நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.
ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம். முன்னிரவு வேளை ஆகவே, மீன ராசி முழுவதுமாக மேற்கு வானில் மறைந்து விட்டிருக்கிறது. மேஷ ராசியும் கிட்டத்தட்ட மறைந்து விட்டது. ஆகவே கிழக்கு வானில் அவருக்குத் தெரிவது ஓரியன் நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள பிரகாசமான திருவாதிரை (betelgeuse) நட்சத்திரம்தான். (இதைப் பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன்)
அப்படியே கிழக்கில் பார்க்கிறார். அப்போது அங்கே விருச்சிக ராசி உதயமாகத் தொடங்கியிருக்கிறது. அதன் முகப்பில் உள்ள அனுஷ நட்சத்திரத்தைப் பார்க்கிறார். அதோ அதற்கடுத்து கேட்டையும் வந்துவிட்டது. இப்போது வானில் தெளிவாகத்தெரியும் நட்சத்திரங்களை எண்ணுகிறார். மேற்கில் திருவாதிரை, அடுத்து புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை ஆக மொத்தம் பதின்மூன்று நட்சத்திரங்கள். அப்போது அவர் மனதில் ஓர் எண்ணம். சேர மன்னனான யானைக்கண்சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறையின் உடல்நிலையைப் பற்றி சில தகவல்கள் அவருக்குக் கிட்டியிருந்தன. ஆகவே அதைப் பற்றிக் கவலைகொண்டு அவர் வானத்தை மீண்டும் பார்க்கிறார். அப்போது உச்சியில் சிம்ம ராசி, அதன் கடையிலிருந்த உத்தர நட்சத்திரம் மேற்கு நோக்கி நகரத்தொடங்கியிருந்தது. இப்போது கிழக்கில் விருச்சிகத்தின் கடையில் உள்ளதும் உத்திரத்திலிருந்து எட்டாவது நட்சத்திரமான மூல நட்சத்திரமும் தெரியத்தொடங்கி விட்டது. அதே சமயம் மேற்கில் திருவாதிரைக்கு முன்னால், உத்திரத்திலிருந்து எட்டு நட்சத்திரங்கள் முன் உள்ள மிருகசீரிட நட்சத்திரம் கீழே இறங்கத்தொடங்கிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு எரிமீன் அடிவானத்தில் உள்ள அறுமீன்களான கார்த்திகை நட்சத்திரத்தை நோக்கிச் சென்றது. அது கிழக்கிலும் செல்லாமல் மேற்கிலும் செல்லாமல் வடகிழக்குத் திசையை நோக்கிச் சென்று வீழ்ந்தது. இதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் கூடலூர் கிழார். உடனே அவர் சேரன் தலைநகரான கருவூர் நோக்கிப் புறப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஊரை அடைந்த அவருக்கு அங்கும் தீய சகுனங்களே தென்பட்டன. பட்டத்து யானை தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது, முரசு கிழிந்து உருண்டுகிடந்தது, வெண்குடையின் காம்பு உடைந்திருந்தது, அரசனின் புரவி நிலை குலைந்ததிருந்தது. இதையெல்லாம் கண்ட அவர் அரசன் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டான் என்று வருந்தி இந்த நிகழ்வுகளை எல்லாம் புறநானூறு 229ம் பாடலில் பதிந்து வைத்தார். அதன் சில வரிகளின் விளக்கத்தைப் பார்ப்போம்.
ஆடு இயல் அழல் குட்டத்து - அழல் அதாவது கார்த்திகை முதல் பாதம் வரை கொண்ட மேஷ (ஆடு) ராசி மண்டலத்தில். கார்த்திகை நெருப்பு (அழல்) நட்சத்திரம் அதனால்தான் அக்னி நட்சத்திரம் கார்த்திகையில் சூரியன் சஞ்சரிக்கும் போது வருகிறது.
பங்குனி உயர் அழுவத்து - பங்குனி மாதம் நடுப்பகுதியில்
ஆர் இருள் அரை இரவில் - இருள் அரையாக, அதாவது தொடங்கும் போது
முடப் பனையத்து வேர் முதலா - வளைந்த பனை போன்ற தோற்றமுடைய அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்து அதன் வேர் போல உள்ள கேட்டை மீன் முதல். இங்கே விருச்சிக ராசியில் ஆரம்பத்தில் பனை போன்ற அனுஷத்தையும் அடுத்து கேட்டை (Antares) நட்சத்திரத்தையும் காணலாம். வால் பகுதியில் தெரிவது மூல நட்சத்திரம்.
கடைக் குளத்துக் கயம் காய - கயம் அதாவது குளம் போன்ற நட்சத்திரக் கூட்டமான புனர்பூசத்திற்கு முன்னால் உள்ள திருவாதிரை வரையான 13 நட்சத்திரங்களும் ஒளிவீச (புனர்பூசம் குளம் போன்று இருப்பதை இங்கே காணலாம்)
தலைநாள் மீன் நிலை திரிய - உச்சியில் உள்ள மீனான உத்திரம் நிலை மாற
நிலைநாள் மீன் அதன் எதிர் ஏர் தர - அதிலிருந்து எட்டாவதான மூலம் கீழ்த்திசையில் எழ
தொல்நாள் மீன் துறை படிய - உத்திரத்தின் முன்னுள்ள எட்டாம் நட்சத்திரமான மிருகசீரிடம் மேற்திசையில் மறைய
ஒரு மீன் பாசிச் செல்லாது ஊசி முன்னாது - ஒரு எரிமீன் பாசி, அதாவது கிழக்குத் திசை நோக்கிச் செல்லாமல் (சமஸ்கிருத ப்ராசீயின் தமிழ் வடிவமே பாசி, ப்ராசீ, தக்ஷிணாய, ப்ரதீச்சி, உதீச்சி என்று திசை வணக்க ஸ்லோகங்கள் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்), ஊசி அதாவது உதீச்சி என்ற வடதிசை நோக்கிச் செல்லாமல் நடுவே வடகிழக்காக
அளக்கர்த் திணை விளக்காக - கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்
கனை எரி பரப்ப கால் எதிர்ப்புப் பொங்கி - கால் என்றால் காற்று. காற்றில் விண்கல் மோதுவதால் தீப்பற்றி அது எரிமீனாக வீழ்கிறது. அதைத்தான் குறிக்கிறார் புலவர். காற்றை எதிர்த்து கனல் எரி பரப்பி வீழ்ந்ததாம் அது.
விழுந்தன்றால் விசும்பினானோ - விசும்பிலிருந்து வீழ்ந்தது.
இதற்கான விளக்கமாக பலர், எரிமீன் விழுந்தது தீய சகுனம் ஆகவே அரசன் இறந்துபட்டான் என்று சுருக்கமாகச் சொல்லி முடிக்கின்றனர். ஆனால் புலவர் அதை மட்டும் சொல்லவில்லையே. மற்ற வானியல் செய்திகளை அதாவது வானத்தின் ராசி நிலைகள் நட்சத்திரங்களின் போக்குகள் என்று பல செய்திகளை ஏன் தெரிவிக்கிறார்? அங்குதான் பிரஸ்ன ஜோதிடம் வருகிறது.
ஜோதிடத்தில் பலவகைகள் உண்டு என்று நமக்குத் தெரிந்திருக்கும். ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லும் ஆரூடம், நாடி ஜோதிடம், பிரஸ்னம் என்று பல பிரிவுகள். இதில் பிரஸ்ன ஜோதிடம் என்பது ஒரு கேள்வி மனதில் உருவாகும் நேரத்தில் உள்ள லக்னம், அப்போதைய நட்சத்திர கிரக நிலைகள், அந்த நேரத்தில் தோன்றும் சகுனம் ஆகியவற்றைக் கண்டு சொல்வது. லக்னம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிழக்கில் எந்த ராசி எழுகின்றதோ அந்த ராசியைக் குறிக்கும். உதாரணமாக சூரியன் உதிக்கும் நேரத்தில் உள்ள லக்கினம் அந்த மாதத்தில் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கின்றானோ அந்த லக்கினமாகும்.
கூடலூர் கிழார் மன்னனின் உடல் நிலையைப் பற்றி நினைக்கும்போது விருச்சிக லக்கினம் மேற்கில் எழுந்தது என்று பார்த்தோம். அது செவ்வாய்க்குள்ள லக்கினம். அந்த நேரத்தில் அவர் பார்த்த அனுஷ நட்சத்திரத்தின் அதிபதி சனி. இதையும் மேலும் பல நட்சத்திர நிலைகளையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போது எரிமீனும் விழுந்தது. இதையெல்லாம் வைத்தே மன்னன் உயிருக்கு ஆபத்து என்று கணித்தார் அவர். இந்தப் பிரஸ்ன ஜோதிடம் இன்றும் பிரபலமாக விளங்குவது சேர நாட்டில்தான் என்பதும் இங்கே நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியது. ஆகவே ஜோதிடத்தின் ஒரு பிரிவான பிரஸ்ன ஜோதிடத்தின் மூலம் செய்யப்பட்ட கணிப்பைப் பதிவு செய்வதே இந்தப் பாடல் என்று நாம் கொள்ளலாம். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் சந்திரன் உட்பட மற்ற கோள்மீன்களைப் பற்றிய தகவல்கள் எதையும் புலவர் இங்கே குறிப்பிடவில்லை என்பது. ஆகவே இது தேய்பிறைக்காலமாக இருக்கக்கூடும். மற்ற கிரகங்கள் அனைத்தும் விருச்சிகம் முதல் மேஷம் வரையிலான ராசிகளில் இருந்திருக்கலாம். இதன் மற்ற கூறுகளும் தகுந்த ஜோதிடர்களால் ஆராயப்பட்டால் இன்னும் பல உண்மைகள் நமக்குத் தெரியவரலாம்.
இதிலிருந்து நமக்குத் தெரியும் மற்ற ஒரு செய்தி இந்திய மரபான வானவியலிலும் ஜோதிடத்திலும் தமிழகமும் ஒரு அங்கமாக எப்போதும் இருந்தது என்பதே. இந்திய மரபிலிருந்து தமிழகத்தைப் பிரித்துப் பார்க்க முயல்வதெல்லாம் திரிபுவாதமே அன்றி வேறில்லை.
பாடல் மாந்தஞ்சேரல் இரும்பொறையைப் பாடுவதால் பொயுமு முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். ஆகவே அப்போதே நமக்கு இவ்வளவு விரிவாக வானவியல் நிகழ்வுகளைப் பதியும் ஆற்றல் இருந்திருக்கிறது.
அந்த முழுப்பாடல் கீழே உள்ளது.
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
பங்குனி உயர் அழுவத்துத்
தலைநாள் மீன் நிலை திரிய,
நிலைநாள் மீன் அதன்எதிர் ஏர்தர,
தொல்நாள் மீன் துறைபடிய,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது,
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்ப, கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பினானே !
அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்று ! மற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ !
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே !
Very nice info...well researched...
ReplyDeleteWonderful and thoroughout informative
ReplyDeleteஒரு அன்ரிலேடட் கேள்வி.
ReplyDeleteஇந்த பதிற்ற்றுப்பத்துல, இன்ன பாடலுக்கு இன்ன பரிசு பெற்றார்கள் அப்படின்னு படிக்கிறோம்.
ஆனா அந்த தகவல் எதுவும் பாடல் வரிகள்ல இல்லை, இல்லையா.
முதல் முதலில் இத்தகவல்கள் எவ்வ்வுரையில் வருகின்றன?
Cultural Astronomy என்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். அனைத்து இந்திய மொழி இலக்கியங்களிலும் அது நிகழ்ந்த/ இயற்றப்பட்ட காலத்தை வானவியல் கொண்டு மிக துல்லியமாக குறித்துள்ளார்கள். வானவியலுக்கும் சோதிடத்திற்கும் தொடர்பு இருப்பதால் நாம் சோதிடத்ததை மூடநம்பிக்கை என தள்ளும்போது கூடவே வானவியலையும் புறக்கணிப்பதால் இந்த பண்டைய கலை அழிகிறது. மேல்நாட்டு வானவியலை அங்கு இட்டு நிரப்பிவிட்டோம். உலகம் தட்டை எனவும் பூமியை சூரியன் சுற்றி வருவதாகவும் மேல்நாட்டு அறிஞர் 15 ஆம் நூற்றாண்டுவரை நம்பி வந்தனர். அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகம் உருண்டை என்றும் சூரியனை சுற்றி வருவதையும் நமது முன்னோர் அறிந்து குறித்தும் வைத்துள்ளனர்
ReplyDelete