Wednesday 17 February 2016

சேரநாடும் தமிழும்



சேர நாட்டில் பேசப்பட்டு வந்த தமிழ் எப்படி மாறியது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால்,  சேர நாடு என்று சொல்லப்படும் நிலப்பரப்பைக் கவனிப்போம்.  தெற்கே நாகர்கோவிலிலிருந்து வடக்கே பாலக்காடுக் கணவாய் வரை சேர நாடு பரவியிருந்தது. அவர்களின் தலைநகரம் தற்போதைய கரூர் என்கிறார் ராகவையங்கார்.  இது விவாதத்திற்கு உட்பட்டே வந்தாலும், சேர நாடு பெரும்பாலும் புவியியல் ரீதியாக தமிழகத்தை விட தனித்தே இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் நடுவிலிருந்த மேற்குத் தொடர்ச்சி மலைதான். எனவே தமிழகத்தின் மற்ற இரு பேரரசுகளுக்கும் சேர நாட்டுக்கும் தொடர்பு குறைவாகவே இருந்தது. சங்க காலத்தைப் பொறுத்த வரை தமிழகத்தில்  சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர வேளிர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே.  இதில் சேர நாட்டின் தென்பகுதியில் ஆய் வேளிர் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். களப்பிரர்கள் படையெடுப்பின் போது மூவேந்தர்களும் மறைந்துவிட்டாலும் இந்த ஆய் வேளிர்கள் மட்டும் தங்களது ஆட்சியைத் தொடர்ந்தனர்.

பல்லவர்களும் பாண்டியர்களும் களப்பிரர் ஆட்சியை அகற்றிய போது, இயற்கைத் தடை இல்லாத சேர நாட்டின் வடபகுதியிலிருந்து கதம்பர்களும் கங்கர்களும் சாளுக்கியர்களும் சேர நாட்டின்மீது படையெடுத்துவந்தனர். அவர்களுடைய மொழியின் தாக்கத்தால் சேர நாட்டில் பேசப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உருமாறத் தொடங்கியது. அதைத்தவிர பெரும் எண்ணிக்கையில்  சேர நாட்டின் வட பகுதியில் நம்பூதிரிப் பிராமணர்கள் வந்து குடியேறத் துவங்கினர்.  அவர்களுடைய வரலாறு அவர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பேசிய சமஸ்கிருத மொழி சேர நாட்டிலுள்ள தமிழுடன் கலந்து மலையாளம் உருவாகத் தொடங்கியது .  அவர்களும் அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்தவர்களுடன் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டதால், புது இனங்கள் உருவாயின. தாய் வழி உரிமை (மருமக்கள் தாயம்) சமூகக் கோட்பாடாக ஆகியது.

இதற்கு விதிவிலக்காக இருந்தது தென் சேர நாட்டில் ஆய் மன்னர்கள் ஆண்டுவந்த பகுதிதான். சங்க காலத்தில் குறு நில மன்னர்களாக இருந்த அவர்கள், களப்பிரர் காலத்திற்குப் பிறகு சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினர்.  ஆனால் இடைக்காலப் பாண்டியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. நெடுமாற பாண்டியன், கோச்சடையான் ரணதீரன் ஆகியோர் ஆய் மன்னர்களைத் தோற்கடித்தனர். முடிவில் ஜடில பராந்தகன் இவர்களை பாண்டிய நாட்டின் சிற்றரசர்களாக ஆக்கிவிட்டார்.

இதற்கிடையில் சேர நாட்டின் வட பகுதியில் குலசேகர வம்சம் ஆட்சியைப் பிடித்தது. இவர்களின் தோற்றத்தைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. மகோதயம் (தற்போதைய கொடுங்கோளூர்) என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்யத் துவங்கிய இவர்களுக்கு நம்பூதிரிப் பிராமணர்களின் ஆதரவு இருந்தது. குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்த வம்சத்தில் வந்தவர்கள்தான். 'வர்மன்' என்ற பெயரை இவர்கள் ஆட்சிப் பெயராக வைத்துக்கொண்டனர். இவர்கள் ஆட்சியில் மலையாளம் மேலும் வளர்ச்சியடைந்தது. ஆதித்த சோழன் காலத்தில் சோழர்களுக்கு உதவியாக இருந்த இந்த சேர அரசர்கள், (ஸ்தாணு ரவி வர்மன்) பிற்பாடு பாண்டிய மன்னர்களுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். ஆய் மன்னர்கள் மீது போரிட்டு அவர்களது நாட்டையும் கைப்பற்றிக்கொண்டனர். இதனால் மலையாளம் தென் சேர நாட்டிலும் பரவியது.

பிற்காலத்தில் ராஜராஜ சோழன், பாஸ்கர ரவி வர்மன் காலத்தில் சேர நாட்டின்மீது படையெடுத்து அவர்களின் முக்கியப்  படை கேந்திரங்களை அழித்த பிறகு, தமிழக அரசியலில் தலையிடாமல்  சேரர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.  தமிழும் அவர்களின் பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போயிற்று.

1 comment: