Saturday 30 June 2018

பாண்டிய வம்சமும் நாயக்கர்களும்

முதலில் ஒரு டிஸ்கி. தமிழகத்தில் ஆட்சி செய்த பாண்டிய வம்சம் எப்படி முடிவுக்கு வந்தது? அதற்குக் காரணம் விஜயநகர நாயக்கர்களா அல்லது வேறு யாராவதா? இந்தக் கேள்விகள் தொடர்பாக ஒரு விவாதம் நடந்தது. அது தொடர்பாக நான் சொல்லியிருந்த கருத்துகளுக்கான தரவுகளை அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதால் மட்டுமே இந்தப் பதிவு. மற்றபடி, இந்த விவாதத்தைத் தொடர எனக்கு நேரமும் விருப்பமும் இல்லை.



முடத்திருமாறனால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைப் பாண்டியர் வம்சம் எப்படி மதுரையிலிருந்து அகற்றப்பட்டது என்பதைப் பற்றி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. பொயு 13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய சகோதரர்களுக்குள் தாயாதிச்சண்டை மூண்டதும், அதன் விளைவாக மாலிக்கபூர் மதுரைமீது படையெடுத்ததும் தெரிந்த விஷயம். நிலைகுலைந்த மதுரையை மீட்டெடுத்து ஆட்சி செய்ய முனைந்த அவர்களின் உறவினனான பராக்கிரம பாண்டியன், உலூக் கான் என்ற முகமது பின் துக்ளக்கால் பிடிபட்டுக் கொலை செய்யப்பட்ட பின் மதுரைப் பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது. மதுரையும் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் சுல்தான்களால் ஆட்சி செய்யப்பட்டு இருளில் முழ்கியது. பின் குமார கம்பண்ணர்,  மீனாட்சியின் அருளால் மதுரையை வென்று சுல்தான்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அதன்பின் என்ன நடந்தது என்பது பற்றிக் குழப்பமான தகவல்களே கிடைக்கின்றன. கம்பண்ணர் விஜயநகரம் திரும்பும் போது, பாண்டிய வம்சாவளியினர் சிலருக்கு மதுரைப் பகுதியை ஆளும் உரிமையை அளித்து மீண்டதாகத் தெரிகிறது.  ஆனால், பாண்டியர்களின் சிற்றரசர்களாக இருந்த வாணாதிராயர்கள், அவர்களை வென்று மதுரையைக் கைப்பற்றிக்கொண்டனர். இந்த வாணாதிராயர்கள் புதுக்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் என்பது அங்கு கிடைக்கப்பெற்ற அவர்களின் கல்வெட்டுகளால் தெரிகிறது. தங்களைப் 'பாண்டிய குலாந்தகர்கள்' என்றும் 'மதுராபுரி நாயகன்' என்றும் கூறிக்கொள்வதன் மூலம், பாண்டியர்களை வென்று தென் திசைக்கு விரட்டியது அவர்களே என்பது தெளிவு. கல்வெட்டுகளில் காணும் பின்வரும் வெண்பாவும் இதைத் தெளிவுபடுத்துகிறது.

'இழைத்த படியிதுவோ வெங்கனா வென்றன்
றழைத்த வழுகுரலேயால் - தழைத்தகுடை 
மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த 
தென்னவர்கோன் போன திசை'
(Inscriptions of The Pudukottai State, No. 678)

ஆக, விசுவநாத நாயக்கர் மதுரையை தலைமையாகக் கொண்டு ஆட்சி செலுத்தும் முன்னரே, பாண்டியர் ஆட்சி அங்கிருந்து நீங்கி விட்டது.   தென் திசை நோக்கிச் சென்ற பாண்டியர்கள் தென்காசி, திருநெல்வேலி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய ஊர்களைத் தலைநகர்களாக கொண்டு ஆட்சி செய்யத்தொடங்கினர் என்பது அவர்களின் கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் தெரிய வருகிறது. பிற்பாடு, விசுவநாத நாயக்கர் மதுரையில் இருந்து ஆட்சி செய்த போது, விஜயநகரப்பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இவர்கள் தொடர்ந்தனர் என்பதும் அவர்களோடு மண உறவு கொண்டிருந்தனர் என்பதும் வரலாறு நமக்கு அளிக்கும் செய்திகள். விசுவநாதரோடோ, அரியநாதரோடோ பாண்டியர்கள் போர் புரிந்ததாக எந்தச் செய்தியும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

மேலும், தென்காசிப் பாண்டியர்கள் போர் புரிந்தது சேர அரசர்களோடுதானே அன்றி விஜயநகரப் பேரரசுடன் இல்லை. குறிப்பாக, சடையவர்மன் சீவல்லபப் பாண்டியன் (பொயு 1534-43) தென்காசியை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, திருவாங்கூரைச் சேர்ந்த உதயமார்த்தாண்டவர்மன் என்ற அரசன் சேரமாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களைக் கைப்பற்றிக் கொண்டான். சீவல்லப பாண்டிய விஜயநகர அரசனான அச்சுதராயனின் உதவியைக் கோரினான். தென்னாடு நோக்கிப் படையெடுத்த அச்சுத ராயன், சேரமன்னனை வென்று அப்பகுதிகளை மீட்டு, பாண்டியனிடம் திருப்பிக்கொடுத்தான். இதனால் மனம் மகிழ்ந்த சீவல்லபன் தனது மகளை அச்சுத ராயனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் என்று திருவாங்கூர்க் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பாண்டியர்கள் உள்நாட்டுப்பூசலால் தங்கள் வலிமையை இழந்து, வாணாதிராயர்களால் தோற்கடிக்கப்பட்டு சிற்றரசர்களாக மாற நேர்ந்ததே அன்றி, நாயக்கர்கள்தான் அவர்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வது வரலாற்றைத் திரித்துக்கூறும் முயற்சியாகும்.

ஆதாரம்:

1) பாண்டியர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார்.
2) The Pandyan Kingdom by K A Nilakanta Sastry
3) History of the Nayaks of Madura - S Sathyanatha Aiyar










No comments:

Post a Comment