Wednesday 8 July 2020

உவணச் சேவல் நியமம்

உலகில் நீண்ட நெடு வரலாற்றை உடைய தொல் நகரங்களில் ஒன்று மதுரை. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான நகர் இது. நகரின் எல்லைகள் அவ்வப்போது விரிந்தும் சுருங்கியும் வந்திருந்தாலும், அதன் மையப்பகுதி அதிகமாக மாறவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரில் இரு ஆலயங்கள் தனிச்சிறப்புடையனவாகத் திகழ்ந்தன. அதில் 'மழுவாள் நெடியோன்' என்று மதுரைக் காஞ்சி போற்றும் ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அங்கே திருமாலின் கோவில் எங்கே இருந்தது என்பதை ஆராய்வோம்.




பண்டைக்காலத்தில் மதுரையின் கோட்டை தற்போது ஆவணி மூல வீதி என்று அழைக்கப்படும் வீதியைச் சுற்றியே இருந்தது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையும் சீருர், பூவின் 
இதழகத் தனைய தெருவம்; 
இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

என்ற பரிபாடலின் வரிகள் பூவின் இதழ்களைப் போல வட்டமான தெருக்கள் இருந்தனவென்றும் நடுநாயகமாக ஆலவாய் அண்ணல் கோவில் இருந்தது என்றும் விளக்குகிறது.

இந்தக் கோட்டையின் வெளிப்புறத்தில், நகரின் தென்மேற்கு மூலையில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதி அமைந்திருந்தது. இங்கே தான் திருமாலுக்குப் பெரிய கோவில் ஒன்று அமைந்திருந்தது. சிலப்பதிகாரம் 'உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்'  அதாவது கருடக் கொடி உடையோன் நியமம் என்று கூறுவது இந்தக் கோவில்தான். நியமம் என்பதற்கு கோவில் என்ற பொருள் உண்டு. 

இருந்தையூரில் அமர்ந்த பெருமானைப் பற்றிப் பரிபாடல் பாடும்போது. 

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ


அதாவது வானில் இருந்து மழை பொழிந்து, அதன்மூலம் மலையிலிருந்து நீர் பெருகி வந்து மதுரையை எதிர்கொள்ளும் ஆற்றின் துறையில் உள்ள இருந்தையூரில் அமர்ந்திருக்கும் செல்வனே என்று திருமாலைப் போற்றுகிறது இந்தப் பாடல். மேலும், இந்த ஊரில் ஒரு பக்கம் மலையும், மற்றொரு பக்கம் வயல்களும் இன்னொரு பக்கம் நகரமும் உள்ளது என்றும் அது குறிக்கிறது. இந்த வருணனைக்குச் சரியாகப் பொருந்தி வருவது அக்கால மதுரையில் புறநகரில் இருந்ததும், திருமால் அமர்ந்த கோலத்தில் அருள் செய்து வருவதும், இருந்தையூர் என்ற இடத்தில் உள்ளதால் இருந்த வளமுடையார் என்ற பெருமை பெற்றதுமான தற்போதைய கூடலழகர் கோவில் ஆகும்.





இப்போது தெற்கு மாசிவீதி, மேல மாசி வீதி சந்திப்பிலிருந்து சில அடிகள் தூரமே உள்ள இந்தக் கோவில் அக்காலத்தில் பெரும் கோவிலாக இருந்திருக்கிறது. நாயக்கர் காலத்தில் மதுரைக் கோட்டை விரிவடைந்து அதன் உள் சுவர் தற்போதைய மாசி வீதிகளை ஒட்டியும் வெளிச்சுவர் தற்போதைய வெளி வீதிகளை ஒட்டியும் கட்டப்பட்ட போது இரண்டு சுவர்களுக்கும் இடையே இந்தக் கோவில் வந்துவிட்டது. அடுத்து ஆங்கில ஆட்சியில், வடம்போக்கித் தெருக்களும், மாரட் வீதியும் வந்தவுடன் இந்தக் கோவிலின் பகுதிகள் துண்டாடப்பட்டு விட்டன. இந்தக் கோவிலின் பகுதிகளாக இருந்த சக்கரத்தாழ்வார் கோவில், ஹனுமார் கோவில், மதனகோபால சுவாமி கோவில், வீரராகவப் பெருமாள் கோவில் ஆகியவை தனிக்கோவில்கள் ஆகிவிட்டன. (பார்க்க படம்) 






தற்போது 108 திருப்பதிகளில் ஒன்றாகப் பெருமை பெற்று விளங்கும் மதுரை கூடலழகப் பெருமான் கோவிலின் வரலாறு இதுதான். மதுரை நகரில் ஆலவாய் அண்ணலின் கோவிலும் இருந்தவளமுடையாரான கூடலழகப் பெருமானின் கோவிலும் இருபெரும் ஆலயங்களாகத் திகழ்ந்தன என்பதைத்தான் மதுரைக்காஞ்சி 'ஓவுக் கண்டென்ன இரு பெரு நியமத்து' என்று சுட்டிப் பாடுகிறது. 






3 comments:

  1. அருமையான பதிவு. சங்க இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள் கூறி எடுத்துரைத்த விதம் ,,👌👌

    ReplyDelete
  2. வழக்கம்போல, புது தகவல்களோடு சிறப்பான இடுகை. நன்றி.

    / ஒரு பக்கம் மலையும்/

    எந்த மலையை குறிக்கிறது?

    இன்மையிலும் நன்மை தருவார் கோவில் மிகவும் பிற்பட்ட கால கோவிலோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் இருக்கவேண்டும்.

      Delete