்சங்கப் பாண்டிய மன்னர்களின் புகழ்பெற்றவனான தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் புகழைப் பாடும் மதுரைக் காஞ்சி பல்யாகசாலை முதுகுடுமியை நெடுஞ்செழியனின் முன்னோன் என்று குறிக்கிறது 

பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறை போக்கிய
தொல்லாணை நல் ஆசிரியர்  (மதுரைக் காஞ்சி)

பல்சாலை முதுகுடுமியைக் களப்பிரர் படுகொலை செய்த பிறகு பெருவீரனான நெடுஞ்செழியன் எப்படி  மதுரையை ஆண்டான் என்பது கட்டுரை ஆசிரியருக்கே வெளிச்சம். ஏதோ யாகம் செய்தான் என்பதற்காக ஒரு பெருவீரனான தமிழ் மன்னனை ஆசிரியர் படுகொலை செய்துவிட்டார் பாவம். 

இப்போது ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கு வருவோம். கடைச்சங்ககாலத்திற்கு மூத்தவரான பல்சாலை முதுகுடுமிக்கு நேரெதிராக, கடைச்சங்ககாலத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் இவன். புறம் 367ல் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோரோடு இணைந்து ஔவையாரால் பாடப்படும் மன்னன் இவன். இவனை யாரோ கொன்றதாக எந்த ஆதாரத்தை வைத்து ஆசிரியர் சொன்னாரோ தெரியவில்லை. சோழ வம்சம் இவனுக்குப் பின்னும் தொடர்ந்தது. முற்காலச் சோழவம்சத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் கோச்செங்கணான். புறநானூறும் ஒட்டக்கூத்தரின் மூவருலாவும் இதைப் பற்றிக்குறிக்கின்றன. இவனுடைய காலம் பொயு முதல் நூற்றாண்டு.  சேரன் கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணானை பொய்கையார் களவழி நாற்பது பாடி விடுவித்தார் என்பது வரலாறு. இந்தக் களவழி நாற்பது என்பது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. ஆக, முதுகுடுமியையும் பெருநற்கிள்ளியையும் கொன்று விட்டு களப்பிரர் ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். 

அடுத்து மகாவம்சத்தைக் குறிப்பிட்டு பல மன்னர்களின் பட்டியலை ஆசிரியர் அடுக்குகிறார். இவர்கள் எல்லாரும் களப்பிரர் என்பதற்கு என்ன ஆதாரம் என்பது தெரியவில்லை. இதில் எருமையூர், கர்நாடகாவின் நடுப்பகுதி வரைக்கும் தமிழர் பகுதியாக தடாலடியாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டின் எல்லையும் நாட்டில் அடங்கிய பகுதிகளும் தெளிவாக வகுக்கப்பட்டதை அவர் ஏனோ அறியவில்லை. 

'தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண்பூழி, பன்றி, அருவா, அதன் வடக்கு, நன்றாய சீத மலாடு, புனல் நாடு என்று பன்னிரண்டு பிரிவாக தமிழகம் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தமிழ் நிலத்தை சூழ்ந்த இடங்களாக கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம் போன்ற பகுதிகள் நன்னூல் குறிக்கிறது. ஆக கன்னடம் தமிழகத்தின் பகுதி என்று கூறுவது தவறான வாதம். அங்கிருந்து வந்த களப்பிரர் தமிழர்களே அல்ல. 

கட்டுரையை அவர் எப்படி முடிக்கிறார் என்று பார்ப்போம். 

//மகேந்திரபல்லவன் எல்லா களப்பிரப் பகுதிகளையும் கைப்பற்றி பல்லவ சாம்ராச்சியத்தை உருவாக்கினான். இந்தப் பல்லவர்களும் முதலில் பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் மகேந்திர பல்லவன் காலத்தில் சைவ சமயத்திற்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம்//

வரலாறு சொல்வது 

- களப்பிரர்களை வென்றவர்கள் பாண்டியர்கள் (ஆதாரம் வேள்விக்குடிச் செப்பேடுகள்) பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணு வடபகுதியில் ஆண்ட சில களப்பிரச் சிற்றரசர்களை வென்றார். மகேந்திரன் களப்பிரர்களோடு போர் புரியவேயில்லை. சாளுக்கியப் புலிகேசியோடு பொருதுவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. 

- பல்லவ அரசைத் தோற்றுவித்தவன், 'சிவஸ்கந்த வர்மன்'. அடுத்து வந்த அரசர்களில் ஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் ஆகியோர் உண்டு. இவர்கள் எப்படி பௌத்த மதத்தவர் ஆனார்கள்? சிம்மவிஷ்ணு விஷ்ணுவின் சிறந்த பக்தர் என்று உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மகேந்திரவர்மனும் முதலில் சார்ந்திருந்தது சமண சமயத்தை. அவனைச் சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்ற வேளாளர். 

ஆக உண்மை என்பதை பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டியிருந்த இந்தக் கட்டுரையை விடுத்து, களப்பிரர் என்பவர்கள் யார், தமிழக வரலாற்றின் அவர்கள் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

 (அடுத்து) 4 comments:

 1. இலக்கிய மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. இன்னும் மேலதிக தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்.
  கருத்து - எதிர் கருத்து எல்லாம் இருந்தால்தான் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

  ஏன் எருமையூர் அன்று தமிழ்ப்பகுதியில்லை? நல்ல தமிழ்ப் பெயரை மாற்றியது யார்?

  ReplyDelete
  Replies
  1. ஆதிகாலத்திலேயே அது ப்ராகிருதத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்டது. அதன் காரணமாகவே ஊர்ப்பெயரும் மாறுபாடு அடைந்தது.

   Delete
 2. என்ன இருந்தாலும் பக்கத்துல இருந்து பார்த்தா மாதிரி எழுதியிருக்குற அந்த சுவாரஸ்யமான நடை உங்களுக்கு வரலை :-)

  சில boring கேள்விகள் இருக்கு. அடுத்த இடுகையும் போடுங்க, ஒருசேர கேட்டுக்குறேன்.

  ReplyDelete