Friday 4 September 2020

கிண்ணிமங்கலம் தெரிவிக்கும் வரலாற்றுச் செய்திகள்

கீழடியை விட கிண்ணிமங்கல ஆய்வுகள் முக்கியமானது, அது புதிய வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தப்போகிறது என்று பலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அது இப்போது உண்மையாகிவிட்டது (அது அவர்கள் நினைத்தபடிதானா என்பது வேறு விஷயம்). என்ன மாதிரியான செய்திகள் இப்போது வெளிவந்திருக்கின்றன என்பதை ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம். 

முதலில் கிண்ணிமங்கலம். மதுரைக்கு அருகே, உசிலம்பட்டி சாலையில் வடபழஞ்சியை அடுத்து உள்ள கிராமம் இது. இந்த கிராமத்தில் ஏகநாத சுவாமியின் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஜூலை மாதம் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு துண்டுக் கல் தூணும் சில பொருட்களும் கிடைத்தன. அந்தத் துண்டுக் கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களில் "எகன் ஆதன் கோட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுக் கல்வெட்டு இந்தப் படத்தில் உள்ளது.


இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், தமிழ் பிராமி எழுத்துகளில் 'எ' என்ற எழுத்து |> போன்று முக்கோணத்தைத் திருப்பி வைத்தது போல இருக்கும். இதன் நடுவே ஒரு புள்ளி வைத்துவிட்டால் அது 'ஏ'காரமாக ஆகிவிடும். காலப்போக்கில் இந்தப் புள்ளி தேய்ந்து இருக்கலாம் என்பதை வைத்து இதை 'ஏகன் ஆதன் கோட்டம்' என்று படியெடுத்தனர். எழுத்தமைதியை வைத்து இந்தக் கல்வெட்டின் காலம் பொயுமு 2-1 நூற்றாண்டுகளாக இருக்கலாம் என்பதையும் கணித்தனர்.  ஆதன் என்பதற்குத் தமிழில் தலைவன் என்று பொருள். ஏகம் என்பது வடமொழியில் ‘ஒன்று’ என்பதைக் குறிக்கும். கோட்டம் என்பது இறைவன் உறையும் இடமான கோவில். 'கோழிச் சேவல் கொடியோன் கோட்டம்' என்று சிலப்பதிகாரம் கூறுவதை அறிந்திருப்போம்.  ஆக, ஏகன் ஆதன் கோட்டம் என்பது, ஒரே தலைவனாக இந்த மடத்தைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படும் இறைவன் கோவில் உறுதியாயிற்று. 

அந்த இறைவன் யார் என்பதை அறிய, இந்த ஆய்வில் கிடைத்த மிக முக்கியமான பொருளான சிவலிங்கம் உதவி செய்தது. இன்றும் சைவ மடமாக இருக்கும் இந்தக் கோவில் சிவன் கோவிலாக இருந்ததை இங்கே கிடைத்த சிவலிங்கம் தெளிவுபடுத்தியது. 





இதை மேலும் வலுப்படுத்தியது அங்கே கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று. அதில் 'இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறையிலி என்றால் வரியில்லாத நிலம். ‘ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி’ என்று சொல்லப்படும் இந்தப் பள்ளிப்படை மண் தளிக்கு, அதாவது மண்ணால் அமைக்கப்பட்ட இந்தக் கோவிலுக்கு வரியில்லா நிலம் அளித்திருக்கிறார்கள். இந்தக் கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணித்தார்கள். அக்காலத்தில் குடைவரைக்கோவில்களும் மண்ணால் ஆன கோவில்களுமே பெருமளவு இருந்தன. அப்போதுதான் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கற்றளிகள், அதாவது கல் கோவில்கள் பெருமளவு கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலம். இங்கே பள்ளிப்படை என்று குறிப்பிடப்பட்டதால், இது பள்ளிப்படைக் கோவில் என்பதும் தெளிவாயிற்று. பள்ளிப்படை என்பது சிவ தீக்ஷை பெற்றவர்களின் சமாதியில் கட்டப்படும் கோவில். அந்தச் சமாதியின் மேலே சிவலிங்கத்தை வைத்துப் பூஜிப்பது வழக்கம். ஆகவே இது பள்ளிப்படையான ஒரு மண் கோவிலாக இருந்தது என்பது தெளிவாயிற்று. ஆனால், இதற்கு இறையிலி நிலம் 'ஈந்தது' யார் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. 

அதன்பின் தமிழக தொல்லியல் துறை மேலும் ஆய்வுகள் (19-08-2020) மேற்கொண்டு, நேற்று ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேற்சொன்ன இரு கண்டுபிடிப்புகளையும் உறுதி செய்த அறிக்கை மேலும் பல தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அவை என்ன ?


வட்டெழுத்துக் கல்வெட்டு பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதிசெய்யப்பட்டது. பொயு 8ம் நூற்றாண்டு மதுரை இடைக்காலப் பாண்டியர் ஆட்சியில் இருந்தது. அவர்களில் ஒரு அரசன் தான் இந்த இறையிலி தானத்தை அளித்திருக்கவேண்டும். அவன் யார் என்ற கேள்விக்கு அங்கே கண்டெடுக்கப்பட்ட பொயு 1722ஐச் சேர்ந்த விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் கல்வெட்டு விடையளித்தது. இந்தமுறை நடைபெற்ற ஆய்வில் வெளிப்பட்ட இந்த பலகைக் கல்வெட்டு 43 வரிகளைக் கொண்டது. மதுரை நாயக்கர் பரம்பரையில் 12ம் ஆட்சியாளர் இந்த விஜயரங்க சொக்கநாதர். இராணி மங்கம்மாளின் பேரர்.  இவர் ஏற்கனவே பாண்டியர்களால் வழங்கப்பட்ட இறையிலியை உறுதிசெய்து சாசனம் செய்துகொடுத்திருக்கிறார். எப்படி வேள்விக்குடிச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மானியங்களை இடைக்காலப் பாண்டியர் காலத்தில் மீண்டும் சாசனம் செய்து கொடுத்ததோ, எப்படி ராஜராஜன் கொடுத்த அறத்தை அவன் மைந்தன் ராஜேந்திரன் ஆனைமங்கலச் செப்பேடுகளாக மீள் சாசனம் செய்து கொடுத்தானோ, அப்படி மீள்சாசனம் செய்து கொடுக்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு இது. அதன் முக்கியமான சில வரிகளைப் பார்ப்போம். 

..... புனர்பூச சுபதியாக சுபதினத்தில்

சமூகம் மீனாட்சி நாயக்கரவர்கள் ஆகோசேத்திரத்தில்

மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி சன்

னதியில் கிண்ணிமங்கலம் ஶ்ரீ லஶ்ரீ

ஏகநாத குருமடத்தார்க்கு தன்ம சிலா சாசனப் பட்டயம்

எழுதிக்குடுத்தபடிக்கு 

இந்தச் சாசனம் மீனாட்சியம்மன் கோவிலில் செய்யப்பட்டிருக்கிறது. மீனாட்சியின் பரமபக்தர்களான நாயக்கர்கள் சைவ மடத்திற்கு அங்கே மானியம் அளித்ததில் வியப்பில்லை. அடுத்து



....இம்மடத்தார்க்கு பாத்தியப்பட்ட

நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு

திரல் விடையாகவும் நெடுஞ்சடையன் பரா

ந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்ட

டபடி குடும்பத்தாரின் வாரிசுகளால்

ஆதாயம் கையாடிக் கொண்டு இவர்களின்

குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம்

செய்து வரவும்

மேற்குறிப்பிட்ட வரிகளின் மூலம் இந்தச் சாசனத்தை முதலில் செய்து தந்தது பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் என்று தெளிவாகத் தெரிகிறது. நெடுஞ்சடையன் 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னன். அவன் ஆட்சிக்காலத்தில்தான் திருப்பரங்குன்றம், ஆனைமலை போன்ற பல குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டு அவற்றிற்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. வேள்விக்குடி, ஶ்ரீவரமங்கலம் போன்ற செப்பேடுகளை அளித்தவனும் அவனே. இந்தப் பள்ளிப்படைக் கோவிலுக்கு இறையிலியாக மானியம் அளித்ததும் அந்த மன்னனே என்பது தெளிவாகியது. மேலும்

......பரம்பரை சம்பி

ரதாயப்படி பள்ளிப்படை சமாது வைத்து வ

ணங்கி வரவும் 

என்ற வரிகள் இந்த மடத்தைச் சேர்ந்த குருக்களின் சமாதிகள் இங்கே வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கிறது. பெரிய மடங்களில், அந்த மடத்தைச் சேர்ந்த ஆச்சாரியர்கள், ஆதீனங்கள், குருமார்களின் சமாதிகள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். இதுவும் அதே போன்ற வழக்கத்தை அனுசரிக்கும் மடம் போலும். 

இடைக்காலப்  பாண்டியர்கள் தங்கள் முன்னோர்களான பாண்டியர்கள் கொடுத்த அறத்தையும், ராஜேந்திரன் தன் தகப்பன் கொடுத்த அறத்தையும் மீள் சாசனம் செய்ததில் வியப்பில்லை. ஆனால், நாயக்க மன்னர் ஒருவர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டியர் ஒருவர் செய்து கொடுத்த அறத்தை மீள்சாசனம் செய்து கொடுத்ததுதான் போற்றத்தகுந்த விஷயம். 

மேலும் இந்த நாயக்கர் கல்வெட்டு

....இத்தன்மத்துக்கு

விகாதம் செய்த பேர் சிவசன்னதியில் விளக்கை 

நிறுத்தியவன் போற பாவத்துக்குள்ளாவான்

என்றும் எச்சரிக்கிறது. ஆகவே சிவ அபராதத்திற்கு ஈடானது இந்த மடத்திற்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது என்று கூறுகிறது இந்தக் கல்வெட்டு.

இந்தக் கல்வெட்டைத் தவிர 1942ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சிவ, நந்தி அடையாளங்கள் இது சைவப் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதை மேலும் உறுதி செய்கிறது. 



ஆகவே, இது வரை நடந்த ஆய்வுகளிலிருந்து நாம் தெரிந்து  கொள்ளும் தகவல்கள் சுருக்கமாக : 

- தமிழகத்தின் மிகப் பழமையான, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ மடம் இங்கே இயங்கி வந்திருக்கிறது. அந்த மடத்தின் குருமார்களின் பள்ளிப்படைக் கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது. 

- இந்த மடத்திற்கு பாண்டியன் நெடுஞ்சடையன் இறையிலியாக நில மானியத்தை அளித்திருக்கிறான் (பொயு 8ம் நூற்றாண்டு)  

- அந்த மானியத்தை 18ம் நூற்றாண்டில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் உறுதிசெய்து மீள்சாசனம் செய்து கொடுத்திருக்கிறார். 

நம்முடைய சானதன தருமமும் சிவலிங்க வழிபாடும் மகான்களின் சமாதியை பள்ளிப்படைக் கோவிலாக அமைத்துப் போற்றும் வழக்கமும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்ற உண்மையை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறது இந்தக் கிண்ணிமங்கல ஆய்வுகள்

விஷயம் இப்படி இருக்க, இந்தச் செய்திகளையெல்லாம் வெளியிடாமல் 'சாருக்கு ஒரு ஊத்தப்பம்' என்பது போல 'கிண்ணிமங்கலத்தில் நீத்தார் நினைவுத்தூண் கண்டுபிடிப்பு' என்று ஒரு வரியோடு ஊடகங்கள் நிறுத்திக்கொண்டுவிட்டன.   



படங்கள் : நன்றி தொல்லியல் துறை  





1 comment:

  1. Great work once again sir. நன்றி.
    தினமணியிலும், ஹிண்டுவிலும் இதைப்பற்றி குறுங்குறிப்புகளை வாசித்தேன்.
    விவரமான காலவரிசை இரண்டிலும் தரப்படவில்லை - இத்தனைக்கும் இவ்விரண்டு நாளிதழ்களில் பொதுவாக இவ்விஷயங்களுக்கு போதுமான columnகள் ஒதுக்குபவையே.

    ReplyDelete