Thursday 2 July 2020

சிலப்பதிகாரத்தில் ஆலவாய் அண்ணலும் அம்மையும்

(சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே ஆலவாய் அண்ணலாம் சொக்கநாதரின் கோவில் பெரிதாக விளங்கியது என்ற குறிப்பு இருந்ததைச் சுட்டி ட்விட்டரில் எழுதியிருந்தேன். அப்போது மீனாட்சி அம்மனைப் பற்றிய குறிப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது அல்லவா. எனவே அதையும் சேர்த்து இங்கே எழுதியிருக்கிறேன்)



மதுரை நகருக்கு ஆலவாய் அண்ணலின் கோவிலே பிரதானம் என்பதை சிலப்பதிகாரம் இரண்டு இடங்களில் சுட்டுகின்றது. கோவலனும் கண்ணகியும் மதுரை எல்லையை அடைந்து வைகையைக் கடக்கும் முன்பே கோவிலில் இருந்து எழும் ஓசைகள் அவர்களுக்குக் கேட்கத் தொடங்கிவிடுகின்றன. இது புறஞ்சேரி இறுத்த காதையில் வருகிறது.
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலைமுரசக் கனைகுரல் ஓதையும்


நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்
” அரும் தெறற்கடவுள்,அதாவது அரிதான அழித்தல் தொழிலில் வல்ல சிவபெருமானின் அகன்ற பெருங் கோவில் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.இப்போது போலவே பெரும் கோவிலாக அது இருந்திருக்கிறது. அங்கே நான்கு மறைகளையும் அந்தணர் ஓதுகின்றனர். முனிவர்கள் மந்திரங்களை ஓதுகின்றனர்.


இது தவிர ஊர்காண் காதையிலும் முதல் கோவிலாக "நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்" என்று நெற்றியில் கண்ணுடைய ஆலவாய் அண்ணலின் கோவிலையே பிரதானமாகக் கூறுகிறார் இளங்கோ அடிகள்.





அப்போது அம்மனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்றால், கட்டுரைக் காதையில், கண்ணகி மதுரையை எரித்த பிறகு, மதுராபதித் தெய்வமாக, மீனாட்சி அம்மையாக அவள் முன் தோன்றும் சிறப்பைச் சொல்கிறார் இளங்கோவடிகள். பாடலைப் பார்ப்போம்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி
கடை எயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி

இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி 

தெய்வங்களை வர்ணிக்கும்போது பாதாதி கேசம், அதாவது அடிமுதல் முடிவரை அல்லது கேசாதிபாதம் - முடிமுதல் அடிவரை என்று இரு முறைகளைக் கவிகள் பின்பற்றுவர். இங்கே இளங்கோவடிகள் கேசாதிபாதம் என்ற முறையைக் கையாள்கிறார். 

அம்மன் எப்படி இருக்கிறாள் என்றால் சடையும் அந்தச் சடையில் பிறையும் தாங்கிய முடியினை உடையவளாக, முகத்தில் சிரிப்பு அரும்பும் போது அந்தப் பவளச் செவ்வாயில் கடைவாய்ப் பல் தெரிகின்ற தோற்றம் உடையவளாக, நிலவின் நிறத்தை உடைய முத்துப்போன்ற பற்களை உடையவளாக இருக்கிறாளாம். 

இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்

இங்கே அர்த்தநாரீஸ்வர வடிவமாக அம்மையைக் காண்கிறார் இளங்கோ. இடப்பக்கம் நீல நிறம் ஆனால் வலப்பக்கமோ ஈசனுக்குரிய பொன் நிறம். 

இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால் 
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்

இடக்கையில் தாமரையையும் வலக்கையில் மழுவையும் தாங்கியவள். வலக்காலில் கழலையும் இடக்காலில் சிலம்பையும் கொண்டவள். 


கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், 
பொன்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி


கொற்கையின் தலைவனாகவும், குமரியின் துறையை ஆள்பவனும், இமயத்தை வரம்பாக, எல்லையாகக் கொண்டவனும், பொதிகை மலையை உடையவனுமாகிய பாண்டிய குலத்தின் முதல் தலைவி என்று மதுராபுரித் தெய்வமாகிய மீனாட்சி அம்மையை வாழ்த்துகிறார் இளங்கோவடிகள். 

பாண்டியர் குலத்தின் தன்மையையும், பாண்டியனின் நீதி தவறாத முறையையும், கண்ணகிக்கு இந்தத் தீங்கு நிகழ்ந்தது ஊழ் வினையாலேதான் என்று அத் தெய்வம் கூறி கண்ணகிக்கு வழி காட்டுதல் இந்தக் காதையில் அடுத்துச் சொல்லப்படுகிறது.










3 comments:

  1. சிம்மக்கல் சொக்கநாதர் கோவிலைப் பற்றி இலக்கியங்களில் குறிப்புண்டா?
    'ஆதி சொக்கநாதர்' அவர் தான் என்று சொல்வழக்கில் குறிப்பிடுவார்கள். என் சின்னஞ்சிறு வாசிப்பில் எப்போதுமே தாமரைக்கு நடுவில் உள்ளது தான் கோவில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. Hence my question.

    ReplyDelete
    Replies
    1. திருவிளையாடல் புராணத்தில் பழைய சொக்கநாதர் கோவிலைப் பற்றிய குறிப்பு உண்டு. சிற்ப சாஸ்திரத்தின் படி ஊருக்கு ஈசான மூலையில் சிவன் கோவில் இருக்கவேண்டும் என்பதனால் அந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்

      Delete
  2. சிலப்பதிகாரத்தில் திருவிளையாடல் குறிப்பிடப்படுகிறது எனில் எந்த படத்தில் குறிப்பிடப்படுகிறது தெளிவுபடுத்தவும்

    ReplyDelete